சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41

Share this:

41. இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம்

க் சன்க்கூர் அல் புர்ஸுகி மரணமடைந்து, அவரை அடுத்து ஆட்சியை ஏற்ற அவருடைய மூத்த மகன் மசூதும் சொற்ப காலத்தில் மரணமடைந்ததும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார் மசூதின் இளைய சகோதரர். அவருக்கு உதவியாக இருந்து ஆட்சிப் பரிபாலனத்தைப் பார்த்துக் கொண்டவர் ஆக் சன்க்கூரின் துருக்கிய மம்லூக் ஜாவ்லி என்பவராவார். அவர் இரு காழீகளைத் தேர்ந்தெடுத்து, “நீங்கள் பக்தாதுக்குச் சென்று சுல்தானைச் சந்தித்து, இந்த இளைஞரின் ஆட்சிக்கு அங்கீகாரம் பெற்று வாருங்கள்” என்று அனுப்பி வைத்தார்.

அவ்விரு காழீகளான பஹாவுத்தீனுக்கும் ஸலாஹுத்தீன் முஹம்மதுவுக்கும் ஜாவ்லியையும் பிடிக்கவில்லை; அவரது நிர்வாகத்தையும் பிடிக்கவில்லை; முஸ்லிம்களைச் சூழ்ந்திருந்த பரங்கியர்களின் ஆபத்தையும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. பக்தாத் வந்து சேர்ந்த அவர்கள், சுல்தான் மஹ்மூதின் வாயிற்காப்போனிடம் உரையாடினார்கள்.

“அல்-ஜஸீராவும் லெவண்ட்டும் பரங்கியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவர்கள் நாளுக்கு நாள் வலிமையடைந்து வருவதை நீயும் சுல்தானும் அறிவீர்கள். அவர்களை அல் புர்ஸுகி கட்டுப்படுத்தி வைத்திருந்தார். ஆனால் அவர் கொல்லப்பட்ட பின் பரங்கியர்களின் பேராசை பெருகி விட்டது. புர்ஸுகியின் மகனோ சிறுவர். இஸ்லாத்தையும் முஸ்லிம்களின் நிலப்பரப்பையும் தற்காக்க, துணிவும் வீரமும் நிறைந்த ஒருவரே நமக்கு இப்போது தேவைப்படுகிறார். நாங்கள் யதார்த்த நிலைமையை உன்னிடம் தெரிவிக்கின்றோம். ஆட்சியாளர்களின் திறமையின்மையால் முஸ்லிம்களின் நிலைமை, எதிர்வரும் நாட்களில் அங்கு இன்னும் மோசமடையக் கூடும். ஆனால், நாங்கள் சுல்தானின் சந்நிதிக்கு வந்து நிலைமையை உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்வதன் மூலம் எங்களாலான கடமையை நிறைவேற்றிய திருப்தியாவது எங்களுக்கு மிஞ்சும். தவிர மற்றொரு காரணம், நாளை ஒருநாள், ‘இதை ஏன் முன்னமேயே என் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை?’ என்று சுல்தான் எங்களைக் கடிந்து கொள்ளக்கூடாதல்லவா?” என்று, தாம் வந்த நோக்கத்தை விளக்கமாக எடுத்துரைத்தனர்.

சுல்தான் மஹ்மூதுக்கு உடனே செய்தி சென்று சேர்ந்தது. அவ்விருவரையும் அழைத்து விசாரித்தார். “நிலைமையின் தீவிரம் புரிகிறது. யார் வசம் அப்பகுதியின் ஆட்சிப் பொறுப்புகளை வழங்கலாம். அதற்குத் தகுதியானவர் என்று யாரையேனும் கருதுகிறீர்களா?” என்று அவ்விருவரிடமே கருத்துக் கேட்டார் சுல்தான்.

அவர்கள் ஒருவரைக் குறிப்பிட்டு, புகழ்ந்துரைத்தார்கள்; பரிந்துரைத்தார்கள். அவர் சுல்தான் மஹ்மூதின் இயல்பான தேர்வாகவுமேகூட அமைந்திருக்கக்கூடும் என்பதால் அப்பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதலாம் சிலுவை யுத்த வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாகவும் பின்னர் வரவிருக்கும் நூருத்தீன் ஸெங்கியின் வரவுக்கு முன்னுரையாகவும் அத்தேர்வு அமைந்தது.

உதயமானது புதிய பாகம். வரலாற்றுத் திரையில் பிரசன்னமானார் இமாதுத்தீன் ஸெங்கி.

oOo

நாற்பது அத்தியாயங்களையும் பற்பல நிகழ்வுகளையும் ஏகப்பட்ட பெயர்களையும் நாம் இதுவரை கடந்து வந்திருப்பதால், எட்டாம் அத்தியாயத்தில் சந்தித்த சிலரையும் அந்நிகழ்வுகளையும் இங்கு நினைவூட்டிக் கொள்வோம். இமாதுத்தீன் ஸெங்கியின் பால்யப் பருவம் அங்கிருந்து தொடங்குவதால் அந்த வரலாற்றுச் சுருக்கம் இங்கு அவசியமாகிறது.

இப்பொழுது சுல்தானாக உள்ள மஹ்மூதின் பாட்டனார் மாலிக்‌ஷாவுக்கு, காஸிம் அத்-தவ்லா அக் சுன்குர் என்றொரு பால்ய நண்பர் இருந்தார். அவரை அலெப்போவையும் அதன் சுற்று வட்டாரத்தையும் ஆளும் ஆளுநராக அனுப்பி வைத்தார் மாலிக்‌ஷா. சில காலத்திற்குப் பின் சுல்தான் மாலிக் ஷா மரணமடைந்ததும் உருவான வாரிசுப் போரில் காஸிம் அத்-தவ்லா கொல்லப்பட, அவருடைய மகன் இமாதுத்தீன் அனாதரவானார்.

காஸிம் அத்-தவ்லாவுக்கு மற்றொரு நண்பர் இருந்தார். சிலுவைப் படையினரை எதிர்த்துப் போரிட்ட, நமக்கு நன்கு அறிமுகமான கெர்போகா. அவர் காஸிம் அத்-தவ்லாவின் படை வீரர்களை அழைத்து, “இமாதுத்தீன் என் சகோதரனின் மகன். அவனை வளர்த்து ஆளாக்குவது என் பொறுப்பு” என்று அவரை உடனே அழைத்து வரும்படித் தகவல் அனுப்பினார். சிறுவர் இமாதுத்தீன் சிரியாவிலிருந்து இராக் வந்து சேர்ந்து கெர்போகாவின் அரவணைப்பில் வளர ஆரம்பித்தார். சேர்ந்தே வளர்ந்தன வீரமும் திறமையும்.

சுல்தான் மாலிக்‌ஷாவுக்குப் பின் நடைபெற்ற நீண்ட வாரிசுப் போர் முடிவுற்று ஒருவழியாக அவருடைய மகன் முஹம்மது இப்னு மாலிக்‌ஷா சுல்தானாகப் பட்டமேற்றார். பின்னர் அவர் மரணமுற்றதும் பட்டத்திற்கு வந்தார் முஹம்மதின் பதினான்கு வயதான மகன் மஹ்மூத். இது நிகழ்ந்த காலம் ஹி. 511 / கி.பி. 1117. மஹ்மூதுக்கு சகோதரர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் மசூத். தம் சகோதரன் மசூதுக்கு மோஸூலின் ஆட்சிப் பொறுப்பை அளித்து, அங்கு அனுப்பி வைத்தார் சுல்தான் மஹ்மூத். அவரும் தம் சகோதரனுக்குக் கட்டுப்பட்டு இருந்து வந்தார். ஆனால் அந்தக் கட்டுப்பாடு மூன்றாண்டிற்குள் தகர்ந்து விட்டது. காரணம்? வேறென்ன, மசூதுக்குத் தானும் சுல்தான் ஆக வேண்டும் என்று ஆசை. சகோதரர்கள் இருவருக்கும் இடையே போர் உருவானது.

இக்கலகத்தில் இமாதுத்தீன் ஸெங்கி, சுல்தான் மஹ்மூதின் கட்சி. மசூத், தம் சகோதரனாகிய சுல்தான் மஹ்மூதுக்குக் கட்டுப்படத்தான் வேண்டும்; இருவருக்கும் இடையில் போர் கூடாது என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் ஹி. 515 / கி.பி. 1121ஆம் ஆண்டில் போர் நடந்தது. மசூத் தோற்கடிக்கப்பட்டார். தம் சகோதரனிடம் அபயம் கோரினார் மசூத். “அளிக்கிறேன்” என்று கூறி, அதற்குக் கூலியாக அவர் வசமிருந்த மோஸூலைப் பிடுங்கி மற்றொருவரிடம் அளித்தார் சுல்தான் மஹ்மூத். அவர்தாம் சென்ற அத்தியாயத்தில் நாம் கண்ட ஆக் சன்கூர் அல் புர்ஸுகீ.

சுல்தான் மஹ்மூது, இமாதுத்தீன் ஸெங்கியின் மீது அபிமானம் கொண்டிருந்ததற்கு இதுமட்டும் காரணமன்று. முக்கியமான மற்றொன்றும் இருந்தது.

சுல்தான் மஹ்மூதின் தந்தை முஹம்மது இப்னு மாலிக்‌ஷா மரணம் அடைந்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டு (ஹி. 511 / கி.பி. 1118) அப்பாஸிய கலீஃபா அல்-முஸ்தஸிரும் மரணமடைந்துவிட்டார். அவரையடுத்து கலீஃபாவாகப் பொறுப்பேற்றவர் அவருடைய இருபத்தைந்து வயது மகன் அல்-முஸ்தர்ஷித் பில்லாஹ். இந்தப் புதிய கலீஃபா ஓர் இளைஞர்; துருதுருப்பானவர். அவருக்குக் குறுகுறுப்பு ஏற்பட்டது. நம் முன்னோர்களின் பெருமை என்ன, கீர்த்தி என்ன, ஆனால் இன்று நாம் பெயருக்குத்தான் கலீஃபாவாக இருக்கிறோமே தவிர இந்த ஸெல்ஜுக் சுல்தான்களை நம்பிக் கிடக்க வேண்டியிருக்கிறதே. இன்னார் சுல்தான் என்று வந்து நின்றால் ஆமாம் என்று அங்கீகரிக்கிறோம்; இன்னார் சுல்தான் இல்லை என்றால் அதையும் ஆமோதிக்கிறோம். இப்படியே பலவீனப்பட்டுக் கிடந்தால் எப்படி? நமது அப்பாஸிய கிலாஃபத் பாரம்பரியத்தை மீட்டெடுத்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்தார்.

சுல்தான் மஹ்மூதுக்கும் அவருடைய சகோதரருக்கும் இடையே வாரிசுப் போர் உருவானதல்லவா? அந்தப் பிளவைப் பயன்படுத்திக் கொண்டார் கலீஃபா அல்-முஸ்தர்ஷித். பக்தாதில் செல்ஜுக் சுல்தானுக்கு எதிராகக் கலவரம் மூண்டது. சுல்தான் மஹ்மூத் அனுபவமற்ற சிறுவர்; அவரை எப்படியாவது பாரசீகத்திற்கு அனுப்பி வைத்துவிட வேண்டும்; பக்தாதில் அப்பாஸிய கிலாஃபத்தின் மேலாண்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற மும்முரமாக இயங்கினார் கலீஃபா அல்-முஸ்தர்ஷித் பில்லாஹ்.

அச்சமயம் பஸ்ராவின் ஆளுநராக இருந்தார் இமாதுத்தீன் ஸெங்கி. அவரை உதவிக்கு அழைத்தார் சுல்தான் மஹ்மூத். விறுவிறுவென்று கிளம்பி வந்த ஸெங்கி, பக்தாதின் கலவரத்தை வெற்றிகரமாக முறியடித்து, தெளிவான வெற்றியை சுல்தானுக்குப் பெற்றுத் தந்துவிட்டார். இவ்விதம் தம் நன்மதிப்புக்கு உள்ளாகியிருந்த இமாதுத்தீன் ஸெங்கியை மோஸூலின் ஆளுநராக்கி, ‘இராக்கின் வடக்குப் பகுதியையும் சிரியாவையும் கவனித்துக்கொள்ளுங்கள். என் இரு மகன்களுக்கும் நீங்கள்தாம் அத்தாபேக்’ என்று பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்தி அனுப்பி வைத்தார் சுல்தான் மஹ்மூத்.

ஹி. 521 / கி.பி. 1127ஆம் ஆண்டு. மோஸூலுக்குள் அதன் ஆட்சியாளராக நுழைந்தார் அத்தாபெக் இமாதுத்தீன் ஸெங்கி. ஆர்வக் கோளாறில் யுத்தத்திற்காக அலையும் முரட்டு மன்னரோ, வெற்று சாகசத்தில் மோகம் கொண்டவரோ போலல்லாமல், தமக்குப் பின் நீடிக்கப்போகும் பாரம்பரியத்திற்கு, சிலுவை யுத்த வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றத்திற்கு முன்னுரை எழுதத் தொடங்கினார் அவர்.

oOo

வசீகரத் தோற்றம்; அழகான கண்கள்; கருத்த நிறம்; மிருதுவான தாடி; மூர்க்கமான குணம்; இதர துருக்கியர்களைவிட இவர் மிகவும் வித்தியாசமானவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் அவரை வர்ணித்து எழுதியுள்ளனர். முஸ்லிம் வரலாற்று ஆசிரியர் ஒருவரின் குறிப்பு, ‘அவர் குணத்தில் சிறுத்தையைப் போலவும் சினத்தில் சிங்கத்தைப் போலவும் விளங்கினார். எதிரிகளிடம் தயவு தாட்சணயம் காட்டாமல் தீவிரமாக இருந்தார். பகைவர்கள் அவரது திடீர்த் தாக்குதலுக்கும் அவரது மூர்க்கத்திற்கும் அஞ்சினர். அவரது தண்டனைகள் கொடூரமாக இருந்தன’ என்று விவரிக்கிறது.

தந்தையின் மரணத்திற்குப் பின் கெர்போகாவிடம் வளர்ந்த இமாதுத்தீன் ஸெங்கி ஏதோ ஒரு மலைவாசத்தலத்தில் சொகுசாகவும் விளையாட்டாகவும் அமைதியான பின்னணியிலுமா வளர்ந்தார்? ஒரு பக்கம் உள்நாட்டுப் போர்கள். மற்றொரு பக்கம் ஐரோப்பாவிலிருந்து வந்த பரங்கியர்களின் படையெடுப்பு; ஆக்கிரமிப்பு; அவர்களின் கொடூரங்கள். இத்தகுச் சூழலில் அவரது கண்ணும் செவியும் கண்டு பழகியவையெல்லாம் இடைவிடாத இரத்தம், யுத்தம், அதன் சப்தம் ஆகியனவே.

போர்ச் சூழலும் அவற்றுடன் கலந்திருந்த துரோகமும் கொலைகளும் அரசியலும் அவருக்கு தந்திரத்தையும் சமயோசித புத்தியையும் பரிசாக அளித்து விட்டன. விரோதிகளிடம் இரக்கமற்ற போக்கை ஏற்படுத்திவிட்டன. அதே நேரத்தில் அவர் தம்மளவிலும் தம் படையினரிடமும் நிலைநாட்டியது உயர் இராணுவ ஒழுங்கு. விளை நிலங்கள் படையணிகளின் கால் தடங்களால் சேதமாகிவிடக் கூடாது என்பதற்காக அத்தாபெக்கின் படை வீரர்கள் இரு கயிறுகளுக்கு இடையே பாதை அமைத்து அணிவகுத்தனர் என்று வரலாற்று ஆசிரியர் கமாலுத்தீன் தெரிவிக்கிறார்.

ஒழுங்கு மீறலுக்குக் கடுமையான தண்டனை என்பதால் அவருடைய அதிகாரிகள் அஞ்சி நடுங்கினர். ஸெங்கியின் அமீர் ஒருவருக்குச் சிறு நகரம் ஒன்று நிலமானியமாக வழங்கப்பட்டது. அவர் அந்நகரின் செல்வந்தரான யூத வர்த்தகரின் வீட்டைத் தமக்கென எடுத்துக்கொண்டார். அந்த யூதர் ஸெங்கியைச் சந்தித்து முறையிட, ஸெங்கி செய்ததெல்லாம் அந்த அமீரை நோக்கி ஒரு பார்வை. அவ்வளவே! உடனடியாக அவ்வீடு யூதர் வசம் திருப்பி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வை வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர் எழுதி வைத்துள்ளார். பெண்களின் பாதுகாப்பு. அவர்களின் மானம், மரியாதை, கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதிலும் ஸெங்கி தீவிரத்துடன் இருந்தார் என்பது அவர் குறிப்பிட்டுள்ள மற்றொரு முக்கியத் தகவல்.

இமாதுத்தீன் ஸெங்கி எந்தளவு தம் படையினரிடமும் அதிகாரிகளிடமும் ஒழுக்கத்தை வலியுறுத்தினாரோ அதைப் போல், அல்லது அதைவிட அதிகமாக, எவ்வித சமரசமும் இன்றி அதைத் தாமும் பின்பற்றினார். அவரது எளிய வாழ்க்கையும் சிலாகித்துக் குறிப்பிடத்தக்கதாகும். எந்நகருக்கு அவர் சென்றாலும் அவர் தங்குவதற்காக மாளிகைகள் பல இருந்த போதிலும் அவற்றையெல்லாம் அவர் வெறுத்து ஒதுக்கிவிட்டு, தங்கியது என்னவோ நகரின் சுவருக்கு வெளியே தம் கூடாரத்தில்தான். வெறுமே ஒரு கோரைப் பாய்தான் அவர் உறங்குவதற்கான படுக்கை.

பக்தாத், இஸ்ஃபாஹான், டமாஸ்கஸ், அந்தாக்கியா, ஜெருஸலம் நகரங்களில் தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தகவல் அறிய உளவுப்படை அவரால் ஏற்படுத்தப்பட்டு, அது வெகு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. துரோகமே இயல்பு, ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு காலை வாரிவிடுவதே வேலை என்றிருந்த ஏராளமான தன்னாட்சி அமீர்களால்தான், அதுநாள் வரை பரங்கியர்களை எதிர்த்துப் போரிட்ட மற்ற படைகள் கட்டமைக்கப்பட்டிருந்தன. அத்தகையோரை இமாதுத்தீன் ஸெங்கி தம்மை நெருங்கவிடவில்லை. தம் பரிவாரத்தில் முகஸ்துதியாளர்களுக்கும் இடம் அளிக்கவில்லை. மாறாக, அனுபவமிக்க அரசியல் ஆலோசகர்கள் அவையில் நிரம்பியிருந்தனர். நிரம்பியிருந்தது பெருமையில்லை; அவர்களை வெகு கவனமுடன் அவர் செவிமடுத்துத் தம் வியூகங்களையும் செயல்பாடுகளையும் அமைத்துக்கொண்டார் என்பதுதான் முக்கியம்.

மோஸூலில் இமாதுத்தீன் ஸெங்கியை அலெப்போவிலிருந்து வந்து சந்தித்தார் ஜாவ்லி. வேறு சில பகுதிகளைக் கவனிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்த ஸெங்கிக்கு அலெப்போ அடுத்த இலக்கானது. ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகியின் மரணத்திற்குப் பின் தலைமை சரியாக அமையாமல் இருந்த அலெப்போவைக் கைப்பற்ற சிலுவைப் படை துடித்துக்கொண்டிருக்க, நகருக்குள்ளோ நான்கு அமீர்களுக்குள் குத்துச் சண்டைபோல் போட்டி ஏற்பட்டு, குத்லுக் என்பவர் ஆளுநராக அமர்ந்து கொண்டார். குத்லுக் அதிகாரத்திற்குத்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றாரே தவிர, ஆட்சி நிர்வாகமோ பெரும் சீர்குலைவைத்தான் சந்தித்தது. கிளர்ந்தெழுந்தார்கள் மக்கள். போராட்டக் குழுவினர் குத்லுக்கை அவரது கோட்டையிலேயே சிறை வைத்தனர்.

ஹி. 522 / கி.பி. 1128. மக்களின் வரவேற்புடன் அலெப்போவினுள் நுழைந்தார் இமாதுத்தீன் ஸெங்கி. அவரிடம் குத்லுக்கைக் கொண்டுவந்து ஒப்படைத்தனர். தண்டனைகளில் ஸெங்கி மூர்க்கமானவர் என்று பார்த்தோமல்லவா? குத்லுக்கின் கண்கள் பறிக்கப்பட்டன.

அல்லாஹ் அலெப்போவின் ஆளுநராக இமாதுத்தீன் ஸெங்கியை ஆக்கி முஸ்லிம்களுக்கு அருள் புரியாமல் இருந்திருந்தால், பரங்கியர்கள் சிரியா முழுவதையும் கபளீகரம் செய்திருப்பார்கள் என்று எழுதியுள்ளார் வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர். அப்பொழுது அலெப்போ இருந்த நிலைமையையும் அடுத்து இமாதுத்தீன் ஸெங்கி சாதித்ததையும் கவனித்தால் அக்கூற்று வெறுமே உணர்ச்சிப் பெருக்கில் எழுதப்பட்டதன்று என்பது புரியும். பார்க்கத்தானே போகிறோம்.

அடுத்தப் பதினெட்டு ஆண்டுகள். ஈராக்கில் ஒரு காலும் சிரியாவில் மறு காலுமாக, சளைக்காத போர் வீரராய் அவர் சுற்றிச் சுற்றிச் சுழன்றது வீர பவனி. அவரது நடவடிக்கைகள் சிலுவைப் படையினரிடம் எக்கச்சக்க பாதிப்பை ஏற்படுத்தின. அவரது வீரமும் புகழும் முஸ்லிம்களின் எல்லை தாண்டிப் பரவின. அதுவும் எந்த அளவு? ஜெருசலத்தின் ராஜாவாக ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தாரே இரண்டாம் பால்ட்வின், அவருடைய மகள் அலிக்ஸ் (Alix) தம் தந்தைக்கு எதிராக, ‘உதவுங்கள் ஐயா! கூட்டணி அமைப்போம்’ என்று இமாதுத்தீன் ஸெங்கிக்குத் தூது அனுப்பினார். அந்த விசித்திரத்தையும் ஸெங்கியின் வீர பவனியையும் தொடர்வோம்.

oOo

வருவார் இன்ஷா அல்லாஹ் …


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.