தோழர்கள் – 42 – அபூ அய்யூப் அல் அன்ஸாரி – أبو أيوب الأنصاري

Share this:

அபூஅய்யூப் அல் அன்ஸாரி
أبو أيوب الأنصاري

ஸ்தான்புல் துருக்கி நாட்டில் அமைந்துள்ள பெரும் நகரம். பெரும்பாலனவர்கள் அறிந்திருப்பீர்கள்; கலர் கலராய்ப் புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். பழம் பெருமை வாய்ந்த நகரம் இது. ரோமர்களின் ஆட்சிக் காலத்தின்போது செல்வச் செழிப்புடன் திகழ்ந்த இந்நகரத்துக்கு கான்ஸ்டன்டினோபில் (Constantinople) என்று பெயர். கி.மு. காலத்திலிருந்து துவங்கி நீண்ட நெடிய வரலாற்றுச் சங்கதிகளைத் தன்னுள் புதைத்து வைத்துள்ள இந்நகரை நிறுவியவன் ரோமச் சக்கரவர்த்தி முதலாம் கான்ஸ்டன்டைன். அதற்குமுன் இந்நகருக்கு பைஸாண்டியம் என்று பெயர்.

அப்பொழுது அது கிரேக்கர்களிடம் இருந்தது.

முஆவியா ரலியல்லாஹு அன்ஹு கடற்படை அமைத்து ரோமர்களை விரட்டிக் கொண்டே சென்றார் என்று முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோமில்லையா, பின்னர் அவர் மகன் யஸீத் இப்னு முஆவியா தலைமையில் முஸ்லிம்களின் படையொன்று இந்த கான்ஸ்டன்டினோபில்வரை வந்து முற்றுகையிட்டது. இந்தக் கடல்வழிப் போருக்கு மிகவும் வயது முதிர்ந்த பெரியவர் – காலித் இப்னு ஸைது என்பவரும் வந்திருந்தார். ஏறத்தாழ அவருக்கு எண்பது வயதிருக்கும். ‘பொழுது போகவில்லை; நானும் வருகிறேன்; வேடிக்கைப் பார்க்கிறேன்’ என்பது போலெல்லாம் இல்லை; வாளேந்தி, போரிட வந்திருந்தார் அவர்.

நீண்ட பயணமும் முதுமையும் போரின் கடுமையும் என எல்லாமாகச் சேர்ந்துகொண்டு அவரால் அதிக நாள் அந்தப் போரில் ஈடுபட முடியவில்லை. அத்துடன் நோயும் அவரைத் தழுவியது. படுக்கையில் படுக்கும்படி ஆகிப்போனது அவரது நிலை. அவரைச் சந்திக்க வந்தார் யஸீத் இப்னு முஆவியா.

கனிவுடன், “நான் தங்களுக்கு என்ன உதவி புரியட்டும்?” என்று கேட்டார்.

”முஸ்லிம் வீரர்களுக்கு என் ஸலாம் பகருங்கள். எதிரியின் நிலத்திற்குள் முடிந்தவரை ஆழ்ந்து ஊடுருவும்படி நான் தூண்டினேன் என்று கூறுங்கள். நான் மரணிக்கப் போகிறேன் என்பது உறுதி. என்னைச் சுமந்து சென்று கான்ஸ்டன்டினோபில் நகர் எல்லைச் சுவரின் அடியில் அடக்கம் செய்யச் சொன்னேன் என்று சொல்லுங்கள்.”

சற்று நேரத்தில் இறந்துபோனார் அவர்.

அப்படி என்ன இந்தத் தள்ளாத வயதிலும் பயணம்; போர்? எல்லாம் அவர் மனத்தில் ஊன்றிப்போயிருந்த இறை வசனங்கள்; அதற்கு அவர் அறிந்து வைத்திருந்த வியாக்கியானம். விரிவாய்ப் பார்ப்போம்.

oOo

மதீனாவில் ஒருநாள். வெயில் சுட்டெரிக்கும் பகல் நேரம். அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவுக்குப் பொறுக்க முடியாத பசி. உண்பதற்கு வீட்டில் எதுவும் இல்லை. கடைக்குச் சென்று ஏதும் வாங்கிவரவும் பணமில்லை. தம் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்குச் சென்றார் அவர். அங்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில் அபூபக்ரு வருவதைக் கணடவர் ஆச்சரியத்துடன், “என்ன அபூபக்ரு? இந்தப் பகல் நேரத்தில் இங்கு என்ன சோலி?”

“பசி குடலைச் சுருட்டி எடுக்கிறது. உண்பதற்கு ஏதும் இல்லை. அதனால்தான் வெளியில் வந்தேன்.”

அந்த நேரத்தில் பள்ளியில் அமர்ந்திருந்த உமர் மட்டும் எதற்கு வந்திருந்தார்? “நானும் அதே காரணத்திற்காகத்தான் வந்தேன். எனக்கும் கடுமையான பசி. என்னிடமும் எதுவும் இல்லை.”

மாநபியின் மாபெரும் தோழர்கள் எளியோராய்ப் பள்ளியில் அமர்ந்திருந்தனர். சற்று நேரத்தில் அங்கு வந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இவர்கள் இருவரையும் அந்த நேரத்தில் பள்ளிவாசலில் சந்தித்தவர்கள் ஆச்சரியத்துடன் விசாரிக்க, “பசி வலி! உண்பதற்கு ஏதும் இல்லை. அதனால் வீட்டிலிருந்து இங்கு வந்துவிட்டோம்.”

இதில் வேடிக்கை, நபியவர்களும் அதே காரணத்திற்காகவே பள்ளிவாசலுக்கு வந்திருந்தார்கள். “நானும் அதே காரணத்திற்காகவே வந்தேன்” என்றவர்கள் “என்னுடன் வாருங்கள்” என்று அவர்கள் இருவரையும் தம் மற்றொரு நெருங்கிய தோழரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்தத் தோழரிடம் நபியவர்களுக்கு அவ்வளவு உரிமை. காரணம் இருந்தது. அந்தத் தோழரிடம் இருந்த ஒரு பழக்கம்.

ஒவ்வொரு நாளும் சிறிதளவு உணவை நபியவர்களுக்கு அளிப்பதற்காக அவர் எடுத்து வைத்திருப்பார். அன்றைய நாள் நபியவர்கள் அவரிடம் வராமல் அந்த உணவு மீதமாகிவிட்டால் அன்றிரவு அதை அவரும் அவரது குடும்பத்தினரும் உண்பார்கள். அந்த அளவு நபியவர்களின்மேல் கரிசனமும் பாசமும் கொண்டிருந்த அவர் அபூஅய்யூப் அல் அன்ஸாரி, ரலியல்லாஹு அன்ஹு.

அந்த வேகாத வெயிலில் தம் இரு தோழர்களுடனும் அபூஅய்யூப் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்ட, விரைந்து வெளியில் வந்து வரவேற்றார் அவரின் மனைவி உம்மு அய்யூப்.

“அல்லாஹ்வின் தூதருக்கும் அவருடன் வந்திருப்பவர்களுக்கும் நல்வரவு.”

“அபூஅய்யூப் எங்கே?”

வீட்டிற்கு அருகில் அமைந்திருந்த தம் தோட்டத்தில் ஈச்ச மரங்களைக் கவனித்துக்கொண்டு பணியில் ஈடுபட்டிருந்தார் அபூஅய்யூப். வீட்டில் விருந்தினர்கள் சப்தம். அதுவும் நபியவர்களின் குரல் போல் இருக்கிறதே, என்று போட்டது போட்டபடி விரைந்தார். நபியவர்களைக் கண்டு அவருக்கு ஏக மகிழ்ச்சி!

அபூஅய்யூப் இரண்டாம் அகபா உடன்படிக்கையின்போது கலந்து கொண்ட எழுபது மதீனாவாசிகளில் ஒருவர். அப்பொழுது முஸ்அப் இப்னு உமைர் மதீனா வந்து வாழ்ந்தபோது அவருக்கு இவரைச் சகோதரராக ஏற்படுத்தி வைத்திருந்தார்கள் நபியவர்கள்.

“நபியவர்களுக்கும் உடன் வந்திருப்பவர்களுக்கும் நல்வரவு. வழக்கத்தைவிட இன்று முன்னதாகவே வந்திருக்கிறீர்கள்” என்று மகிழ்ச்சி பகர்ந்தார் அபூஅய்யூப். ஆனந்த மிகுதியில் மீண்டும் தம் தோட்டத்திற்கு விரைந்து, பேரீச்ச மரத்திலிருந்து பழக்குலையை வெட்டினார். உலர்ந்த, பழுத்த, பழுக்காத என்று மூவகையான பேரீச்சங்கனிகள். கொண்டுவந்து நபியவர்களிடம் வைத்தார்.

“உலர்ந்த கனிகள் மட்டுமே போதுமானதாய் இருந்திருக்குமே. ஏன் இப்படி?” என்று ஆட்சேபித்தார்கள் நபியவர்கள்.

”மூவகைக் கனிகளையும் தாங்கள் சுவைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆடு ஒன்றை அறுத்து இறைச்சி சமைத்து எடுத்து வருகிறேனே.”

அபூஅய்யூப் வற்புறுத்த, “தாங்கள் வற்புறுத்துவதாக இருந்தால், பால் கறக்க வைத்திருக்கும் ஆட்டை அறுக்க வேண்டாம்” என்று இணங்கினார்கள் முஹம்மது நபி (ஸல்).

தம் மனைவியிடம், “ரொட்டி சமைத்துவை. நீதான் என்னைவிட நன்றாகச் சமைப்பாய்” என்று கூறிவிட்டுத் தோட்டத்திற்குச் சென்றார். இளம் ஆடாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை அறுத்து, பாதியளவு இறைச்சியை சூப்புபோல் சமைத்தார். மீதி இறைச்சியை நெருப்பில் சுட்டு வறுவலாக்கினார். ரொட்டி, இறைச்சி சூப், சுட்ட இறைச்சி, பேரீச்சங் கனிகள் என்று சடுதியில் தயாராகியிருந்தது நல் உணவு; விருந்து. பரிமாறப்பட்டது விருந்தினர்களுக்கு.

ஒரு ரொட்டியில் சிறிதளவு இறைச்சியைப் பிட்டுவைத்து அதைச் சுருட்டி, “இதை என் மகள் ஃபாத்திமாவுக்குக் கொடுத்து அனுப்பவும். அவள் இதைப்போன்ற உணவை உண்டு நீண்ட காலமாகிறது” என்றார் பாசக்காரத் தந்தை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

பிறகு வயிறார உண்டார்கள் நபியவர்களும் இரு தோழர்களும். முடித்ததும் வியந்து உரைத்தார்கள் அல்லாஹ்வின் அந்த எளிய தூதர். “ரொட்டி, இறைச்சி, மூன்று வகையான பேரீச்சங் கனிகள்! எவன் கையில் என் உயிர் இருக்கிறதோ, அவன் மீது ஆணை! அபரிமிதமான இவற்றுக்கு நீங்கள் மறுமையில் கேள்வி கேட்கப்படுவீர்கள். இத்தகு ஆடம்பரம் உங்களுக்குக் கிடைத்தால், உண்ணத் துவங்கும்போது, அல்லாஹ்வின் பெயர் சொல்லித் துவங்குங்கள்; வயிறார உண்டு முடித்ததும், நமது பசியாற்றி நற்கிருபையும் அருளும் புரிந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று நன்றி பகருங்கள்.”

வெறும் ரொட்டி, மசாலா காரசாரச் சமாச்சாரங்கள் இன்றி சமைக்கப்பெற்ற இறைச்சி; இனிப்பு வகை என்று பேரீச்சங்கனிகள்! இவையே ஆடம்பரம், அபரிமிதம் எனில் எண்ணிலடங்கா வகையில் உணவு வகைகளை விருந்தில் இறைத்து, அதையும் வயிறு முட்ட உண்டுவிட்டு, குற்றம் குறை சொல்லும் நம்மைப் பற்றி என்ன சொல்ல? அடுத்தமுறை இல்லாள் சமைக்கும் உணவைக் குறை கூறாமல் உண்ணப் பழகினால் சிலாக்கியம்.

இங்கு, நபியவர்கள், இரு தூண்களைப் போன்ற அதி முக்கியத் தோழர்கள் ஆகியோரின் ஏழ்மை, அடக்கம், என்பதையும் தாண்டி இந்நிகழ்வில் புதைந்துள்ள சில முக்கிய விஷயங்களைக் கவனித்தல் நலம். ஒருவரின் வீட்டிற்குத் தாம் விருந்தாளியாய்ச் செல்வது இருக்கட்டும்; மற்றும் இருவரையும் ‘வாருங்கள்’ என்று அழைத்துக்கொண்டு முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் சென்று ‘திடும்’ என்று நிற்கும் அளவிற்கு அபூஅய்யூப் அன்ஸாரியிடம் நபியவர்கள் கொண்டிருந்த உரிமை; தம் குடும்பத்தில் ஒருவர்போல் நபியவர்களுக்கு ஒவ்வொரு நாளும் உணவு சமைத்து வைத்துக்கொண்டு எதிர்பார்க்கும் அபூஅய்யூபின் அலாதிப் பாசம் – இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?

அந்த ஒட்டகத்திலிருந்து துவங்கியது! எந்த ஒட்டகம்?

oOo

அன்று யத்ரிபில் குதூகலம். குபாவிலிருந்து கிளம்பிவிட்டார்கள்; இதோ வரப்போகிறர்கள் என்று அன்றைய யத்ரிபு மக்கள் மத்தியில் பரபரப்பு, ஆவல். ஏகப்பட்டது கேள்விப்பட்டு, வியந்து போயிருந்தார்களே தவிர அம்மக்களில் பெரும்பாலானோர் அதுவரை நபியவர்களை நேரில் பார்த்ததில்லை. அதனால் கூடிப்போயிருந்த அதிகப்படியான ஆர்வம் வேறு. நகரினுள் தம் அணுக்கத் தோழர் அபூபக்ருடன் வந்து நுழைந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

பாட்டுப் பாடி, கஞ்சிரா இசைத்து வரவேற்பு வழங்கப்பட, மக்கள் மத்தியில் இப்பொழுது புதிய போட்டி ஒன்று ஏற்பட்டது. மக்காவிலிருந்து புலம்பெயர்ந்துகொண்டிருந்த முஸ்லிம்களுக்கு மதீனத்துத் தோழர்கள்தாம் உண்ண உணவும் இருக்க இடமும் தந்து உதவ வேண்டிய அசாதாரண சூழ்நிலை நிலவி வந்த காலம் அது. மக்காவில் சீமானாய் இருந்தவரும்கூட அனைத்தையும் உதறிவிட்டு, கட்டிய துணியோடும் சுமந்து எடுத்துவர இயன்ற சொற்ப உடைமைகளோடும் ஏழையாய் மதீனாவிற்குள் புகுந்துகொண்டிருந்தார். அவர்களையெல்லாம் எப்படி வாழ வைப்பது?

வாழ வைத்தார்கள் மதீனத்துத் தோழர்கள். எப்படி? மிகைப்படுத்தியோ, வெற்றுப் பாராட்டுக்கோ அல்ல. உண்மையை வரலாற்றுப் பக்கங்கள் அழுத்தந் திருத்தமாய்ப் பதித்து வைத்துள்ளன.

‘எல்லாத்தையும் போட்டுவிட்டு வெற்றுக்கையுடனா வந்திருக்கிறீர்? ஒன்றும் பாதகமில்லை. நான் ஓரளவு வசதி படைத்தவன். என்னிடம் இன்ன இன்ன சொத்து இருக்கிறது. இதில் பாதி உங்களுக்கு. எனக்கு இரு மனைவிகள். ஒருத்தியை விவாகரத்து செய்து உங்களுக்குக் கட்டிவைக்கிறேன். நீங்கள் கண்ணியமுடன் குடும்பம் அமைத்துக்கொள்ளுங்கள்.’

நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத, செய்யத் துணியாத உபகாரம், ஒத்தாசை! என்ன ஆயிற்று? அவர்களை ஒட்டிக்கொண்டது பட்டம்; காலா காலத்துக்குமான பட்டம் – “அன்ஸார்கள்“.

அப்படியான அசாதாரண உதவி புரிபவர்கள் மத்தியில் இப்பொழுது அவர்களின் தலைவர் – அல்லாஹ்வின் தூதர் – வந்து நுழைந்ததும் அவர்களை வரவேற்று, தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று குடியமர்த்திக்கொள்ள ‘நான், நீ’ என்று எக்கச்சக்க போட்டி. ஒவ்வொருவர் மத்தியிலும் சொல்லி மாளாத எதிர்பார்ப்பு.

‘அல்லாஹ்வின் தூதரே! எங்கள் வீட்டிற்கு வாருங்கள். எங்களிடம் போதிய வசதி உள்ளது. தங்களை எங்கள் கைகளில் ஏந்தித் தாங்குவோம்’ என்று உள்மனத்திலிருந்து உண்மை உரைத்தார்கள் ஒவ்வொருவரும்.

பனூ ஸாலிம் இப்னு அவ்ஃப் குடியிருப்பை நெருங்கும்போது, பாதையில் வழிமறித்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுடன் தங்கிவிடுங்கள். நாங்கள் வலுவானவர்கள். எங்களை யாராலும் ஊடுருவ முடியாது. எங்களிடம் ஏராளமான போர் வீரர்களும், ஏகப்பட்ட போர்த் தளவாடங்களும் உண்டு” என்று ஆவலுடன் வேண்டினார்கள்.

இதை எப்படிச் சமாளிப்பது? யாரைத் தேர்ந்தெடுப்பது? ஒருவரைக் கைகாண்பித்தால் மற்றவர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமும் ஏற்படும். என்ன செய்யலாம்? நபியவர்கள் தம்முடைய எளிய யோசனையை அறிவித்தார்கள். ‘என் ஒட்டகத்தை விட்டுவிடுங்கள். அதற்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அது தானாய்ச் சென்று யார் வீட்டினருகில் அமர்கிறதோ அவரே எனக்கு அடைக்கலம் அளிப்பார்.’

அனைவருக்கும் பிடித்துப்போனது அந்த யோசனை. ஒட்டகத்தின் கடிவாள வாரைக் கைவிட்டு, அதை அதன் போக்கிற்குச் செல்லவி்ட்டு, அதன்மேல் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்கள் நபியவர்கள். ஊர்வலம் துவங்கியது. ‘ஜேஜே’ என்று அவர்களைப் பின்தொடர்ந்தது மொத்த மதீனாவும். சில இடங்களில் சோம்பலாய் ஒட்டகம் நிற்கும்போது, ‘அடித்தது பரிசு’ என்று அந்த வீட்டின் உரிமையாளர் துள்ளிக் குதிக்க நினைப்பார்; ‘ம்ஹும்’ என்று நகர்ந்துவிடும் ஒட்டகம். இப்படியே நடந்து, நடந்து, பனூ பயாளா, பனூ ஸாஇதா, பனூ ஹாரித், பனூ அதீ ஆகிய பகுதிகளைக் கடந்து வந்து ஓரிடத்தில் அமர்ந்தது. பிறகு எழுந்து செல்ல முயன்ற ஒட்டகம், ‘போதும் விளையாட்டு’ என்று நினைத்ததோ என்னவோ பிறகு அங்கேயே அமர்ந்துவிட்டது.

முன்னொரு காலத்தில் வாழ்ந்த மாலிக் இப்னு நஜ்ஜார் என்பவரது இல்லம் அதன் எதிரே இருந்தது. நபியவர்களின் தாயார் ஆமினாவின் உறவினர்கள் நஜ்ஜார் கோத்திரத்தினர்.

இறங்கினார்கள் நபியவர்கள். வீட்டின் உரிமையாளர், மாலிக் பின் நஜ்ஜாரின் வழித்தோன்றல் காலித் இப்னு ஸைது ஓடோடிவந்தார் – அவர் நமக்கு நன்கு பரிச்சயமானவரான அபூஅய்யூப் அல் அன்ஸாரி, ரலியல்லாஹு அன்ஹு.

நபியவர்களின் பயணப் பொருட்களைச் சுமந்துகொண்டு அவர்களைத் தம் வீட்டிற்கு உற்சாகம் பொங்க அழைத்துச் சென்றார் உலக மகா பரிசு கிடைத்த அந்தத் தோழர். ஒரு நிமிடம் கண்மூடி அந்த உலக உத்தமர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமது வீட்டில் வந்து வாழ அமையும் வாய்ப்பையும் அவர்களுக்குப் பணிவிடை செய்யும் பாக்கியத்தையும் நினைத்துப் பாருங்கள்; அதற்குக் கொடுத்துவைத்த அந்தத் தோழரின் அந்த அற்புதக் கணங்கள் புரியும்.

அபூஅய்யூப் அல் அன்ஸாரியின் வீடு இரண்டு அடுக்குடன் அமைந்த எளிய மண் வீடு. மேல் தளத்தில் இருந்த தங்களது உடைமைகளை எல்லாம் கிடுகிடுவென கீழே நகர்த்தி, நபியவர்களை மாடியில் தங்கிக்கொள்ள உபசரித்தார் அபூஅய்யூப். தாம் வரும்போதும் போகும்போதும் வீட்டு உரிமையாளரைத் தாண்டிக்கொண்டு செல்வது அவருக்கு இடைஞ்சலாக இருக்குமே என்று யோசித்த நபியவர்கள், அவரிடம் அதைத் தெரிவித்து ‘நான் கீழ்த் தளத்திலேயே தங்கிக்கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டார்கள்.

‘அப்படியே ஆகட்டும்’ என்று கீழ்த் தளத்தை நபியவர்களுக்கு வசதி செய்து தந்துவிட்டு, மாடிக்குச் சென்றுவிட்டார்கள் அபூஅய்யூபும் அவர் மனைவியும். அப்பொழுதுதான் அந்த எண்ணம் தோன்றி தூக்கிவாரிப்போட்டது கணவனுக்கும் மனைவிக்கும்!

“மோசம் போனோம் நாம்! என்ன காரியம் செய்திருக்கிறோம்? அல்லாஹ்வின் தூதரின் தலைக்கு மேலே நாம் இருப்பதாவது? அவருக்கு மேலே நாம் நடப்பதா? நபியவர்களுக்கு வானிலிருந்து வந்து இறங்கும் இறை வேதத்திற்கு மத்தியில் குறுக்கிடும் அற்பர்களாக நாம் இருந்துவிடுவோமே! இது நமக்குப் பேரழிவு அன்றி வேறில்லை.”

இந்த எண்ணம் தோன்றியதுதான் தாமதம், இருவருக்கும் குழப்பமும் மனவேதனையும் அதிகமாகி அதிகமாகி, சுவற்றின் ஓரமாய் நடந்துச் சென்று ஒரு மூலையில் சென்று பம்மிக்கொண்டனர். விடிய விடிய, உறக்கம் தொலைந்துபோய் அமர்ந்திருந்தனர் இருவரும்.

மறுநாள் பொழுது விடிந்ததும் முதல் வேலையாக நபியவர்களிடம் சென்று நின்றார் அபூஅய்யூப். “அல்லாஹ்வின் தூதரே! நேற்றிரவு நானும் என் மனைவியும் ஒரு நொடிகூட உறங்கவில்லை.”

“ஏன் அப்படி? என்ன ஆயிற்று காலித்?” அக்கறையுடன் விசாரித்தார்கள் நபியவர்கள்.

“தங்களுக்கு மேலுள்ள அறையில் நாங்கள் இருக்கிறோமே என்ற நினைவு வந்துவிட்டது. ஒவ்வொருமுறை நாங்கள் நடக்கும்போதும் நகரும்போதும் அந்த அதிர்வில் கூரையிலுள்ள மண் துகள்கள் தங்கள் மேல் சிந்தும் என்று கவலையடைந்துவிட்டோம். தவிர, தங்களுக்கும் தங்களுக்கு வந்து இறங்கும் வஹீக்கும் இடையில் நாங்கள் குறுக்கிடுகிறோம் என்ற அச்சமும் சேர்ந்துகொண்டது” என்று தம் கவலையைச் சொன்னார் அபூஅய்யூப்.

அன்பாய் ஆறுதல் சொன்னார்கள் நபியவர்கள். “நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்னைச் சந்திக்க மக்கள் வருவார்கள்; போவார்கள். அதற்கு இதுவே வசதி. உங்களுக்குத் தொந்தரவு இருக்கக் கூடாது. அதனால்தான் நான் கீழ்த் தளத்தைத் தேர்ந்தெடுத்தேன்.” நபியவர்களின் திருப்தியே முக்கியம் என்று ஏற்றுக்கொண்டார் அபூஅய்யூப்.

ஓரிரவு கடுமையான குளிர். மதீனாவில் வெயில் எந்தளவு கடுமையோ, அதைப்போலவே குளிர்காலத்தின் குளிரும். அன்றிரவு நிலவிய கடுமையான குளிரில் அபூஅய்யூப் தண்ணீர் சேமித்து வைத்திருந்த கொள்கலம் விரிசல்விட்டு உடைந்து விட்டது. அவ்வளவு தண்ணீரும் தரையில் பரவ ஆரம்பித்தது. பதறிப்போனார்கள் தம்பதியினர். இரு தளம் கொண்ட வீடு என்றாலும் கான்கிரீட் கட்டடம் போன்ற வலுவான கட்டுமானம் எல்லாம் இல்லை. மண் சுவர், மண் தரை. மண் தரையில் தண்ணீர் பரவினால் வடிந்து கீழ்த் தளத்தில் சொட்டுமே? அங்கு அல்லாஹ்வின் தூதர் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே?

ஏதாவது துணியை எடுத்துத் தண்ணீரை உறிஞ்சி எடுக்கலாம் என்று தேடினால் அவர்களிடம் இருந்தது அவர்கள் குளிருக்குப் போர்த்திக் கொள்ளும் தடிமனான போர்வை மட்டுமே. அதைத் தரையில் போட்டுத் தண்ணீரைத் துடைத்தார்கள் இருவரும். எப்படியோ தண்ணீர் கீழ்த் தளத்தில் சிந்தாமல் காப்பாற்றிவிட்டு, இப்பொழுது குளிரில் நடுங்கியபடி அமர்ந்திருந்தார்கள் கணவனும் மனைவியும். அத்தகு அசௌகரியத்திலும் அவர்களின் கவலையெல்லாம் நபியவர்களின்மேல் மட்டுமே இருந்தது என்பதுதான் வியப்பு.

காலையில் நபியவர்களிடம் சென்றார் அபூஅய்யூப். “அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோரைவிடவும் தாங்கள் எனக்கு மேலானவர். தாங்கள் கீழ்த் தளத்திலும் நாங்கள் தங்கள் தலைக்கு மேலும் குடியிருப்பதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை” என்று சொல்லிவிட்டு முந்தைய இரவு நடந்த நிகழ்வையும் விவரித்தார் அபூஅய்யூப். அவரது அவலம் புரிந்துபோன நபியவர்கள் அபூஅய்யூபின் யோசனையை ஏற்றுக்கொண்டு மேல் தளத்திற்குக் குடிபெயர, கீழ்த் தளத்திற்கு வந்ததும்தான் ‘அப்பாடா’ என்று நிம்மதியானது தம்பதியருக்கு.

நபியவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவார் உம்மு அய்யூப். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும்வரை இவர்கள் எதுவும் உண்ணாமல் காத்திருப்பார்கள். மீதமான உணவு தட்டில் திரும்பிவந்தால், அந்த உணவை, நபியவர்கள் எந்தப் பகுதியிலிருந்து உண்டார்களோ அதே பகுதியிலிருந்து உண்ண ஆரம்பிப்பார்கள் தம்பதியர். அல்லாஹ்வின் அருள் அதில் இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

“அல்லாஹ்வின் தூதரே! மீதமான உணவு உங்களிடமிருந்து வந்தால், அதில் உங்களது கைவிரல் அடையாளம் தென்படும் இடத்தைத் தேடுவேன். அதே இடத்தில் நான் கைபதித்து அந்த உணவை உண்பேன்” என்பார் அபூஅய்யூப். அந்த அளவு அல்லாஹ்வின் தூதரின் மேல் பாசம். எழுத்தில் விவரிக்க இயலாத பாசம்.

ஏழு மாதங்கள் அபூஅய்யூபின் வீட்டில் அவரது அன்பு உபசரிப்பில் இருந்து வந்தார்கள் நபியவர்கள். நபியவர்களின் புலப்பெயர்வுக்கு முன்னர் முஸ்அப் (ரலி) மதீனாவுக்கு வந்து சேர்ந்தபோது, அவருக்கு அடைக்கலம் அளித்து அனைத்து வசதிகளும் செய்துகொடுத்த நபித்தோழர் இப்னு ஸுராரா (ரலி) பற்றி ஏற்கனவே படித்திருக்கிறோம்.   இப்னு ஸுராராவின் பொறுப்பில் வளர்ந்த ஸஹ்ல், சுஹைல் எனும் அனாதைச் சகோதரர்கள் இருவருக்குச் சொந்தமான ஈச்சங்களம்தான் அன்று நபியின் ஒட்டகம் அமர்ந்த இடம். அது,  அபூஅய்யூபின் வீட்டிற்கு அருகில் அமைந்திருந்தது. நபியவர்கள் அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்ட விரும்புவதாகச் சொன்னபோது, அந்த இடத்தை நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு அச்சகோதரர்கள் முன்வந்தனர். ஆனால், பிற்காலத்தில் ‘மஸ்ஜிதுந்நபவீ’ எனப் பேறு பெறப்போகும் அந்த இடத்தை விலை கொடுத்து வாங்கிய நபியவர்கள் பள்ளிவாசலைக் கட்டி எழுப்ப ஆரம்பித்தார்கள்.

முஹாஜிரீன்கள், அன்ஸார்கள் ஆகியோருடன் நபியவர்களும் இணைந்து, கட்டுமானம் நடைபெற்றது. நாற்காலி போட்டு அமர்ந்துகொண்டு, மற்றவர்களை வேலை வாங்கும் பழக்கமில்லை நபியவர்களுக்கு. தாமும் இணைந்து செயலில் இறங்குவதே அவர்களது வழக்கம். பள்ளிவாசலுடன் இணைத்து இருபக்கமும் நபியவர்களும் அவர்களின் மனைவியரும் தங்கிக்கொள்ள வீடுகள் கட்டப்பட்டன. வீடுகள் என்றால் ஒரு அறை. அதுதான் வீடு. பள்ளிவாசலும் மிகவும் எளிமையான கட்டடம். நாலாபுறமும் கற்களாலும் மண்ணாலும் கட்டப்பட்ட சுவர். பேரீச்சம் மரக் கிளைகள், ஓலைகளால் வேயப்பட்ட கூரை. பள்ளிவாசலின் ஒருபுறம் ஏழைகள் தங்கிக்கொள்ள திண்ணை. அவ்வளவுதான்.

பள்ளிவாசலும் வீடும் கட்டப்பட்டவுடன் அங்குக் குடிபெயர்ந்தார்கள் நபியவர்கள். அல்லாஹ்வின் தூதர் அபூஅய்யூபின் அண்டை வீட்டுக்காரர் ஆகிப்போனார்கள். ஏழு மாதங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்ததால் நபியவர்களுக்கும் அபூஅய்யூபுக்கும் இடையே அலாதியானதொரு நட்பும் நெருக்கமும் ஏற்பட்டுப்போய் சம்பிரதாயம் ஏதும் இல்லாமல் அபூஅய்யூவின் வீடடிற்கு நபியவர்கள் உரிமையுடன் சென்று சந்திப்பதும் உண்பதும் வழக்கம். அந்த உரிமையெல்லாம் சேர்ந்துதான் தம் அணுக்கத் தோழர்கள் இருவருடனும் நபியவர்கள் அவருடைய வீட்டிற்கு வருகை புரிந்தது.

ரொட்டி, இறைச்சி, பேரீச்சங் கனிகள் என்று விருந்து முடிந்ததும், “நாளை என்னை வந்து சந்தியுங்கள் அபூஅய்யூப்” என்று விடைபெற்றார்கள் நபியவர்கள். உபகாரம் புரிபவர்களுக்கு மன நிறைவுடன் கைம்மாறு செய்வது நபியவர்களின் வழக்கம். ஆனால் அத்தகைய எதுவொன்றையும் அபூஅய்யூப் எதிர்பார்ப்பவர் இல்லை அல்லவா? அதனால் மறுநாள் செல்லத்தான் வேண்டுமோ என்று அவருக்குத் தயக்கம்; சங்கடம். உமர்தான் மீண்டும் வற்புறுத்தினார்.

“நாளை நீங்கள் வந்து சந்திக்க வேண்டும் என்று நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள் அபூஅய்யூப்.”

“அல்லாஹ்வின் தூதரைச் செவிமடுத்தேன்; அடிபணிவேன்” என்றார் அபூஅய்யூப்.

மறுநாள் தம்மை வந்து சந்தித்த அபூஅய்யூபிடம் தம் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு பெண் அடிமையை அளித்தார்கள் நபியவர்கள். இள வயதுப் பெண் அவள். “இவள் எங்கள் வீட்டில் நன்றாகப் பணி புரிந்து நல்ல ஒழுக்கமுடன் இருந்து வந்திருக்கிறாள். இவளை நல்லவிதமாகக் கவனித்துக் கொள்ளுங்கள் அபூஅய்யூப்.”

“அப்படியே ஆகட்டும்” என்று அவளைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அவர். மனைவி ஆச்சரியமுடன் விசாரித்தார். “யார் இவள்? எங்கிருந்து அழைத்து வருகிறீர்கள்?”

“இவள் நமக்காகவாம். அல்லாஹ்வின் தூதர் அளித்தார்கள்.”

“எத்தகு உயர் குணம் நபியவர்களுக்கு? எத்தகு உயர் பரிசு?”

“இவளது பொறுப்பை நம்மிடம் அளித்துள்ளார்கள். சிறப்பாய்க் கவனித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள்.”

“நபியவர்களின் கட்டளையைச் சிறப்பாய் நிறைவேற்ற வேண்டுமே! என்ன செய்யலாம்?” என்று கேட்டார் உம்மு அய்யூப்.

“என்னிடம் நல்ல உபாயம் உள்ளது. இவளுக்கு விடுதலை அளித்துவிடலாம்.”

அக்காலத்தில் அடிமைமுறை என்பது மிகவும் அழுத்தமான கலாச்சாரம். இக்காலத்தில் அடுக்களைக்கும் வீட்டுப்பணிக்கும் மனைவியர் இயந்திரங்கள் வாங்கிக் கேட்பதுபோல், அப்பொழுதெல்லாம் அடிமைகள். ஆனால் கணவர் அடிமைப் பெண்ணுக்கு விடுதலை என்றதும், “அல்லாஹ் உம்மை நேர்வழியில் செலுத்தியிருக்கிறான். உமக்கு வெற்றி அளிப்பானாக” என்றார் அபூஅய்யூபின் மனைவி.

விடுதலையடைந்தாள் அந்த இளம்பெண்.

oOo

கைபர் யுத்தம்! ஜஅஃபர் பின் அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் நமக்கு அறிமுகமான யுத்தம் இது. இந்த யுத்தத்தின் காரணமும் நிகழ்வுகளும் வரலாறும் சற்று நெடியது. இங்கு நமக்குத் தேவையான விஷயத்தை மட்டும் பார்த்துக்கொள்வோம். யூதர்களுக்கு எதிரான இப்போரில் முஸ்லிம்கள் வெற்றி அடைந்ததும், கைப்பற்றப்பட்ட பெண்களில் ஒருவர் ஸஃபிய்யா பின்த் ஹுயைய். யூதர்களின் பனூ நளீர் கோத்திரத்தின் தலைவன் ஹுயைய் இப்னு அஃக்தபின் மகள் இவர். இந்த ஹுயைய் இப்னு அஃக்தப்தான் அகழி யுத்தத்தின் காரணகர்த்தா. மக்காவுக்குச் சென்று கூட்டணிப் படைகளைத் திரட்டித் தூபம் போட்டவன். மதீனாவில் முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு இணக்கமாய் இருந்த பனூ குரைளாவைத் தூண்டிவிட்டு, முஸ்லிம்களின் முதுகில் குத்த ஏற்பாடு செய்து, கெட்ட ஆட்டம் போட்டவன். பின்னர் பனூ குறைளா மக்களுடன் சேர்த்து அவனும் கொல்லப்பட்டான்.

தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராகச் சதிவேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பனூ நதீர் யூதர்களை எதிர்த்து நிகழ்ந்தது கைபர் யுத்தம். இந்தப் போரில் கொல்லப்பட்ட முக்கியப் பேர்வழி கினானா இப்னு அபீ அல்-ஹகீக். கினானாவின் மனைவி, ஹுயைய் இப்னு அஃக்தபின் மகளே ஸஃபிய்யா.

அடிமையாக அழைத்து வரப்பட்ட ஸஃபிய்யா தேர்ந்துகொள்ள இரண்டு வாய்ப்புகள் அளித்தார்கள் நபியவர்கள்.

“நீர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், நான் உம்மை மணந்துகொண்டு எனது இல்லத்திற்கு அழைத்துச் செல்வேன். அல்லது யூத மதத்திலேயே தங்கிவிட வேண்டும் என்று நீர் விரும்பினால் நான் விடுதலை அளிக்கிறேன்; உமது உறவினர்களிடம் திரும்பிச் செல்லலாம். உமது விருப்பத்தைத் தேர்வு செய்துகொள்ளவும்.”

தயக்கமின்றி இஸ்லாத்தை ஏற்று நபியவர்களைத் திருமணம் புரிந்து கொண்டார் ஸஃபிய்யா பின்த் ஹுயைய் ரலியல்லாஹு அன்ஹா. கைபரிலிருந்து மதீனா திரும்பும் வழியில் சஹ்பா என்றொரு இடம். படையினர் அங்குத் தங்கியபோது தம் மனைவி ஸஃபிய்யாவுடன் வீடுகூடித் திருமணத்தை முழுமைப்படுத்தினார்கள் நபியவர்கள்.

அந்தக் கூடாரத்திற்கு வெளியே வாளும் கையுமாய் ஒருவர்!

இரவு முழுவதும் இங்கும் அங்குமாய் அலைந்துகொண்டிருந்தார். மறுநாள் காலை ஆளரவம் கேட்டு வெளியில் வந்துபார்த்த நபியவர்களுக்கு ஆச்சரியம். அவர் அபூஅய்யூப் அல் அன்ஸாரி.

“என்ன விஷயம் அபூஅய்யூப்?”

“அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் மணம் புரிந்துள்ள பெண் புதிதாய் இஸ்லாத்தை ஏற்றவர். முன்னர் ஒருமுறை யூத குலத்தைச் சேர்ந்த பெண் இறைச்சியில் விஷம் தடவி தங்களுக்கு விருந்தளித்துக் கொல்ல முயன்றாள். அல்லாஹ்வின் உதவியால் தாங்கள் தப்பினீர்கள். ஆனால் தோழர் பிஸ்ஹர் இப்னு பர்ராஹ் அதை உண்டு இறந்து போனார். இந்த மணப்பெண்ணின் தந்தை, கணவன், அவர் குல மக்களில் பலர் போரில் கொல்லப்பட்டுள்ளனர். எனவே தங்களது பாதுகாப்பு குறித்து எனக்கு அச்சம் ஏற்பட்டது.”

இறைஞ்சினார்கள் நபியவர்கள், “யா அல்லாஹ்! அபூஅய்யூப் என்னைப் பாதுகாக்க விழைந்ததுபோல் நீ அவரைப் பாதுகாப்பாயாக.”

இது அத்தருணத்தில் அபூஅய்யூப் கொண்டிருந்த முன்னெச்சரிக்கை மட்டுமே.

அன்னையர்களின்மீது மட்டற்ற மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருந்தவர் அவர். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா பற்றி அவதூறுச் செய்தி பரவியிருந்த நேரம். மக்கள் மத்தியில் குழப்பத்தை விதைத்துக் கொண்டிருந்தனர் நயவஞ்சகர்கள். நபியவர்களும் அன்னை ஆயஷாவும் அபூபக்ரு குடும்பத்தினரும் அளவிலாத மனவேதனையில் மூழ்கியிருந்தனர்.

ஒருநாள் அபூஅய்யூபின் மனைவி தம் கணவரிடம் கேட்டார், “மக்கள் ஆயிஷாவைப் பற்றிப் பேசுவதைக் கேட்டீர்களா?”

“ஆம்! கேள்விப்பட்டேன். அவை அத்தனையும் பொய்.” தெளிவான பதில் வந்தது.

“நீ அத்தகு குற்றம் புரிவாயா உம்மு அய்யூப்?”

பதறிப்போனார் அவர். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் நிச்சயம் செய்ய மாட்டேன்.”

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அன்னை ஆயிஷா உன்னைவிடச் சிறப்பானவர்.”

தீர்ந்தது விஷயம்! நம்பிக்கை சரியான விகிதத்தில் உள்ளத்தில் பாய்ந்திருந்தால் சிந்தனைத் தெளிவு வெகு எளிது.

அபூஅய்யூபின் மீது இறைத் தூதர் வைத்திருந்த அன்பை, தோழர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். நபியவர்களின் மறைவிற்குப் பிறகு இஸ்லாமியப் பேரரசு பாரசீகப் பகுதிகளுக்கு விரிவடைந்திருந்த நேரம். பஸ்ராவுக்குச் சென்றிருந்த அபூஅய்யூப் அப்பொழுது அங்கு இருந்த இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுவின் இல்லத்திற்கு அவரைச் சந்திக்கச் சென்றார். கடன் சுமை இருந்திருக்கிறது அவருக்கு.

அவரை இருகை விரித்து அன்புடன் வரவேற்ற இப்னு அப்பாஸ், “தாங்கள் அல்லாஹ்வின் தூதருக்கு என்ன உபகாரம் செய்தீர்களோ, அதை நான் உங்களுக்குச் செய்வேன்” என்று அபூஅய்யூப் தங்கிக்கொள்ள தமது முழு வீட்டையும் காலி செய்து தந்துவிட்டார்.

“தங்களுக்கு எவ்வளவு கடன் உள்ளது?”

“இருபதாயிரம்” என்றார் அபூஅய்யூப்.

“அவ்வளவுதானே, இந்தாருங்கள்” என்று நாற்பதாயிரம் ரொக்கம், இருபது அடிமைகள் மற்றும் சில பல பொருட்கள் என்று அன்பளிப்பை அள்ளி அள்ளித் தந்தார் இப்னு அப்பாஸ்.

நபியவர்களின்மீது மட்டும் பாசமல்லாமல் அவர்கள் அன்பு செலுத்தியவர்கள் மீதும் பாசம் செலுத்திக் கிடந்தார்கள் தோழர்கள். ரலியல்லாஹு அன்ஹும்.

oOo

அல்லாஹ்வின் தூதருக்கு அடைக்கலம் தந்துவிட்டு இது போதும் ஆயுளுக்கும். வீடு, விவசாயம், பக்கத்திலேயே பள்ளி ஆண்டவனைத் தொழுது காலத்தைத் தள்ளுவோம் என்று முடங்கிவிடவில்லை அபூஅய்யூப். பத்ரு, உஹத், அகழிப் போர் என்று நபியவர்களுடன் இணைந்து அனைத்துப் போர்களிலும் பங்குபெற்று, களத்தில் வீரத்தை அறுவடை செய்திருக்கிறார் அவர்.

அதற்குப் பிறகு ஆபூபக்ரு, உமர், உதுமான், அலி ஆகியோரின் ஆட்சிக் காலம் தொடர்ந்து முஆவியா (ரலியல்லாஹு அன்ஹும்) காலம் வரை அவரது முழு வாழ்க்கையும் ஜிஹாதிலேயே கழிந்திருக்கிறது. அக்காலகட்டத்தில் நடைபெற்ற எந்தவொரு போரிலும் அபூஅய்யூப் இல்லாமல் இருந்ததில்லை என்கின்றன வரலாற்றுக் குறிப்புகள்.

இவ்வாறு அறப்போரில் மூழ்கி அதிலேயே அவர் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதற்கு முக்கியக் காரணம் இருந்தது. இறை வசனம்!

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்” என்று துவங்கும் குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் சூரா அல் பகராவின் 195ஆவது வசனம்.

மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாம் வலுவான நிலைமையை அடைந்த பின்பு, மதீனாவின் அன்ஸாரிகள் தமக்குள் பேசிக்கொண்டனர். “தன் தூதருக்குத் தோழர்களாய் அமையும் வாய்ப்பை நல்கி நம்மைக் கௌரவித்தான் அல்லாஹ். நாம் அவர்களுக்கு உதவியாளர்களாய் இருந்து இஸ்லாம் வெற்றியடையவும் விரிவடையுவும் உதவி புரிந்தோம். நம் குடும்பத்துத் தேவைகளையும் பிள்ளைகளையும் தோட்டத்திலும் விவசாயத்திலும் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டோம். இப்பொழுது போர் முடிந்தது. நாம் குடும்ப வேலைகளுக்குத் திரும்புவோம்.”

“அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த வசனம் எங்களைக் குறித்துத்தான் இறங்கியது. ஜிஹாதைக் கைவிட்டுக் குடும்பம், விவசாயம் என்று திரும்புவது, ‘அழிவின் பக்கம் கொண்டு செல்வ’தாகும்” என்று விளக்கம் அளித்தார் அபூஅய்யூப் அல் அன்ஸாரி. எனவே அவருக்குப் போர்க்களமே வாழ்க்கையாகிப் போனது. ஏககாலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட களங்களில் நடைபெற்ற போர்களில் மட்டும் ஒரு களத்தில் இருந்துகொண்டு இதர களங்களில் நடைபெற்றுள்ள போர்களைத் தவறவிட்டிருக்கிறார், அவர். ரலியல்லாஹு அன்ஹு.

குர்ஆனின் 9ஆவது அத்தியாயமான தவ்பாவில் 41ஆவது வசனத்தில் அல்லாஹ் கூறியிருப்பான், “நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் – நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.”

இந்த வசனத்தை அடிக்கடிக் கூறும் அபூஅய்யூப், “நான் சொற்பமானவற்றைக் கொண்டிருந்தாலும் சரி; நிறைய கொண்டிருந்தாலும் சரி. என்னை எப்பொழுதுமே அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவனாகவே காண்பீர்கள்” என்பார்.

அல்லாஹ்வின்மீது, அவன் நபியின்மீது மட்டற்ற பாசம், அன்பு, அக்கறை. இறைவனுக்காகவே இந்த உயிர் என்ற திடமும் வீரமும். இவையாவும் அவரது உதிரமெல்லாம் கலந்து இருந்ததால், தமது எண்பதாவது வயதிலும் யஸீது இப்னு முஆவியாவுடன் அவரது படையில் இணைந்துகொண்டு கடல் தாண்டி கான்ஸ்டன்டினோபில் சென்றுவிட்டார் அவர்.

அது ஹிஜ்ரீ 52ஆம் ஆண்டு. உக்பா இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு தலைமையில் எகிப்தியர்களின் அணி; ஃபதாலா இப்னு உபைத் தலைமையில் ஸிரியா நாட்டு அணி என்று ரோமர்களின் பெரும் படையை எதிர்த்து அணிவகுத்துத் தாக்கி முற்றுகையிட்டார்கள் முஸ்லிம்கள்.
ஆனால் அதிக நாள் அந்தப் போரில் ஈடுபட முடியாமல் அபூஅய்யூபை நோய் தழுவியது. மரணப் படுக்கையில் இருந்த அவரைச் சந்திக்க வந்தார் யஸீத் இப்னு முஆவியா.

கனிவுடன், “நான் தங்களுக்கு என்ன உதவி புரியட்டும்?”

”முஸ்லிம் வீரர்களுக்கு என் ஸலாம் பகருங்கள். எதிரியின் நிலத்திற்குள் முடிந்தவரை ஆழ்ந்து ஊடுருவும்படி நான் தூண்டினேன் என்று கூறுங்கள். நான் மரணிக்கப் போகிறேன் என்பது உறுதி. என்னைச் சுமந்து சென்று கான்ஸ்டன்டினோபில் நகர் எல்லைச் சுவரின் அடியில் அடக்கம் செய்யச் சொன்னேன் என்று சொல்லுங்கள்.”

சொல்லிவிட்டு சற்று நேரத்தில் இறந்துபோனார். நபி புகுந்த பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவர் இஸ்லாத்திற்காக எங்கோ ஒரு தூர தேசத்தில் உயிர்த் தியாகி ஆகிப்போனார்.

போர் தொடர்ந்தது. கான்ஸ்டன்டினோபில் நகரின் கோட்டைச் சுவரை அடைந்தது முஸ்லிம்களின் படை. தமது இறுதி ஆசைப்படி அந்தச் சுவரின் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டார் அபூஅய்யூப் அல் அன்ஸாரி.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!

< தோழர்கள் முகப்பு | தோழர்கள்-40 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.