வீடு, நிலம், மனை வாங்கப் போகிறீர்களா? முக்கியமான 10 செக்கிங் பாயின்ட்ஸ்!

Share this:

ரியல் எஸ்டேட்டில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், அப்படி முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன..?

நம்மவர்களுக்கு எப்போதும் ரியல் எஸ்டேட் மீது இனம்புரியாத ஒரு கவர்ச்சி இருக்கிறது. குடியிருக்க வசதியாக ஒரு வீடு இருந்தாலும் இரண்டாவது வீடு, மூன்றாவது என அடுத்தடுத்து வீடு வாங்குபவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அதே போல், பிற்காலத்துக்கு உதவும் என்கிற எதிர்பார்ப்பில், புறநகர்களிலும் சொந்த ஊரிலும் வீட்டுமனைகள், நிலங்களை அடுத்தடுத்து வாங்கிப்போட்டு வருபவர்களும் ஏராளம்.

ரியல் எஸ்டேட்டில் இப்படி ஒரேயடியாக அடுத்தடுத்து முதலீடு செய்வது சிலருக்கு சாதக மான விளைவுகளைத் தந்தாலும், பலருக்கு அது பாதகமான விளைவுகளைத் தருவதாக இருக்கிறது. அந்த வகையில், ரியல் எஸ்டேட்டில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், அப்படி முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை எல்லோரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் முதலீட்டை மேற்கொள் பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான 10 செக்கிங் பாயின்டுகள் பற்றி சற்று விளக்க மாகப் பார்ப்போம்.

1. வாங்கப்போகும் சொத்து அமைந்துள்ள இடம் குறித்த ஆராய்ச்சி…

முதலீட்டு நோக்கில் அல்லது குடியிருக்க வீடு வாங்குவதாக இருந்தால், முதலில் எந்த இடத்தில் வீடு அல்லது மனை வாங்க வேண்டும் என்பதைத் தெளிவாக முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, அந்தப் பகுதியில் நிலவும் சந்தை நிலவரத்தை அலசி ஆராய வேண்டும்.

புரோக்கருடன் சென்று மனை அல்லது வீட்டைப் பார்த்தவுடன், அதை வாங்கும் முடிவை உடனடியாக எடுக்கக் கூடாது. அந்த வீடு அல்லது மனை வாங்குவதால் உள்ள ப்ளஸ் மற்றும் மைனஸ் விஷயங்களைப் பட்டியலிட்டு, ப்ளஸ் அதிகமாக இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும்.

மேலும், வீட்டைப் பார்த்துவிட்டு வந்தவுடன், உடனே முன்பணம் எதுவும் தந்து விடக் கூடாது. வீடோ, மனையோ புரோக்கர் இல்லாமல் தனியாக ஒரு முறை சென்று பார்க்க வேண்டியது அவசியம். அப்போதுதான், அதில் உள்ள மைனஸ் சமாசாரங்களை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.

வீடு வாங்க விரும்பும் பகுதியில் பொது வாகனங்களான பஸ், ரயில் மூலமோ, ஷேர் ஆட்டோ மூலமோ அந்த இடத்துக்குச் செல்ல எவ்வளவு நேரம் மற்றும் பணம் செலவாகிறது என்பதை சரியாகக் கணக்கிட வேண்டும். அருகில் உள்ள மருத்துவமனை, மருந்துக் கடை, பள்ளிக்கூடம், மளிகைக் கடை போன்ற வசதிகள் எப்படி இருக்கின்றன என்பதையும் கவனியுங்கள். கூடிய வரையில் நீங்கள் மட்டும் போகாமல் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் பல விஷயங்களைக் கவனித்துச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. கணவன், மனைவியாகச் சென்று, இருவருக்கும் பிடித் திருந்தால் மட்டுமே அந்த வீட்டை, மனையை வாங்குவது நல்லது.

2. சந்தை விலையை சரியாகக் கணிப்பது…

ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை, விலை என்பது வெளிப்படையானதல்ல. பல நேரங்களில் பலர் உண்மை யான சந்தை விலையைவிட அதிக விலை கொடுத்து சொத்தை வாங்கிவிடுகிறார்கள். என் நண்பர் ஒருவர் 2000-ம் ஆண்டில் தாம்பரம் அருகே ஒரு சென்ட் ரூ.23,000 விலையில் வீட்டுமனையை வாங்கினார். அந்த சமயத்தில், அவரின் நண்பர் ஒருவர் அந்த இடத்துக்கு அருகிலேயே ஒரு சென்ட் ரூ.15,000 என்கிற விலை யில் வாங்கியிருக்கிறார். இது வெகு காலத்துக்குப் பிறகுதான் என் நண்பருக்குத் தெரிய வந்திருக்கிறது. எனவே, புரோக்கர், வீட்டின் உரிமையாளர் சொல்லும் விலையை முழுமையாக நம்ப வேண்டாம்.

நீங்கள் வீடு வாங்க நினைக்கும் பகுதியில் உங்கள் நண்பர்கள், உறவினர் யாராவது இருந்தால், நேரில் சந்தித்து அல்லது அவர் களிடம் தொலைபேசி மூலமாவது பேசி, விலை நிலவரத்தை விசாரியுங்கள். அவர்களுக்குத் தெரியவில்லை எனில், அவர் களுக்குத் தெரிந்த நம்பகமானவர் களிடம் விசாரித்து சொல்லும்படி கேளுங்கள்.

சரியான விலை நிலவரத்தைக் கண்டறிய நீங்கள் இப்படிகூட செய்யலாம். வீடு வாங்கும் பகுதி யில் நீங்கள் ஒரு நிலம் வைத்திருப் பதாகவும், அதை விற்க விரும்பு வதாகவும், அதற்கு என்ன விலை கிடைக்கும் என்று கேட்டால், விலையைச் சொல்வார்கள். அந்த விலையானது வாங்கும் விலையைவிட மிகவும் குறைவாக இருந்தால், அந்த விலையிலேயே நீங்கள் வாங்கப்போகும் சொத்துக் குக் கேளுங்கள்.

தவிர, அரசு வழிகாட்டி மதிப்பு எவ்வளவு இருக்கிறது என்கிற அடிப்படையிலும் நியாயமான விலையைக் கணக்கிட்டு அந்த விலைக்குக் கேட்கலாம்.

3. வாடகை வருமானம், சொத்தின் மதிப்பு அதிகரிக்கும் விதம்…

நகரின் ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கும் வாடகை வெவ்வேறாக இருக்கும். ஒரே அளவுள்ள வீட்டுக்கு சென்னை அண்ணா நகரில் கிடைக்கும் வாடகை வருமானம் திருவொற்றியூரில் கிடைக்காது. வீட்டை விற்பவர் மற்றும் தரகர் சொல்லும் வாடகை வருமானத்தை ஒருபோதும் முழுமையாக நம்பாதீர்கள்.

அக்கம்பக்கத்தில் அந்தப் பகுதி யில் இருப்பவர்களிடம் உறுதிப் படுத்திக்கொள்வது நல்லது. புரோக்கர் ரூ.25,000 வாடகை கிடைக்கும் என்று சொல்லி இருப்பார். ஆனால், ரூ.15,000-க்கு வாடகைக்கு வருவதே அரிதாக இருக்கும். அந்த வகையில், லட்சக் கணக்கில் பணத்தைப் போட்டு அல்லது வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கிவிட்டு, குறைவான வாடகை வருமானம் பெறுவது பெரும் இழப்பாக இருக்கும். பெரும்பாலா னோர் செய்யும் தவறாக இது இருக்கிறது.

அதே நேரத்தில், சொத்தின் மதிப்பில் ஆண்டுக்கு 5% அளவுக்கு வாடகை வருமானம் வரும் வகையில் இருந்தால், வீடு வாங்க லாம். வாடகை வருமானம் ஆண்டுக்கு 5%, வீட்டின் மதிப்பு ஆண்டுக்கு சுமார் 2% – 3% அதிகரித் தால், அது நல்ல ரியல் எஸ்டேட் முதலீடாக இருக்கும். அது பழைய வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தால்கூட சரியானதே.

4. ‘லே அவுட்’ போதாது; நேரில் போவது அவசியம்…

வெளியூர்களில் போடப்படும் லே அவுட்டுகளில் நண்பர்கள், உறவினர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் வாங்குகிறார்கள் என இடத்தை நேரில் பார்க்காமல், வெறும் லே அவுட் பார்த்து இடத்தை வாங்குவது மகா தவறு.

இதில் பலர் பத்திரப் பதிவின் போதுகூட நேரில் சென்று மனையைப் பார்ப்பதில்லை. எல்லாம் முடிந்த பிறகு மனையைச் சென்று பார்க்கும்போது, ‘அய்யோ, தவறு செய்துவிட்டோமே’ என்று வருத்தப்படுகிறார்கள். இவர்கள் பிற்காலத்தில் மனையை விற்கும்போது, போதிய வசதிகள் இல்லாததால், விற்க முடியாமல் தவிக்கிறார்கள். எனவே, எக்காரணத்தைக் கொண்டும் மனையை நேரில் சென்று பார்க்காமல் வாங்கவே கூடாது.

5. நிதிநிலை கணக்கீடு முக்கியம்…

வீட்டுமனை, மனையுடன்கூடிய வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும்போது மொத்தம் எவ்வளவு தொகை செலவாகும் எனக் கணக்கிடாமல் பலரும் களமிறங்கிவிடுகிறார்கள். பின்னர், தங்க நகைகளை அடமானம் வைத்து, அதிக வட்டியிலான கடனை வாங்கி, பத்திரப் பதிவு செய்கிறார்கள்; கடனில் வாங்கிய சொந்த வீட்டில் சோகமாகக் குடியிருக்க ஆரம்பிக்கிறார்கள்.

இதைத் தவிர்க்க ரியல் எஸ்டேட் சொத்தை வாங்கும் போது என்னென்ன செலவுகள் இருக்கின்றன என்கிற விவரத்தை முதலில், நன்கு விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்துகொள்வது அவசியமாகும். தேவைப்பட்டால் நிதி ஆலோசகர், ஆடிட்டர், வழக்கறிஞர் ஆகியோரின் உதவியை நாடலாம். அல்லது ஏற்கெனவே அண்மையில் வீட்டுமனை அல்லது வீடு வாங்கிய உறவினர்களிடம் விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

பொதுவாக, ரியல் எஸ்டேட் சொத்து வாங்கும்போது, தரகர் கமிஷன் (சொத்தின் மதிப்பில் 1 சதவிகிதமாக இருந்தது, இப்போது 2 சதவிகிதமாக உயர்த்திவிட்டார்கள்), சட்டக் கருத்து வழங்கும் வழக்கறிஞர் கட்டணம், மதிப்பீட்டு அறிக்கை வழங்கும் பொறியாளர் கட்டணம், பத்திரப்பதிவு செலவு (சொத்து மதிப்பில் 11%), கட்டட அனுமதி கட்டணம், மின் இணைப்புக் கட்டணம் எனப் பல செலவுகள் இருக் கின்றன. இவற்றை எல்லாம் முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கேற்றவாறு வீட்டை வாங்குவது நல்லது.

பலர், அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும்போது சதுர அடி விலையை மட்டும் கணக்கிடுகிறார்கள். அதற்கேற்ப இவ்வளவுதான் செலவாகும் என தாங்களே முடிவு செய்து களமிறங்குகிறார்கள். பின்னர், ஜி.எஸ்.டி சில லட்சங்கள், கார் பார்க்கிங் சில லட்சங்கள் என பல லட்சங்கள் கூடுதல் செலவுகளாக இருக்கும்.

கட்டணங்கள் வகையில் சொத்தின் மதிப்பில் சுமார் 25% – 30% தொகை கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும். இந்தச் செலவுகளைச் சமாளிக்க நகையை அடமானம் வைக்கிறார்கள்; தனிநபர் கடன் வாங்குகிறார்கள். இவற்றுக்கு கட்டும் வட்டியே பெரிய தொகையாக இருக்கும்.

இந்த நிலையில், வீட்டை வாடகைக்கு விட்டு வருமானம் பார்ப்பதென்பது அத்தனை லாபகரமாக இருக்காது. இதர கட்டணங்கள், செலவுகள் எல்லாம் சேர்ந்து வீட்டின் விலை கணிசமாக அதிகரித்துவிடுகிறது. இந்த வீட்டை பிற்பாடு விற்க நினைக்கும்போது லாபகரமாக இருப்பதில்லை. சரியான நிதிக் கணக்கீடு என்பது நீங்கள் வாங்கும் சொத்தின் லாபத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான விஷயம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

6. கட்டுமான ஒப்பந்தத்தை சரியாகப் படித்து அறிவது அவசியம்…

வீடு வாங்குபவர் பில்டருடன் போடும் ஒப்பந்தத்தை முழுமை யாகப் படித்து, அதன்பின் கையெழுத்து போடுவது அவசியம். சில ஆண்டுகளுக்கு முன், முன்னணி கட்டுமான நிறுவனம் ஒன்று சென்னையின் பிரதான சாலையை ஒட்டி, அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டம் ஒன்றை விளம்பரம் செய் திருந்தது. அந்த விளம்பரத்தில் 15 மாதங்களில் வீடு ஒப்படைக்கப் படும் என்று சொல்லியிருந்தது.

இந்த நிலையில், என் உறவினர் ஒருவர் அதில் வீடு புக் செய்தார். ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, வீட்டுக் கடன் வாங்கி, பில்டருக்குப் பணமும் தந்துவிட்டார். ஆனால், 20 மாதங் களாகியும் பில்டர் வீட்டை ஒப்படைக்கவில்லை. அவர் மீது ரெரா (Real Estate Regulatory Authority – RERA) அமைப்பிடம் புகார் செய்யப்போகும் நேரத்தில் தான், வீடு 30 மாதங்களில் ஒப் படைக்கப்படும் என ஒப்பந்தத்தில் இருந்ததை சரியாகக் கவனிக்காமல் உறவினர் கையெழுத்துப் போட்டு இருப்பதை உணர்ந்திருக்கிறார். இதனால் அவர் வீட்டுக் கடன் தவணை ஒரு பக்கம், வீட்டு வாடகை இன்னொரு பக்கம் என அவதிப்பட்டு வந்த அந்த அனுபவம், எல்லோரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய பாடம்.

புதிய வீட்டின் மூலம் வாடகை வரும், அதைக் கொண்டு கடனின் ஒரு பகுதியை வேகமாக அடைத்து விடலாம் எனத் திட்டமிட்ட அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான். எனவே, எப்போதும் ஒப்பந்தத்தைத் தெளிவாகப் படித்து கையெழுத்துப் போடுவது அவசியமாகும்.

7. புரொமோட்டர், பில்டர் நம்பகத் தன்மையை சரிபார்ப்பது முக்கியம்…

ரியல் எஸ்டேட் சொத்து வாங்குபவர்கள் பலரும் செய்யும் முக்கியமான தவறு, தவறான லே அவுட் புரொ மோட்டர் மற்றும் பில்டரிடம் வாங்குவதாகும். இது போன்ற வர்கள் அரசு விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாதவர் களாக இருப்பார்கள். பத்திரப் பதிவின்போது அதிக பணம் கேட்பவர்களாக இருப் பார்கள். தரம் இல்லாத வீடு களைக் கட்டி விற்பவர்களாக இருப்பார்கள். இந்த விஷயத் தில் வீடு வாங்குபவர்கள்தான் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

பில்டர்கள் குறித்து அவர் களிடம் ஏற்கெனவே வீடு வாங்கியவர்கள், பில்டர் களுக்கான சங்கங்கள் ஆகியவற்றில் விசாரிப்பது நல்லது. ஆன்லைனில் அந்த பில்டரின் நிறுவனம் பற்றி வெளியாகி இருக்கும் விமர்சனங்களையும் பார்த்து தெளிவான முடிவுக்கு வருவது நல்லது. மேலும், நீங்கள் வாங்கப் போகும் மனை மற்றும் வீடு ரெரா அமைப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. சி.எம்.டி.ஏ (Chennai Metropolitan Development Authority – CMDA) அல்லது டி.டி.சி.பி ((The Directorate of Town & Country Planning – DTCP) அமைப்பிடம் பெற்றிருக்கும் அனுமதியையும் உறுதிசெய்வது அவசியமாகும்.

8. கட்டடத்தின் தரத்தைப் பரிசோதிப்பது அவசியம்…

சிலர், விலை மலிவாக இருக்கிறது என்பதற்காக எந்த ஒரு விசாரணை மற்றும் ஆராய்ச்சி இல்லாமல் வீட்டை விரைவாக வாங்கிவிடுகிறார்கள். கட்டிய வீட்டை வாங்கும்போது அதன் கட்டுமானத் தரத்தை நல்ல பொறியாளர் ஒருவரின் உதவியுடன் பரிசோதிப்பது கட்டாயம் ஆகும். கூடவே கதவு, ஜன்னல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் மரத்தின் தரத்தையும் பரிசோதிப்பது அவசியமாகும். கட்டிக்கொண்டிருக்கும் வீடு எனில், அவ்வப்போது போய் பார்ப்பது அவசியமாகும்.

மோசமான கட்டுமானப் பொருள்களைக் கொண்டு கட்டிய வீடு, கட்டிய புதிதில் பார்க்க நன்றாகத்தான் தெரியும். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு, அது மழை, வெயிலால் பாதிக்கப்படும்போது தான் உண்மையான தரம் வெளிச்சத்துக்கு வரும். அப்போது வருத்தப் பட்டு பிரயோசன மில்லை. எனவே, வாங்கும்போதே தரத் தைப் பரிசோதிப்பது அவசியம்.

9. உணர்ச்சிவசப்பட்டு சொத்து வாங்கக் கூடாது…

சிலர் நண்பர்கள், உற வினர்கள் ஓர் இடத்தில் வீடு வாங்குகிறார்கள் என்பதற்காக, உணர்ச்சி வசப்பட்டு வாங்கிவிடு கிறார்கள். இப்படிதான் ஒருவர் சென்னையில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் வீடு ஒன்றை வாங்கிவிட் டார். இப்போது அந்த வீட்டை வாடகைக்கு விட முடியாமலும் நல்ல விலைக்கு விற்க முடியாமலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒருவர் தனக்குத் தேவையான மற்றும் பொருத்தமான மனை மற்றும் வீட்டை வாங்குவது மட்டுமே எப்போதும் நல்லது; மற்றவர் களுக்காக எப்போதும் எதையும் வாங்கக் கூடாது.

10. உங்கள் தேவை, விருப்பத்துக்குப் பொருத்தமாக இருப்பது முக்கியம்…

ரியல் எஸ்டேட் சொத்தைப் பொறுத்தவரை, மனை, தனி வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு, வர்த்தகக் கட்டடங்கள் எனப் பல வகைகள் இருக் கின்றன. அதே போல, ஒவ்வொருவரின் தேவையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒருவருக்கு வீட்டை சுற்றி மரங்கள் குளிர்ச்சியாக இருந்தால் நன்றாக இருக்கும் என இருக்கும். சிலர் நீச்சல் குளம், உள்விளையாட்டு அரங்கங்கள் ஆகிய வசதிகள் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். சிலர் இப்போதைக்குக் குடிபோக வேண்டாம்; வாடகைக்கு விட்டு விடலாம்; வயதான காலத்தில் பயன்படுத்தலாம் என்கிற நோக்கம் இருக்கும். சிலருக்கு நல்ல வாடகை வந்தால் போதும் என்கிற திட்டம் இருக்கும். எனவே, ஒருவருக்கு என்ன தேவை என் பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அந்தத் தேவையை நிறைவேற்றும் படியான வீடு அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்பை வாங்குவது நல்லது. அதிக வாடகை வருமானம் மட்டுமே நோக்கம் எனில், வர்த்தகக் கட்டடங்களை வாங்கி வாடகைக்கு விடுவது மற்றும் பிரதான சாலையை ஒட்டி மனை வாங்குவது லாபகரமாக இருக்கும்.

கவனிக்க வேண்டிய மற்ற விஷயங்கள்…

மற்றவர்கள் 2 அல்லது 3 வீடு வாங்கியிருக்கிறார்கள் என்பதற் காக, நாமும் அடுத்தடுத்து வீடு வாங்குவது சரியான முடிவாக இருக்காது. அவர்கள் நோக்கம் வேறு மாதிரியாகவும், நம்முடைய நோக்கம் வேறு மாதிரியாகவும் இருக்கலாம். இன்னும் சிலர், இப்போது சிறுவர்களாக இருக்கும் பிள்ளைகளின் எதிர் காலத்துக்கு என வீடு வாங்கு கிறார்கள். ஆனால், பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாக ஆனபின்பு, அவர்களுக்காக வாங்கிய வீட்டை விரும்புவார் களா என்பது நமக்குத் தெரியாது. அவர்கள் வேலை நிமித்தமாக, வெளி மாநிலம், வெளிநாடு என்று செல்லக்கூடும். எனவே, அவர்களுக்கு ரியல் எஸ்டேட் சொத்தாகத் தருவதைவிட, பணமாகத் தருவது நல்லது. மேலும், வீட்டு வாடகையானது தடைபடாமல் இருக்கும்படி பார்க்க வேண்டியது அவசியம். வாடகைக்கு ஆள் மாறும்போது வீட்டுக்கு வர்ணம் தீட்டும் செலவு, பராமரிப்புச் செலவு ஆகியவற்றையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

மேற்கண்ட விஷயங்களை எல்லாம் கவனித்து செய்தாலே போதும், ரியல் எஸ்டேட்டில் போடும் பணம் நிச்சயம் லாபகரமாக இருக்கும்!

நிலத்தடி நீர், காற்றுமாசு விஷயங்களையும் கவனிக்கத் தவறக் கூடாது..!

ஒரு குடியிருப்புக்கு நிலத்தடி நீர் மிக முக்கியம். அது போதிய அளவுக்கு இல்லை அல்லது 600 அடிக்குமேல் ஆழ்துளைக்கிணறு போட்டால்தான் தண்ணீர் வரும் எனில், அந்த மனை எதிர்காலத்தில் நல்ல விலைக்குப் போகாது. மேலும், தண்ணீர் பிரச்னை இருக்கும்போது வீட்டை வாடகைக்கு விடுவதும் கஷ்டம்; வாடகை வருமானமும் பெரிதாக வராது. மனை அல்லது வீடு நல்ல விலைக்குப் போகாது. இதே போல், காற்று மாசையும் கவனிக்க வேண்டும். அருகில் கருங்கல் குவாரி இருந்தால், சிமென்ட் தொழிற்சாலைகள் இருந்தால், காற்றில் தூசி மிகவும் அதிகமாக கலந்திருக்கும். இது போன்ற இடங்களில் இருக்கும் வீடுகளுக்கு அதிக வாடகை கிடைக்காது.

நிபுணரின் ஆலோசனை பெறாதது..!

நம்மவர்கள் தங்களை எப்போதும் நிபுணர்களாக நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். அது ரியல் எஸ்டேட் முதலீட்டிலும் எதிரொலிக்கிறது. விலை மலிவாக எங்கேயாவது மனை அல்லது வீடு கிடைக்கிறது எனில், கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடுகிறார்கள். இதனால், பின்னர் பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். பலருக்கு உரிமை உள்ள சொத்தைக் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மட்டும் விற்பனை செய்திருப்பது, அடமானத்தில் இருக்கும் சொத்தை விற்றிருப்பது எனப் பல பிரச்னைகள் பிற்காலத்தில் வரக்கூடும். எனவே, ஒரு நல்ல ரியல் எஸ்டேட் நிபுணர் அல்லது வழக் கறிஞரை கலந்து ஆலோசித்து இறுதி முடிவை எடுப்பது நல்லதாகும்.

போலி ஆவணங்களைக் கொண்டு சொத்தை கைமாற்றிவிடும் நபர்களிடம் சிக்கிக்கொண்டால் அதோ கதிதான். நிபுணரின் ஆலோசனை இல்லாமல் சொத்தை வாங்குவது பெரும் தவறாகும்!

வித்தியாசமான ரியஸ் எஸ்டேட் முதலீடு..!

ரியல் எஸ்டேட் முதலீடு என்கிறபோது மனை, வீடு, வர்த்தகக் கட்டடங்கள் வாங்க பெரிய தொகை தேவைப்படும். ஆனால், குறைவான பணத்தில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யக்கூடிய திட்டம்தான், ரெய்ட் (Real Estate Investment Trust -REIT) என்பதாகும்.

ரெய்ட் என்பது வர்த்தக நோக்கில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாகும். இதில் குறைந்த பட்சம் ரூ.10,000கூட முதலீடு செய்ய முடியும். தற்போதைய நிலையில், டிவிடென்டாக மட்டும் ஆண்டுக்கு சுமார் 8% வருமானம் கிடைக்கிறது! (- என்.விஜயகுமார்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.