ரமளான் நோன்புக்கஞ்சி செய்வது எப்படி?

Share this:

ரமளானின் மாதத்தில் நோன்பு துறக்கும் சமயத்தில் ஒரு முக்கிய உணவாக உட்கொள்ளப்படும் நோன்புக்கஞ்சி, நாள் முழுவதும் உண்ணாமல் பருகாமல் இருக்கும் போது ஏற்படும் சோர்வை நீக்கிப் புத்துணர்வு பெற உதவும் ஓர் அற்புத உணவாகும்.


தேவையான பொருள்கள்
  • பச்சரிசி = 400-500 கிராம்
  • கடலைப்பருப்பு = 50 கிராம்
  • வெந்தயம் = 50 கிராம்
  • பூண்டு = 6-7 பற்கள்
  • இஞ்சி-பூண்டு பேஸ்ட் = 2 தேக்கரண்டி
  • ஜீரகத்தூள் = 2-4 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் = சிறிதளவு
  • மிளகாய்த்தூள் = சிறிதளவு
  • உப்பு = தேவையான அளவு
  • கறி மசாலா = 1 தேக்கரண்டி
  • சமையல் எண்ணை = தேவையான அளவு
  • தக்காளி = 2-3 பழங்கள்.
  • வெங்காயம் = 2-3 அல்லது தேவைக்கேற்ப
  • பச்சை மிளகாய் = தேவைக்கேற்ப
  • புதினா-மல்லி = தேவையான அளவு
  • எலுமிச்சை = 1 பழம்
  • தேங்காய்ப் பால் = 300 மில்லி
  • ஆட்டிறைச்சி/நெஞ்செலும்பு = 100-200 கிராம்
சமையல் குறிப்பு விபரம்

செய்வது: எளிது
நபர்கள்: 4-6

தயாராகும் நேரம்: 20 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 90 (நிமிடம்)

முன்னேற்பாடுகள்:

1. அரிசியுடன் கடலைப் பருப்பையும், வெந்தயத்தையும் கலந்து நன்கு கழுவியபின் தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2. ஆட்டிறைச்சி/நெஞ்செலும்பை தண்ணீரில் கழுவி மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு சிறிதளவு கலந்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

3. தக்காளி, வெங்காயத்தை ஸ்லைசாக நறுக்கிக் கொள்ளவும்.

4. புதினா, மல்லி, மிளகாய் ஆகியவற்றையும் நறுக்கிக் கொள்ளவும்.

 

செய்முறை:

5. சட்டியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சமையல் எண்ணையை தேவையான அளவுக்கு விட்டு சற்று சூடான பிறகு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.

6. வதக்கிய வெங்காயத்துடன் தக்காளியையும் சேர்த்து மீண்டும் வதக்கி சுத்தம் செய்து தயாராக இருக்கும் ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்யையும் சேர்த்து தேவையான அளவு ஜீரகம், மசாலாத்தூள் கலந்து கிளறி தொடர்ந்து வதக்கவும். தேவைக்கேற்ப பச்சைப்பட்டாணி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றையும் வதக்கும் போது சேர்த்துக் கொள்ளவும்.

7. தேவைப்பட்டால் சிறிதளவு தயிர் கலந்து வதக்கவும்.

8. புதினா-மல்லி, மிளகாய் ஆகியவற்றைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடவும்.

9. சட்டியின் அடி பிடிக்காதவாறு தீயை தேவையான அளவு வைத்துக் கொண்டு 1:3 விகிதத்தில் தண்ணீரைக் கலந்து கொதிக்க விடவும்.

10. கொதித்துக் கொண்டிருக்கும்போதே வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

11. அடுப்பின் தீயை சற்று ஏற்றி மசாலா கலவையுடன் தண்ணீரை நன்கு கொதிக்க விடவும்.

12. கொதிக்கும் கலவையில் வெந்தயம், கடலைப் பருப்பு கலந்து ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

13. கொதித்துக் கொண்டிருக்கும்போதே பாதியளவு எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து சட்டியில் இடவும்.

14. அரிசி வெந்ததும், தேங்காய்ப்பாலை தேவையான அளவு சேர்த்து மேலும் கொதிக்க விடவும்.

15. தேவையான அளவு உப்பிட்டு கரண்டியால் சட்டியின் அடிப்பாகம் பிடித்திருந்தால் நன்கு கிளறவும். பிறகு, மேலும் சிறிது தண்ணீர் கலந்த தேங்காய்ப்பாலை இட்டு கிளறவும்.

16. புதினா இலைகளை மட்டும் தனியாக வெட்டியெடுத்து கஞ்சியில் தூவி, தீயின் அளவை வெகுவாக குறைத்து சட்டியை நன்கு மூடிவைக்கவும்.

17. பரிமாறும் முன் அடுப்பை அணைத்துவிட்டு சட்டியைத் திறந்தால் கமகம மூலிகைக் கஞ்சி தயாராக இருக்கும்.

 

பின்குறிப்பு: கஞ்சியுடன் பேரிச்சம்பழத்தைக் கடித்துக் கொண்டே குடித்தால் இனிப்பும் காரமும் கலந்து வித்தியாசமான சுவையை அனுபவிக்கலாம்.

 

தொகுப்பு:  N. ஜமாலுத்தீன்

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.