தோழர்கள் – 62 காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ் خالد بن سعيد بن العاص

Share this:

காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ்
 خالد بن سعيد بن العاص

ரோமர்களின் ஆட்சியின் கீழிருந்த ஷாம் பகுதியை நோக்கி மதீனாவிலிருந்து படையொன்று கிளம்பியது. படை அணியினருடன் கூடவே நடந்து வந்தார் கலீஃபா அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு. அக்காலத்தில் ஆட்சி புரிந்த கலீஃபாக்கள் மேடைமீது ஏறி நின்று படையினருக்குக் கை ஆட்டிவிட்டு அறையினுள் புகுந்து கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள். பயணமோ, படையெடுப்போ – கிளம்பிச் செல்பவர்களுடன் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சற்று தூரம் கூடவே நடந்து சென்று அறிவுரைகள் வழங்குவது நடைமுறை. அதை கலீஃபாக்களும் பின்பற்றினார்கள்.

முதல் கலீஃபாவாகப் பதவி ஏற்றிருந்த அபூபக்ரு, படை அணியின் தலைவர் ஷுரஹ்பீல் இப்னு ஹஸனாவுடன் பேசிக் கொண்டே நடந்தார். அறிவுரைகள், ஆலோசனைகள் அப்பேச்சில் நிறைந்திருந்தன.

“உமக்கொரு பிரச்சினை ஏற்பட்டு, அது குறித்துப் பிறரிடம் கலந்து ஆராய வேண்டியிருப்பின் முதலில் அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ்வை அணுகவும். அதற்கு அடுத்து முஆத் இப்னு ஜபலிடம் கலந்து கொள்ளவும்” என்று தெரிவித்த அபூபக்ரு, மூன்றாவதாக ஒரு தோழரின் பெயரைக் குறிப்பிட்டார். “அவர்கள் ஒவ்வொருவரிடமும் சிறப்பான ஆலோசனையையும் நன்மையையும் காண்பீர். உம்முடைய கருத்தில் கர்வம் அடைய வேண்டாம். உம்முடைய கருத்தை அவர்களிடம் மறைக்கவும் வேண்டாம்.”

அபூபக்ருவின் அறிவுரைகளைக் கவனமுடன் கேட்டுக் கொண்டார் ஷுரஹ்பீல் இப்னு ஹஸனா. மதீனாவில் இருந்து ஷாம் நோக்கிக் கிளம்பிச் சென்ற அணிகள் நான்கு. அதில் ஓர் அணியின் தலைவர் ஷுரஹ்பீல் இப்னு ஹஸனா. முஆத் இப்னு ஜபலும் அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ்வும் வேறோர் படை அணியினர். குறிப்பாகச் சொல்வதென்றால் மற்றோர் அணியின் படைத் தலைவர் அபூ உபைதா.

மூன்றாவதாக ஒரு தோழரை அபூபக்ரு குறிப்பிட்டாரே அவர், ஷுரஹ்பீல் இப்னு ஹஸனாவின் தலைமையின் கீழ் படையில் இணைந்திருந்தவர். இருந்தும் அவரிடம் ஆலோசனை கேட்குமளவு அவருக்குச் சிறப்புத் தகுதி இருந்தது. அந்த மூன்றாமவரின் பெயர் காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ், ரலியல்லாஹு அன்ஹு.

oOo

ஸயீத் பின் அல்-ஆஸ் என்பவர் மக்காவின் குரைஷிக் கோத்திரங்கள் ஒன்றின் பெரும்புள்ளி. மக்கள் மத்தியில் செல்வாக்கு, வீடு, வாசல், ஒட்டகங்கள் என்று செல்வச் செழிப்பான குடும்பம். அவருடைய மகன்களுள் ஒருவர் காலித் பின் ஸயீத். காலிதின் மனைவி உமைமா பின்த் ஃகலஃப்.

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்பட்டு, அவர்கள் நபியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளை, தோழர்கள் தொடர் நெடுக்கப் படித்தோம். மெதுமெதுவே மக்காவில் அந்தப் பேச்சு கிசுகிசுப்பாகப் பரவி, செய்தியானது. குரைஷிகள் முதலில் ஆச்சரியப்பட்டனர்; பின்னர் ஆத்திரப்பட்டனர். செய்தியைக் கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்தார் காலித். அவர் மனத்தினுள் பொறி தட்டியது. ‘அறிவுக்கு உகந்ததாகத் தானே இருக்கிறது.’ ஆனால் –

‘நல்ல செய்தி; சத்தியமான மார்க்கம்; ஏற்றுக் கொள்கிறேன்’ என்று மட்டும் அவரால் சட்டென்று சொல்ல முடியவில்லை. அச்சம்! அவர் தம் தந்தையின் மீது கொண்டிருந்த அச்சம். ‘அப்பாவுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். கொன்று கூறுபோட்டுக் கடவுள் சிலைக்குப் படையல் வைத்துவிடுவார்’ என்று தோன்றியதால் இஸ்லாத்தின்மீது ஏற்பட்ட அபிமானத்தை, ஈர்ப்பை மனத்திற்குள் புதைத்து வைத்துக்கொண்டு அமைதி காத்தார் காலித் பின் ஸயீத்.

அவரது அச்சம் மிகையில்லை. ‘புதிய மார்க்கமாம்; இஸ்லாமாம்; அவர் சொன்னாராம்; இவர் ஏற்றுக்கொண்டாராம்’ என்று தெரியவந்தால் தீர்ந்தது விஷயம். ரத்த சொந்தம், தூரத்து சொந்தம், மூத்தவர், இளையவர் என்ற பாகுபாடெல்லாம் பார்க்காமல் அடி, உதை, குத்து என்று சித்திரவதை துவங்கியிருந்தது. கப்பாப் பின் அல்-அரத் ரலியல்லாஹு அன்ஹு வரலாற்றிலிருந்து நெடுகவே பார்த்து வந்தோம். இருந்தாலும் குரைஷிகளின் அந்த அக்கிரமங்களெல்லாம் இஸ்லாத்தின் மீழெழுச்சிக்குத் தற்காலிகத் தடை ஏற்படுத்தச் செய்தனவே தவிர, காந்தமாய் ஈர்த்த இஸ்லாத்தை நோக்கி விரைந்தவர்களை முழுவதுமாய்த் தடுக்க முடியவில்லை.

காலிதின் உறக்கத்தில் ஒருநாள் கனவு. ‘பள்ளத்திலிருந்து கொழுந்துவிட்டு எரியும் தீ. அதன் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறார் காலித். அவருடைய தந்தை அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு, அவரைத் தம் இரு கரங்களாலும் தீயினுள் தள்ளுகிறார். அப்பொழுது அங்கு வந்த அல்லாஹ்வின் தூதரவர்கள், காலிதின் மேலாடையைத் தமது வலது கரத்தால் பிடித்து இழுத்து, நெருப்பிலிருந்து அகற்றிக் காப்பாற்றுகிறார்கள்.’

பொழுது விடிந்தது. என்ன செய்ய வேண்டும் என்று காலிதின் மனத்தில் தெளிவு பிறந்திருந்தது. அபூபக்ருவின் இல்லத்திற்கு விரைந்து சென்று, தமது கனவை விவரித்தார். அபூபக்ருவுக்கு அந்தக் கனவை விரித்துச் சொல்வதில் சிரமம் இருக்கவில்லை.

“அல்லாஹ் உமக்கு நன்மையை நாடியுள்ளான். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நீ் பின்பற்ற வேண்டும். நெருப்பினுள் வீழ்வதிலிருந்து இஸ்லாம் உம்மைக் காப்பாற்றும்” என்று அறிவுறுத்தினார் அபூபக்ரு.

உடனே நபியவர்களிடம் விரைந்தார் காலித். என்ன செய்ய வேண்டும் என்று விசாரித்தார். “உருவ வழிபாட்டை விட்டுவிட வேண்டும். அவை கேட்க இயலா, பார்க்க இயலா சிலைகள். எவருக்கும் நன்மையோ, தீங்கோ விளைவிக்க இயலாதவை. ஒரே இறைவன். அவனுக்கு இணை துணையில்லை; முஹம்மது அவனுடைய அடிமையும் தூதருமாவார் என நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.”

தமது வலக்கரத்தை நீட்டி நபியவர்களின் வலக்கரத்தின்மீது வைத்து, பிரமாணம் மொழிந்து இஸ்லாத்தினுள் அடியெடுத்து வைத்தார் காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு.

மறைவாகத்தான் நடந்தது. தெரிவிக்காமல்தான் இருந்தார். எத்தனை நாளைக்கு முடியும்? அவருடைய தந்தைக்குத் தகவல் தெரிந்துவிட்டது. குரைஷிக் குலத்தின் முக்கியப் புள்ளிகளுள் ஒருவர் ஸயீத் இப்னுல் ஆஸ். அவருடைய மகனே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்றால்? அதிகப்படியான இழுக்கும் அவமானமும் ஏற்பட்டது அவருக்கு. மகனை அழைத்தார்.

“முஹம்மது நமது கடவுள்களை இகழ்கிறார். அதை அறிந்த பிறகும் நீ அவரைப் பின்பற்றுவதாகக் கேள்விப்பட்டேனே, உண்மையா?”

“அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன். அவர் உரைப்பது சத்தியம். அதை நம்புகிறேன்; பின்பற்றுகிறேன்”

அடி விழுந்தது. திட்டு, கத்தல், இரைச்சல் எழுந்தன. ஓர் அறைக்குள் பிடித்துத் தள்ளப்பட்டுச் சிறை வைக்கப்பட்டார் காலித் பின் ஸயீத். பசியில் உழன்றாலும் சரி, தாகத்தில் மடிந்தாலும் சரி; ரொட்டி கிடையாது; தண்ணீர் கிடையாது’ என்று ஆகாரம் மறுக்கப்பட்டது. அழுதார் காலித். என்னவென்று?

“அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன். முஹம்மது அவர்கள் உரைப்பது சத்தியம். அதை நம்புகிறேன்; பின்பற்றுகிறேன்”

‘உனக்கு இதெல்லாம் போதாது’ என்று நினைத்த ஸயீத், பாலை வெளிக்கு மகனை இழுத்துச் சென்று, கொதிக்கும் வெயிலில் கிடத்தி, மூன்று நாள் வறுத்து எடுத்தார். ‘தளர்ந்து விடுவார்; பட்டது போதும் என்று விட்டுவார்’ என நினைத்தால் ஈமானின் உரமேறிக் கிடந்தார் காலித். வெறுத்துப்போய் வீட்டிற்குத் திரும்பினார் ஸயீத். கெஞ்சல், கொஞ்சல், மிரட்டல் என்று தொடர்ந்தது வதை. காலிதோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

“எக் காரணத்தைக் கொண்டும் நான் இஸ்லாத்தை விட்டு நீங்க முடியாது. அதுவே எனது வாழ்க்கை. முஸ்லிமாகவே மடிவேன்.”

இனி அவ்வளவுதான் என்றானதும் “எனில் வீட்டை விட்டு வெளியேறு. லாத் கடவுள் மீது ஆணையாக! என்னிடமிருந்து உனக்கு இனி உணவு, துணிமணி என்று எதுவும் கிடையாது.”

“அல்லாஹ்வே உணவளிக்கப் போதுமானவன்” என்று வெளியேறினார் காலித் பின் ஸயீத்.

செல்வம், செழிப்பு அனைத்தையும் அங்கேயே விட்டுவிட்டு, ஏழ்மைக்கும் வறுமைக்கும் மாறினார் காலித். அதனால் என்ன? வருத்தம், சோகம் என்றில்லாமல் மகிழ்ச்சியும் நிறைவுமாய் உணர்ந்தது அவரது மனம்.

ஒரு கட்டத்தில், குரைஷிகளிடம் தோழர்கள் படும் இன்னலுக்குத் தீர்வாய், அவர்கள் அபிஸீனியாவிற்குப் புலம்பெயர நபியவர்கள் அனுமதியளித்தார்கள். காலித் பின் ஸயீதும் அவருடைய மனைவியும் மக்காவிலிருந்து வெளியேற, அபிஸீனியாவில் தொடர்ந்தது அவர்களுடைய இஸ்லாமும் இல்லறமும். அங்கு அவருக்கு மகளும் பிறந்தார்.

அபிஸீனியாவிற்குப் புலம்பெயர்ந்திருந்த முஸ்லிம்களுள் உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹாவும் ஒருவர். அபூஸுஃப்யானின் மகளாரான இவர் தம் கணவர் உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷுடன் சென்றிருந்தார். ஆனால் அங்கு சென்ற உபைதுல்லாஹ், ‘நான் கிறித்துவ மதத்தைப் பின்பற்றப்போகிறேன்’ என்று தடம்மாறிக் குடிப்பழக்கத்தில் வீழ்ந்துவிட்டர். பின்னர் அங்கேயே மரணமடைந்துவிட்டார். உம்மு ஹபீபாவின் ‘இத்தா’ காலம் முடிந்ததும் அபிஸீனிய அரசர் நஜ்ஜாஷிக்கு நபியவர்களிடமிருந்து கடிதம் வந்தது. தாம் உம்மு ஹபீபாவை மணமுடிக்க விழைவதைக் குறிப்பிட்டு நபியவர்கள் எழுதியிருந்தார்கள்.

உடனே திருமண ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்தார் நஜ்ஜாஷி. உம்மு ஹபீபாவிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது. அவை கூடியது. தோழர்கள் அழைக்கப்பட்டார்கள். ‘மணப்பெண்ணின் சார்பில் திருமண ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஒருவரை நியமியுங்கள்’ என்று நஜ்ஜாஷி தெரிவிக்க, தமக்கு ‘வலீ’யாக அன்னை உம்மு ஹபீபா தேர்ந்தெடுத்தது தம் உறவினர் காலித் பின் ஸயீத் இப்னுல் ஆஸைத்தாம். நபியவர்களின் சார்பாக, அன்னை உம்மு ஹபீபாவிற்கு 400 தீனார்கள் மஹ்ர் அளிப்பதாக அறிவித்து அதை காலித் பின் ஸயீதிடம் அளித்தார் மன்னர் நஜ்ஜாஷி. நபியவர்களின் திருமண ஒப்பந்தத்தை மணமகளின் சார்பாக நிறைவேற்றும் நல்வாய்ப்பு அமைந்தது காலிதுக்கு.

நபியவர்களின் சார்பாகத் தோழர்களுக்குத் திருமண விருந்தும் அளித்தார் அந்த மன்னர் என்பது இங்கு உபரித்தகவல்.

ஏறத்தாழ பத்து ஆண்டுகள் அபிஸீனியாவில் தொடர்ந்தது காலிதுடைய வாழ்க்கை. பின்னர் ஹிஜ்ரீ் ஏழாம் ஆண்டு முஸ்லிம்கள் மதீனாவிற்குத் திரும்பினார்கள் என்று ஜஅஃபர் பின் அபீதாலிப் வரலாற்றில் விரிவாகப் பார்த்தோமில்லையா? அவர்களுடன் மதீனா புலம்பெயர்ந்தார்கள் காலித் பின் ஸயீத் குடும்பத்தினர்.

நபியவர்களுக்கு அக்குடும்பத்தினர்மீது தனிப்பரிவும் பாசமும் இருந்தன. ஒருமுறை நபியவர்களுக்குப் பரிசாகக் கிடைத்த துணிகளுள் சிறுமிகள் அணிவதற்கு உகந்த கறுப்பு நிற ஆடை இருந்தது. சிவப்பு நிறக் கோடுகளுடன் அழகாக இருந்த அந்த ஆடையைத் தம் தோழர்களிடம் காண்பித்து “நான் இதை யாருக்கு அளிக்கட்டும்?” என்று கேட்டார்கள் நபியவர்கள்.

பல தோழர்களுக்கு இளம் வயதில் மகள்கள் இருந்தனர். இருந்தாலும் அடக்கம் வாய்ந்த தோழர்கள் அமைதி காத்தார்கள். நபியவர்கள் தாமே ஒரு முடிவுக்கு வந்து, காலித் பின் ஸயீதின் மகளை அழைத்துவரச் சொன்னார்கள். அவருக்குத் தம் கையால் அதை அணிவித்து, “இது உனக்கு அழகாக உள்ளது” என்று பாராட்டவும் செய்தார்கள். ஏகப்பெருமிதம் அடைந்தார் காலிதின் மகள் உம்மு காலித். ஆள் வளரும்போது ஆடையின் அளவு சிறியதாகிவிடும் இல்லையா? அப்படி ஆகிவிட்ட பின்னரும் தம் வாழ்நாளுக்கும் உம்மு காலித் அந்த ஆடையைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார்.

காலித் பின் ஸயீதுக்கு இன்னொரு சிறப்பும் சேர்ந்தது.  யமன் நாட்டின் ஸன்ஆ பகுதிக்கு அவரை ஆளுநராக அனுப்பி வைத்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அடுத்த சில ஆண்டுகளில் நபியவர்கள் மரணமடைந்து அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றதும் மதீனாவுக்குத் திரும்பினார் காலித். அடுத்து அரசியல் விவகாரங்கள், போர்கள் என்று முதல் கலீஃபாவின் ஆட்சியில் சோதனையான பற்பல நிகழ்வுகள். அதில் வெகு முக்கியமான ஒன்று ரோமர்களை நோக்கிப் படையெடுப்பு.

அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ், அம்ரிப்னுல் ஆஸ், யஸீத் பின் அபீஸுஃப்யான், ஷுரஹ்பீல் இப்னு ஹஸனா (ரலியல்லாஹு அன்ஹும்) எனும் நான்கு முக்கியத் தோழர்களின் தலைமையில் நான்கு வெவ்வேறு அணிகள் புறப்பட்டன. காலித் பின் ஸயீதிடம், “யாருடன் செல்ல விரும்புகிறீர்?” எனத் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அவரிடமே அளித்தார் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு.

“அம்ரிப்னுல் ஆஸ் என்னுடைய உறவினர்தாம். ஆயினும் நான் ஷுரஹ்பீல் இப்னு ஹஸனாவுடன் செல்ல விழைகிறேன்” எனத் தம் விருப்பத்தைச் சொன்னார் காலித் பின் ஸயீத்.

ஷுரஹ்பீல் இப்னு ஹஸனாவின் படை அணி மதீனாவை விட்டுக் கிளம்பும்போது, கூடவே நடந்துவந்தார் கலீஃபா. ஷுராஹ்பிலிடம், “காலித் பின் ஸயீதின் உரிமைகளை நீர் மதிக்கவும். அவர் உமது உரிமைகளை மதிக்கட்டும். இஸ்லாத்தில் அவருக்கான உயரிய நிலையை நீர் அறிந்திருப்பீர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை யமன் நாட்டின் ஒரு பகுதிக்கு ஆளுநராக நியமித்திருந்தார்கள்.

“அவரை நான் தலைவராக்கினேன். பிறகு என் மனத்தை மாற்றிக் கொண்டேன். அவருடைய மார்க்கச் சிறப்பிற்கு இதுவே சிறப்பாக இருக்கக்கூடும். யாருடைய தலைமைப் பொறுப்பிற்கும் நான் தீங்கிழைத்ததில்லை. அவருக்குரிய படைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை நான் அவருக்கு அளித்தேன். அம்ரிப்னுல் ஆஸ் அவருடைய உறவினராக இருந்தும் அவர் உம்முடைய தலைமையின்கீழ் இணைந்து கொள்ள விரும்பினார். உமக்கொரு பிரச்சினை ஏற்பட்டு, அது குறித்து கருத்து அறிய விரும்பினால், இறைப்பற்றில் மிகைத்த ஒருவரின் ஆலோசனையை விரும்பினால் அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ்வை அணுகவும். அடுத்து முஆத் இப்னு ஜபல். அதற்கடுத்து காலித் இப்னு ஸயீத். அவர்கள் ஒவ்வொருவரிடம் சிறப்பான ஆலோசனையையும் நன்மையையும் காண்பீர். உம்முடைய கருத்தில் கர்வம் அடைய வேண்டாம். உம்முடைய கருத்தை அவர்களிடம் மறைக்க வேண்டாம்.”

ஷாம் பகுதிக்கு விரைந்த முஸ்லிம் படைகள் ரோமர்களுடன் பல போர்கள் நிகழ்த்தியவை தனிப் பெரும் வரலாறு. அவற்றுள் ஒன்று மர்ஜ் அஸ்-ஸஃபர் எனும் போர். அந்தப் போர் ஹிஜ்ரீ 14ஆம் ஆண்டு நிகழ்ந்தது. காலித் பின் ஸயீத் அதில் உயிர்த் தியாகியானார்.

செல்வமும் செல்வாக்கும் மிக்கக் குரைஷிக் குடும்பத்தில் பிறந்து, இஸ்லாத்திற்காகத் துன்பத்திற்கும் வறுமைக்கும் ஆளானாலும் இருமுறை ஹிஜ்ரத், உயிர்த் தியாகி எனும் ஆகச் சிறந்த தகுதிகளை அடைந்து வெற்றியாளரானார் காலித் பின் ஸயீத்.

ரலியல்லாஹு அன்ஹு.

– நூருத்தீன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.