மும்பை அமைதி மாநாடு!

Share this:

மும்பையில் 23.11.07 முதல் 02.12.07 வரை டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் IRF எனும் அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Peace Conference’ எனும் சாந்தி மாநாடு 10 நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் ஆங்கிலத்தில் சர்வதேச அளவில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அமீரகம், சவூதி அரேபியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சாளர்களும் இந்தப் பத்து நாள் மார்க்க விளக்க அமைதிக் கூட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி, பெருந்திரளாகக் குழுமியிருந்த மக்களுக்குஇஸ்லாம்எனும் சாந்தி மார்க்கத்தின் தூதை அழகாக எடுத்துரைத்தர்.

சோமைய்யா மைதானம் எனும் மிகப் பெரும் திறந்தவெளித் திடலில் அமைக்கப்பட்டக் குளிரூட்டப் பட்டிருந்த ள்ளரங்கத்திலும் மாலையில் திறந்தவெளி மேடையிலும் தேவையான காவல் துறையினர் மற்றும் இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேன் (IRF) தொண்டர் அணியினரின் சீரான சேவையுடன் எவ்வித அசம்பாவிதமும் இன்றி மிகவும் பிரம்மாண்டமான அளவில் இந்தப் 10 நாட்கள் நிகழ்ச்சி மற்றும் கண்காட்சிகள் நடைபெற்றன.


இஸ்லாமியக் கண்காட்சிகள் மூலம் இஸ்லாத்தினை குர்ஆன் வசனங்கள் மற்றும் வரைபடங்களுடன் விளக்கப்பட்டதைக் காண, தொடர்ந்து மக்கள் அணிவகுத்தக் காட்சி கடைசி நாளில் இரவு 12 மணி வரை மாநாடு நீட்டிக்கப்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தியது .


தொழுகை மற்றும் இதர தேவைகளின் ஏற்பாடுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக செய்யப்பட்டிருந்தன, மக்கள் வெள்ளம் இஸ்லாத்தின் அறிவமுதைப் பருக உதடுகளில் புன்முறுவலுடன் உற்சாகத்துடன் அவ்வளவு பெரிய மைதானத்தில் அனைத்து நிகழ்ச்சிக ளையும் தொழுகை, உணவு போன்ற இதர தேவைகளையும் இஸ்லாமிய வரையரையில், இஸ்லாமிய சீருடையுடன் அழகாகக் கழிக்க வாய்ப்பான இம்மாநாடு மிகவும் பயனுள்ள பயிற்சியாக அமைந்தது ,


இதில் கலந்து கொண்ட பேச்சாளர்களில் சகோ. பிலால் பிலிப்ஸ், யூஸூஃப் எஸ்டேஸ், அப்துர் ரஹீம் கிரீன், ஹுஸைன் யே போன்ற பல பேச்சாளர்கள் சுமார் 15 வருடங்களாக இஸ்லாத்தில் இணைந்தவர்களாவர். மட்டுமின்றி, சிறந்த, புகழ்மிக்க பீஸ் டி.வி, ஹுதா டி.வி மற்றும்  இதர நேரடி மேடை நிகழ்ச்சிகள், குறுவட்டுகள் ஆகியவற்றின் மூலம் அறிமுகமான இஸ்லாமிய அழைப்பாளர்கள் ஆவார்கள், மேலும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையிலிருந்து செயல் படும் இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன் வழங்கும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் மூலம் பலருக்கும் அறிமுகமான ஒரு சிறந்த பேச்சாளர் என்பதும் இதில் ஒரு சிறப்பம்சமாகும்.


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் மூலம் நடத்தப்படும் IIS எனும் பள்ளியின் மாணவர்கள், காலஞ்சென்ற தலை சிறந்த இஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் உள்பட புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பளர்களான பிலால் பிலிப்ஸ், யூஸுப் எஸ்டேஸ், யாசிர் ஃபஜாகா, ஸாலிம் அல் அம்ரீ, ஜமால் பதாவி, ஹுஸாஇன் யீ, அப்துர் ரஹீம் கிரீன் போன்றவர்களைப் போலவும், ஜாகிர் நாயக் அவர்களின் மகன், ஜாகிர் நாயக் போலவும் வேடமிட்டு வந்து, தன் தந்தையின் பாணியில் அவருடைய  தோரணையில் அவருடைய தலைப்பில் 5 முதல் 15 நிமிடங்கள் வரை உரையாற்றி, பேச்சாளர்கள் உட்பட அனைவரையும் ஆனந்தத்திலும் ஆச்சரியத்திலும் மூழ்கடித்துப் பாராட்டுகள் பெற்றனர்.


10 நாள் நிகழ்ச்சியின் கருவாக இருந்த ‘Peace’ எனும் சாந்தியை, சாந்தியையே பொருளாகக் கொண்ட இஸ்லாம் எனும் இறைவழி மூலம் மட்டுமே இவ்வுலகம் பெற முடியும் என்பதை அனைவரும் அவரவர் தலைப்புகளில் அழகாக படம் பிடித்துக் காட்டினார்கள். குறிப்பாக, “தாம் பெற்ற இன்பத்தை வையகம் பெற வேண்டும்எனும் கருத்து முறையாகக் கையாளப்பட்டது. “எவரையும் எதிரியாகப் பார்க்காதீர்கள் எதிர்காலத்தில் சத்தியத்தை ஏற்கக்கூடிய (potential believer) ஒரு நம்பிக்கையாளர் எனும் எதிர்பார்ப்போடு அனைவரையும் வெறுப்பின்றி அணுகி இஸ்லாமியத் தூதை எடுத்துரைக்கவேண்டும்என்று டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் தமது உரையில் நபிவழிச் சான்றுகளுடன் இஸ்லாம் மூலம் சாந்தி பெறுவதே மனிதகுலப் பிரச்சினைக்கு தீர்வு என்று பல்வேறு சான்றுகளுடனும் நடைமுறை ஆதாரங்களுடன் மிகப் பெருந்திரளுக்கு மத்தியில் தமக்கே உரிய பாணியில் மாநாட்டின் இறுதி நாள் உரையில் தெளிவாக நிலைநாட்டினார்.


வெற்று விழாக்கள், கேளிக்கை நிகழ்சிகள் மட்டும் கண்டு பழகிய பலருக்கு இந்தக் கண் கொள்ளாக் காட்சி ஒரு புது அனுபவத்தையும் ஒரு புதிய பாடத்தையும் புகட்டியது என்றால் மிகையாகாது. இஸ்லாம் என்றால் அமைதி எனும் தூதை கருவாகக் கொண்ட இஸ்லாமிய நிகழ்ச்சியை மிகவும் அமைதியாக மக்கள் கேட்டும், அதற்குப் பிறகு நடந்த கேள்வி பதில் நிகழ்சியில் சந்தேகங்களுக்கு விளக்கம்  பெற்றதும் அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் பிற மதச் சகோதர சகோதரிகளுக்குக் கேள்வி பதில் நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்பட்டிருந்ததும் இன்னுமொரு சிறப்பம்சமாகும்.


நாமறிந்த வரையில் இந்தப் பத்து நாள் நிகழ்ச்சியில் பகிரங்கமாகவே ஏழு சகோதர சகோதரிகள் இஸ்லாத்தில் இணைந்தனர், நாம் அறியா வண்ணம் இன்னும் பலர் இதன் மூலம் கவரப்பட்டு இதை ஏற்று இருக்கக் கூடும், மேலும் இதை நேரடி ஒளிபரப்பாக பீஸ் டீவியில் கண்ட பலரும் இஸ்லாத்தை உணர்ந்திருப்பர் எனும் வகையில் இது சிறப்பான முறையில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.


24.11.07 அன்று நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரியின் சம்பவம் இங்கு சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்காகத் தமிழாக்கித் தரப்படுகிறது:

 


சகோதரி நமிதா:அன்பு சகோதரர் ஜாகிர் நாயக் அவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும். என் பெயர் நமிதா, நான் ஒரு பாலர்பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிகிறேன். தங்களுடைய உன்னதமான சாந்தி, அன்பு, மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை அனைவருக்கும் எடுத்துரைக்கும் பணிக்காக நான் தங்களுக்கு எனது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.


சகோதரர் நாயக் அவர்களே, நான் உங்களிடம் கேட்க ஆசைப்படுவது என்னவென்றால், குர்ஆன் என்பது இறைவனின் வார்த்தை எனில், இஸ்லாம் உண்மையிலேயே ஒரு வாழ்க்கை நெறி எனில், மக்கள் ஏன் இதை உணரவும் ஏற்றுக்கொள்ளவும் இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறார்கள்?”


டாக்டர் ஜாகிர் நாயக்:


சகோதரி மிகவும் அழகான ஒரு கேள்வி கேட்டுள்ளார்கள். இஸ்லாம் உண்மையான வாழ்க்கை நெறி எனில் ஏன் மக்கள் அதை ஏற்றுக் கொள்ள இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கின்றனர்?.


சகோதரியே, நேர்வழி என்பது பின்பற்ற (நம் மனம் விரும்பியபடி) எளிதான ஒன்றாக எப்போதும் இருந்ததில்லை. ஒவ்வொருவருடைய கணிப்பும் அணுகுமுறையும் மாறுபடுகிறது, ஒவ்வொரு தனி மனிதருடைய கணிப்பும் மாறுபடுகிறது. உதாரணத்திற்கு ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதால் அவர் குடிப்பழக்கம் உடையவராக இருப்பின் அதைத் தொடரமுடியாது, பெண்களுடன் தகாத உறவு வைக்க முடியாது. இஸ்லாம் சரியானது என்றால் இருக்கட்டும், அதை நான் ஏற்றுக் கொண்டால் குடிக்க முடியாது; பெண்களோடு சுற்ற முடியாது; தடை செய்யப்பட்ட பன்றியின் இறைச்சியை உண்ண முடியாது போன்ற சில விஷயங்கள் இஸ்லாத்தை அறிய முயலும் போது அவருக்குத் தடைக் கல்லாக, இடைஞ்சலாக இருக்கலாம்.


அல்லது சிலருக்குக் குடிப்பழக்கமோ, பன்றி மாமிசம் சாப்பிடுவது போன்றதோ இருக்கவில்லை என்றாலும், “நான் கடந்த நாற்பது ஆண்டுகளாக இதை ஏற்காமல் வாழ்ந்து விட்டு இப்போது ஏற்பது அறிவீனமான செயல், ஆகையால் இதை ஏற்காமல் இருப்பது நல்லதுஎன்று ஒருவர் கருதலாம்.


இன்னும் சிலருக்கு, “நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் என் நண்பர்கள் என்ன சொல்வார்கள்?, என் தாயார் என்ன சொல்வார்?, என் தந்தை என்ன சொல்வார்? போன்ற எண்ணங்கள் ஏற்படலாம். இவையெல்லாம் தடைக்கற்கள் ஆகும் சகோதரியே. இது போன்ற தடைகளைக் களைந்தால் மட்டுமே உண்மையை ஏற்க முடியும்.


ஆகையால் இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் செய்தி தெளிவாக உள்ளது. செய்தி தெளிவாக இருப்பினும் சில காரணிகள் இதை ஏற்க விடாமல் செய்கின்றன. இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்க முன்வரும் ஒருவர் மிகவும் உறுதியானவராக இருக்க வேண்டும். “இதுதான் உண்மையெனில் இதை நான் ஏற்கத் தயார்; அதற்காக நண்பர்களை இழக்க நேர்ந்தாலும் சரியேஎன்று முன்வர வேண்டும். சகோதரியே, உறவையும் நட்பையும் இழப்பதென்பது சாத்தியங்கள் உள்ள/இல்லாத ஒரு கணிப்புதான். நீங்கள் என் கூற்றை நம்புங்கள், இஸ்லாத்தை ஏற்ற பலரும் தம் பழைய நண்பர்களைத் திரும்பப் பெற்றனர். என்னிடம் சிலர் கூறுகின்றனர்: “ஜாகிர்! பிற சகோதரர்களிடம் இஸ்லாத்தைப்பற்றி பேசாதே நீ அவர்களின் நட்பை இழந்து விடுவாய்என்று, ஆனால் நான் அவர்களிடம் பேசுகின்றேன். அவர்களை இழக்கவும் இல்லை, அவர்கள் என்னை மதிக்கின்றனர். உதாரணத்திற்கு நீங்கள், நீங்களும் ஒரு பிறமதத்தினரே. மாஷா அல்லாஹ், நீங்கள் என்னை எனது பணிக்காக வாழ்த்தினீர்கள்.


எனது பணி சத்தியத்தை எடுத்துரைப்பதே. குர்ஆன் மிகவும் தெளிவாகக் கூறுகிறது. 2ஆவது அத்தியாயத்தின் 256 ஆவது வசனத்தில் லா இக்ராஹ ஃபித்தீன்“, “மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை. சத்தியம் அசத்தியத்திலிருந்து பிரிந்து தெளிவாக உள்ளதுஎன்று. நமது பணி சத்தியத்தை எடுத்துரைப்பது மட்டுமே. அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். அனைவரும் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இறைவன் விரும்பி இருந்தால் அது இறைவனுக்கு மிகவும் எளிது. இது குர்ஆனில், ‘புர்கான்எனும் 25ஆவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. இறைவன் நாடியிருந்தால் அனைவரையுமே இறைநம்பிக்கையாளராக ஆக்கியிருக்க முடியும். து அவனுக்கு எளிது. குன் ஃபயகூன் மிகவும் எளிது (இறைவன், “ஆகிவிடு!” எனும் மாத்திரத்தில் ஆகிவிடும்) ஆனால் பின்னர் சோதித்தல் எங்குள்ளது?.


அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்: சூரத்துல் முல்க் எனும் 67ஆவது அத்தியாயத்தின் 2ஆவது வசனத்தில் அல்லதீ ஃகலக்கல் மவ்த்த வல்ஹயாத்த லியப்லுவகும் அய்யுக்கும் அஹ்ஸனு அமலாஅவனே மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். உங்களில் செயல்களில் சிறந்தவர்கள் யார் என்று உங்களைச் சோதிப்பதற்காக“. ஆக, சகோதரியே! இந்த உலக வாழ்க்கை, மறு உலக வாழ்க்கைக்கான ஒரு டெஸ்ட், ஒரு சோதனையாக உள்ளது.


ஒரு மனிதன் உண்மையை உணரும்போது அதை அனைத்தையும் பின்பற்றுவது இல்லை. சிலர் 80 சதவீதத்தையும் சிலர் 50 சதவீதத்தையும் பின்பற்றுகின்றனர். மிகவும் குறைவானவர்களே 100 சதவீதத்தையும் பின்பற்றுபவர்களாக இருப்பர்.


முஸ்லிம்களில் பலரும் 100 சதவீதம் இஸ்லாத்தைப் பின்பற்றுவது இல்லை. சிலரிடம் ஏதும் தீய பழக்கங்கள் இருக்கும். ஆனால் அவர்கள் மூஸ்லிம்களே. சகோதரியே! இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இறைவனின் ஏகத்துவதை நம்பவேண்டும். இறைவனின் இறுதித் தூதரை நம்ப வேண்டும் மேலும் மறுமை எனும் வாழ்க்கையை நம்பவேண்டும். இந்த இரண்டு, மூன்று அம்சங்கள் மிகவும் முக்கியமானவை,


சகோதரியே! நீங்கள் என்னிடம் கேட்ட அதே கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன்: உங்களுக்கு இந்த சத்தியத்தை ஏற்க ஏன் தாமதம்? எது உங்களுக்குத் தடையாக இருக்கிறது?


சகோதரி நமிதா: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களே, இங்கு நான் தங்களுக்குக் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன் உங்களுடைய முன்னிலையில் நான் இங்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறேன், மேலும் கலிமாவை மொழிகிறேன் லா இலாஹா இல்லல்லாஹ்; முஹம்மது ரஸூலுல்லாஹ்“.


டாக்டர் ஜாகிர் நாயக்: மாஷா அல்லாஹ் சகோதரியே, அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும். மேலும் அல்லாஹ் உங்களுக்கு சுவனத்தை வழங்கட்டும். உங்களை வரவேற்கிறேன் சகோதரியே. உங்களுக்கு அல்லாஹ் சுவனத்தை வழங்கட்டும் ஆமீன் .


***


நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உணர்ச்சிபூர்வமாகஅல்லாஹு அக்பர்என்று முழங்கினர், பெண்கள் பகுதியில் பலர் கண்கலங்க அந்தச் சகோதரியை ஆரத்தழுவினர். சிந்திக்க முற்பட்டு சத்தியத்தை அணுகிய இன்னும் ஒருவருக்கு இந்நிகழ்ச்சியில் நேர்வழியை அருளிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்,,,, அல்ஹம்துலில்லாஹ்!

 

“… அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்தியே தீருவான்” (அல்குர்ஆன் 61:8)

கட்டுரை ஆக்கம்: இப்னு ஹனீஃப்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.