தோட்டா சுட்ட கிவி பழம்!

Share this:

லேசில் செய்துவிட முடியாத மாபாதகம் அது. அப்பாவிகளைக் கொல்வது, அதுவும் அவர்கள் தம் வழிப்பாட்டுத்தலத்தில் தங்கள் வழிபாட்டில் அமைதியாய் ஈடுபட்டிருக்கும்போது நுழைந்து கொத்துக் கொத்தாய்க் கொல்வது என்பதெல்லாம் மிருகம் வெட்கும் அவச்செயல். தீவிரவாதிகளுக்கு மட்டுமே அத்தகு குரூரங்கள் சாத்தியம்; செய்கிறார்கள். பார்வையும் மூளையும் மயங்கி, மங்கிய நிலையில் சக மனிதர்களைக் குருவியைவிடக் கேவலமாய்க் கருதி சுடுகிறார்கள். தாங்கள் சார்ந்த மதத்தைச் சால்வையாகப் போர்த்திக்கொண்டு அதன் அடியில் ஒளிந்துகொண்டு குண்டு வீசுகிறார்கள். இட ஒதுக்கீட்டுக்கு அவசியமின்றி அத்தகையவர்கள் அனைத்து மதங்களிலும் ஏராளம்.

வரலாறு நெடுக குறைவற்ற உதாரணங்கள் நிறைந்திருந்தாலும் 2019 மார்ச் 15 நியூஸிலாந்தின் பள்ளிவாசல்கள் இரண்டில் நிகழ்ந்த கொத்துக் கொலை சமகாலத்தின் பேரதிர்ச்சிகளுள் ஒன்று! முஸ்லிம்களுக்குப் புனிதமான வெள்ளிக்கிழமையைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குச் சிறப்புத் தொழுகையான ஜும்ஆவில் தீவிரவாதி ஒருவன் பள்ளிவாசலுக்குள் நிகழ்த்திய வன்முறை என்பது, வெறுமே அதிர்ச்சி என்பதற்கு அப்பாற்பட்டது!

இஸ்லாமோஃபோபியா என்ற மாய மந்திரத்துக்குப் பலியாகி, அப்பாவி முஸ்லிம்கள்மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் ஒன்றும் புதிதில்லை, உலகெங்கும் பரவலாய் நிகழ்த்தப்பட்டுத்தான் வருகின்றன. தாதாகிரி நாடுகள், ஐ. நா. அங்கீகாரத்துடன் வானிலிருந்து குண்டு மழை பொழியும்போது மட்டும் அதன் பெயர் ‘போர்’. இவையெல்லாம் சகஜமாகிவிட்ட நிலையில், கிவியில் நிகழ்ந்த வன்முறை பேரதிர்ச்சிதானே தவிர ஆச்சரியம் இல்லை. ஆனால் அதன் பின் விளைவுகள்தாம் ஆச்சரியம்!; மிகப் பெரும் ஆச்சரியம்!!

இருபதாண்டுகால அமெரிக்க வாசத்தில் நான் உணர்ந்த ஒரு விஷயத்தை இங்குப் பகிர்வது அவசியம். பொது மக்களான அமெரிக்கர்கள் மனிதாபிமானிகள். இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட 9/11 தீவிரவாதத் தாக்குதலின்போது அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்ளுக்கு உடனடி பாதிப்பு ஏற்பட்டது. பள்ளிவாசல்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ‘தேச பக்தர்களால்’, கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் எழுந்தது. அச் சமயம் உணர்ச்சிகளைக் கிளறும் வகையில் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் தாக்கமும் பெரிது. ஆனால், மெய் எது, பொய் எது என இனங்கண்டு உணரும் அமெரிக்கப் பொதுமக்கள் பலர் முஸ்லிம்களுக்கு அளித்த பாதுகாப்பும் பேராதரவும் உன்னதம்.

நான் வசித்த இல்லத்தின் அருகிலுள்ள பள்ளிவாசலுக்குத் துப்பாக்கியுடன் ஒருவன் வந்த செய்தி அறிந்ததும் அமெரிக்கர்கள் – வயது முதிர்ந்தவர்கள், இளைஞர்கள்; ஆண்கள், பெண்கள் – ஏராளமாய் அணிதிரண்டு, இரவு பகல் 24 மணி நேரமும் முறை போட்டு, பள்ளியின் வாசலில் சதா சிரித்த முகத்துடன் காவலுக்கு அமர்ந்திருந்தது மெய்யான ‘சௌகிதார்’ சேவை. வாசலில் வந்து குவிந்த பூங்கொத்துகளும் மலர்களும் வாழ்த்து அட்டைகளும் ஏதோ பூக்கடை விற்பனை நிலையம்போல் மாறியிருந்த நுழைவாயிலும் நான் கண்ணால் கண்ட மெய். அவர்கள் குழுவாகத் திரண்டு வந்து குர்ஆன் பிரதிகளைப் பெற்றது, இஸ்லாத்தைப் பற்றி அளவளாவியது, பலர் தாமாகவே முன் வந்து பள்ளிவாசலில் இஸ்லாத்தை ஏற்றது – நான் பேந்தப் பேந்தக் கண்டு களித்த நிகழ்வுகள்!

இதோ இப்பொழுது நியூசிலாந்து நிகழ்வு நடந்ததும் அடுத்த நாள் காலை என் சக அலுவலர் உளமார்ந்த வருத்தம், அனுதாபம் தெரிவித்து, “நாங்கள் உங்களுடன் உள்ளோம்” என்று இன்பாக்ஸில் தகவல் அனுப்பியிருந்தார். இங்குள்ள பள்ளியின் வாசலில் இரவோடு இரவாக யாரோ பூங்கொத்தும் அனுதாப அட்டையும் விட்டுச் சென்றதை ட்வீட் செய்திருந்தார் இமாம். உலகின் தென் கிழக்குக் கோடியில் நிகழ்ந்ததற்கு வட மேற்கு மூலையில் உள்ள எங்களுக்கு அவர்களின் அனுதாபம். அதனால், நியூஸிலாந்து தீவிரவாத நிகழ்விற்குப்பின் அங்குள்ள மக்கள் நடந்து கொள்வது இங்குள்ள எங்களுக்குப் புதுமையாய், வித்தியாசமாய்த் தோன்றவில்லை. அப்படி அவர்கள் செய்யாவிட்டால்தான் ஆச்சரியப்பட்டிருப்போம். ஆனால் அந் நாட்டின் பிரதமர் எடுத்து வரும் நடவடிக்கைகள்தாம் வியப்பு! சந்தேகமேயின்றி, பாராட்டப்பட வேண்டிய காரியம்.

நேர்மையான ஆட்சியாளர் என்ற முறையில் அந்தத் தீவிரவாதியைக் கைது செய்து, சிறையில் அடைத்து, மின் நாற்காலியில் அமர்த்தி விண்ணுக்கு அனுப்பி வைத்து அவர் தமது கடமையை முடித்திருக்கலாம். பள்ளிவாசலுக்குக் கூடுதலாகப் பத்து ஆயுத போலீஸ் என்று பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் நின்றிருக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் மீறி, தன் ஆட்சிக்கு அப்படியொன்றும் சாதகமோ, பாதகமோ விளைவித்துவிட முடியாத தம் நாட்டு மைனாரிட்டி முஸ்லிம்களுக்கு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பு. காழ்ப்புணர்வில் சக முஸ்லிம் நாட்டின் மீது தடை விதித்துத் தொடை தட்டும் அளவிற்கு மட்டுமே வீரம் கொண்ட சமகால முஸ்லிம் ஆட்சியாளர்களால் அவரது அரசுக்கோ, நியூஸிலாந்தின் பால்பொருள் வணிகத்திற்கோ வளைகுடா நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனும்போது, இந்தளவு அரவணைத்து, அனுதாபம் தெரிவித்து, காயத்தை ஆற்றி, பாதுகாவல், உறுதி அளிக்கும் நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத ஆச்சரியம்! தீவிரவாதி எந்த இஸ்லாத்திற்குக் கேடு விளைவிக்க நினைத்தானோ, ஊதி அணைக்க முயற்சி செய்தானோ, அந்த இஸ்லாத்தை உரத்து முழங்கும் விளம்பரம் பேராச்சரியம்! பிரதமர் ஜெஸிண்டா ஆர்டெர்ன் வியப்பளிக்கிறார்!

சற்று சிந்தித்தால் இரண்டு உண்மைகள் புலப்படுகின்றன. காரணங்கள் பல இருக்கலாம். ஆனால், அவற்றுள் இவை இரண்டும் முக்கியமானவை என நான் கருதுகிறேன். அமெரிக்க அரசியலில் பிரதானமாய் ஆதிக்கம் செலுத்தும் யூத லாபி நியூஸிலாந்தில் இல்லை, அல்லது உருவாகவில்லை. இரண்டாவது, வர்ணாசிரம மூடத்தனம் அந்த ஆட்சியாளர்களிடம் இல்லை. மனித குலத்திற்கே கேடான இவை இரண்டும் இல்லாதபட்சத்தில் ஊரும் நாடும் அரசும் மனிதாபிமானத்தில் திளைக்கும். இஸ்லாத்தின் உன்னதத்தை உணரும்.

என்பதிருக்க, இவை அனைத்தையும் மீறிய பிரதான வாக்கு ஒன்று உள்ளது. அது வேத வாக்கு:

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, கொலை செய்யவோ உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சி செய்ததை நினைவு கூர்வீராக! அவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (எதிர்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோருள் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். (குர்ஆன் 8:30).

https://www.facebook.com/tmclivetelecast/videos/332504540706960/


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.