பேராசிரியர் ம.ஆ.நுஃமான் (இலங்கை)

Share this:

இலங்கைப் பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி உள்ளிட்ட அறிஞர்களைப்போல் தமிழகத்து அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நன்குஅறிமுகமானவர் பேராசிரியர் ம.ஆ.நுஃமான் அவர்கள் ஆவார்.இலங்கையின் கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில் 10.08.1944 இல் பிறந்தவர்.தந்தையார் பெயர் மக்புல் ஆலிம்.அவர் ஒரு மௌலவி அரபு ஆசிரியர்; தாயார் பெயர் சுலைஹா உம்மா ஆகும்.

நுஃமான் தொடக்கக் கல்வியைக் கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியைக் கல்முனை உவெசுலி உயர்தரப் பாடசாலையிலும் படித்தவர். பின்னர் 15 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். அட்டாளைச் சேனை அரசினர் ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெற்றவர். இளங்கலை மொழியியல் பாடத்தை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில்பயின்றவர்(1973). அதுபோல் முதுகலைத் தமிழ் இலக்கியப் பாடத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்(1982)

புகழ்பெற்ற அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் முனைவர் பட்ட ஆய்வைப் பேராசிரியர் குமாரசாமி இராசா அவர்களின் மேற்பார்வையில் மூன்றாண்டுகள் நிகழ்த்தியவர்.அதுபொழுது தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய மொழியியல்துறைப் பேராசிரியர்களிடம் நெருங்கிப்பழகியவர்.கவிஞர்கள் எழுத்தாளர்களுடன் நல்ல உறவினைப் பேணியவர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்விரிவுரையாளராகப் பணியைத்தொடங்கிய (1976-82) நுஃமான் அவர்கள் பின்னர் மொழியியல் விரிவுரையாளராகப் பணிபுரியலானார். 1991 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியேற்றுத் திறம்படப் பணிபுரிந்து பேராசிரியர்நிலைக்கு உயர்ந்தார்(2001). இதன் இடையே இவர் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக ஓராண்டுப் பணிபுரிந்து(1988)இலக்கணநூல் ஒன்றை உருவாக்கி உதவினார். இலங்கையின் திறந்தநிலைப் பல்கைலக்கழகத்திலும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும்(1999-2000)இமலேயா பல்கலைக்கழகத்திலும் (2007-08) வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

தம் பணிக்காலத்தில் இலங்கை அரசின் பல்கலைக்கழகம் சார்ந்த பல்வேறு கல்விக்குழுக்கள் நிறுவனங்களில் கல்வி குறித்த அறிவுரைஞர் குழுவில் இடம்பெற்றுத் திறம்படப்பணிபுரிந்தவர். அயல்நாட்டு ஆய்வேடுகளை மதிப்பீடுசெய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் பணிபுரிந்தவர். இலங்கையிலும் இந்தியா உள்ளிட்ட பிறநாடுகளிலும் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கியவர்.

இயல்பிலேயே கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்ட நுஃமான் அவர்கள் பல கவிதை நூல்களை வெளியிட்டுள்ளதுடன் ஈழத்துக் கவிஞர்களின் படைப்புகளை நூல்களாக்கி வெளியிட்டுள்ளார். இலங்கைக் கவிஞர்களின் படைப்புகளைத் தமிழகத்திற்குத் திறனாய்வுகளின் வழி அறிமுகப்படுத்தியுள்ளார். மொழியியல், இலக்கணம், திறாய்வு, நாட்டுப்புறவியல், சிறுகதை, திரைப்படம், நாடகம், புதினம், பதிப்புத்துறை எனப் பன்முக வடிவங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திடும் திறமை படைத்தவர் நுஃமான். மார்க்சிய வழியில் திறனாய்வதில் வல்லவர். பாரதியார் படைப்புகளை மொழியியல் கண்கொண்டு ஆராய்ந்து வெளிப்படுத்தியவர். இந்த நூல் இவர் நூல்களில் குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ், சிங்கள மொழிகளின் பெயர்த்தொடர் அமைப்பு ஒரு முரண்நிலை ஆய்வு (A Contrastive Study of the Structure of the Noun Phrase in Tamil and Sinhala) என்னும் தலைப்பில் இவர் நிகழ்த்திய முனைவர் பட்ட ஆய்வு தமிழ்சிங்களமொழி குறித்த நல்ல ஆய்வாக அறிஞர் உலகால்குறிப்பிடப்படுகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக இவர் செய்தகுறுகியகாலத் திட்டப் பணியாய்வில் ‘மட்டக்களப்பு முசுலிம் தமிழில் கடன்வாங்கப் பெற்றுள்ள அரபுச்சொற்கள்’ என்னும் ஆய்வு குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்1984). ‘மட்டக்களப்பு முசுலிம் தமிழ்ச் சொற்றொகை ஆய்வு’ என்னும்தலைப்பில் முதுகலைப் பட்டத்திற்கு வழங்கிய ஆய்வேடு முசுலிம் மக்களின் தமிழ்ச்சொற்கள் குறித்த பயன்பாடுகளைக் காட்டும் ஆய்வாக விளங்குகிறது.

நுஃமான் இளமையில் ஓவியம் வரைவதில் ஈடுபாடு காட்டியவர். அந்த அறிவு அவரைக் கவிஞராக மாற்றியது. 16 ஆம் அகவையில் கவிதை எழுதத் தொடங்கியவர். கவிஞர் நீலவாணன் வழியாக இலக்கிய உலகில் அடி எடுத்துவைத்தவர். நீலவாணன்தான். நுஃமானுக்கு மகாகவி, முருகையன், புரட்சிக் கமால் அண்ணல் போன்றோரின் கவிதைகளை அறிமுகப்படுத்தினார். ‘நெஞ்சமே நஞ்சுக்கு நேர்’ என்ற ஈற்றடிகொண்டு நுஃமான் எழுதிய பாடல் வீரகேசரியில் வெளிவந்தது. 1963 முதல் மகாகவி பழக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் ஆன்மீகச் சிந்தனையின் ஆதிக்கம் நுஃமானுக்கு இருந்துள்ளது. 1967 பிறகு இதிலிருந்து விடுபட்டுத் தனிமனித உணர்வுகள், சமூகப் பிரச்சனைகளை மையமிட்ட படைப்புகளைப் படைத்தார்.

1969-70 இல் ‘கவிஞன்’ என்ற பெயரில் காலாண்டு இதழை நடத்தினார். வாசகர் சங்கம் என்ற பெயரில் பதிப்பகம் நிறுவி அதன் வழியாகத் தரமான நூல்களை வெளியிட்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது கவிதாநிகழ்வு என்னும் நிகழ்ச்சியை நடத்தினார். கவியரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு கவிதை பாடியவர்.கவியரங்குகளின் போக்கு பற்றி இவர் வரைந்த ஒரு கட்டுரை கவியரங்குகள் சமூகத்தில் பெற்றிருந்த ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடுவதாகும்.

தமிழகத்தில் வெளிவந்த அனைத்துப் படைப்புகளையும் உற்றுநோக்கிப்படித்துள்ளார். திறனாய்வு செய்துள்ளார். ஈழத்துக் கவிதை இதழ்கள் என்றதலைப்பில் இவர் வரைந்துள்ள கட்டுரை ஒன்று ஈழத்தில் வெளிவந்த கவிதைப்பணியாற்றிய பல இதழ்களை நமக்கு அறிமுகம் செய்கின்றது. 1955 இல் வெளிவந்த ‘தேன்மொழி’ என்ற முதல் கவிதை இதழ் பற்றியும் மகாகவியும் வரதர் ஆகிய இருவரும் இதனை நடத்தினர் எனவும் 16 பக்க மாத இதழாக இது வந்தது என்றும் குறிப்பிடும் நுஃமான் சோமசுந்தரப் புலவரின் பெருமை சொல்வதையும் விளக்கியுள்ளார். அதுபோல் சமகாலப் படைப்புகளான புதினங்கள், சிறுகதைகள் பற்றிய திறனாய்வையும் நுஃமான் நிகழ்த்தியுள்ளார். ‘ஈழத்துத் தமிழ்நாவல்களின் மொழி’ என்னும் கட்டுரையில் ஈழத்துத்தமிழ் நாவலில் இடம்பெற்றுள்ள மொழியின் பாங்கினைச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார். நவீனத் தமிழ்க்காவியங்கள் என்ற தலைப்பில் ஈழத்தில் தோன்றிய நவீனத் தமிழ்க்காவியங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார். அதுபோல் ஈழத்தில் தோன்றிய  நாடகங்கள் பற்றியும் சிறப்பாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.

நுஃமான் அவர்கள் பதிப்பாளராக இருந்து பல நூல்கள் வெளிவருவதற்குக் காரணமாக இருந்துள்ளார். அவ்வகையில் மகாகவியின் படைப்புகளை உலகத் தமிழர்கள் அறியும் வண்ணம் பதிப்பித்து வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. மகாகவியின் கவிதைகள் குறித்த மிகச்சிறந்த திறனாய்வுகளை நிகழ்த்தியவர். நாட்டார் பாடல்கள் என்ற நூல் பதிப்பிக்க இணைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தவர்.

நுஃமானின் ஆளுமை பன்முகப்பட்டு இருந்தாலும் மொழியியல் துறையிலும் குறிப்பாக இலங்கையில் உள்ள முசுலிம்களின் வழக்கில் உள்ள தமிழ்குறித்த நல்ல ஆய்வுகளை நிகழ்த்தியவர் நுஃமான்.

நுஃமான் பதிப்பித்த ‘பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்’ என்ற நூல் குறிப்பிடத்தக்க நூலாகும்.

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிய ஈழத்துப் புதுக்கவிதை வளர்ச்சியை அறிவதற்கு இந்த நூல் மிகுதியும் பயன்படும். ஈழத்தின் புதுமைப் படைப்பாளியான மகாகவி தொடங்கி அவர் மகன் சேரன் வரையிலான ஐந்து தலைமுறைக் கவிஞர்களின் படைப்புகளைக் காட்டி ஈழத்துக்கவிதை மரபை நாம் புரிந்துகொள்ள உதவியுள்ளார்.

இந்த நூலில் நுஃமானின் வைகறை நிலவு, உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்…, புகைவண்டிக்காகக் காத்திருக்கையில், இலைக்கறிக்காரி, தாத்தாமாரும் பேரர்களும் என்ற ஐந்து கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் நுஃமானின் மிகச்சிறந்த கவிதையியற்றும் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இவரின் யாப்பியல் பயிற்சிகளையும் காட்டுகின்றது.தமிழகத்துப் பேராசிரியர் தங்கப்பா அவர்கள் மரபு அறிந்து புதுமை செய்ய நினைத்ததுபோல் நுஃமான் செய்துள்ள படைப்புகள் பாராட்டத் தகுந்தன.

நுஃமான் சிறந்த கவிதைகளை வழங்கியதுடன் கவிதை குறித்த தெளிவான புரிதல் கொண்டவர். இதனால் கவிதை பற்றிய தம் எண்ணங்களை ‘அழியா நிழல்கள்’ தொகுப்பில் பதிவுசெய்துள்ளார். அழியா நிழல் தொகுப்பு 1964-79 காலகட்டத்தில் நுஃமான் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது.

கவிஞர்கள் சமூக உணர்வுடன் எழுதுவதுதான் கவிதை என்பவருக்கு விடைசொல்லும் முகமாகச் சில செய்திகளை முன்வைத்துள்ளார்.’ கவிஞனும் ஒரு சாதாரண மனிதன்தான். அவன் சமுதாயத்தில் ஒரு அங்கம் என்ற வகையில் சமூக அரசியல் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதேவேளை அவன் தனியாகவும் இருக்கின்றான். அவனுக்கென்று தனிப்பட்ட, சொந்த(Personal)அனுபவங்களும் பிரச்சனைகளும் உண்டு. அவை கவிதைகளில் வெளிப்படுவது தவிர்க்கமுடியாதது. என்கிறார்(பக்.6).

பாலத்தீன நாட்டுக்கவிஞர்கள் எழுதிய கவிதைகளை நுஃமான் மொழிபெயர்த்துள்ள பாங்கு அவரை ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் கவிஞராகவும் நமக்குக் காட்டுகிறது. பாலத்தீன மக்கள் இசுரேல் படையால் பாதிக்கப்படுவதை அந்நாட்டுக் கவிஞர்கள் சிறப்பாகப் பாடியுள்ளனர். நுஃமான் காலத்தேவையுணர்ந்து இந்தப் படைப்பினை வழங்கியுள்ளது பாராட்டிற்கு உரியது.

அடிப்படைத்தமிழ் இலக்கணம் என்ற நுஃமானின் நூல் தமிழ் மாணவர்களுக்குப் பயன்படத் தக்க நல்ல நூல். தமிழ் இலக்கணங்களை மொழியியல் சிந்தனைகளின் துணைகொண்டு எழுதியுள்ளார்.எழுத்தியல், சொல்லியல், தொடரியல், புணரியல் என்னும் நான்கு தலைப்புகளில் இந்நூல் அமைந்துள்ளது.

தமிழுக்குத் தோன்றிய இலக்கண நூல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் புதிய மரபுகள், மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படவில்லை என்ற நோக்கில்கற்பிக்கத் தகுந்த வகையில் இந்த நூல் உருவாகியுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் மொழியியல்துறை மிகச்சிறப்பாக வளர்ந்துள்ளது.பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இவற்றை மாணவர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை என்ற நினைவுடன் புதிய இலக்கணநூலை நுஃமான் எழுதியுள்ளார். இலங்கையிலும் தமிழகத்திலும் ஆளப்படும் சொல் வழக்குகளை எடுத்துரைத்து இந்நூலில் விளக்கியுள்ளார்.

முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைவழங்கிய பன்முக ஆளுமைகொண்ட நுஃமான் அவர்கள் தொடர்ந்து மொழியாய்வுகளிலும் தமிழாய்வுகளிலும் ஈடுபட்டுவருகிறார்.

பின் குறிப்பு

(தமிழ் ஓசையில் வெளிவந்து அதேநாளில் இணையத்தில் வெளியிடப்படும் என் கட்டுரையை சில முத்திரை எழுத்தாளர்கள் மேற்கோள் காட்டாமல் தழுவித் தமிழக இலக்கிய ஏடுகளில் எழுதி வருவதை நணபர்கள் எடுத்துரைக்கின்றனர்.நானும் காண்கிறேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இணையத்தில் சான்றுகளுடன் வெளியுலகுக்கு அடையாளப் படுத்தப்படுவார்கள்)

னி நன்றி

தமிழ் ஓசை களஞ்சியம், அயலகத் தமிழறிஞர், தொடர் 21, 15.02.2009)

முனைவர் செ.வை.சண்முகம்

முனைவர் நா.கணேசன்(அமெரிக்கா)

புதுவை இளவேனில்(நுஃமான் படங்கள்)

மின்தமிழ்க்குழு

நூலகம்(இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் உள்ள தளம்)

பிரஞ்சு நிறுவன நூலகம், புதுச்சேரி

நன்றி: இளங்கோவன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.