தோழர்கள் – 2 – கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி)

வாளாயுதம்
Share this:

கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி)

 

உமர் (ரலி) நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கலீஃபா. அரியாசனத்தில் மன்னனும் மற்றவர்கள் கீழுள்ள இருக்கையிலும் அமர்ந்திருப்பது போன்ற செட்டப்பெல்லாம் இல்லாமல் அனைவரும் சமமாய் அமர்ந்து உரையாடும் ஏற்றத்தாழ்வற்ற மக்கள் அவர்கள். அப்பொழுது அங்கு வந்தார் கப்பாப்.

 

உற்சாகமாக வரவேற்று அவரைத் தன்னுடன் நெருக்கமாக அமரச் செய்த உமர், “உங்களைத் தவிர பிலாலுக்கு மட்டுந்தான் இத்தகைய கூடுதல் நெருக்கமான சிறப்புண்டு” என்று தனது அன்பைச் சொன்னார். அதற்குக் காரணம் இருந்தது.

உமர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது ஒரு சுவையான வரலாறு. அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கப்பாப். உமர் தோற்றம், கம்பீரம், நேர்மை, என அனைத்திலும் அலாதியானவர், வேகமானவர். முஹம்மத் (ஸல்) அவர்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தால் பலப்பல பிரச்சனைகள் ஏற்பட்டிருந்த மக்காவில் ஒரு கட்டத்தில் உமர் மிகுந்த காட்டமாகி விட்டார். “இந்த முஹம்மதைக் கொன்று விட்டுத்தான் மறுவேலை” என்று வாளை உருவிக் கொண்டு மக்கா வீதியில் கிளம்பிவிட, யதேச்சையாய் அவ்வழியே வந்த நுஐம் (نعيم‎) எனும் இளைஞர் விசாரித்தார். உமரின் நோக்கம் கண்டு அவருக்கு உள்ளுக்குள் கிலி கிளம்பியது. அவரும் அச்சமயத்தில் ரகசியமாய் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தவர். உமர் கோபத்துடன் வருவதை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தகவல் சொல்லி எச்சரிக்க அவகாசம் தேவை. சமயோசிதமாய் ஒரு காரியம் செய்தார் நுஐம் ரலியல்லாஹு அன்ஹு.

”முஹம்மதைக் கொல்வது இருக்கட்டும். முதலில் நீர் உமது வீட்டைப் பாரும்”. உமரின் சகோதரி ஃபாத்திமாவும், அவர் கணவரும் ரகசியமாய் இஸ்லாத்தை ஏற்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அது உமருக்குத் தெரியாது. நுஐமின் தந்திரம் உடனே பலித்தது. உமரின் கோபம் சட்டெனத் திசை மாற, தன் சகோதரியின் வீட்டிற்கு அதே கோபத்துடன் விரைந்தார்.

உமரின் சகோதரி ஃபாத்திமாவும் அவர் கணவர் ஸயீத் இப்னு ஸைதும் (سعيد بن زيد) வீட்டினுள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தவர் கப்பாப் இப்னு அரத். கப்பாப் கூர்மதியாளர். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அதனை ஓதிப் பழகிய கெட்டிக்காரர். அதில் அவரது ஞானம் எந்தளவு என்றால் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கப்பாபை குர்ஆன் சம்பந்தமாய்க் கலந்து ஆலோசிக்குமளவு ஞானம்.

உமர் ஆவசேமாய் வருவதைக் கண்ட கப்பாப் இப்னு அரத் ஓடி ஒளிந்துக் கொண்டார். உமரின் அத்துணை மூர்க்கமும் ஸயீத் மேல் இறங்கியது.

உமரின் தங்கை ஃபாத்திமாவைத் மணம் புரிவதற்கு முன்னரே ஸயீதும் உமரும் உறவினர்கள். உமரின் தகப்பனார் கத்தாப் இப்னு நுஃபைலும் ஸயீதின் பாட்டனார் அம்ரிப்னு நுஃபைலும், சகோதரர்கள். ஸயீதின் தகப்பனார் ஸைது இப்னு அம்ரு, மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்கு முன்னமேயே ஹனீஃபாகத் திகழ்ந்தவர். சிலைகளை வணங்காதவர்கள் “ஹுனஃபா”வினர் என்று தம்மைக் கூறிக் கொள்வர். ஸயீதின் தகப்பனார் ஸைது, இப்ராஹீம் (அலை) அவர்களின் தூய ஏகத்துவக் கொள்கையை ஏற்று அனைத்து இணை வைத்தலை விட்டும் விலகியிருந்தவர். “சிலையெல்லாம் வணங்க முடியாது” என்று அவர் கூறி வந்ததால் அவரை மக்கத்துக் குரைஷிகள் துன்புறுத்தியபோது தன் பெரியப்பா மகனென்றும் பாராமல் ஸைதைத் துன்புறுத்துவதில் பங்கெடுத்துக் கொண்டு, குரைஷிகளின் குலப் பெருமையை நிலைநாட்டிய முக்கியப் புள்ளி உமர்.

இப்பொழுது அவரின் மகன் ஸயீத் – அதுவும் தன் சகோதரியின் கணவர், “சிலை வேண்டாம்; படையல் வேண்டாம்” என்பதோடு நில்லாமல், அந்த முஹம்மதைப் பின்பற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, தன் சகோதரியையும் வழிகெடுக்கிறார் என்றால்? பொறுக்கவியலாத ஆத்திரம். முரட்டுத்தனமாய் அடிக்க ஆரம்பித்து விட்டார். இடையில் புகுந்த ஃபாத்திமாவிற்கும் பலமான அடிவிழ இரத்தம் பீறிட ஆரம்பித்தது. இரத்த சகோதரியின் இரத்தம் பார்த்ததும்தான் உமரின் ஆத்திரம் நிதானத்திற்கு வந்தது. ஆயாசமும் கழிவிரக்கமும் ஏற்பட்டன.

நிதானப்பட்ட உமர், “என்ன அது நீங்கள் ஓதிக் கொண்டிருப்பது?” எனக் கேட்க, அவரைக் கை-கால் கழுவி வரச் செய்து குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டிருந்த சுவடிகளைக் காண்பித்தார்கள். அது அத்தியாயம் தாஹா. புத்தியிலும் பலம் மிக்கவரான உமருக்கு அதற்கு மேல் எதுவும் தேவைப்படவில்லை. ஒருவரிப் பேச்சு, “என்னை முஹம்மதிடம் அழைத்துச் செல்லுங்கள்”.

அது கேட்டதும்தான் வெளியே வந்தார் கப்பாப். “உமர்! முஹம்மதின் (ஸல்) துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாக நான் நம்புகிறேன். நேற்றுத்தான் அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள் ‘யா அல்லாஹ்! அபுல் ஹகம் அம்ர் இப்னு ஹிஷாம் அல்லது உமர் இப்னு அல் கத்தாப், இந்த இருவரில் யாரை நீ அதிகம் நேசிக்கிறாயோ அவர்களைக் கொண்டு இஸ்லாத்தை வலுப்படுத்து’ என்று. அதை நான் என் காதால் கேட்டேன்”.

“இப்போது எங்கே நான் அவர்களைக் காணலாம்?”

கப்பாப் ஆனந்தமாக, “சஃபா குன்றுக்கருகே அல்அர்கம் இப்னு அபில் அர்கம் இல்லத்தில் இருப்பார்கள்” என்றார்.

உடனே, மிக உடனே, எவரைக் கொல்ல வந்தாரோ அதே முஹம்மதை அடுத்த மூச்சில் ஏந்தி வந்த வாளுடன் சந்தித்து, உமர் இஸ்லாத்தை ஏற்க, சரித்திரத்தில் ஏற்பட்டது திருப்புமுனை. அது ஓர் அசகாய திருப்புமுனை. அப்போது உமருக்கு வயது 27. ரலியல்லாஹு அன்ஹும்.

இதுவோ இதுமட்டுமோ அல்ல கப்பாப்மேல் உமர் கொண்ட கரிசனத்தின் காரணம். அது கப்பாபின் சரித்திரத்துடன் பின்னப்பட்ட கரிசனம்.

கப்பாப் அமர்ந்ததும் உமர் கேட்டார், “சொல்லுங்கள். அந்தக் காலத்தில் காஃபிர்களால் தாங்கள் பட்ட துன்பத்திலேயே கடினமான ஒரு நிகழ்வைச் சொல்லுங்கள்”.

தோழர்களுக்குள் அப்படி ஒரு அளவளாவல் நிகழ்வுறும். இஸ்லாத்திற்கு முன்னரும், அல்லது புதிதிலும் தாங்கள் பட்ட இன்னல்கள், துன்பங்கள் ஆகியனவற்றைச் சற்று ஓய்வில் அசைபோடுதல், மற்றவர்களுடன் பேசிப் பரிமாறிக் கொள்ளுதல் அவர்களுக்கு ஆறுதல், ஆனந்தம்!

கப்பாப் வெட்கப்பட்டார். மைக் கிடைத்தால் போதும், வீரவசனம் பேசலாம் என்பதெல்லாம் தெரியாதவர்கள் அவர்கள். உமர் மீண்டும் மீண்டும் வற்புறுத்த, கப்பாப் தனது மேலங்கியைத் தளர்த்தி முதுகைக் காண்பித்தார். சதை பொத்தலடைந்து உருக்குலைந்து போயிருந்தது முதுகு. அந்த அலங்கோலம் வீரர் உமரையே கதிகலங்க வைத்தது!

“இது எப்படி நிகழ்ந்தது?”

கப்பாப் சங்கோஜத்துடன் விவரித்தார். “மக்காவில் அந்தக் காபிர்கள் கற்களை நெருப்பில் இட்டுச் சுடுவார்கள். தீ கொழுந்து விட்டு எரிந்து, அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருப்பார்கள். பின்னர் எனது உடைகளைக் கழற்றி விட்டு, அந்த நெருப்புக் கங்குகளின்மேல் என்னைப் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பார்கள். எனது முதுகு சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழும். எனது காயத்திலிருந்து வழிந்து விழும் நீரினால் அந்தத் தீ அணையும்” விவரித்தார் கப்பாப்.

பிலாலைப் போலவே வன்கொடுமைக்கு ஆளானவர் என்பது மட்டுமல்ல அவரைப் போலவே அடிமையும்கூட கப்பாப். ரலியல்லாஹு அன்ஹும்.

*****

மக்காவில் ஒருநாள் உம்மு அன்மார் எனும் பெண்மணி சந்தைக்குப் போனார். காய்கறி, சாமானெல்லாம் வாங்க அல்ல. ஓர் அடிமை வாங்குவதற்கு. இப்பொழுதெல்லாம் நாம் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வதுபோல் அப்பொழுது அவர்களுக்கு அடிமைகள் வைத்துக் கொள்வது சௌகரியம், பெருமையான காரியம். விற்பனைக்கு நிறுத்தப்பட்டிருந்த சிறுவர்களிலேயே இளையவனாய், பருவ வயதை அடையாத ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்தார். நல்ல ஆரோக்கியத்துடன் புத்திசாலியாய் இருந்தான் அவன்.

பணத்தைக் கொடுத்து விட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது பேச்சுக் கொடுத்தார்.

“உன் பெயர் என்ன?”

“கப்பாப்”

“தகப்பனார் பெயர்?”

“அல் அரத்”

“எந்த ஊர் உனக்கு?”

“நஜ்து”

“ஹா! அப்படியானல் நீ ஓர் அரபியா?” ஆச்சரியமாய்க் கேட்டார்.

“ஆம். நான் பனூ தமீம் கோத்திரம்”

“எப்படி அடிமைச் சந்தைக்கு வந்து சேர்ந்தாய்?”

“எங்கள் கோத்திரத்தாரின் நிலங்களை பாலை அரபிகள் படையெடுத்து வந்து தாக்கினர். விலங்குகளையெல்லாம் கைப்பற்றி, பெண்களைக் கடத்திக் கொண்டு, என்னைப் போன்ற சிறுவர்ககளையெல்லாம் அடிமைகளாக விற்று விட்டனர். நான் பலர் கை மாறி மக்கா சந்தைக்கு வந்துவிட்டேன்”.

மக்காவிலுள்ள நல்லதொரு கொல்லனிடம் வேலை கற்றுக்கொள்ள கப்பாபை அனுப்பி வைத்தார் உம்மு அன்மார். வாள்கள் தயாரிக்கும் பணி. சேர்ந்த சில நாட்களிலேயே அந்த வேலையில் கப்பாப் ஸ்பெஷலிஸ்டாகி விட்டார். எனவே அவர் சற்று வளர்ந்தவுடன் உம்மு அன்மார் தனியாகப் பட்டறை வைத்துக் கொடுத்து விட்டார். கப்பாபின் திறமையால் கடை வெற்றியடைய அடிமையின் தலைவிக்குக் கொழுத்த இலாபம். கடை பிரபல்யமடைந்துவிடவே, “நல்ல அருமையான வாள் வேண்டுமா, நட கப்பாப் கடைக்கு” என்று படையெடுக்க ஆரம்பித்தனர். வேலை நேர்த்தி மட்டுமல்ல, நம்பிக்கையும் நாணயமும் அதற்குக் காரணம்.

மிக இளவயதுதான். ஆனாலும் அவர் தயாரிக்கும் வாள் போலவே இயற்கையாகவே புத்திக் கூர்மையும் பக்குவமும் கப்பாபிடம் இருந்தன. நிறைய யோசித்தார். மக்காவில் அப்பொழுது நிலவி வந்த சீர்கேடு, ஜாஹிலிய்யாஹ், ஒழுக்கக் கேடான வாழ்க்கைமுறை – “இவையெல்லாம் தப்பு, எங்கோ தப்பு” என்று ஆழ்மனதில் நிச்சயமாய் அவருக்குப் பட்டது.

“இந்த நீண்ட காரிருள் ஒரு முடிவுக்கு வந்தாகத்தான் வேண்டும்” என்று அவருக்குள் ஒரு இனந்தெரியா நம்பிக்கை. தான் அதுவரை வாழக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே என்று மட்டும் ஆயாசம் ஏற்படும். ஆனால் அதற்கு அவர் நீண்ட நாள் காத்திருக்க வேண்டியதில்லாமல் போனது.

அப்துல்லாஹ்வின் மகனாம், முஹம்மதாம், என்னவோ புதுசு புதுசா சொல்லி வருகிறாராம் என்று கேள்விப்பட்டு, கேட்டுத்தான் பார்ப்போமே என்று ஆவலில் ஒருநாள் சென்றார் கப்பாப். சட்டென்று உணர்ந்து கொண்டார். இது உண்மை! இது புனித வழி! இது சத்தியம்! அவ்வளவுதான். உடனே ஆரத்தழுவி நுழைந்து கொண்டார் இஸ்லாத்தில்.

அவர் ஆறாவது முஸ்லிம். முஹம்மத் (ஸல்) இஸ்லாத்தை மக்காவின் மக்கள்முன் வைக்க ஆரம்பித்தவுடனேயே அப்பட்டமாய் ஏற்றுக்கொண்ட மிகச்சிலரில் அவர் ஆறாவது. இதனால் பிற்காலத்தில் அவரைப் பற்றிச் சொல்லப்படும் போது, “கப்பாப் ஒரு காலத்தில் இஸ்லாத்தில் ஆறில் ஒரு பங்கு” என்று பெருமை சொல்லப்பட்டது.

குரைஷிகளின் குழுவொன்று ஒருமுறை வாள்கள் சில கப்பாபிடம் செய்து கேட்டிருந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது கப்பாப் இல்லை. அப்படியெல்லாம் எங்கும் செல்லும் அளவுக்கு அவருக்கு வேறெந்த சோலியும் இருந்ததில்லை. எனவே சற்று ஆச்சர்யத்துடன் காத்திருந்தனர்.

சிறிது நேரம் கழித்து கப்பாப் வந்து சேர்ந்தார். முகத்தில் இனந்தெரியா ஒளி. வந்தவர்களை அமரச் செய்து விட்டு அவர்களுக்கு முடித்துத் தரவேண்டிய வேலையில் மூழ்கினார். கனாக்காணும் கண்களுடன் தனக்குத் தானே பேசிக் கொண்டார். பிறகு பேசினார். “அவரைப் பார்த்தீர்களா? அவரது பேச்சைக் கேட்டீர்களா?”

வந்தவர்களுக்கு ஒரு மண்ணும் புரியவில்லை. ஏளனமாய் அவர்களில் ஒருவன் “நீ அவரைப் பார்த்தாயா கப்பாப்?”

“யாரை?”

கேட்டவனுக்குக் கோபம் வந்தது. அவரது பதில்கேள்வி அவனுக்கு ஏளனமாய்த் தெரிந்தது. “நீ யாரைச் சொன்னாயோ அவரை”

“ஆம் நான் அவரைப் பார்த்தேன். உண்மை அவரது பக்கத்திலிருந்து வெளிவருவதைப் பார்த்தேன். ஒளி அவரது வாயிலிருந்து வெளிப்படுவதைப் பார்த்தேன்”

வந்தவர்களுக்குப் பொறி தட்டியது. “யாரைப் பற்றிச் சொல்கிறாய் உம்மு அன்மாரின் அடிமையே?”

ஏற்றுக் கொண்ட இஸ்லாத்தை அவர் மறைக்க விரும்பவில்லை. “முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் சத்தியம் பேசுகிறார், நான் அதை ஏறறுக் கொண்டேன்” என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான். சேதி உடனே அம்மா காதுக்குப் போனது – உம்மு அன்மார் காதுக்கு. அதைக் கேட்டு சிரிப்பா வரும்? சீற்றம் வந்தது. ஆத்திரம் வந்தது.

”யாரங்கே. கூப்பிடு என் சகோதரனை” என்று உடனே உடன்பிறப்பை வரவழைத்தார். அவன் பெயர் சிபா இப்னு அப்துல் உஸ்ஸா. பேட்டை தாதா ரேஞ்சுக்கு அடி-பொடி அடியாட்கள் சகிதம் கப்பாபின் கடைக்கு வந்து சேர்ந்தார்கள். பாலை மக்காவில் தூசு பறந்தது!

நேராகவே கேள்விக்கு வந்தான் சிபா. “உன்னைப் பற்றி நம்பமுடியாத செய்தியெல்லாம் நாங்கள் கேள்விப்பட்டோம்”

“என்ன அது?” என்றார் கப்பாப்.

“அந்த பனூ ஹாஷிம் பயல் சொல்லும் பேச்சைக் கேட்டு நாத்திகனாய் மாறி, அவனை நம்பி விட்டாயாம். எல்லோரும் சொல்கிறார்கள்”

முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அப்பொழுது நாற்பது வயது. அவரை ஏளனமாய், கேவலமாய், ஒரு பொருட்டே இல்லை என்பதைப் பிரஸ்தாபிக்கவே கெட்ட பயல் சிபாப், முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயரைக்கூடச் சொல்லாமல் “பனூ ஹாஷிம் பயல்” என்றான். அத்தகைய இறுமாப்பு.

கப்பாப் நிதானமாய், ஆனால் தெளிவாய் பதில் சொன்னார்: “நான் நாத்திகனாகவெல்லாம் மாறவில்லை. ஆனால் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு இணையில்லை என்று நம்பிவிட்டேன். உங்களது கடவுளர் சிலைகளைகளின்மேல் எனக்கு இனி நம்பிக்கையெல்லாம் இல்லை. அந்த முஹம்மத் ஏக இறைவனின் அடிமை, தூதர் என்று வாக்குமூலம் அளிக்கிறேன்”

அவர் சொல்லி முடிக்கவில்லை. சிபாவும் அவனது கூட்டமும் அவர் மேல் பாய்ந்தது. சகட்டுமேனிக்கு, இஷ்டத்திற்கு அடி, உதை என்று பின்னி எடுத்தார்கள். கீழே தள்ளி உதைத்து அவர் கடையில் இருந்த இரும்பு சாமான்களை எடுத்தே அவரைத் தாக்கினார்கள். அவர் சுயநினைவற்றுக் கீழே விழுந்தார்.

பாலைவனத்தில் காட்டுத் தீ பரவியது. கேவலம் ஓர் அடிமை. அவன் தனது எஜமானியை மீறி “முஹம்மதாம்”, “நபியாம்”, “இஸ்லாமாம்” ஏற்றுக் கொண்டானாம். அதையும் பகிரங்கமாய் சொல்லிக் கொள்கிறானாம். அந்தச் செயல், அடிமையிடம் அவர்கள் முதன் முதலாய்க் கண்ட அந்தத் தைரியம், மக்கத்துக் குரைஷிகளுக்குப் புதுசு. அந்தச் செய்தி அவர்களது தலைவர்கள்வரை சென்று குலுக்கியது. தங்களைக் குலுக்கியது தங்களது மதுபோதை அல்ல என்று உணர்ந்ததும் விஷயத்தின் தீவிரம் புரிந்து, சுதாரித்து, கோபம் கொண்டார்கள்.

ஒரு கொல்லன், அதுவும் அடிமை, தன்னைக் காப்பதற்கு உறவுகளற்றவன், புகலிடம் பெறக் கோத்திரமற்றவன். அவன் துடுக்குத்தனமாய்த்  தன் எஜமானியைத் தூக்கியெறிந்துவிட்டு, நம் கடவுளர்களையெல்லாம் அவமதித்து, மூதாதையர் சமயத்தை உதறித் தள்ளிவிட்டுப் போவதெல்லாம், ரொம்பவும் நல்லாயில்லை. இது பெரிய பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று நினைத்தார்கள். சரியாகவே நினைத்தார்கள்.

கப்பாபின் மனவுறுதி அவரின் சகாக்கள் சிலரையும் தொற்றிக் கொள்ள, பகிரங்கமாய்ச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். “ஆமாமய்யா! நாங்களலெல்லாம் இஸ்லாத்தை நம்புகிறோம். ஏற்றுக்கொண்டோம். உங்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம். இது சத்தியமான மார்க்கம். வந்துடுங்க. முஹம்மது சொல்றதைக் கேளுங்க” அது மேலும் நெய் ஊற்றியது – எரிய ஆரம்பித்திருந்த தீயில்.

அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரித் (أبو سفيان بن الحارث‎), அல்-வலீத் இப்னு அல்-முகீராஹ் (الوليد بن المغيرة‎), அபூ ஜஹ்ல் (أبو جهل) எனும் அம்ரிப்னு ஹிஷாம் (عمر بن هشام‎). இவர்கள் மூவரும் மக்கத்துக் குரைஷியர்களின் முக்கியத் தலைவர்கள். பணம், பலம், செல்வாக்கு மிக்கவர்கள். அவர்கள் கஅபாவில் ஒன்று கூடினார்கள். கட்சித் தலைவர்கள் ஏதோ ஒரு குழுக்கூட்டம் என்று குழுமவதுபோல ஒரு மீட்டிங்.

கட்சி ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே செல்வாக்கு ஓங்குவது போல், “இந்த முஹம்மத் ஏதோ பொழுது போகாமல் பேசிக் கொண்டு திரிகிறார் என்று பார்த்தால், அவரது பேச்சைப் படு சீரியஸாய் எடுத்துக் கொண்டு பெரிசு சிறிசெல்லாம் உறுப்பினர்களாக ஆரம்பித்து விட்டார்கள். தானாக சரியாகப் போய்விடும் என்று பார்த்தால் அவர்களின் பிரச்சாரம் சூடு பிடித்துக் கொண்டு போகிறது. ஒரு முடிவு ஏற்படுவதாய்த் தெரியவில்லை” என்று கவலை பகிர்ந்துக் கொள்ளப்பட்டது.

பிறகு நிறையப் பேசி, அவர்களது குட்டி மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “இது நமது சமூகத்தில் புரையோடுவதற்குள் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஒவ்வொரு குலமும் அவர்களது கோத்திரத்தில் யார் யார் முஹம்மதை ஏற்றுக்கொண்டேன் என்று கிளம்பியிருக்கிறார்களோ, அவர்களை வெட்டிப் போடவோ, கொன்று போடவோ பொறுப்பு”

ஆச்சு! ஒருவெறியாட்டம் போட அதிகாரபூர்வத் தீர்மானம் போட்டாச்சு.

சிபா இப்னு அப்துல் உஸ்ஸா அவன் கூட்டாளிகளுக்கு கப்பாப் இப்னு அரதை (ரலி) கவனிக்கும் பொறுப்பு, தானாகக் கிடைத்தது. கொடுமையாய் சித்ரவதை செய்ய வேண்டும், என்ன செய்யலாம்? ஒரு யோசனை உதித்தது. மக்காவின் வெயிலும் சூடும்தான் பிரசித்தியாயிற்றே. உச்சி வெயில் மண்டையின் உள்ளே இருக்கும் மூளையையெல்லாம் உருக்கும் நேரம்வரைக் காத்திருந்தார்கள். பிறகு திறந்த வெட்டவெளிக்கு அவைரை இட்டுச் சென்று அவரது உடலிலுள்ள உடைகளை உருவிவிட்டு நல்லதொரு சூட்டு போட்டு விட்டார்கள். கோட்டு-சூட்டு அல்ல. இரும்பாலான போர்க்கவச சூட்டு. அப்படியே அந்த வெயிலில் அவரைப் படுக்கப் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இரும்பும் சூடேறி உடலை ரணகளப்படுத்தும்; தாகம் உயிர் போகும்.

“இப்போது சொல். அந்த முஹம்மத் யார்?”

“அவர் அல்லாஹ்வின் தூதர். நேர்வழி காட்டும் மார்க்க ஒளியை எடுத்து வந்திருக்கிறார், நம்மையெல்லாம் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு இட்டுச் செல்வதற்கு” பதில் மட்டும் ஏதும் பாதிப்படையாமல் அதே உறுதியுடன் தெளிவாக வந்து கொண்டிருந்தது.

அதைக் கேட்டு அடுத்து மிருகத்தனமாய் அடி, உதை.

“அல்-லாத் அல்-உஸ்ஸா பற்றி என்ன நினைக்கிறாய் சொல்?” அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸா மக்காவில் அப்போது பிரபல்யமான கடவுளர் சிலைகள்.

“அவையிரண்டும் செவிட்டு ஊமைச் சிலைகள். யாதொரு நன்மையோ தீங்கோ செய்ய இயலாதவை.” அதைக் கேட்டு மேலும் ஆத்திரம் ஊற்றெடுத்தது. “என்ன இவன்? அடங்க மாட்டேன் என்கிறான்?”

கற்களை நெருப்பில் இட்டு சுட்டு, தீ கொழுந்து விட்டு எரிந்து அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருந்தார்கள். பின்னர் அவரை அந்த நெருப்புக் கங்குகளின்மேல் போட்டு மேலும் கீழுமாய் இழுத்தார்கள். அவரது முதுகுச் சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழ, பிறகு அந்தத் தீ அணைந்தது. அது அவரது காயத்திலிருந்து வழிந்து விழுந்த நீரினால்.

வெறும் தீயினால் சுட்ட புண்ணாக மட்டும் இருந்திருந்தால் உள்ளாறியிருக்கும். ஆனால் சதைத் துண்டுகளையே பொசுக்கி எடுத்துவிட்டால்? தெருவுக்குத் தெரு பார்மஸியோ, மருத்துவமனையோ இல்லாத அக்காலத்தில் என்னதான் மருத்துவம் செய்திருக்க முடியும்?

ஆனால், ஒருநாள் கப்பாபும் அவர் நண்பர்கள் சிலரும் சென்று முஹம்மத் (ஸல்) சற்று முறையிட்டார்கள். பயந்தெல்லாம் அல்ல. பக்க பலத்திற்கு. பின்னர் அந்த நிகழ்ச்சியை அவரே விவரித்திருந்தார்.

“இறைத்தூதர் (ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, ‘எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் சிறி)தும்கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ‘ஸன்ஆ’ விலிருந்து ‘ஹளர மவ்த்’ வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவரசப்படுகிறீர்கள்” என்று கூறினார்கள்” (சஹீஹ் புகாரி)

அது போதும். அந்த வார்த்தைகள் போதுமானதாயிருந்தது அவர்களுக்கு. நம்பிக்கையை அதிகப்படுத்தின அந்த வார்த்தைகள். தங்களது பொறுமை, தங்களது தியாகம், தங்களது விடாமுயற்சி அனைத்தையும் அந்த இறைவனுக்கு நிரூபித்துக் காண்பிக்க இது போதும் என்று கிளம்பிச் சென்றுவிட்டார்கள். உதவி வருமா என்று கேட்டதற்கு ஆரூடம் சொல்லப்பட, கிளம்பிச் செல்கிறார்கள் “வா வந்து அடி” என்று உதை வாங்க. தியாகம் என்பதெல்லாம் அதற்கு லாயக்கற்ற வார்த்தை.

அடிமைக்கு ஏற்பட்ட அவல வாழ்க்கையை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் தங்கள் பங்குக்கு அவரை நோகடிக்க ஆரம்பித்தனர். ஆஸ் இப்னு வாயில் என்பவன் மக்காவில் இருந்தான். கப்பாப் அவனுக்கு வாள்கள் செய்து கொடுத்த வகையில் அவன் கப்பாபுக்குக் கடன் பட்டிருந்தான். ஒருநாள் கப்பாப் அவனிடம் கடனைத் திரும்பப் பெற அவனிடம் சென்றார். கடன் காசுக்கு கப்பாபின் ஈமானை விலை பேசிப் பார்க்கும் யோசனை உதித்தது அவனுக்கு.

”நீ முஹம்மதை நிராகரிக்காமல் ஏற்றுக் கொண்டு இருக்கும்வரை உன்னிடம் வாங்கிய கடனை திருப்பித் தர முடியாது!” என்றான்.

நெருப்புக்கே இளகாத நெஞ்சு அது. என்ன பதில் வரும்? “அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ எழுப்பப்படும்வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்!” என்று சொல்லிவிட்டார்.

கிடைத்தவரை இலாபம் என்றாகி விட்டது ஆஸ் இப்னு வாயிலுக்கு. ஏளனமாக, ”அப்ப சரி! நான் மரணித்து எழுப்பப்படும்வரை என்னைவிட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படுமில்லையா; அப்போது உன் கடனை நான் தீர்த்து விடுகிறேன்!” என்றான். மறுமை வாழக்கையைக் கிண்டலடிக்கும் பரிகாசம் அந்த பதிலில்.

அப்போதுதான் அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா வசனம் இறக்கினான்: “நம்முடைய வசனங்களை நிராகரித்து, ‘(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்!’ என்று இகழ்ச்சி பேசியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்படவேண்டுமென்று) கருணையாளான இறைவனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?” (மர்யம் 19:77-78)

விஷயம் இவ்வாறிருக்க, நடக்கும் கொடுமையெல்லாம் பத்தாது என்று எஜமானியம்மா தன் பங்குக்குப் பணிவிடை செய்தாள், சித்ரவதையில். ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அந்தக் கடை வழியாக நடந்து சென்றவர்கள் கப்பாபைப் பார்த்துவிட்டு, நின்று அனுசரனையாய் ஏதோ பேசிவிட்டு நகர்ந்தார்கள் போலிருக்கிறது. பொறுக்க முடியவில்லை உம்மு அன்மாருக்கு. பட்டறைக்கல்லில் இருந்து பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியொன்றை எடுத்து வந்து கப்பாபின் தலையில் சூடு போட்டாள். பிறகு அதைப் பல் துலக்குவதுபோல் ஒரு தினசரி வழக்கமாகவே ஆக்கிக் கொண்டாளாம்.

சதை பொரிக்க ஆரம்பிக்கும். அதற்கு மேல் சுயநினைவு தங்க மறுத்து மயக்கமுறும் நிலையில் கப்பாப் இறைந்து துஆ கேட்டுவிட்டார் ஒருநாள் “அல்லாஹ்! இவர்கள் இருவரையும் பழிவாங்குவாயாக!”. அந்த துஆ இறைவனை அடைய திரையின்றிப் போய்விட்டது.

கடைசியில், வஹீ இறங்கிப் பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு மதீனாவிற்கு ஹிஜ்ரத் நிகழ்த்தி புலம்பெயர அனுமதி கிடைத்தது. கப்பாப் தனது ஹிஜ்ரத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் அது நிகழ்ந்தது. அவரது துஆவின் ஒரு பகுதிக்கு இறைவன் பதிலளிக்க ஆரம்பித்தான்.

உம்மு அன்மாருக்கு திடீரென்று தலைவலியொன்று உண்டானது. அது அதிகமாயிற்று. பிறகு தீவிரமாயிற்று. மிகத் தீவிரமாயிற்று. யாரும் அப்படியொன்று கேள்விப்பட்டிராத தலைவலி. வலியின் கொடுமையால் அவள் கத்துவது நாய் ஊளையிடும் சப்தம் போலிருந்தது. மிரண்டு அவளுடைய மகன் வைத்தியர் மாற்றி வைத்தியர் தூக்கிக் கொண்டு ஓட யாருக்கும் தலைவலிக் காரணம் புரியவில்லை.

சூட்டுக்கோல் வைத்திய முறை அக்காலத்தில் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட். அதைத்தான் கடைசியில் ஒரு வைத்தியர் பரிந்துரைத்தார். அவளுக்குத் தலையில் சூட்டுக்கோலால் சூடு இட்டார்கள்.

*****

மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து அன்சார்களின் அன்பு அரவணைப்பில் தஞ்சம் புகுந்தவுடன்தான், என்னவென்று கூட அறியப்பட்டிராத நிம்மதி அவருக்குக் கிடைக்க ஆரம்பித்தது. நெருங்கிக் கொண்டார். நபிகள் நாயகம் (ஸல்) நிழலில் ஒடுங்கிக் கொண்டார். சொகுசு உணர முடிந்தது. ஆனால் அந்த சொகுசு நிம்மதி என்பதெல்லாம் ரிடையர்மென்ட் பென்ஷன் வாங்கிக் கொண்டு, கயிற்றுக் கட்டில் போட்டு, நிலா ஒளியில் நிம்மதியாக உறங்கும் நம் ரகமில்லை. அவர்களின் அகராதி வேறு.

முஸ்லிம்களுக்கு அடுத்த சோதனையாக பத்ரு யுத்தம். அப்பொழுது போரிடத் தயாரானதே முந்நூற்று சொச்சம் பேர்தான். அதில் ஒருவர் கப்பாப் பின் அரத் ரலியல்லாஹு அன்ஹு. அதற்கு அடுத்த சில வருடங்களில் உஹது யுத்தம். அதிலும் கப்பாப் ஆஜர். மருத்துவ விடுப்பு, யதேச்சையான விடுப்பெல்லாம் அறியாத ஊழியர்கள் அவர்கள். இஸ்லாத்தின் உண்மை ஊழியர்கள்.

உஹது யுத்தத்தில்தான் தனது துஆவின் இரண்டாவது பகுதியை இறைவன் நிறைவேற்றுவதைக் கண்டு களித்தார் கப்பாப். ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு, முஹம்மத் நபியின் சிற்றப்பா. மாவீரர். அல்லாஹ்வின் சிங்கம் எனும் பட்டப் பெயருள்ளவர். அவர் அந்தப் போரில் சிபா இப்னு அப்துல் உஸ்ஸாவை கொன்றொழித்தார்.

அதன் பிறகு நடந்த அனைத்துப் போரிலும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடன் பங்கெடுத்துக் கொண்டவர் கப்பாப். பின்னர் கலீஃபாக்களின் ஆட்சியில நிகழ்வுற்ற யுத்தங்களிலும் போர் வீரர் தான். ஓய்வு ஒழிச்சலெல்லாம் இல்லை.

முதல் நான்கு கலீஃபாக்களின் ஆட்சியையும் கண்டு வாழ்ந்து விட்டு மறையும் அளவு அவருக்கு ஆயுளை நீட்டித்திருந்தான் இறைவன். உமர், உதுமான் ரலியல்லாஹுஅன்ஹும் காலங்களில் இஸ்லாமிய அரசின் வருமானம் பல்கிப் பெருகியது. கப்பாபிற்கு அரசாங்கக் கருவூலத்திலிருந்து நிறையப் பணம் பங்காய்க் கிடைத்தது.

வாழ்நாளெல்லாம் வறுமையே போர்வையாக வாழ்ந்தவருக்கு அவரது இறுதிக் காலத்தில் நிறைய செல்வம் சேர்ந்தது. தங்கம், வெள்ளி என்று அளவிட முடியாத செல்வம். அவர் கனவும் கண்டிராதவை. கப்பாப் அவற்றைத் தன்னிஷ்டத்திற்குச் செலவு செய்தார்.

ஈராக்கிலுள்ள கூஃபாவில் ஒரு வீடு கட்டினார். அந்த வீட்டில் அனைவரும் பார்க்கக் கூடிய ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். நாணயங்கள், பணம் எல்லாவற்றையும் எடுத்து அந்த இடத்தில் வைத்தார். லாக்கர், பூட்டு, செக்யூரிட்டிமேன் எல்லாம் இல்லை. சும்மா அப்படியே வைத்தார். “இதனால் சகலமானவர்களுக்கும்” என்று அறிவிப்பெல்லாம் செய்யவில்லை. ஏழைகள், எளியவர்கள், வறியவர்கள் என்று அவரவர்கள் வருவார்கள். தங்களுக்குத் தேவையான பணம் எடுத்துக் கொள்வார்கள், செல்வார்கள். யாருக்கும் அனுமதி, டோக்கன் என்றெல்லாம் எதுவும் கிடையாது. “என்னதெல்லாம் உன்னது” அவ்வளவுதான்.

வீடு கட்டி விழா நிகழ்த்துவதை வழக்கப் படுத்தி இருக்கும் நம் சமுதாயத்திற்கு அவரது விசனம்தான் ஆச்சர்யம். “ஒரு முஸ்லிம், தாம் செய்கிற எல்லாச் செலவினங்களுக்காகவும் பிரதிபலன் அளிக்கப்படுவார்; தேவைக்கு அதிகமாக வீடுகட்ட இந்த மண்ணில் அவர் செய்கிற செலவைத் தவிர”

அதனால்தான் தனது வீட்டையே பொதுவுடைமை போல் ஆக்கிவிட்டார் போலிருக்கிறது.

இவ்வளவையும் செய்துவிட்டு பயந்து கிடந்தார் அந்த ஏழை. அவ்வப்போது விம்மி அழுது சொல்வார், “நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலனளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அதன் (உலகப்) பலன்களில் எதையுமே அனுபவிக்காமல் சென்றுவிட்டவர்களும் எங்களிடையே உண்டு. முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அத்தகையவர்களில் ஒருவர். அவர் உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார். அவரைக் கஃபனிடுவதற்கு (அவரின்) கோடிட்ட வண்ணத் துணி ஒன்றைத் தவிர வேறெதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தத் துணியினால் நாங்கள் அவரின் தலையை மூடியபோது அவரின் கால்கள் இரண்டும் வெளியே தெரியலாயின் அவரின் கால்கள் இரண்டையும் நாங்கள் மூடியபோது அவரின் தலை வெளியே தெரியலாயிற்று. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் துணியால் அவரின் தலையை மூடி விடும்படியும் அவரின் கால்கள் இரண்டின் மீதும் ‘இத்கிர்’ புல்லைச் சிறிது போட்டு (மறைத்து) விடும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர்.” (சஹீஹ் புகாரி)

பொத்துக் கொண்டு கொட்டிய செல்வமும் செழுமையும் மறுமையில் எங்கே தனது நற்கூலியைக் குறைத்து விடுமோ, ஏதும் தண்டனைக்கு வழி வகுத்து விடுமோ என்று பயந்து கிடந்தார் நிசமாலுமே நெருப்பில் புடம்போடப்பட்ட அந்தத் தங்கம். ரலியல்லாஹு அன்ஹு.

இறுதிக் காலத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது கப்பாபிற்கு. அதன் நோவு மிகவும் கடினமானதாயிருந்தது. எந்த அளவென்றால், “நபி(ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். அந்த அளவுக்கு இப்போது நான் நோயினால் சிரமப்படுகிறேன்” அந்த அளவு நோவு. அந்த அளவு அவரின் ஈமானின் பக்குவம். எந்த ஒரு நபிக்கட்டளையும் அவர்களுக்கெல்லாம் “சும்மா” கிடையாது. நபி சொன்னார், கேட்டோம், செய்தோம். அவ்வளவுதான்.

அவர் மரணப் படுக்கையில் கிடக்கும்போது அவரது அறைக்குள் நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் கப்பாப் தெரிவித்தார்:

“எண்பதாயிரம் திர்ஹம் அந்த இடத்தில் இருக்கிறது. அவை மறைத்து வைக்கப்படவில்லை. என்னைத் தேடி வந்தவர்கள் யாரையும் நான் இல்லையென்று திருப்பி அனுப்பியதில்லை” என்று சொல்லிவிட்டு விம்ம ஆரம்பித்தார்.

“ஏன் அழுகை?” என்று விசாரித்தார்கள் நண்பர்கள்.

“ஏன் அழுகிறேனா? எனக்குமுன் பலத் தோழர்கள் சென்று விட்டார்கள். அவர்களுக்கு உரிய எந்த வெகுமதியையும் இவ்வுலகில் வெகுமதியாக அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நான் நீண்ட நாள் வாழ்ந்து செல்வம் பார்த்துவிட்டேன். எனது அத்தனை செயல்களுக்கும் இதுதான் வெகுமதியென்று இங்கேயே கிடைத்து, மறுமையில் ஒன்றுமில்லாமல் போய்விடுமோ என்று நினைத்து அழுகிறேன்.”

மலிவாகக் கட்டப்பட்டிருந்த தனது வீட்டையும் மக்களுக்காகத் தான் பணம் விட்டுவைத்திருந்த இடத்தையும் நண்பர்களுக்குக் காட்டினார். “அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நான் கயிற்றால் ஏதும் கட்டி வைக்கவுமில்லை. கேட்டு வருபவர் எட்டாத தொலைவிலும் வைக்கவில்லை” என்று சொல்லிவிட்டுத் தனக்கெனத் தயாராய் வைக்கப்பட்டிருந்த கஃபனைக் காட்டினார். அதுவே அவருக்கு ஆடம்பரமாய்த் தோன்றியது. நண்பர்களிடம் விசனப்பட்டார்.

”இதோ எனக்காக முழு அளவாவது கஃபன் துணி தயாராய் இருக்கிறது. ஆனால் ஹம்ஸா! அவர் உஹதுப் போரில் வீர மரணம் தழுவியபோது அவர் உடம்பை முழுதும் மறைக்குமளவு துணியில்லை. கடைசியில் புல்லைப் போட்டு மூடினோம்.”

அவர் பேச்சில் ஏதாவது ஓர் ஒற்றை எழுத்து நமக்குப் புரிந்து விட்டாலே உத்தமம். நமது புலனும் உணர்வும் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது மாசுபட்டதொரு சூழல். நமது சிந்தனைத் தளமே வேறு. யோக்கியம் எனும் வார்த்தைக்கு நமது அர்த்தம் வேறு. அவர்கள்? ரலியல்லாஹு அன்ஹும்.

ஒருமுறை மக்காவில் குரைஷிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சிறப்பு அமர்வுக்கு நேரம் கேட்டார்கள். அதாவது ஏழை எளியவர்களாகிய பிலால், சுஹைப், கப்பாப் ரலியல்லாஹு அன்ஹும் இவர்களுடனெல்லாம் அமராமல் மேட்டுக்குடியினருக்கான தங்களுக்குத் தனி அமர்வு. அல்லாஹ் வசனங்களை இறக்கினான். வறியவர்கள் என்று சொல்லப்பட்ட அவர்களை இழுத்து அரவணைத்து, புகழ்ந்து, கௌரவித்து வசனங்கள் வந்தன:

(நபயே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை – எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.  நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள்புரிந்து விட்டான்? என்று (செல்வந்தர்கள்) கூற வேண்டுமென்பதற்காக அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா? நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப்பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-அன்ஆம் 6:52-54)

அந்த வசனங்கள் இறங்கிய நிமிடத்திலிருந்து அவர்களைக் கண்டுவிட்டால் முஹம்மத் நபி (ஸல்) மேலும் அன்பாய் நடாத்த ஆரம்பித்தார்கள். தனது விரிப்பை அவர்களுக்கு விரித்து, அவர்களது தோள்களைத் தட்டி, “என் இறைவன் சிறப்பிக்கும்படி பரிந்துரைத்தவர்களுக்கு நல்வரவு உரித்தாகுக”. இஸ்லாமிய அகராதியில் மேட்டுக்குடிக்கு புது அர்த்தம் புனையப்பட்டது.

ஹிஜ்ரீ 37ஆம் வருடம் கப்பாப் இப்னு அரத் (ரலி) உயிர் நீத்தார்கள். அவரது வஸிய்யத்படி ஊரின் புறப்பகுதியில் அவரை அடக்கம் செய்தனர். நகரின் உள்ளே இருக்கும் மையவாடி வேண்டாம் என்று சொல்லி விட்டார். ஸிஃப்பீன் யுத்தத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த அலீ (ரலி) அந்தப் பகுதியில் புதிதாய் இருந்த ஏழு கப்ருகளைக் கண்ணுற்று விசாரிக்க, மக்கள் தெரிவித்தார்கள்:

“அமீருல் மூமினீன்! முதல் கப்ரு கப்பாபுடையது. அவரது விருப்பப்படி அவரை இங்கு அடக்கம் செய்தோம். மற்றவர்கள் அவரைத் தொடர்ந்தவர்கள்”

ஆழ்ந்த துக்கத்திற்குப் பிறகு இறைஞ்சினார் அலீ: “அல்லாஹ்வின் கருணை கப்பாப் மேல் உண்டாகட்டும்! அவர் இஸ்லாத்தைப் பரிபூரண உள்ளத்துடன் ஏற்றார்! முழு மனதுடன் ஹிஜ்ரத் மேற்கொண்டார்! தனது வாழ்நாள் முழுதும் போராளியாக வாழ்ந்தார்! நேர்மையான செயல் புரிந்த எவரின் வெகுமதியையும் அல்லாஹ் குறைத்துவிட மாட்டான்”

ரலியல்லாஹுஅன்ஹு!

*****

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

தோழர்கள் – 1


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.