பெரியார் தலித்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரியா? – அ.மார்க்ஸ்

{mosimage}பெரியார் இறந்து கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் அவர் மீதான தாக்குதல்களும் அவதூறுகளும் தொடர்கின்றன. கன்னடர், தமிழ்த் தேசத்துரோகி, மார்வார்களிடமிருந்து காசு வாங்கியவர் என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் பெரியாரை அவதூறு செய்த பெங்களுர் குணா இன்று முகவரி இன்றி முடங்கிக் கிடக்கிறார். இப்போது புதுச்சேரி ரவிக்குமார் முஸ்லிம்களுக்கும் தலித்களுக்கும் எதிராகப் பெரியாரை நிறுத்துகிறார்.

 

இதற்கு ஆதாரமாக அவர் முன் வைப்பது ஆனைமுத்து அவர்கள் தொகுத்தள்ள பெரியார் சிந்தனைகளிலிருந்து இரு கட்டுரைகள்: ‘சதியை முறியடிப்போம்’ (பக்கம்- 1950-1953)’மைனாரிட்டி சமுதாயம்’ (பக்கம்- 46-48) – என்பன அவ்விரு கட்டுரைகள்.இப்படியான அவதூறு பேசுவோர் வழக்கமாகச் செய்யும் இரண்டு தந்திரங்கள் இங்கும் செயல்படுகின்றன.

1- முழுக்கட்டுரையில் இருந்து தனக்கு வேண்டிய வரிகளை மட்டும் பீறாய்ந்து போடுவது.
2- எந்தச் சூழலில் இப்படி பேச நேர்ந்தது என்கிற பின்னணியை முற்றாக மறைப்பது.

சுமார் 50-ஆண்டு காலம் தமிழக அரசியலில் ஒரு மாபெரும் சக்தியாக ஓய்வின்றி இயங்கியவர் பெரியார். தேர்வு செய்யப்பட்ட அவர் பேச்சுக்களே இரண்டாயிரம் பக்கத்துக்கு மேல் வருகின்றன. ஒரு நீண்ட காலகட்டத்தில் பல்வேறு அரசியல் சூழல்களில் செயல்பட்ட ஒருவரின் ஒரு குறிப்பிட்ட கால உரையை மட்டும் வைத்து அவரை மதிப்பிட இயலாது. மேற்சொன்ன இரு கட்டுரைகளும் 1962-63 என்கின்ற ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவதூறு பேசுகிறவர்கள் எந்தக் கூற்றை மேற்கோள் காட்டுகின்றனர்? திராவிட சமுதாய எதிரிகள் எனப் பார்ப்பனரோடு தாழ்த்தப்பட்டவர்கள்- முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்கள் ஆகியோரையும் பெரியார் சுட்டிக்காட்டுகிறார். அப்புறம் மைனாரிட்டிகளின் ஆதிக்கம் ஒரு நாட்டுக்கு நல்லதல்ல என்றும் அவர்களுக்கு சலுகைகள் அளிப்பது நாட்டுக்குக் கேடு என்றும் அவர் சொல்லுகிறார்.

பெரியார் இப்படிச் சொல்லியுள்ளது உண்மைதான். எந்தச் சூழலில் இப்படிச் சொன்னார் என்பதைக் காணும் முன் தலித்கள் மற்றும் சிறுபான்மையோர் குறித்து அவர் என்னவெல்லாம் சொல்லியுள்ளார்- செய்துள்ளார் என சிந்திப்பது அவசியம்.

தீண்டாமை ஒழிப்பு- தாழ்த்தப்பட்டோர் விடுதலை என்பன தொடர்ந்து அவர் கரிசனமாக இருந்தது. முதல் சுயமரியாதை மாநாட்டில் (1929) போடப்பட்ட தீர்மானங்கள் சில:

சாலைகள்-குளங்கள்- கோயில்கள் முதலான பொது இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சம உரிமை அளிக்க வேண்டும்.அதற்கான சட்டங்கள் இயற்ற வேண்டும்.

 

யாரும் தம் பெயருடன் சாதியை இணைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்குச் சட்டம் வேணடும்.

 

தலித்குழந்தைகளுக்கு இலவசகல்வி- உணவு- உடை- புத்தகங்கள்- வழங்க வேண்டும்.

 

புறம்போக்கு நிலங்களைத் தலித் மக்களுக்குப் பிரித்தளிக்க வேண்டும்.

 

காலியாகும் அரசுப் பணியிடங்களை தலித்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்

இதை வாசித்தீர்களா? :   ஈராக் போரின் பின்னணி எண்ணெயா? சியோனிசமா?

வெறும் தீர்மானங்களோடு நில்லாமல் தீண்டாமைக்கெதிரான போராட்டங்களைத் தமிழகத்திலும் புதுவையிலும் முன்னெடுத்து சிறை செல்லவும் பெரியாரும் அவரது தொண்டர்களும் தயங்கவில்லை. தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் மாநாடுகள் நடத்தி தலித் பிரச்சினைகளை நோக்கி மக்களின் கவனத்தை ஈர்க்கவும் பெரியார் தயங்கவில்லை.

பறையருக்கு மேலாக இருந்தால் போதும் என நினைக்காதீர்கள். தீண்டாமையைக் கைவிடாமல் உங்கள் ஜாதி இழிவு ஒழியும் என்று நினைக்காதீர்கள் எனப் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பார்த்து கடிந்து கொண்டார். உயர்சாதி எனச் சொல்லிக் கொண்டு எவன் குறுக்கே வந்தாலும் பாம்பை அடிப்பது போல அடியுங்கள் என தாழ்த்தப்பட்டவர்களை ஊக்குவித்தார்.

வாழ்வின் இறுதியாக அவர் நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டிலும் கூட(1973) அரசியல் சட்டத்தில் வெறுமனே தீண்டாமையை ஒழித்தால் போதாது. சாதியையே ஒழிக்க வேண்டும் எனத் தீர்மானம் இயற்றினார்.

தொடாந்து தலித் அரசியலுக்கும் ஆதரவாகவே நின்றார். அம்பேத்கர் முன் வைத்த தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதிக் கோரிக்கையை ராஜா போன்ற தலித் தலைவர்களே
கைவிட்ட போதும் பெரியார் தொடர்ந்து ஆதரித்து வந்தார். அம்பேத்கருக்கு எதிராக ஜெகஜீவன்ராமைக் காங்கிரஸ் முன் நிறுத்தியபோது அதை எதிர்த்தார்.

பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார். முஸ்லிம்கள் திராவிடர் கழகத்தில் சேர வேண்டும் என ஜின்னா சொல்லும் அளவிற்கு பெரியார், முஸ்லிம்களின்
அரசியலுக்குத் துணை நின்றார். சூத்திரர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இழிவு நீங்க ஒரே மருந்து தான் உண்டு. அதுதான் இஸ்லாம் என்றார்.

எர்ணாகுளத்தில் மாநாடு ஒன்று நடத்திப் பலரை முஸ்லிமாக மாற்றினார். முஸ்லிம்கள் அன்னியர் அல்லர் திராவிடர் என்றார். இந்த நாட்டை இந்துஸ்தான் ஆக்குவதைவிட திராவிட நாட்டுக் கொள்கையை உடைய பாகிஸ்தான் என ஆக்க வேண்டும் என்ற அளவிற்குப் பேசினார்.

தலித் முஸ்லிம் ஆதரவை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வந்த போதும் அதற்காக அவர் உரிமைக் கோரியதில்லை. என் மக்கள் விடுதலைக்காக நான் செய்வது உங்களுக்கும் நன்மையைப் பயக்கிறது அவ்வளவு தான் என்றார். இவ்வளவும் சொன்ன அவர் 1962-63 கால கட்டத்தில் மைனாரிட்டிகளையும் தாழ்த்தப்பட்டோரையும் எதிரிகள் எனச் சொன்னதின் பின்னணி என்ன?

சென்ற நூற்றாண்டு தொடக்கம் முதல் ரெட்டமலை சீனிவாசன்- சிவராஜ் முதலிய தலைவர்கள் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றில் இருந்து செயல்பட்டனர்.
பார்ப்பன எதிர்ப்பு அரசியலுக்கு ஆதரவாக தலித் மக்கள் இருந்தனர். 1940-களின் இறுதியில் தி.மு.க. பிரிந்தது. இளம்பரிதி- சக்திதாசன் முதலானோர் தி.மு.க.வில் இருந்து செயல்பட்டனர். சிவராஜ் போன்றவர்கள் குடிஅரசு கட்சியில் இணைந்தனர். பின்னர் அவர் அக்கட்சியின் அகில இந்தியத் தலைவரானார்.

பிரிவினைக்குப் பிந்திய இந்தியாவில் முஸ்லிம்கள் தமது தேசபக்தியை நிறுவும் நோக்கில்
அகில இந்திய ஒற்றுமை பற்றி அதிகம் பேசினார்.பார்ப்பன எதிர்ப்பு அரசியலில் சற்றே பின் வாங்கினர். முஸ்லிம் லீக் கட்சி என்பது முஸ்லிம் வணிக நலனை முதன்மைப்படுத்தியதாக அமைந்தது. அம்பேத்கரே கூட இந்திய தேசிய ஒற்றுமையை வலியுறுத்திப் பேசத்தொடங்கியது பெரியாருக்கு வருத்தத்தை அளித்தது.

இதை வாசித்தீர்களா? :   உலகின் துயர முனை!

பார்ப்பனர் நலன்களை முன்னிறுத்தி 1950-களின் இறுதியில் சுதந்திராக் கட்சியைத் தொடங்கிய ராஜாஜி கடுமையாகக் காங்கிரஸை எதிர்த்தார். தமிழ்நாட்டில் பார்ப்பனரே இடம் பெறாத ஒரு அமைச்சரவையைத் தொடக்கத்தில் அமைத்த காமராசரை கடுமையாகத் தாக்கினார். தி.மு.க. வையும் பின்னர் முஸ்லிம் லீக்கையும் கூடத் தன்னுடன் அணி சேர்த்தார்.

பேராசிரியர் ரத்தினசாமி பிள்ளை- டாக்டர்.மத்தியாஸ் போன்ற கிறிஸ்துவ மைனாரிட்டிகளும் சுதந்திராவில் இணைந்தனர். நான் இராமன், இவர்கள் எனது குரங்குப் படைகள் எனப் பெருமையோடு மேடையில் கூறினார் இராஜாஜி. தி.மு.க. வின் வழியாகத் தாழ்த்தப்பட்டவர்களின் ஆதரவும் இந்தக் கூட்டணிக்கு அமைந்தது. சிவராஜ் போன்றவர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலும் தி.மு.க. விற்கு ஆதரவாகவே முடிந்தது.

இராஜாஜி தலைமையிலான இக்கூட்டை பெரியார் கவலையோடு நோக்கினார். அவர் கவலை உண்மையானது. 1962-தேர்தலில் தி.மு.க. 50- இடங்களைப் பிடித்தது. தமிழக வரலாற்றை மாற்றி அமைத்த திருச்செங்கோடு பாராளுமன்ற மற்றும் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் (1963) தி.மு.க. வென்றது.

வெற்றிவிழாக் கூட்டங்களில் இராஜாஜிக்கும் காயிதேமில்லத் இஸ்மாயில் அவர்களுக்கும் அண்ணா நன்றி சொன்னார். இந்த சூழலில் தான் தாழ்த்தப்பட்டோரும் மைனாரிட்டியினரும் பார்ப்பனருக்கு ஆதரவாக உள்ளனரே எனப் புலம்பினார் பெரியார்.

1967-தேர்தலில் மாநிலக் கட்சிகள் மேலுக்கு வந்ததை நாம் வரவேற்ற போதிலும் பின்னாளில் இத்தகையக் கட்சிகளே மாநிலங்களில் பா.ஜ.க. காலூன்றுவதற்குக் காரணமாயின என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

தாங்களும் மைனாரிட்டிகள்தான், எங்களுக்கும் சலுகைகள் வேண்டும் எனப் பார்ப்பனர்களும் உரிமை கோரிய நிலையில் தான் பெரியார் மைனாரிட்டி ஆதிக்கத்தை எதிர்த்துப் பேச நேர்ந்தது. பெரியாரின் முழுக் கட்டுரையையும் வாசித்தால் இது விளங்கும்.

1962-63 காலகட்டத்தில் பெரியார் இப்படிப் பேசிய போதும் அடுத்த பத்தாண்டுகளில் தனது இறுதி மூச்சுவரை இத்தகைய நிலையை அவர் தொடர்ந்ததில்லை என்பது சிந்திக்கத்தக்கது. தலித்கள் மற்றும் மைனாரிட்டிகளுக்கு ஆதரவாகவே அவரது செயல்பாடுகள் அமைந்தன.

1925-க்கு முன் காங்கிரசில் இருந்தார், 1954- 1967- காலகட்டத்தில் காங்கிரசை ஆதரித்தார் என்பதற்காகப் பெரியாரைக் காங்கிரஸ்காரர் என்று சொல்லுவது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் 1962-63 காலகட்டத்தில் அவர் பேசிய பேச்சை வைத்து அவரை தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் எதிராக நிறுத்துவது. இந்துத்துவ அரசியலுக்கு துணைபோகவே இது உதவும்.

(நன்றி: கருப்புப்பிரதிகள்)