தோழர்கள் – 38 – ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பஜலீ – جرير بن عبد الله البجلي

Share this:

ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பஜலீ

جرير بن عبد الله البجلي

காதிஸிய்யாப் போர் என்று முன்னர் ஆங்காங்கே பார்த்துக் கொண்டே வந்தோம். பாரசீகர்களுடன் நிகழ்வுற்ற பிரம்மாண்ட போர் அது. ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹுவின் தலைமையில் நான்கு நாட்களாய் நிகழ்ந்த மிக உக்கிரமான அந்தப் போரின் முதல் நாள் “அர்மாத் நாள்”, இரண்டாம் நாள் “அஃக்வாத் நாள்”, மூன்றாம் நாள் “இமாஸ் நாள்”, நான்காம் நாள் “காதிஸிய்யா நாள்” எனும் விபரங்களோடு அந்நாட்களை வரலாறு குறித்து வைத்திருக்கிறது.

அர்மாத் நாளன்று முஸ்லிம்களும் பாரசீகர்களும் போருக்கான அனைத்து வியூகங்களுடனும் களத்தில் அணிவகுத்து நின்றனர். தம் படைகளுக்கு உத்தரவுகள் அளித்துக் கொண்டிருந்தார் ஸஅத். “லுஹ்ருத் தொழுது முடியும்வரை இருக்கும் இடத்தைவிட்டு நகராதீர்கள். நீங்களெல்லாம் லுஹ்ருத் தொழுது முடித்தவுடன் நான் தக்பீர் முழங்குவேன். நீங்களும் பதிலுக்குத் தக்பீர் முழங்கித் தயாராகுங்கள். நினைவில் கொள்ளுங்கள்; உங்களுக்கு முன் வாழ்ந்தோருக்குத் தக்பீர் அளிக்கப்படவில்லை. உங்களுக்கு ஆதரவளிக்கவே அது உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது முறை தக்பீர் முழங்குவேன். நீங்களும் தக்பீர் முழங்குங்கள். மூன்றாவது முறை நான் தக்பீர் முழங்கியதும் உங்களின் குதிரைப் படை அணியினர், எதிரியை நோக்கிச் செல்லுங்கள். நான் நான்காவது முறை தக்பீர் முழங்கியதும் அனைவரும் முன்னேறிச் சென்று எதிரியை எதிர்கொள்ளுங்கள். ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (ஆற்றலும் வலிமையும் அல்லாஹ்விடமிருந்தே) என்று சொல்லுங்கள்”

லுஹ்ருத் தொழுகை முடிந்தது. முதல் இரண்டு தக்பீர்கள் முழங்கப்பட்டன. முஸ்லிம்களின் படை தயார் நிலையில் நின்றது. மூன்றாவது தக்பீர் முழங்கப்பட்டதும் துவங்கியது யுத்தம். முஸ்லிம் குதிரைப் படையினர் முன்னேறிச் செல்ல, பாரசீகத் தரப்பிலிருந்து குதிரை வீரர்கள் அணி வந்தது. முட்டிக் கொண்டனர் இருதரப்பும்.

“ஒத்தைக்கு ஒத்தை” நினைவிருக்கிறதா? இரு தரப்பிலிருந்தும் திறமையான ஒரு வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டு நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்று இந்தச் சண்டை பற்றி முஜ்ஸா (ரலி) வரலாற்றில் படித்தோமே? இந்தச் சண்டையின் முடிவு பெரும்பாலும் இரண்டில் ஒன்றுதான். கொல்; அல்லது கொல்லப்படு. இது வெகு கடினமான போர்க் கலை. ஒத்தைக்கு ஒத்தைச் சண்டையின் முடிவு, படையினருக்கு அளிக்கும் தாக்கம் வெகு அதிகம். வெற்றி பெற்றவரின் அணியினருக்கு எக்கச்சக்க ஊக்கம் பெருகும். மாண்டு விழுபவரின் படை அணியினர் மத்தியி்லோ அது பெரும் அதிர்வை நிகழ்த்தும். அப்படியான ஒத்தைக்கு ஒத்தைச் சண்டை இந்த மூன்றாவது தக்பீருக்குப் பின்னும் துவங்கியது. நபியவர்களின் காலத்திலும் சரி; அதற்குப் பின்னரும் சரி; இத்தகைய சண்டையில் பெரும் தீரர்களாய்த் திகழ்ந்தனர் தோழர்கள். போருக்குப் பயிற்சி மேற்கொள்வதுபோல் இந்த மல்யுத்தத்திற்கும் சிரத்தையாய்ப் பயிற்சி செய்து தயாராய் உருவாகியிருந்தனர் அவர்கள். அன்றைய சண்டையில் காலிப் இப்னு அப்துல்லாஹ் அல்-அஸதீ, ஆஸிம் இப்னு அம்ருத் தமீமீ, அம்ரு இப்னு மஅதி அஸ்ஸுபைதீ, துலைஹா இப்னு குவைலித் அல் அஸதீ (ரலியல்லாஹு அன்ஹும்) போன்றோர் களத்தில் தூள் பறத்திக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு பாரசீக வீரனாய் முன்வந்து சண்டையிட்டு, தோற்று மடிய, சிலர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாரசீகத் தளபதி ருஸ்தம் அப்பொழுது யாரும் எதிர்பாராத காரியம் ஒன்றைச் செய்தான். ‘ஒத்தைக்கு ஒத்தை’ச் சண்டையில் தன் பக்கம் ஒரு வெற்றிகூட கிட்டாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் தொடர் தோல்விகள் தன் படையினர் மத்தியில் எத்தகைய பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தவன், முஸ்லிம்களின் படைப் பிரிவு ஒன்றின்மேல் சட்டெனப் பொதுப்படையான தாக்குதலைத் துவக்கி விட்டான். அழுகுணி ஆட்டம்தான். ஆனால் அப்பொழுது அவனுக்கு வேறுவழி தெரியவில்லை.

அதுமட்டுமன்று விசித்திரம். பிரம்மாண்டப் பாரசீகப் படையினரின் பாதிக்கும் மேற்பட்டோர் முஸ்லிம் படைகளின் வெகு சிறிய பிரிவு ஒன்றின்மீது பாய்ந்ததுதான் விந்தை. பதின்மூன்று யானைகள்; அவை ஒவ்வொன்றுக்கும் நாலாயிரம் குதிரை, காலாட் படைவீரர்கள் என்ற விகிதத்தில் பேரலை திரண்டு மோதியது. காதிஸிய்யாப் போரின் ஆரம்பக் கட்டத்திலேயே ருஸ்தம் எத்தகைய கிலேசத்தை அடைந்திருந்தான் என்பதை விவரிக்க இந்த மூர்க்கத் தாக்குதல் போதுமானது.

அதைக் கவனித்த ஸஅத், முக்கியமான தோழர்கள் தலைமையில் உடனே ஒரு பிரிவைத் தாக்குதலுக்கு உட்பட்டிருந்த அந்த முஸ்லிம் படைப் பிரிவின் உதவிக்கு அனுப்பினார். ஆனால் அதுவரையிலும் குறைவான வீரர்களே இருப்பினும் அந்தக் கடினமான சூழலிலும் மாபெரும் பாரசீகப் படையை எதிர்த்து மிக உறுதியுடன் நின்று போரிட்டுக் கொண்டிருந்தது அந்த முஸ்லிம் படைப் பிரிவு – பனூ பஜீலா.

பனூ பஜீலா? யாரிவர்கள்?

oOo

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மதீனத்து வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் மதீனாவிற்குப் பல கோத்திரங்கள் வந்த வண்ணம் இருந்தன; இஸ்லாத்தை ஏற்றன என்றெல்லாம் முந்தைய அத்தியாயங்களிலேயே படித்து வந்தோம். அப்படி அவர்களைச் சந்திக்க யமனிலிருந்து வந்த ஒரு கோத்திரம்தான் பனூ பஜீலா. அந்தக் கோத்திரத்தின் பிரசி்த்தி பெற்ற தலைவர்களுள் ஒருவர் ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அல் பஜலீ.

நெடுநெடுவென உயரம்; வனப்பான முகம்; மிக அழகிய தோற்றம்; வெகு அழகானவர் ஜரீர். தோற்றம் மட்டுமல்லாது அடக்கமான பண்புள்ள பழக்கவழக்கம்; அதிராத ஆனால் திறம் வாய்ந்த செறிவான பேச்சு; மொழி ஆளுமை என்று இதர குணாதிசயத்திலும் சிறந்து விளங்கியவர்.

அது ஹிஜ்ரீ பத்தாம் ஆண்டு. ரமளான் மாதத்தின் ஒரு வெள்ளிக்கிழமை. ஜரீர் இப்னு அப்துல்லாஹ்வும் அவரது பனூ பஜீலா கோத்திரத்திலிருந்து ஒரு குழுவினரும் யமனிலிருந்து மக்காவுக்கு வந்திருந்தனர். முஹம்மது நபியைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது திட்டம். பண்பும் நாகரிகமும் மிகவும் அமைந்திருந்தன அவர்களிடம். அல்லாஹ்வின் தூதரைச் சந்திக்கச் செல்கிறோம், மிகவும் மரியாதைக்கு உரியவர் அவர் என்று பார்த்துப் பார்த்து நேர்த்தியாய் ஆடை அணிந்து கொண்டனர். இறைத்தூதரின் பள்ளிவாசல் மஸ்ஜிதுந் நபவீயை அடைந்து, வெளியிலிருந்த மரத்தில் தங்களது குதிரைகளைக் கட்டினர்; பள்ளிவாசலுக்குள் அடக்கமாய் நுழைந்தனர். அப்பொழுது நபியவர்கள் குத்பா நிகழ்த்திக் கொண்டிருக்க, இவர்கள் அனைவரும் வெகு மரியாதையாய்க் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டார்கள்.

அப்பொழுதுதான் பள்ளியில் அமர்ந்திருந்த மக்களெல்லாம் தம்மைக் கடைக்கண்ணால் பார்ப்பதை உணர்ந்தார் ஜரீர். ‘நாமெல்லாம் ஊருக்குப் புதியவர்கள் என்பதால் அப்படிப் பார்க்கிறார்களோ? இல்லையே! நம் குழுவில் என்னை மட்டுமே ஏன் இவர்கள் உற்றுப் பார்க்க வேண்டும்?’ புரியவில்லை அவருக்கு.

காரணம் இருந்தது. ஜரீரும் அவரது கோத்திரத்து மக்களும் பள்ளிவாசலின் உள்ளே நுழையும் முன் தமது உரையின் இடையே ஒரு சிறிய முன்னறிவிப்புச் செய்தி பகர்ந்திருந்தார்கள் நபியவர்கள். “என் நம்பிக்கைக்குரிய தோழர்களே! யமனைச் சேர்ந்த ஓர் இளவரசர் இப்பொழுது விரைவில் உங்கள் மத்தியில் வருவார். அரசனைப் போன்ற தோற்றமும் சுய கௌரவமும் மிக்கவர் அவர்” மற்றொரு குறிப்பில், “யமன் மக்களில் மிகச் சிறப்பான ஒருவர், இந்த வாசல் வழியாக உள்ளே வரப்போகிறார்; அவரது முகம் மலக்குகளைப் போல் சுடரொளி வீசும்” என்று நபியவர்கள் அறிவித்ததாக உள்ளது.

அதைச் செவியுற்றிருந்த அந்த மக்கள், புதியவர்கள் இவர்கள் உள்ளே நுழைந்ததும் இனங் கண்டுகொண்டு, ‘யார் அந்த அழகர்?’ என்பதை அறிந்து கொள்ளவே ஆவலுடனான அவர்களது கடைக்கண் வீச்சு.

வெறும் வர்ணிப்பு என்பதெல்லாம் இல்லாமல் பிரமிக்கத்தக்க அழகுடையவராய்தாம் இருந்திருக்கிறார் ஜரீர். எந்தளவு என்றால் – நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் மிக அழகிய தோற்றம் கொண்டவர்கள் என்பது வரலாற்றுத் தகவல். அதை நினைவில் கொண்டு, இவரை ‘இந்தச் சமுதாயத்தின் யூஸுஃப்’ என்றே உவமானம் சொல்லியிருக்கிறார் உமர் (ரலி). அதெல்லாம் பின்னர். இப்பொழுது குழப்பத்தில் இருந்தார் ஜரீர். இவர்களுக்கு முன் உள்ளே சென்று அமர்ந்திருந்த அவர்களின் நண்பர் ஒருவர் இருந்தார். புதிதாய் இஸ்லாத்தை ஏற்க வந்திருந்தவர்கள் ஆதலால் குத்பாவின் சட்டம் அறிந்திருக்கவில்லை. நடப்பவற்றைக் கவனித்த அவர், அப்பொழுதே ஜரீரிடம் நபியவர்கள் முன்னறிவித்த அந்தச் செய்தியைச் சொல்லிவிட்டார்.

தாம் சந்திக்க வந்த அல்லாஹ்வின் தூதரிடமிருந்து தம்மைப் பற்றி இத்தகைய நல் வார்த்தைகள் பகரப்பட்டது அறிந்ததும் திக்குமுக்காடிப் போனார் ஜரீர். அவை தமக்குக் கிடைக்கப்பெற்ற பெருமதிப்பு – சந்தேகமே இல்லை என்று அவரது இதயம் சந்தோஷத்தில் துள்ளியது! ஆனந்தத்தில் முகம் இளஞ்சிவப்பாய் நிறம் மாறிப்போனது!

வாழ்க்கையிலேயே முதன்முறையாக உண்மையான ஆனந்தமும் அமைதியும் அடைந்ததாய் உணர்ந்தது மனம். போகிற போக்கில் யாராவது நம்மைப் பற்றி நாலு வார்த்தை உயர்வாய்ச் சொல்லிவிட்டாலே துள்ளிக் குதிக்கும் நம் மனது. அப்படியிருக்க, உண்மை தவிர வேறு உரைக்காத இறைவனின் தூதரிடமிருந்து இத்தகைய உயர்வான வார்த்தைகளைக் கேட்கப்பெற்ற ஒருவரின் மன நிலை இப்படி இருந்ததில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?

ஜும்ஆத் தொழுகை முடிந்ததும் நபியவர்களைச் சந்தித்தார்கள் ஜரீரும் அவர் தோழர்களும். தம்மைச் சந்திக்க அழகாய் ஆடை உடுத்தி வந்திருந்தவர்களைப் பார்த்து, தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் நபியவர்கள். “மரியாதை பெறுவதற்குத் தகுதியுடைய மக்கள் உங்களைச் சந்திக்க வரும்பொழுது அவர்களை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரியுங்கள்” என்று சொன்னவாறே தம் அங்கியை எடுத்து விரித்து அவர்களை அமரச் சொன்னார்கள் முஹம்மது நபி ஸல்லலலாஹு அலைஹி வஸல்லம். அக்கால மக்களிடையே அத்தகைய உபசரிப்பு பெரும் பேறு. அமர்ந்தார்கள் விருந்தினர்கள். அவர்கள் ஆசுவாசமடைந்ததும் கனிவுடன் விசாரித்தார்கள் நபியவர்கள். “என்ன காரணத்திற்காகத் தாங்கள் வந்துள்ளீர்கள்?”

“அல்லாஹ்வின் தூதரே! தங்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு எங்களது உறுதிமொழியை அளிக்க வந்துள்ளோம். இஸ்லாம் எங்கள்மேல் கொடை பொழியுமானால் பேறுபெற்றவராவோம் நாங்கள்”

மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தது நபியவர்களுக்கு. “வாருங்கள்! உறுதிமொழி ஏற்றுக்கொள்ளுங்கள். உள்ளமும் ஆன்மாவும் ஒருங்கிணைந்து, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனன்றி வேறில்லை என்று உரையுங்கள். நான் அவனால் அனுப்பப்பட்ட உண்மையான நபி என்று ஏற்றுக்கொள்ளுங்கள். இதன்பின், நீங்கள் கடமையான தொழுகையைச் சரிவரப் பேண வேண்டும்; ஸகாத் அளிப்பது உங்கள் மீது கடமையாகும்; ரமளான் மாதத்தில் நீங்கள் கட்டாயம் நோன்பு நோற்க வேண்டும். உங்களால் இயலுமானால் ஹஜ் கடமை நிறைவேற்ற வேண்டும். முஸ்லிம்கள் அனைவருக்கும் நீங்கள் நல்லதையே நாட வேண்டும். அவர்களிடம் நீங்கள் இரக்கம் காட்ட வேண்டும். ஒருவன் பிறரிடம் பரிவிரக்கம் கொள்ளாவிட்டால் அல்லாஹ் அவன் மீது பரிவிரக்கம் கொள்ளமாட்டான் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களுக்குத் தலைவராகவோ அமீராகவோ நியமிக்கப்படும் ஒருவருக்கு – அவர் பலவீனமான கோத்திரத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும் – அடிபணியுங்கள்; ஒத்துழையுங்கள்”

அந்த யமன் குழுவினருக்கு ஜரீர் இப்னு அப்துல்லாஹ் தலைமையேற்று வந்திருந்ததால் அனைவர் சார்பாகவும் அவரே பேசினார். “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தின் இந்த அனைத்துக் கட்டளைகளுக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம். மனமாற வாக்குறுதி அளிக்கிறோம்” முன்னே நகர்ந்து நபியவர்களின் உள்ளங்கையில் தம் உள்ளங்கையைப் பதித்தார் ஜரீர் இப்னு அப்துல்லாஹ். திருநபியின் கரம் பற்றிய அந்த உணர்ச்சி – அவர் மனமெங்கும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்திப் பரப்பியது.

தம்மைச் சந்திக்க வந்த புதியவர்களிடம் நபியவர்கள் அளித்தது சுருக்கமான, தெளிவான அறிவுரை. காலாகாலத்திற்கும் பொருந்திப்போகும் புத்திமதி. அந்த ஒவ்வொரு வார்த்தையையும் மிகத் தெளிவாய் உள்வாங்கிக் கொண்டார் ஜரீர் இப்னு அப்துல்லாஹ். மிகையில்லை. பிற்காலத்தில் முக்கியமான தருணங்களில் அதை வெளிப்படுத்தவும் செய்தார் அவர், ரலியல்லாஹு அன்ஹு.

கைச்சேதம் என்னவெனில், நாமெல்லாம் அறிவுரைகளையும் ஹதீதுகளையும் பக்கம் பக்கமாய்ப் படித்துவிட்டு விவாதங்களுக்குத்தான் பயன்படுத்திக் கொள்கிறோமேயன்றி அவற்றை எந்த அளவு நடைமுறைப்படுத்துகிறோம்? அடுத்தது, நபியவர்களே நம் அழகைப் பற்றி சிலாகித்துவிட்டார்கள்; இதைவிடத் தரச்சான்று என்ன வேண்டும்? மேலும் அழகைப் பெருக்கிக் கொள்வோம்; பராமரிப்போம்; உலக அழகனாய் நிலைத்திருக்க என்னென்ன வழிவகை உண்டு என்று பார்ப்போம் என்றெல்லாம் யோசிக்கவில்லை ஜரீர்.உடனே அவருக்கு முதல் பணி அளிக்கப்பட்டது. களப்பணி. “அவ்வளவுதானே! அப்படியே ஆகட்டும்” என்று புறப்பட்டார் அவர்.

என்ன அது? பார்ப்போம்.

oOo

நபி இப்ராஹீம் (அலை), இறைவனின் ஆணைப்படி மக்காவில் கஅபா ஆலயத்தை நிறுவியதன்பின் பாலை வனாந்திரமாக இருந்த மக்கா, மெதுமெதுவே பிரபல்யமடைந்து கொண்டே வந்தது. அதனால் அந்தக் காலம் தொட்டே கஅபா ஆலயத்திற்கு வந்து நபி இப்ராஹீம் கற்றுத்தந்தபடி ஏக இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள் மக்கள். பிறகு என்ன ஆனதென்றால் தலைமுறை காலங்களுக்குப் பிறகு அது ஏக இறைப் பொருளிழந்து பல தெய்வ உருவ வழிபாடு என்றாகிப் போனது. வழிபாடுதான் மாறிப்போனதே தவிர மக்காவிற்கு வரும் யாத்ரீகர்கள் கூட்டம் வருவது தடைபடவில்லை. பல குலங்களின் கோத்திரத்து மக்கள் வருவதும் போவதுமாய் எப்பொழுதும் கலகலப்பு, வியாபாரம் என்று மக்கா சிறப்பு நகரம். தனிச்சிறப்பு கஅபா.

அண்டை நாடான யமனில் இருந்த அப்ரஹாவுக்கு இவையெல்லாம் ஏகப்பட்ட எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருந்தன. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறப்பதற்குமுன் யமனில் அவன்தான் ஆட்சியாளன். யாத்ரீகர்கள் போக்குவரத்து என்பதில் சிறந்த பொருளாதார அனுகூலம் என்னவென்றால் வர்த்தகம். வர்த்தகம் சிறந்தோங்கினால் அந்த ஊருக்கு வருமானம், வளம் எல்லாம் இருக்கும்தானே? எனவே இதையெல்லாம் கருத்தில்கொண்டு யமனில் ஒரு மிகப்பெரும் தேவாலயம் நிறுவினான் அப்ரஹா. பிறதேச மக்கள் தன் நாட்டிற்கு யாத்திரை வரவேண்டும்; கடைவீதியெல்லாம் கலகலக்க வேண்டும்; பொருளாதாரம் வளம்பெற வேண்டும் என்றெல்லாம் அவனுக்கு ஆசை. ஆசைப்படுவது குற்றமா என்ன? ஆனால் அப்படியெல்லாம் நிறைவேறவில்லை. இந்நிலையில் மக்கத்துக் குரைஷிகளுடன் அவனுக்கு முட்டிக்கொள்ள, ரசாபாசமாகி அந்த ஆலயம் தீக்கிரையாக்கப்பட்டுவிட்டது.

வெகுண்டெழுந்தான் அப்ரஹா. “உங்க ஊர்ல கஅபா என்கிற அந்தக் கருங்கல் கட்டடத்தை வைத்துக்கொண்டுதானே, உங்களுக்கு இந்த ஆட்டம். கொண்டாங்கடா யானைகளை. அதை இடித்துத் தரைமட்டமாக்குவோம்”

அந்தக் காலத்தில் புல்டோசர் இயந்திரங்கள் ஏது? எனவே பெரும் படை, யானைகளுடன் மக்காவை நோக்கிப் புறப்பட்டது. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பதுபோல, கஅபாவின் பின்னே பொதிந்திருந்த இறை மகிமை, அது அல்லாஹ்வின் நாட்டப்படி கட்டப்பட்ட ஆலயம் என்ற பெருமை அவனுக்குத் தெரியாமல் போய்விட்டது. சோலி அதிகமிருந்ததால் வரலாறெல்லாம் படிக்கவோ, கேட்கவோ அவனுக்கு அவகாசம் இருந்திருக்கவில்லை போலும். கடைசியில் மக்காவை நெருங்கிய அவனது யானைப் படையை அல்லாஹ்வின் ஆணைப்படி பறவைப் படை கல்கொண்டு அழித்தது என்பதெல்லாம் நபியவர்கள் பிறப்பதற்கு முன்னரே நிகழ்வுற்ற, பிற்பாடு இறைமறை எடுத்துரைத்த வரலாறு.

பின்னர் மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி பெற்றதும், கஅபாவுக்கும் மீளெழுச்சி ஏற்பட்டது. பொருளற்ற உருவச் சிலைகள் அகற்றப்பட்டு ஒருவழியாய் அது மீண்டும் தம் ஏக இறை சுவாசத்தை உள்ளிழுத்து நிரப்பிக் கொண்டது. யமனில் அப்ரஹாவும் அவன் நிறுவிய ஆலயமும் அழிந்து விட்டிருந்தாலும், அங்கிருந்த சில குலத்தாருக்கு கஅபாவுக்குப் போட்டியாய் வழிபாட்டுத்தலம் நிறுவ வேண்டும் என்ற ஆசை மட்டும் விடவில்லை. உருவானது ‘துல்கலஸா’.

ஜரீர் இப்னு அப்துல்லாஹ்வின் ‘பஜீலா’ குலமும் மற்றொரு குலமான ‘கஸ்அம்’ குலத்தினரும் இந்த துல்கலஸாவைத் தங்களுக்கு ஆலயமாக ஆக்கிக்கொண்டனர். அது யமனில் தபலா எனும் ஊரில் இருந்ததாக ஒரு குறிப்புத் தெரிவிக்கிறது. அதில் பலிபீடங்கள் எல்லாம் உருவாக்கி வைத்துக் கொண்டு பெருமளவில் உருவ வழிபாடு, அனாச்சாரங்கள் என்று நடைபெற்றுக் கொண்டிருந்தன. நாளாவட்டத்தில் அது ‘யமன் நாட்டுக் கஅபா’ என்று சொல்லுமளவுக்குப் பிரபலமடைந்துவிட்டது. ஏக இறைக் கொள்கையை மக்காவிலும் மதீனாவிலும் மீண்டும் புதுப்பித்து நிறுவியபின் நபியவர்களின் கவலையெல்லாம் சுற்றுப்பட்டு வட்டாரத்தில் அமைந்திருந்த உருவ வழிபாட்டு ஆலயங்களை நீக்குவதில் குவிந்தது. அதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் தோழர்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். இந்நிலையில் பஜீலா குலத்துத் தலைவர்களுள் ஒருவரான ஜரீர் இப்னு அப்துல்லாஹ்வே தம்மிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதும் தமது கவலையை வெளிப்படுத்தி, அவருக்கு முதல் பணி அளித்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

“துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிப்பீர்களா?”

அந்தக் கேள்வியைக் கேட்டு உற்சாகமடைந்தார் ஜரீர் இப்னு அப்துல்லாஹ். “அல்லாஹ்வின் தூதரே! இத்தகு பணிக்கு என்னைத் தாங்கள் தேர்ந்தெடுப்பது எத்தகைய நற்பேறு! இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்? உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிய நான் எப்பொழுதுமே தயார். வெகுவிரைவில் இதுபற்றி நற்செய்தி தங்களை வந்தடையும். ஆனால்…” என்று குறையொன்று சொன்னார். இயற்கையாய் அவரது உடலில் அமைந்துவிட்டிருந்த ஏதோ ஒரு பலவீனம் அல்லது குறையின் காரணமாய் அவரால் குதிரையின்மீது ஸ்திரமாய் அமர்ந்து சவாரி செய்வது கடினமாகியிருந்தது. அந்தக் கவலையைச் சொன்னார் ஜரீர். “எனது உடல்நலக் குறையின் காரணத்தால் குதிரையின்மீது அமர்ந்து சவாரி செய்வது எனக்குக் கடினமாய் இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் பயணிக்கும்போது குதிரையிலிருந்து நான் சரிந்து விடுகிறேன். எனவே அல்லாஹ்விடம் எனக்காக இறைஞ்சுங்கள். எனக்கு வலிமையை அளித்தருள வேண்டுங்கள்”

கவனித்தீர்களா? இறைவனுக்கான கடமைகள் என்று வரும்போதும், சகாயம் இருக்கா? சலுகை கிடைக்குமா? என்று தேடி அலையும் மனோநிலை கொண்ட நாம் நன்றாகக் கவனிக்க வேண்டும். உண்மையிலேயே உடல் குறை இருந்துள்ளது ஜரீருக்கு. பணியோ அவரது குலத்து மக்களிடமே மோத வேண்டிய பெரும்பணி. ஆனாலும், இறைத் தூதரின் கட்டளை பெரிது என்று தன் குறையை உதறி எறிந்துவிட்டு எழுந்து நின்றார்கள் அவர்கள். நபியவர்களின் ஆசியும் பிரார்த்தனையும் எத்தகைய குறையையும் இலேசாக்கிவிடும் ஆற்றல் கொண்டது என்ற உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள் தோழர்கள்.

நபியவர்கள் தமது கையால் ஜரீர் நெஞ்சின் மீது அடித்தார்கள். பலமான அடி. அவர்களது கையின் அடையாளம் ஜரீரின் நெஞ்சில் பதிந்த அளவு பலமான அடி. “இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அவ்வளவுதான். “அதன் பிறகு, நான் ஒருபோதும் எந்தக் குதிரையிலிருந்தும் விழுந்ததில்லை” என்பது ஜரீர் இப்னு அப்துல்லாஹ்வின் வாக்குமூலம். வரலாற்றில் பதிவாகியுள்ளது. நபியவர்களின் பிரார்த்தனைக்குப்பின் ஒப்பற்ற குதிரை வீரராகிவிட்டார் ஜரீர். மட்டுமல்லாது பிற்காலத்தில் குதிரைப்படைக்குத் தலைமை ஏற்று, போர்களம் புகுமளவு பெரும் முன்னேற்றம்.

‘அஹ்மஸ்’ என்றொரு குலத்தார் இருந்தனர். சிறந்த குதிரை வீரர்கள் அவர்கள். அந்தக் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது வீரர்களைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டது ஜரீர் இப்னு அப்துல்லாஹ்வின் தலைமையிலான படை. துல் கலஸாவை இவர்களது படை நெருங்கியதும் அங்கிருந்த மக்கள் இலேசாக எதிர்த்துப் பார்த்தார்கள். அதையெல்லாம் எளிதில் முறியடித்து, அந்த உருவ வழிபாட்டு ஆலயம் உடைக்கப்பட்டது; எரிக்கப்பட்டது. இட்ட பணியை வெற்றிகரமாய் நிறைவேற்றி முடித்த ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த ‘அபூஅர்தாத்’ என்பவரை அழைத்தார்.

“மதீனா சென்று அல்லாஹ்வின் தூதரிடம் இந்த நற்செய்தி பகருங்கள்”

மதீனா வந்து நபியவர்களைச் சந்தித்த அல் அர்தாத், “இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! துல் கலஸாவை சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போல் ஆக்கிவிட்டோம்” என்று செய்தி பகர்ந்தார்.

மகிழ்வடைந்தார்கள் நபியவர்கள். உடனே ‘அஹ்மஸ்’ குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் அருள்வளம் அளிக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.

அடுத்து வந்தது துல்ஹஜ் மாதம். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது இறுதி ஹஜ்ஜை நிறைவேற்ற, அதில் கலந்து கொண்ட தோழர்களில் ஜரீர் இப்னு அப்துல்லாஹ்வும் ஒருவர்.

அந்த ஹஜ்ஜின் போது, நபியவர்கள் மக்களிடம் உரையாற்றுகையில் ஜரீரிடம் திரும்பி, “மக்களை மெளனமாக இருக்கச் சொல்லுங்கள்” எனக் கட்டளையிட்டு, அமைதி திரும்பிய பின்னர், “எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள்; ஒற்றுமையுடன் இருங்கள்” என்று முக்கிய அறிவுரை ஒன்றை வெளியிட்டார்கள். அதைக்கேட்டு உள்வாங்கிக் கொண்டார் ஜரீர். பிற்காலத்தில் வெகு முக்கிய அரசியல் குழப்பத்தின்போது தமது வாழ்க்கையில் செயல்படுத்திக் கொள்ள அந்த அறிவுரை உதவியது. அதைக் கடைசியில் பார்ப்போம்.

ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியபின் ஜரீர் இப்னு அப்துல்லாஹ் யமனுக்குத் திரும்பிவிட, சில நாட்களில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இவ்வுலக வாழ்வு முடிவுக்கு வந்தது. அதை அவரால் நம்பமுடியவில்லை. ஏகப்பட்ட வருத்தத்தை அளித்தது அச்செய்தி! கடுஞ்சோகத்தில் ஆழ்ந்துவிட்டார் ஜரீர்! பின்னர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபா பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் மதீனாவுக்குச் சென்று, அவரைச் சந்தித்து சத்தியப் பிரமாணம் அளித்துவிட்டு யமன் திரும்பிவிட்டார்.

oOo

ஹிஜ்ரீ 13. கலீஃபா உமரின் ஆட்சிக் காலம்.

பாரசீகத்தினுள் நுழைந்த முஸ்லிம் படைகள் யுத்தம் யுத்தமாய் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள் என்று முன்னரே பார்த்து வந்தோம். சிறிதும் பெரிதுமாய் நிகழ்ந்துவந்த அவை ஒவ்வொன்றும் தனித் தனியாய்ப் படித்து ரசிக்க வேண்டிய வரலாறு. அவற்றுள் முக்கியமான ஒன்று “பாலப் போர்”. சுவாரஸ்யமான இந்தப் போரின் நிகழ்வுகள் விரிவாய்க் காண வேண்டியவை. நாம் வேறொரு தோழரின் பொருட்டு இங்கு வந்திருப்பதால் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

பாரசீகப் படைகளின் தளபதி ருஸ்தம் மிகப்பெரும் படையொன்றைத் திரட்டி, அதை பஹ்மான் ஜதாவைஹ் என்ற தளபதி தலைமையில் முஸ்லிம்களை நோக்கி அனுப்பிவைத்தான். ‘கொஞ்சம் பொறு’ என்று அவன் கையில் குஸ்ரோவின் கொடி ஒன்று அளிக்கப்பட்டது. அந்தக் கொடிக்கு “திரஃப்ஷ் கப்யான்” என்று நமக்கு வாய் குழறும் கடினமான பெயரும் இட்டிருந்தார்கள் பாரசீகர்கள். அதற்கு, “பெரிய கொடி” என்று அர்த்தமாம். ஏறத்தாழ 14 அடி அகலம்; 22 அடி நீளம் என்று பெரிய கொடி. புலித் தோலால் செய்யப்பட்டது. நீள அகலம், அர்த்தம் இவற்றைவிட அவர்களுக்கு முக்கியம் – அது “அதிர்ஷ்டக் கொடி”.

அதை உயர்த்திப் பிடித்துக் கொண்டு பாரசீகப் படை திரண்டுவர, முஸ்லிம் படையும் அவர்களும் ஓர் இடத்தில் நேருக்கு நேராய்ச் சந்தித்தனர். அவர்களுக்கு இடையே ஆறு. அதைக் கடக்க ஒரு பாலம். பாரசீகர்கள் முஸ்லிம் படைகளுக்குச் செய்தி அனுப்பினார்கள்: “நீங்கள் பாலத்தைக் கடந்து வாருங்கள்; இல்லையெனில் நாங்கள் கடந்து வருவோம்”.

பூவா தலையா போட்டுப் பார்க்கும் வழக்கம் அப்பொழுது இல்லை போலும்.

முஸ்லிம் படையினர் தங்களின் தலைவர் அபூஉபைதிடம், “அவர்களைக் கடந்து வரச் சொல்லுங்கள்” என்று தெரிவித்தார்கள்.

ஆனால் அபூஉபைத், “நம்மைவிட அவர்களொன்றும் துணிவானவர்கள் அல்லர்” என்று சொல்லிவிட்டு ‘முன்னேறுங்கள்’ என்று தம் படையுடன் பாலத்தைக் கடக்க ஆரம்பித்து விட்டார். குறுகிய இடமொன்றில் பாரசீகர்களை எதிர்கொண்டு உக்கிரமாய் நடைபெற ஆரம்பித்தது போர். முஸ்லிம்கள் படையில் பத்தாயிரம் வீரர்கள் இருந்தனர். பாரசீகர்கள் படையும் பெரும்படை. ஆனால் முஸ்லிம் படையினரிடம் இல்லாத அக்கால நவீன வசதி ஒன்று, பாரசீகர்களிடம் இருந்தது. யானை! யானைப் படை! அந்த யானைகள் கழுத்தில் பெரும் பெரும் மணிகள் தொங்கி ஊசலாட, அதன் ஒவ்வொரு அசைவிற்கும் மாபெரும் ஓசை எழுந்து முஸ்லிம்களின் குதிரைகள் மிரண்டு ஓடிவிட்டன. ‘இதற்கெல்லாம் அஞ்ச வேண்டாம்’ என்று சொன்னால் குதிரைகள் கேட்குமா என்ன? அவற்றின் காதில் மணியோசை தவிர வேறு எதுவும் விழவில்லை. எனவே குதிரைகளைத் துறந்து காலாட் படையினராய் எதிரிகளின் யானை, குதிரை, காலாட்படை ஆகிய மூவகைப் படைகளை எதிர்க்கொள்ளும் மாபெரும் கடினச் சூழல் ஏற்பட்டுப் போனது முஸ்லிம்களுக்கு.

துவம்சம் செய்ய ஆரம்பித்தன யானைகள். ஏகப்பட்ட உயிரிழப்பு முஸ்லிம்கள் தரப்பில். படைத் தலைவர் அபூஉபைதும் அவரின் மூன்று மகன்களும் அந்தப் போரில் யானைகளால் மிதிபட்டு வீர மரணம் எய்தினர். இதனிடையே, வீரத்துடன் போரிட்டு எதிரிகளை அழித்தே தீரவேண்டும் என்ற வெறியில், அப்துல்லாஹ் இப்னு மர்தத் அத்-தகஃபீ என்பவர் பாலத்தினை அறுத்துவிட, போரின் கடுமையான சூழலில் முஸ்லிம்களால் பின்வாங்கி மறுகரைக்கும் வர வழியில்லாமல் பலர் ஆற்றில் மூழ்கி இறக்க நேரிட்டது. தமக்குப் பின் போர்த் தவைராய் அபூஉபைத் நியமித்திருந்த ஒவ்வொருவரும் கொல்லப்பட்டுக்கொண்டே வர, இறுதியில் தலைமை அல்-முதன்னா இப்னு ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹுவினிடத்தில் வந்து சேர்ந்தது. பிறகு அவர்தாம் சமயோசிதமாக, பாரசீகர்களிடம் போரிட்டுக் கொண்டே ஒரு குழுவினரைக் கொண்டு பாலத்தைச் செப்பனிட வைத்து, மீதமுள்ள முஸ்லிம் வீரர்களை மறுகரைக்குப் பின் வாங்கவைத்து, எஞ்சியுள்ள முஸ்லிம்களுக்கு நிகழவிருந்த இழப்பைத் தடுத்து நிறுத்தினார்.

ஐயாயிரம் முஸ்லிம் படை வீரர்கள்வரை பின்வாங்கி வந்திருக்க, நாலாயிரத்துக்கும் அதிகமானோர் வீரமரணம் அடைந்திருந்தனர். அவர்களுள் தோழர்கள் பலரும் உயிர் நீத்திருந்தனர். அவ்வளவு கடுமையான சூழலிலும் பாரசீகர்கள் தரப்பில் ஆறாயிரம் படை வீரர்களைக் கொன்றிருந்தனர் முஸ்லிம்கள். அவர்களது உறுதிக்கும் துணிவுக்கும் சான்று அது. மீதமிருந்த ஐயாயிரம் வீரர்களில் இரண்டாயிரம் பேர்வரை மதீனாவிற்கோ அவர்தம் ஊர்களுக்கோ திரும்பிவிட, முதன்னா இப்னு ஹாரிதாவிடம் மூவாயிரம் வீரர்களே தங்கியிருந்தனர். பாரசீகர்களிடமிருந்து கைப்பற்றியிருந்த நிலங்களைப் பாதுகாத்துக் கட்டுக்குள் வைக்க இந்தப் படைபலம் மிக மிகக் குறைவு. பாரசீகர்கள் முஸ்லிம்களை எதிர்கொண்டு போரில் வீழ்த்த சாத்தியம் அதிகம் இருந்த நேரமது. ஆனால் அல்லாஹ்வின் திட்டம் வேறு விதமாய் உதவி புரிந்தது.

பாரசீகத்தின் முக்கியத் தளபதிகள் ருஸ்தம், ஃபைரஸான். இவர்கள் இருவர் மத்தியில் பிணக்கு ஒன்று ஏற்பட்டு, அது பெரிதாகி அவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து விட்டனர். அந்தக் குழப்பம், சச்சரவில் அவர்களது கவனம் முழுவதுமாய்த் திரும்பிவிட, முஸ்லிம்களைப் பற்றிய கவனம் அவர்களுக்குச் சிதறிப்போனது. பாரசீக அரசன் பஹ்மான் ஜதாவைக்கு இந்தச் செய்தி தெரியவர, அவசர அவசரமாய் மதாயீன் நகருக்குத் திரும்பினான் அவன். அவர்களின் இந்தக் குழப்பம் முஸ்லிம் படைகளுக்குப் போதிய அவகாசம் அளித்தது, அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்தி மூச்சுவிட்டுக் கொள்ளவும் கூடுதல் படைகள் அவர்களோடு வந்து சேர்ந்து கொள்வதற்கும்.

இங்கு ஒரு முக்கியமான பாடம் ஒளிந்துள்ளது. ஊர் இரண்டுபட்டால் எதிர் தரப்புக்குக் கொண்டாட்டம் என்பது எதிரிகள் இரண்டுபட்டால் என்பது மட்டுமல்ல. முஸ்லிம்கள் இரண்டுபட்டாலும்தான். இறைவன் பூகோளத்தில் நியமித்து வைத்துள்ள விதி இது. பிணக்கு ஏற்பட்டு குழப்பம், சச்சரவு, விவாதம், சண்டை என்றாகிவிடும்போது கவனமும் ஆக்ரோஷமும் அதில் திரும்பி எதிரியைப் பற்றிய எண்ணம் மறந்துவிடும்; காரியங்களின் முன்னுரிமை திசை மாறிவிடும்; ஒற்றுமை எனும் பலம் குன்றிப் போகும்; ஏன் அது மரித்தும் போகும். நிகழ்காலத்தில் நாம் அவசியம் கவனம் செலுத்த வேண்டிய பாடம் இது.

மதீனாவில் உமர் ரலியல்லாஹு அன்ஹு மளமளவென்று கூடுதல் படைகளைத் தயார் செய்து இராக் அனுப்ப ஆரம்பித்தார். அப்துல்லாஹ் இப்னு திஸ்ஸஹ்மைன் தலைமையில் ஹிலால் இப்னு அல்கமா, கத்அம் குலத்திலிருந்து ஒரு குழுவினர்; உமர் இப்னு ரிபி இப்னு ஹன்ளலா மற்றும் அவர் குலத்து மக்கள்; ரிபி இப்னு ஆமிர் இப்னு காலித்; ஹன்ளலா இப்னு ரபீ; இவர்களுடன் ஜரீர் இப்னு அப்துல்லாஹ்வும் அவரது பஜீலா குலத்து மக்கள் குழுவொன்றும் இராக்கிற்கு அணிவகுத்தது. அணிமேல் அணியாய் மதீனாவிலிருந்து இராக் நோக்கிச் சென்றனர் அவர்கள். இதனிடையே இராக்கின் பிற பகுதிகளில் போரில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் படைகளுக்கும் செய்தி அனுப்பினார் முதன்னா இப்னு ஹாரிதா அஷ்-ஷைபானி. அவர்களும் தங்கள் பங்குக்கு அவருக்குப் படைகளை அனுப்பி வைத்தனர். இவ்வாறாக வெறும் மூவாயிரம் வீரர்களுடன் தங்கியிருந்த முதன்னா ரலியல்லாஹு அன்ஹுவின் படை பலம் பெருக ஆரம்பித்தது.

இந்தச் செய்தி எல்லாம் பூசலில் கூச்சலிட்டுக் கொண்டிருந்த பாரசீகர்களின் காதுகளில் அவர்களது இரைச்சலையும் மீற வந்துவிழ, விழித்துக் கொண்டனர் அவர்கள். நம் சண்டை போதும்; இந்த முஸ்லிம்களை முதலில் ஒழித்துவிட்டுப் பிறகு வந்து தொடருவோம் என்று மஹ்ரான் அல்-ஹமதானி தலைமையில் வலுவான குதிரைப்படை கிளம்பியது. அவர்களுக்குமுன் அந்தச் செய்தி முதன்னா இப்னு ஹாரிதாவை அடைய, தம்ம்முடன் வந்து இணைந்து கொள்ள ஜரீர் இப்னு அப்துல்லாஹ் தலைமையில் வந்து கொண்டிருந்த முஸ்லிம் படைகளுக்கு உடனே தகவல் அனுப்பினார் அவர். “இங்கு ஏற்பட்டுவிட்ட புதிய சூழ்நிலையின் காரணமாய் தாங்கள் வரும்வரை நாங்கள் இங்கேயே காத்திருக்க இயலாது. எனவே விரைந்து வாருங்கள். நாம் அல்-புவைப் எனும் இடத்தில் சந்திப்போம்.”

தம் படையை அல்-புவைப் நோக்கித் திருப்பினார் ஜரீர் இப்னு அப்துல்லாஹ். அங்கிருந்த முஸ்லிம் படைகளுடன் இணைந்து கொள்ளப் பெரும் திரளாய்ப் படை அணி. முஸ்லிம் படைகளுக்கும் பாரசீகப் படைகளுக்கும் இடையே இங்கும் குறுக்கிட்டது ஆறு. மறுகரையில் பாரசீகப் படை. முதன்னா இப்னு ஹாரிதா பொறுமையாகக் காத்திருந்தார். மஹ்ரான் தகவல் எழுதி அனுப்பினான். “நீங்கள் பாலத்தை கடந்து வாருங்கள்; இல்லையெனில் நாங்கள் கடந்து வருவோம்.” இம்முறை “நீங்கள் வாருங்கள்” என்று சொல்லிவிட்டார் முதன்னா இப்னு ஹாரிதா. அது ஹிஜ்ரீ 13 ஆம் ஆண்டின் ரமளான் மாதம். தம் படைகளைத் தயார் செய்த முதன்னா, “நான் மூன்று முறை தக்பீர் முழங்குவேன்; தயாராகுங்கள். நான்காவது முறை முழங்கும்போது எதிரியைத் தாக்குங்கள்” என்று உத்தரவு வழங்கிவிட்டு முதல் தக்பீர் முழங்க, பாலம் தாண்டி வந்திருந்த பாரசீகர்கள் காலம் தாழ்த்த விரும்பாமல், முஸ்லிம்களுக்கு அவகாசமெல்லாம் வழங்காமல் உடனே தாக்க ஆரம்பித்துவிட்டனர். எனவே அடுத்தடுத்த தக்பீர்களுக்குக் காத்திருக்காமல் களம் புகுந்தது முஸ்லிம்களின் படை.

தொடங்கியது போர். கடுமையான போர்; ஆக்ரோஷமான போர்.

மஸ்ஊத் இப்னு ஹாரிதா, முதன்னாவின் சகோதரர். இவர் அந்தப் போரில் காலாட்படையின் தலைவர். தம் படையினருக்கு உத்தரவொன்று இட்டார் அவர். “நாங்கள் தாக்கப்பட்டாலும் சண்டையை நிறுத்தாதீர்கள். அது எதிரிக்குச் சாதகமளித்து நம் தோல்விக்கு வழிவகுத்துவிடும். இடைவெளிவிடாமல் நெருங்கி நின்று கொள்ளுங்கள்.”

அவர் எதிர்பார்த்தது போலவே மஸ்ஊதும் வேறு சில படைத் தலைவர்களும் தாக்கப்பட்டனர். படைத் தலைவர்களுக்கு ஏற்பட்ட தாக்குதலைக் கண்டு படை வீரர்கள் மத்தியில் தயக்கமும் தடுமாற்றமும் ஏற்படுவதைக் கண்டார் மஸ்ஊத். “பக்ரு இப்னு வாஇலின் பட்டாளமே! உங்களது கொடியை உயர்த்திப் பிடியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு வெற்றி அளிப்பானாக! என்னுடைய மரணம் உங்களைத் திகைப்பில் ஆழ்த்த வேண்டாம்”

தம் சகோதரன் தாக்கப்பட்டதையும் நிலைமையும் உணர்ந்த முதன்னா இப்னு ஹாரிதா படையினரிடம் ஓடிவந்து, “முஸ்லிம்களே! என் சகோதரன் தாக்கப்பட்டதைக் கண்டு வருந்தாதீர்கள். உங்களில் சிறந்தவர் இப்படித்தான் மரணமடைவார்” என்று உரத்துச் சொன்னார்.

தீர்ந்ததா விஷயம்?

எதிரியால் தாக்கப்பட்டாலோ, மரணமடைந்தாலோ, அது முஸ்லிமின் இலக்கை மாற்றாது; கூடாது. தலைவனின் மரணம், சக முஸ்லிம் சகோதரனின் இழப்பு வருத்தமளிக்கலாம். அது இயல்பு. தவறில்லை. ஆனால், அது முஜாஹிதீன்களைத் தடுமாற வைப்பதில்லை. அன்றும் சரி; இன்றும் சரி. தலைவனை வீழ்த்தினால், முக்கியஸ்தர்களைக் கொன்றால் முஸ்லிம்களை வீழ்த்திவிடலாம் என்றுதான் கருதுகின்றனர் எதிரிகள். ஆனால், வீழ்த்தினாலும் வெற்றி; வீழ்ந்தாலும் வெற்றி என்று முஸ்லிம்கள் களம்புகும்போது இவர்களுக்குத் தோல்வி என்பது ஏது?

தம் சகோதரனையும், அவரைப்போல் தாக்கப்பட்ட அனஸ் இப்னு ஹிலால் அந்-நுமைரியையும் கூடாரத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டுக் களத்திற்கு ஓடினார் முதன்னா. அவருடன் இணைந்து ஓடினார் ஜரீர் இப்னு அப்துல்லாஹ். இருவரும் வாள்களால் எதிரிகளைச் சரமாரியாய் வெட்டிக் கொண்டே எதிரிப் படை அணியின் உள்ளே … உள்ளே என்று சென்று கொண்டே இருந்தனர். முஸ்லிம் படைகளின் மையப் பிரிவு, பாரசீகர்களின் மையப் பிரிவைப் பிளக்க ஆரம்பித்தது. விரைவில் அது சிதிலமடைய, வெகு உள்ளே நுழைந்து விட்டனர் முஸ்லிம்கள். ஒருவழியாய்ப் பாரசீகர்களின் படைத் தலைவன் மஹ்ரான் கொல்லப்பட்டான். அது முஸ்லிம் படைகளை மேலும் உற்சாகப்படுத்த, பாரசீகப் படையைத் துரத்த ஆரம்பித்தனர் அவர்கள். தப்பியோடும் பாரசீகர்களைக் கண்ட முதன்னா, ஆற்றுப் பாலத்தை வெட்டிவிட அவர்களால் மறுகரைக்குத் திரும்ப இயலாமல், எக்கச்சக்கமாய் மாட்டினர். இந்தப் போரில் இலட்சம் பாரசீகர்கள் கொல்லப்பட்டதாய்ச் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தம் அழகிய சரீரத்தில் வழிந்தோடும் குருதியையும் வியர்வையும் வழித்துப்போட்டு விட்டுக் களப் புழுதியில் நின்று கொண்டிருந்தார் ஜரீர் இப்னு அப்துல்லாஹ். ரலியல்லாஹு அன்ஹு.

oOo

அடுத்த நிகழ்ந்த காதிஸிய்யாப் போரில் ஸஅத் பின் அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹுவின் தலைமையில் இணைந்து கொண்டனர் ஜரீர் இப்னு அப்துல்லாஹ்வும் அவர் தலைமையிலான் பனூ பஜீலா கோத்திரத்தினரும். போர் துவங்கும்முன் ஒரு முக்கிய நிகழ்வு. ஸஅத் பின் அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹுவுக்குப் பின்பகுதியில் கட்டிகளும், இடுப்புச்சந்துவாதமும் ஏற்பட்டு, போர்க்களத்தில் அமைக்கப்பட்டிருந்த அரணில் தலையணையில் குப்புறப் படுத்துக்கொண்டு போர்த்தலைமை ஏற்க வேண்டிய அசாதாரண சூழல். அதனால் தம் கட்டளைகளைப் படையினருக்கு அறிவிக்க காலித் இப்னு உர்ஃபுதா என்பவரை நியமித்தார் ஸஅத். படையினர் மத்தியில் இந்த நியமனம் பற்றிச் சலசலப்பு ஒன்று ஏற்பட்டது; ஸஅதை அடைந்தது.

“நான் படையினரைக் காணக்கூடிய வகையில் என்னைத் தூக்கிச் சென்று உதவுங்கள்” என்றார் ஸஅத். அரணின்மேல் படுத்திருக்கும் நிலையில் மக்களைப் பார்த்து காலிதுக்குக் கட்டளைகள் பிறப்பிக்க ஆரம்பித்தார் ஸஅத். அத்துடன், காலிதின்மேல் அதிருப்தி கொண்டிருந்தவர்களை வரவழைத்து, “அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன்! உங்களின் எதிரி மட்டும் இப்பொழுது இங்கு இல்லாதிருப்பின் மக்கள் உங்களை உதாரணம் கொள்ளுமளவு தண்டித்திருப்பேன்” என்றவர் சிலரை அரணில் சங்கிலியால் கட்டிப் போட்டார்; சிலருக்குக் கடுமையான தண்டனை. களத்தில் எதிரியை வைத்துக் கொண்டு வீண் விளையாட்டு, சச்சரவு எல்லாம் கிடையாது. ஒற்றுமையும் தலைவனுக்குக் கட்டுப்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாடுமே பிரதானம். தெளிவாய் இருந்தார்கள் தோழர்கள்.

அப்பொழுது ஜரீர் இப்னு அப்துல்லாஹ் கூறினார், “என்னைப் பொருத்தவரை, நான் அல்லாஹ்வின் தூதருக்கு எனது விசுவாசப்பிரமாணம் அளித்துள்ளேன். அல்லாஹ் யாரை எனக்குத் தலைவராய் நியமிக்கின்றானோ, அவர் அபிஸீனிய நாட்டு அடிமையாகவே இருந்தபோதிலும், அவரது கட்டளையைச் செவியுற்று அடிபணிவேன் என்று உறுதிமொழி அளித்துள்ளேன்”

இதில் அடங்கி விடுகிறதே அனைத்தும்!

அதன் பிறகு துவங்கிய போரின் ஆரம்பக்கட்டக் காட்சிகளே நாம் இங்குத் துவக்கத்தில் கண்டவை. ஒத்தைக்கு ஒத்தைச் சண்டைகளின் தோல்வியைச் சகிக்க இயலாமல் பிரம்மாண்ட பாரசீகப்படை முஸ்லிம் படைகளின் சிறிய பிரிவான பனூ பஜீலா மீது மூர்க்கமாய் வந்து இறங்கியது. அந்தக் கடினமான சூழலிலும் மாபெரும் பாரசீகப் படையை எதிர்த்து உறுதியுடன் நின்று வீரத்துடன் போரிட ஆரம்பித்தார் ஜரீர் இப்னு அப்துல்லாஹ். அதன்பிறகே முக்கியமான தோழர்கள் தலைமையில் ஒரு பிரிவு அவர்களுக்கு உதவிக்கு வந்து சேர்ந்தது.

அடுத்த மூன்று நாள்களும் தொடர்ந்து நடந்தது யுத்தம். இறுதியில் பெரும் வெற்றி கண்டது முஸ்லிம்களின் படை. பலரும் சிலாகித்துப் பேசும் வெற்றி வரலாறு ஆகிப்போனது ‘காதிஸிய்யாப் போர்’. ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் மனதார வியந்தார். “இணை, துணை அற்ற அல்லாஹ்வின்மீது ஆணையாக! காதிஸிய்யாப் போரில் கலந்துகொண்ட எவருமே மறுமை வாழ்க்கைக்குப் பகரமாய் இவ்வுலகை நேசிப்பர்களாய் இல்லவே இல்லை. ஒரு கட்டத்தில் எங்களுக்கு மூவர்மேல் ஐயம்கூட இருந்தது. ஆனால் பின்னர் அவர்களது நேர்மை, உலகப் பற்றற்ற இறை விசுவாசம் ஆகியன யாருடனும் ஒப்பிட இயலாதது என்பதைத் தெளிவாய் அறிந்து கொண்டோம்”

அந்த மூவர் என்று குறிப்பிட்டது வேறு மூன்று தோழர்களை. இங்கு நமக்கு முக்கியம், அந்தப் போரில் பங்கெடுத்துக் கொண்ட ஒவ்வொருவரும் உலக வாழ்க்கையின் பற்றை எப்படி அற்று விட்டிருந்தார்கள் என்பதும் பகரமாய் எதை நேசித்தார்கள் என்பதும் மட்டுமே!

சொன்னது போதாது என்று ஜரீர் தம்மையே உதாரணமாய் நிறுவினார். மதீனாவில் கூடுதல் படைக்கு மக்களைத் தேர்ந்தெடுக்கும்போது, உமர் ரலியல்லாஹு அன்ஹு சிறப்புப் பரிசாக ஜரீரிடம் ஒரு வாக்குறுதி சொல்லியிருந்தார். “உன் சகாக்களுடன் இராக் போர்க்களத்திற்குச் செல். நீ கைப்பற்றுவதில் நான்கில் ஒரு பங்கு உனக்கு”

போர் முடிவுற்றபின் வகைதொகையற்ற செல்வம் முஸ்லிம்களின் கைவசம் வந்தது. கலீஃபா உமர் தம்மிடம் அளித்திருந்த வாக்குறுதியை ஸஅதிடம் தெரிவித்தார் ஜரீர். மதீனாவிலுள்ள கலீஃபாவுக்கு இதுபற்றிக் கேட்டு எழுதினார் ஸஅத். பதில் வந்தது. ‘ஜரீர் உண்மையையே உரைத்துள்ளார். நான் அவரிடம் அப்படிச்சொன்னது உண்மையே’ பின்னர் கடிதம் விரிந்தது. ‘அவரும் அவர் மக்களும் போரிட்டது பரிசுக்கும் சன்மானத்திற்கும் என்று அவர்கள் கருதினால் வாக்குறுதிப்படி அவர்களுக்கு அளித்து விடவும். ஆனால் போரிட்டது அல்லாஹ்வுக்காக, அவனது தீனுக்காக, அவனது சொர்க்கத்திற்காக என்று அவர் கருதினால் அவரும் மற்ற முஸ்லிம்களைப்போல் பகிர்ந்தளிக்கப்படும் பங்கை மட்டும் பெற்றுக் கொள்ளட்டும். மற்ற முஸ்லிம்களைப் போலவே அவரது கடமைகளும் ஆகட்டும்’

ஸஅத் ஜரீரிடம் உமரின் பதிலைத் தெரிவிக்க, சிறப்புப் பரிசைப் புறங்கையால் தள்ளிவிட்டு, “உண்மையுரைத்தார் அமீருல் மூஃமினீன். எனக்கு இவை தேவையில்லை. முஸ்லிம்களில் ஒருவனாய், அனைவரிலும் ஒருவனாய் இருக்கவே விழைகிறேன்” என்ற எளிய பதிலொன்றை வெகு இயல்பாய்ச் சொல்லிவிட்டார் ஜரீர் இப்னு அப்துல்லாஹ்.

இறைவனுக்காக என்று வந்துவிடும்போது அகங்காரம், இறுமாப்பு, தலைக்கனம், பெருமை, சிறப்புத் தகுதி எதுவும் இல்லாமல், அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு சாமானியர்களுடன் சாமானியராய்க் கலந்துபோனார்கள்; உயர்ந்து நின்றார்கள் அவர்கள் – ரலியல்லாஹு அன்ஹும்.

பாரசீகர்களின் ஜலூலா எனும் நகரம் இராணுவ வகையில் மிகவும் முக்கியமாய் அமைந்த நகரம். அடுத்து நிகழ்வுற்ற போரில் முஸ்லிம்கள் இந்நகரையும் கைப்பற்றினர். அந்நகரைப் பாதுகாத்து நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு ஜரீரிடம் ஒப்படைக்கப்பட்டது. நாலாயிரம் முஜாஹிதீன்கள் அவரது தலைமையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டனர். ஜலூலாவுக்கு அருகே ஹல்வான் என்று மற்றொரு முக்கிய நகரம் இருந்தது. ஸஅத் பின் அபீ வக்காஸ் மேலும் மூவாயிரம் படை வீரர்களை ஜரீரிடம் அனுப்பி, “அப்படியே அந்த ஹல்வான் நகரையும் கைப்பற்றுங்கள் பார்ப்போம்” என்று செய்தி அனுப்பினார்.

ஏழாயிரம் வீரர்கள் அணிவகுக்க, ஹல்வானை நோக்கிக் கம்பீரமாய் முன்னேறியது ஜரீர் இப்னு அப்துல்லாஹ்வின் படை. அடிமேல் அடிபட்டுக்கொண்டிருந்த பாரசீகர்கள் உள்ளத்தளவில் பெரிதும் பலவீனமடைந்திருந்தனர். ‘இப்பொழுது வேகமாய் ஒரு படை ஹல்வானை நோக்கி வருகிறதாம்’ என்ற உளவுச் செய்தி வந்ததும் போட்டது போட்டபடி அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டு அந்த நகரைவிட்டே ஓடிவிட்டனர். எத்தகைய எதிர்ப்பும் இன்றி, கத்தியின்றி, ரத்தமின்றி ஹல்வான் முஸ்லிம்கள் வசமானது.

அதற்கடுத்து தஸ்தர் போர். முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ மற்றும் அந்நுஃமான் பின் முகர்ரின் வரலாற்றில் அதைப் பார்த்தோம். அபூமூஸா அல்-அஷ்அரீ, நுஃமான் இப்னு முகர்ரின் ஆகியோருடன் ஜரீர் இப்னு அப்துல்லாஹ்வும் அந்தப் போரில் பங்கெடுத்துக் கொண்டார்.

இப்படியாக ஓய்வு ஒழிச்சலின்றிப் போர்க்களப் பணியில் மூழ்கியிருந்தவருக்கு உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் காலத்தில் ஹம்தான் நகரை ஆளும் ஆளுநர் பொறுப்பு வந்து சேர்ந்தது.

oOo

பின்னர் அலீ ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலத்தில் அவருக்கும் முஆவியா ரலியல்லாஹு அன்ஹுவுக்கும் இடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டுவிட, தம் சார்பாய் ஜரீர் இப்னு அப்துல்லாஹ்வை டமாஸ்கஸ் நகருக்குத் தூதுவராக அனுப்பி வைத்தார் அலீ. முஆவியாவிடம் எவ்வளவோ பேசிப்பார்த்தார் ஜரீர். ஆனால் இணக்கமான முடிவுதான் ஏற்படாமல் போய்விட்டது. அலீ ரலியல்லாஹு அன்ஹுவிடம் திரும்பி, நிகழ்ந்ததை விவரித்தவர் அதன்பிறகு நிகழ்வுற்ற அரசியலில் கலந்துகொள்ளாமல் தம் குடும்பத்துடன் கூஃபா நகருக்குக் குடிபெயர்ந்துவிட்டார். தன் சொச்ச வாழ்நாளை தனிமையில் ஒதுங்கியே கழித்துவிட்டார்.

அழகும், வீரமும், பராக்கிரமும் கொண்டிருந்த ஜரீர் இப்னு அப்துல்லாஹ் நற்பண்பிலும் சளைத்தவராய் இல்லை. அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு சான்று கூறியுள்ளார். “நான் ஜரீர் இப்னு அப்துல்லாஹ்வுடன் பயணம் ஒன்று மேற்கொண்டேன். அப்பொழுது அவர் எனக்குப் பணிவிடை செய்ய முயன்றார். ‘வேண்டாம். அப்படிச் செய்யாதீர்கள்’ என்றேன் நான். ‘அன்ஸார்கள் நபியவர்களுக்கு ஏதாவது பணிவிடை செய்துகொண்டே இருந்தார்கள், கண்டிருக்கிறேன் அதை நான். எனக்குள் உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். நான் அன்ஸார்களுடன் இருக்க நேரிடும்போது அவர்களுக்குப் பணிவிடை செய்யாமல் இருக்க மாட்டேன்’ என்று எனக்கு உபச்சாரம் புரிந்தார் அவர்.”

‘காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே கனிவானவர்கள்’ என்று அல்லாஹ் அடையாளம் காண்பித்த மேன்மக்கள் அவர்கள். வேறென்ன சொல்வது? ஹிஜ்ரீ 54 ஆம் ஆண்டு. அள்ளஹ்ஹாக் பின் ஃகைஸ் கூஃபாவை ஆண்டு கொண்டிருக்கும்போது ஷராஹ் எனும் ஊரில் இவ்வுலக வாழ்வை நீத்தார் ஜரீர் இப்னு அப்துல்லாஹ்.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

< தோழர்கள் முகப்பு | தோழர்கள்-36 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.