மனித இனத்தை முடமாக்கும் அழிவு ஆயுதங்கள்

Share this:

{mosimage}வடகொரியா அணு ஆயுதச் சோதனை செய்யக்கூடாது என்று குரல் கொடுத்த நாடுகள், இப்போது ஈரானின் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கின்றன. அணுகுண்டு தயாரிப்பிற்கான யுரேனியத்தை, அந்த நாடு செறிவூட்டக் கூடாது என்று குரல் எழுப்புகின்றன. நியாயம்தான்.

எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்தால், உலகம் பதற்ற நிலையில் பரிதவிக்கும். அதே சமயத்தில், வடகொரியாவும் ஈரானும் ஏன் அணுகுண்டுகளைச் செய்ய முனைகின்றன? வடகொரியாவிற்குத் தொடர்ந்து அமெரிக்காவின் அச்சுறுத்தல் இருக்கிறது. இதனை உலகம் ஏற்றுக்கொள்கிறது.

அதேபோல், ஈரான் நாட்டிற்கு மட்டுமல்ல; எல்லா அரபு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இஸ்ரேல் இருக்கிறது. எகிப்தின் ஒரு பகுதியையும், லெபனானின் ஒரு பகுதியையும், சிரியாவின் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது.(இந்தத் தகவலின் நம்பகத்தன்மையில் சத்தியமார்க்கம்.காம் தளத்திற்கு உடன்பாடு இல்லை. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பற்றிய முழுமையான தகவல்கள் விரைவில் தளத்தில் வெளியிடப்படும் – நிர்வாகி) அதுதான் வேதகாலம் சொல்லும் தங்கள் புனித பூமி என்று இஸ்ரேல் பஞ்சாங்கங்களைப் புரட்டுகிறது. இன்றைக்கு அந்த நாடு அமெரிக்காவின் நிழலில் இருக்கிறது. உலகம் அந்த நாட்டை அங்கீகரித்து விட்டது. ஆனால், தங்கள் கண்முன்னே பறிபோன தங்கள் தாய்பூமியை மீட்பதில், இஸ்ரேலைச் சுற்றியுள்ள இஸ்லாமிய நாட்டு இளைஞர்கள் துடிப்பாய் இருக்கிறார்கள்.

இஸ்ரேலிடம் 54 அணுகுண்டுகள் இருக்கின்றன. அவைகளை அந்த நாடே உற்பத்தி செய்ததா? அமெரிக்கா கொடுத்து உதவியதா? இதுவரை ஆயிரத்து முப்பத்துநான்கு முறை அமெரிக்கா அணுகுண்டுச் சோதனை செய்திருக்கிறது. அதில் இஸ்ரேலுக்காகவும் சோதனை செய்திருக்கிறதா? இப்படி வாதங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இஸ்ரேலிடம் அணுகுண்டுகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. உறுதியாக, அந்தக் குண்டுகள் அரபு நாடுகளுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்படும். இந்த நிலையில், ‘அணுகுண்டு ஆபத்து, அதனைச் செய்யாதே ராசா’ என்று ஈரானுக்கு மட்டும் புத்திமதி சொல்வது என்ன நியாயம்?

ஈரான், அணு ஆயுத வல்லரசாக உருவாவதை நாம் ஆதரிக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில், இஸ்ரேல் அணு ஆயுத வல்லரசாக இருக்கிறதே?

எவ்வளவு பெரிய அழிவு ஆயுதங்களை இஸ்ரேல் உற்பத்தி செய்கிறது என்பதனை, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களே அம்பலத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அண்மையில், அண்டையிலுள்ள லெபனான் மீது இஸ்ரேல் போர்தொடுத்தது. ஒரு மாத காலம் யுத்தம் நடத்தியது. அந்த யுத்தத்தில் கந்தகக் குண்டுகளை வீசி மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தகைய குண்டுகளை வியட்நாம் மீது முன்னர் அமெரிக்கா வீசியது. இப்போது லெபனான் மீது இஸ்ரேல் ஏவியிருக்கிறது.

கடுகளவு கந்தகம் உங்கள் உடம்பில் பட்டால் என்னவாகும்? அந்த இடம் அப்படியே வெந்து போகும். வேதனையால் துடித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆறாத காயங்களோடு அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். சக்தி வாய்ந்த அந்த அழிவு சக்திகளை குண்டுகளாகச் செய்து, லெபனான் மீது இஸ்ரேல் வீசியிருக்கிறது. எவ்வளவு பெரிய கொடுமை?

ரொம்ப ரகசியமாக மூடி மறைக்கப்பட்டிருந்த இந்த உண்மையை, இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவாகல்-ஆன் (Zahavagalon) என்ற அம்மையார் அம்பலத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். அதனை இஸ்ரேல் அமைச்சர் ஜேக்கப் எடரி ஒப்புக்கொண்டிருக்கிறார். விஞ்ஞானத்தின் வேக வளர்ச்சி, இஸ்ரேலை வேதாள உலகச் சக்ரவர்த்தியாக்கியிருக்கிறது.

கந்தகக் குண்டுகள் செய்வதை சர்வதேசச் சட்டம் தடை செய்யவில்லை. ஆகவே, அந்தக் குண்டுகளைச் செய்து, லெபனான் மண்ணின் மீதும் மக்கள் மீதும் வீசினோம் என்று இஸ்ரேல் வக்கிரவாதம் பேசுகிறது. இறக்கும் வரை மனிதனைத் துடிக்கவிடும் இத்தகைய குண்டுகள், அப்போது உருவாக்கப்படவில்லை. ஆகவே, சர்வதேசச் சட்டம் அதனை அன்றைக்குத் தடை செய்யவில்லை.

அம்மையார் ஜகாவா என்ன கேள்வி எழுப்பினார்? ‘பாலஸ்தீனத்தின் காஸாப் பகுதியில் மீண்டும் மீண்டும் குண்டுபோட்டீர்கள். போர் மரபுகளுக்குப் புறம்பாக, மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே குண்டு போட்டீர்கள். அந்தக் குண்டுகளெல்லாம் புதிது புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட நாசகார ஆயுதங்கள். அவைகளின் அழிவு சக்திகளைக் கணக்கிட, மக்கள் குடியிருப்புக்களையே நாசமாக்கினீர்களா?’ என்று அந்த அம்மையார் கேட்டார். ‘கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா?’ என்றார்.

காஸாப் பகுதியில் வீசப்பட்ட நவீன ஆயுதங்களைப் பற்றிக் கேட்டால், ‘புதிதாய் செய்த கந்தகக் குண்டுகளை லெபனான் மீது வீசி, சோதித்துப் பார்த்தோம்’ என்று அமைச்சர் பதில் சொன்னார்.

எங்கே விழப்போகிறோம் என்று தெரியாத இடியைப்போல, லெபனான் மீது இஸ்ரேல் வீசிய கந்தகக் குண்டுகள் விழப்போகும் இலக்குத் தெரியாது மக்கள் குடியிருப்புக்கள் மீதே மழையாய்ப் பொழிந்தன. கந்தகத் தீயில் மக்கள் துடியாய்த் துடித்தனர். இது என்ன புதிய அழிவு ஆயுதம் என்று புரியாது தவித்தனர். அவைகளெல்லாம் இஸ்ரேல் ராணுவப் பாசறை உருவாக்கிய கந்தகக் குண்டுகள் என்பதனை இப்போது இஸ்ரேலே தெரிவித்திருக்கிறது. உலகம் வியப்பால் முகம் சுளித்து நிற்கிறது.

லெபனான் மீது கந்தகக் குண்டுகளை மட்டும் வீசவில்லை. கொத்துக் கொத்தான குண்டுகளையும் வீசியிருக்கிறது. இது இன்னொரு வகையான அழிவு ஆயுதம். ஒரே குண்டு வெடித்து, அதிலிருந்து ஐம்பது, நூறு குண்டுகள் சிதறும். அவைகளும் வெடிக்கும். அதன் அழிவு பயங்கரமாக இருக்கும்.

மரபுகளுக்கு விரோதமான ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துகிறது என்று லெபனான் யுத்தத்தின்போதே குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவைகளை அன்று இஸ்ரேல் மறுத்தது. இன்றைக்கு மூன்றே மாதத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது.

இன்றைக்கும் இஸ்ரேல் வம்புச்சண்டைக்குப் போகிறது. லெபனான் மீது அதன் உளவு விமானங்கள் பறக்கின்றன. அதனை இந்த வாரம் ஐ.நா. மன்றமே கண்டித்திருக்கிறது.

இஸ்ரேலோடு ஒப்பிடும்போது, எல்லா இஸ்லாமிய நாடுகளும் நிராயுதபாணிகள்தான்.

இஸ்ரேலிடம் அணுகுண்டுகள் உள்ளன. எந்த இஸ்லாமிய நாட்டிலும் அணுகுண்டு இல்லை.

மிகப் பேரழிவை ஏற்படுத்தும் நச்சுக் குண்டுகளையும், அக்கினிக்குண்டுகளையும் உற்பத்தி செய்து இஸ்ரேல் குவிக்கிறது. எந்த இஸ்லாமிய நாட்டிலும் இத்தகைய அழிவு ஆயுதங்கள் இல்லை.

தீவிரவாதிகளைத் தாக்குகிறோம் என்ற பெயரால், லெபனான் மீது இஸ்ரேல் படையெடுக்கிறது. சிரியா மீது படையெடுக்கிறது. எல்லை தாண்டி அதன் ராணுவம் செல்கிறது. விமானக் குண்டுவீச்சுக்கள் நடைபெறுகின்றன.

இன்றைக்கு இஸ்ரேலின் ஆயுத வலிமை என்ன? வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவிற்கு ஏவுகணைகளையும் ஏவுகணைச் சாதனங்களையும் விற்பனை செய்திருக்கிறது. அதற்காக அன்றைய அதிகாரபீட அரசியல் பிரமுகர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் வரை கையூட்டு அளித்திருக்கிறது.

இப்போது இலங்கையும் அங்கிருந்து ஆயுதங்கள் வாங்குகிறது.

இப்படி ஒரு சின்னஞ்சிறிய நாடு, இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கே ஆயுதம் விற்கும் அளவிற்கு வலிமை பெற்றிருக்கிறது. அத்துடன், அணுகுண்டுகளைக் குவித்து வைத்திருக்கிறது. ஆனால், அதற்குப் பக்கத்தில் உள்ள ஈரான் அணு ஆயுதச் சோதனை செய்தால், உலகச் சமாதானத்திற்கே உலை வைக்கிறது என்கிறார்கள்.

எந்த நாடும் அணுகுண்டு தயாரிக்கக்கூடாது. இருக்கின்ற அணுகுண்டுகளை அழித்துவிட வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். அதனை விடுத்து, இஸ்ரேலுக்கு ஒரு நியாயம். அதன் அண்டை நாடுகளுக்கு ஒரு நியாயம் என்று அநியாயம் பேசக் கூடாது.

அணுகுண்டுகளைவிட ஆபத்தான கந்தகக் குண்டுகளையும், அக்கினிக் குண்டுகளையும் இஸ்ரேல் தயாரிக்கிறது. அதனைத் தயக்கமின்றி பாலஸ்தீனம் மீதும் லெபனான் மீதும் வீசுகிறது. அந்தக் குண்டுகள் நாளை ஈழத்து மண்ணிலும் வீசப்படலாம்.

அணுகுண்டு, மனித இனத்தை நொடிப்பொழுதில் அழித்துவிடும். ஆனால், கந்தகக் குண்டுகளும் அக்கினிக் குண்டுகளும் மரிக்கும் வரை மனித இனத்தை உயிரோடு போராட வைக்கும். ஐநா மன்றம் என்ன செய்யப்போகிறது?

தகவல்: அபூ ஸாலிஹா (நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.