மோடியின் வெற்றி: ஜனநாயகத்துக்கான எச்சரிக்கை/ இந்திய ஜனநாயகத்தை நோக்கிய துர்க்குறிகள்!

Share this:

சொல்லப்பட்ட பல தேர்தல் ஹேஸ்யங்களையும் முன்னறிவிப்புகளையும் மீறி சமீபத்திய குஜராத் சட்டமன்ற தேர்தலில் (டிசம்பர் 2007) மோடி நன்றாகவே செய்திருந்தார், குஜராத் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து வந்த 2002 தேர்தலில் பெற்றதற்கு நெருங்கியதொரு வெற்றியை இப்போது பெற்றிருக்கிறார். 2002 தேர்தலுக்கு முன் சமூகத்தை குழு குழுவாகப் பிரித்து வைத்தல் நிகழ்ந்தது.

 

ஆனால் இந்தத் தேர்தலில் கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடு, யாருக்கு என்ன பொறுப்பு என்ற பிரச்சனை, மதச்சார்பற்ற சக்திகளின் முயற்சிகள், முன்னைவிடச் சற்று சிறந்த காங்கிரஸின் முயற்சிகள் என மோடிக்கு எதிரான பல விஷயங்கள் இருந்ததாகத்தான் தோன்றின. அதையெல்லாம் பார்த்தபோது, விளைவு வெற்றியைத் தொட்டுவிட்டுப் போய்விடுவதாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் முந்தையை தேர்தலில் பெற்றதைப் போலவே இதிலும் மோடி பெருவெற்றி பெற்றிருக்கிறார். 

பல விஷயங்களை இது நமக்கு தெளிவுபடுத்துகிறது. மக்களைக் குழுக்களாகப் பிரிந்து வைத்தல் என்பது குஜராத்தில் மிகவும் ஆழமான வகையில் செய்யப்பட்டுவிட்டது என்பது ஒன்று. ஒவ்வொரு மதக்கலவரத்துக்குப் பிறகும், அதில் முக்கியப் பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கூட்டாளிக் கட்சிகள், பாஜக போன்றவை முன்னைவிட உறுதியாகிவிடுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். முந்தையை தேர்தலைப் போலவே, இந்த தேர்தல் படுகொலைகள் மிகவும் அதிகமாக நிகழ்த்தப்பட்ட இடங்களிலெல்லாம் பாஜகவின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருந்தது. நாட்டின் மற்ற இடங்களிலும் மாற்ற இயலாத முறிவை நோக்கி சமூகத்தைக் குழுக்களாகத் தனிமைப்படுத்துதல் சென்று கொண்டிருக்கிறது. குஜராத்தில் ஏற்கெனவே இப்படி ஆகிவிட்டதாகத் தோன்றுகிறது. 

“ஒரு ஹிந்து ராஷ்ட்ர சோதனைச் சாலையாகத் தொடங்கிய குஜராத் இன்று ஹிந்து ராஷ்ட்ர தொழிற்சாலையாக மாறிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஹிந்து ராஷ்டிரம் என்பது எல்லா ஹிந்துக்களின் நன்மைக்கான ஒன்றாகும். முஸ்லிம்களின் அக்கறைகளும் முரண்பட்டவை. இதில் ஆர்.எஸ்.எஸ் ஹிந்துக்களின் பக்கம் நிற்கிறது. மற்ற அனைவரும் ஹிந்துக்களின் நலன்களுக்கு எதிராக இருக்கின்றனர்” என்பது போன்ற கருத்துக்களைப் பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் முக்கிய வெற்றி பெற்றுவிட்டன. ஆனால் உண்மை என்னவெனில், ஹிந்து மதம் என்ற பெயரில் ஹிந்துக்களின் அடையாளத்தோடு ஆர்.எஸ்.எஸ் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஜாதி மற்றும் பால்வாரியாக சமூக மாற்றத்துக்கு எதிரான தனது செயல்திட்டத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. அது பெரும்பான்மை ஹிந்துக்களின் நன்மைக்கு எதிரானதாகும். மேலும் முஸ்லிம்கள் பற்றிய அச்சத்தை பெரும்பான்மை மக்கள் மனதில் ஏற்படுத்துவதில் அது வெற்றி பெற்றுவிட்டது. 

இதற்கான சூத்திரம் என்னவெனில், எல்லா பயங்கரவாதிகளும் முஸ்லிம்கள், ஹிந்துக்களின் ரத்தத்துக்காக அலைபவர்கள், ஆர்.எஸ்.எஸ்-ம் அதன் தோழமைக் கட்சிகளும்தான் ஹிந்துக்களைக் காப்பாற்ற இருக்கும் ஒரே மீட்பர்கள். நாடு முழுவதும் அங்காங்கு பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும்போது மோடி/பாஜக/ஆர்.எஸ்.எஸ் இணைப்பால் குஜராத்தில் இருக்கும் ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருப்பதாகப் பிரச்சாரம் செய்கின்றார்கள். ஆனால் உண்மை என்னவெனில், பாஜக கூட்டணி ஆட்சியின் போதும், மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. பாராளுமன்றத் தாக்குதலும், ஆசார்தம் கோயில் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களும் இதில் அடக்கம். பயங்கரவாதிகளின் மீதான இந்த “மனப்பான்மை’யை ஆர்.எஸ்.எஸ் ஸின் அதன் தோழமைக் கட்சிகளும் தேசியவாதம் என்பதாக முன்னிறுத்துகின்றன. 

தேசியவாதம் என்று சொன்னால் அது விடுதலை இயக்க மதிப்பீடுகள் மற்றும் இந்திய அரசியலமைப்பு ஆகியவற்றோடு இணைந்து, அவற்றை ஒட்டியதாக இருக்க வேண்டும். குஜராத் வளர்ச்சியடைந்து விட்டது என்பது இவர்கள் உருவாக்கும் இரண்டாவது மாயையாகும். ஆனால் ஏற்கனவே முன்னேறிக்கொண்டிருந்த மாநிலங்களில் ஒன்றாக குஜராத் இருந்து வருகிறது. ஆனால் இப்போது அந்த முன்னேற்றத்துக்கெல்லாம் காரணம் மோடிதான் என்பதாக முன்வைக்கப்படுகிறது. 

பிரச்சார உத்திகளைக் கண்டுபிடிப்பதில் இவர்கள் கோயபல்ஸை மிஞ்சிவிட்டார்கள். சமயங்களில் உண்மையைவிட, மக்கள் மனதில் விதைக்கப்படும் பிரச்சாரமே உண்மையாக நம்பப்படுகிறது. ஒரு பாசிச நாட்டை உருவாக்கவும் இறுதியில் ஜனநாயகத்தை வேரறுக்கவும் ஹிட்லர் செய்த பிரச்சாரங்களில் இவர்கள் செய்வதற்கு நிறைய ஒப்பீடுகளை நம்மால் பார்க்க முடியும். அவன் செய்தது ஜெர்மனியை இல்லாமலாக்கி இரண்டாம் உலகப் போரில் பயங்கரத் தோல்வியைத் தழுவ வைத்தது. ஜெர்மன் தேசிய சமூகக் கட்டமைப்பையே சிதைத்து. அங்கும், ஒரு தனிமனிதன் மீதான கவர்ச்சி எப்படி ஒரு ஒரு கட்சியையே வியாபித்திருந்தது என்பதைப் பார்த்தோம். சமூகத்தைத் தனிமைப்படுத்துதலும், ஒவ்வொரு குழுவாக இலக்கு வைத்து அழித்துக்கட்டுவதும் அங்கும் நிகழ்ந்தது.

குஜராத்தில் முஸ்லிம்களையும் அவர்களுக்கு அடுத்த படியாக கிறிஸ்தவர்களையும் இலக்காக வைத்திருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று விரைவில் தெரிய வருமா? ஜெர்மனிக்கும் குஜராத்துக்கும் உள்ள வேற்றுமை இதுதான்: ஜெர்மனியில் பாசிச பூட்ஸ்களின் கீழ் நாடு வேகமாக நசுங்கியது. ஆனால் இங்கே திரிசூலங்கள் பல மாநிலங்களில் பலதரப்பட்ட வேகங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டம் இதன் உச்சத்தை அடைந்து விட்டதாகத் தோன்றுகிறது. மற்ற மாநிலங்களில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜனநாயகத்தை இது பல நிலைகளில் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 1980-81களில் நிகழ்த்தப்பட்ட தலித்துகளுக்கு எதிரான கலகங்களில்தான் ஹிந்துத்துவ பாசிசத்தின் பயணம் குஜராத்தில் துவங்கியது. அதைத் தொடர்ந்து 1986ல் நிகழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோரின் கலகங்கள். இந்த இரண்டு கலவரங்களுமே வசதி படைத்த உயர்ஜாதி, ஹிந்துத்துவ அடிப்படையை உறுதிப்படுத்துவதாக அமைந்தன. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தப் பாசிசத்தை உறுதிப்படுத்துவதில் மணியார்டர்களை அனுப்பும் குஜராத்தி NRI-களின் (வெளிநாடு வாழ் குஜராத் பணக்காரர்களின்) பங்கு லேசானதல்ல. தனியாக வாழ்ந்து வந்த குஜராத் NRI-கள் டாலர்களாகவும், பவுண்டுகளாகவும் அனுப்பி பிரித்தாளும் அரசியலை தீவிரப்படுத்தினார்கள். 1980களின் பிற்பகுதியிலிருந்து ஆதிவாசிகளையும் தலித்துகளையும் ஹிந்துத்துவ மந்தைக்குள் அணைத்துக்கொள்ளும் முயற்சி வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டது. ஆதிவாசிகளை அணைத்துக் கொள்வதற்காக, வான்வாசி கல்யாண் ஆஷ்ரமம் கிறிஸ்தவ மிஷ்னரிகளுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கி இந்த சின்ன சமூகத்தைத் தாக்கியது.

தலித்களையும் சேர்த்து, நசுக்கப்பட்ட மற்ற சமூகப்பிரிவினையும் அணைத்துக் கொள்வதற்காக, தீவிரமான ஹிந்து மத உணர்வுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. பாண்டுரங்க சாஸ்திரி, ஆசாராம் பாபு, மொராரி பாபு போன்றோர் பாஜகவின் அறுவடைக்கான அடிப்படைகளைச் செய்ய ஆரம்பித்தனர். ஆர்.எஸ்.எஸ்.-ஸும் அதன் தோழமைக் கட்சிகளின் அரசியலால் உருவாக்கப்பட்ட அச்சுறுத்தல்களின் நன்மைகளை நகரத்தில் வாழ்ந்த மக்களின் ஒரு பிரிவினர் கண்டனர். முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் நேரடியாகத் தாக்கப்பட்டனர். ஆனால் இவர்களின் பெரும் இலக்கு தலித்துகளையும் ஆதிவாசிகளையும் வெற்றிகொள்வதாகவும், இவர்கள் நிலை மேம்பட்டுவிடாமல், இவர்கள் இருந்த இடத்திலேயே இருக்குமாறும் கவனமாக பார்த்துக் கொள்ளப்பட்டது. 

ராமர் கோவில் கட்டுவது என்ற இயக்கத்துடன் குழுவாகப் பிரித்து தனிமைப்படுத்தும் காரியம் ஆழமாகிக் கொண்டே போனது. கோத்ராவை சாக்காக வைத்து அரசே முன்னின்று இனப்படுகொலையை நடத்தியது அந்த விஷயத்துக்கு முத்திரை இட்டது. சோதனைச் சாலை ஒரு தெளிவான வடிவம் பெற்றது. தேவையான எல்லா உபகரணங்களும் ஒரு தெளிவான வடிவம் பெற்றது. தேவையான எல்லா உபகரணங்களும் தயாராக இருந்தன. சோதனை ஆரம்பமானது.

ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் தோழமைக் கட்சிகளின் துணையோடு படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. பாதிக்கப்பட்டுப் பிழைத்தவர்களுக்கு எந்த மறுவாழ்வு நலத்திட்டமும் கிடையாது. வன்முறைக்கு இலக்காகிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நியாயமும் செய்யப்படவில்லை. இவர்கள் மெல்ல மெல்ல சமூகத்திலிருந்து ஒரங்கட்டப்பட்டார்கள். முஸ்லிம் சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கியது ஒரு நிறுவப்பட்ட நிஜமாகிவிட்டது. மாறிவிட்டத் தங்களின் இந்த நிலைதான் தங்களுக்கானது என்று முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் பிரச்சாரம் செய்யவும் தொடங்கினர். மண்டியிட்டு வாழ்வதுதான், தங்களை இழிநிலைக்குத் தள்ளி, படுகொலைகள் செய்தவர்களின் தலைவனைக் கொண்டாடுவதில் கூட்டு சேர்ந்து கொள்வதுதான் தங்களுக்கு முன்னே இருக்கும் தங்களுக்கான வழி என்பதைப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் கண்டனர். எனினும் எல்லாவற்றையும் மீறி வாழ்க்கை மேலே செல்ல வேண்டியிருந்தது! ஒநாய்தான் ரட்சகன் என்ற மாயையை உருவாக்க சில ஆடுகள் முயன்றுகொண்டுள்ளன. 

இதன் மறைமுகமான விளைவு என்னவெனில் குஜராத்தில் முஸ்லிம் சமூகம் ஒதுக்கி வைக்கப்பட்டது. மதம் சார்ந்த சமூகங்களுக்கிடையே இருந்து இடைவெளி நாடு தழுவிய முறையில் அகலப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் இத்தகைய விஷமங்கள் பரவத் தலைப்பட்டன. அகில இந்திய அளவிலான தேர்தல்களைப் பொறுத்த அளவில் பாஜக பலவீனமாக இருப்பதால், மதரீதியான வன்முறை அரசியலின் விதைகள் நாடு முழுவதும் தூவப்பட்டன. குழுக்களாகப் பிரித்துத் தனிமைப் படுத்துதலும் நடத்தப்பட்டது. 1990களின் பாஜக/ஆர்.எஸ்.எஸ் அரசியலை பாசிசத்தோடு ஒப்பிடுவோமானால், தேசிய அளவில் ஒரு கவர்ச்சிகரமான ஈர்க்கும் தலைமை அப்போது இல்லாதது விளக்கவே முடியாதாக இருக்கிறது. பாசிசம் என்றால் ஒரு ஈர்க்கும் தலைமை இதற்கு வேண்டும். அத்வானி ஹிந்துத்துவ செயல்பாட்டுத் திட்டத்தை எடுத்தியம்பிக் கொண்டிருந்தபோது, நடுநிலை முகமூடியைத் திறமையாக வாஜ்பாய் அணிந்து கொண்டிருந்தார். ஆனால் நீதித்துறைக்கு வெளியே ஒரு குற்றவாளியைக் கொல்லுவதற்காக மக்களைத் தூண்டி அனுப்பும் கவர்ச்சி இவர்கள் இருவரிடத்திலுமே இல்லை. அந்த இடைவெளியை மோடி பலன் தரும் வகையில் நிரப்பியுள்ளார்.

போலி என்கௌண்டரை நியாயப்படுத்துவதில் மட்டுமல்ல, அதை துணிச்சலான, வீரமான காரியமாக சித்தரிப்பதிலும் இவர் வெற்றி பெற்றுள்ளார். குஜராத் தேர்தல்களையும், மோடி வளர்த்துக் கொண்டே கவர்ச்சிகரமான ஆற்றலையும் வைத்துப் பார்க்கும்போது மோடிக்கும் ஹிட்லருக்கும், ஹிந்துத்துவத்துக்கும் பாசிசத்துக்கும் இடையில் உள்ள ஒற்றுமை முழுமையடைந்து விட்டது என்றே சொல்லலாம்.

வரலாறு தன்னைப் பழைய மாதிரியே மறுபடியும் நிகழ்த்திக் கொள்வதில்லை. ஜெர்மனியில் பாசிசம் ஒரேமாதிரியான, கண்ணைக் குருடாக்கும் வேகத்தில், யூதர்களை இலக்காக வைத்து நாடு முழுவதும் சென்றது. ஹிந்து வலதுசாரி அமைப்புகளின் குருவான ஆர்.எஸ்.எஸ் 1925ல் தொடங்கியது:. ஆனால் 1980களில் இருந்துதுதான் தன் செயல் திட்டங்களை தீவிரமாக நிறைவேற்ற அதனால் முடிந்திருக்கிறது. குஜராத்தில் சுதந்திரமான இடத்துக்கு மோடியின் வெற்றி சாவு மணி அடிக்கும். அதே நேரம் பாஜக கட்சி ஒரு பெரும் தலைவரால் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. அவர்மீது திருப்தி கொள்ளாதவர்களுக்கு வெளியே போகும் வழி காட்டப்படுகிறது. சிறுபான்மையினர் மற்றும் பலவீனமானவர்களின் நிலை இன்னும் மோசமடையும், பணக்காரர்களில் ஒரு பகுதி மேம்படும். ஆனால் ‘கௌரவி குஜராத்’ என்ற பெயரால், வளர்ச்சி என்ற கூப்பாட்டின் பேரில் பெரும்பான்மையான மக்களின் குரல்கள் சமூக்காளத்தின் கீழே ஒடுக்கப்படும். ஆனால் வளர்ச்சி பெரும்பான்மை மக்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.

தேசிய அளவில், வளர்த்து வரும் மதக்கலவர சக்திகள் இதனால் உற்சாகமடையும், அருகில் உள்ள கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாஜக இன்னும் வலிமையாக முயற்சி செய்யும். பாஜக ஆளும் மாநிலங்களில் ஹிந்துத்துவச் செயல்திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்த பாஜக முயற்சி செய்யும். இது உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் இருக்கும். ஏழைகளுக்கு எதிரானக் கோட்பாடுகளை முறையாக செயல்படுத்தும். 

விமர்சனக் கோட்டுக்குக் கீழே மறைந்து இருந்த பாசிசம், கோட்டுக்கு மேலே சுதந்திரமாக வந்து அரசியல் கருத்தாக்கம் என்ற பெயரில் நாடு தழுவிய அளவில் ஜனநாயக மதிப்பீடுகளின் கழுத்தை நெரிக்கும் கட்டம் வந்துவிட்டது என்பதற்கான எச்சரிக்கைதான் மோடியின் வெற்றி. பாஜகவில் இருக்கும் குழப்பம் நல்லது வெல்லும் என்ற வலுவான நம்பிக்கை வழி வகுக்கும். அது மத்தியில் ஆட்சி அமைக்க முயலும். மதச்சார்பற்ற இயக்கங்கள் விழித்துக் கொண்டு தம் செயல் எல்லையை விரிவு படுத்திக் கொள்ளவில்லையானால் இதெல்லாம் விரைவிலேயே நடந்துவிடும். இன்றுவரை, பிரித்தாளும், மதரீதியான வன்முறை சக்திகளின் பாதிப்பின்கீழ் வந்தவர்களைவிட, அளவிலும் உறுதியிலும் அதிகமாக இருப்பவர்கள் மதச்சார்பற்ற மதிப்பீடுகளை மதிப்பவர்கள். ஆனால் மோடி/பாஜக/ஆர்.எஸ்.எஸ் வகை அரசியலில் இவர்கள் இணைந்துவிடுவார்களா? அந்த திசையில் நாடு செல்ல விட்டுவிடுவார்களா? நம் தேசத்தை உருவாக்கியவர்கள் எத்தகைய கனவுகளைக் கொண்டிருந்தார்களோ, அதைப் பலதரப்பட்ட சமூகங்கள் சேர்ந்து அந்த நிலையை, நீதியை, ஒற்றுமையை மீண்டும் அரசியல் சமூகத் தளத்துக்கு கொண்டு வரவேண்டியது, நமது இயக்கத்தின் மையமாக ஆக்க வேண்டியது அவசியம்.

ஆங்கில மூலம்: ராம் புன்யானி, தமிழில்: நாகூர் ரூமி

நன்றி: மக்கள் உரிமை இதழ்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.