தேவையான சேவைகள்!

Share this:

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படையில் கட்டப்பட்ட பொது மருத்துவமனை ஒன்று சென்ற மாதம் மிகவும் சிறப்பான முறையில் திறக்கப்பட்டது. இந்த மருத்துவனை, முற்றிலும் மார்க்க அடிப்படையில் ரஷ்யாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய மருத்துவமனை (Russia’s First Muslim Clinic) என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதிநவீன வசதிக்கொண்ட இந்த மருத்துவமனையானது மாஸ்கோவில் பெருந்தொழில்கள் அதிகம் நிறைந்த தென்கிழக்குப் பகுதியில் உள்ளது.

மருத்துவமனையின் நுழைவு வாயிலிலும், வரவேற்பு அறையிலும், மருத்துவர் அறையிலும், மருத்துவக்குழுவினரின் அறையிலும், நோயாளிகள் தங்கும் அறையிலும், மற்றும் ஓய்வு அறையிலும் திருக்குர்ஆன் வசனங்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இந்த மருத்துவமனையின் திறப்பு விழாவை Grand Mufti Shiekh Ravil Gainutdin அவர்கள் துவங்கி வைத்தார். 

எம்மதத்தினரும், எம்மொழியினரும், எந்நாட்டினரும் இம்மருத்துவமனைக்கு வந்து குறைந்த செலவில் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ஆகையால் ரஷ்யாவில் உள்ள பல மதத்தினரும் இங்கு வந்து சிகிச்சையினை மேற்கொள்கிறார்கள். எவ்விதமான பாகுபாடு இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனையானது ரஷ்யாவின் வரலாற்றில் சிறப்பு மிக்க இடத்தினைப் பிடிக்கும் என்றும் அங்குள்ள பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

இந்த மருத்துவமனையின் மருத்துவக்குழுவில், 50 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர். மருத்துவமனையின் ஒரு தளத்தில் Price Quality  என்ற உடல்நல மையம் (Health Centre) செயல் படுகிறது. இன்னொரு தளத்தில் உணவருந்தும் வளாகம் (Food Court) செயல்படுகிறது. இங்கு முற்றிலும் ஹலாலான உணவுப்பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். வேறொரு தளத்தில் தொழுகை அறையும் மற்றும், உளூச்செய்வதற்கான இடமும் வசதியும் உள்ளன. பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாகத் தொழுகை இடங்கள் உள்ளன. 

பெண் நோயாளிகளைக் கவனிக்க பெண் செவிலியர்களும், ஆண் நோயாளிகளைக் கவனிக்க ஆண் மருத்துவர்களும் உள்ளனர். அத்துடன் திருமணமான பெண்களை அவர்களின் கணவனின் அனுமதி பெற்ற பின்பு தான் பரிசோதனை செய்கிறார்கள். பெண் செவிலியர்கள் மற்றும் ஆண் மருத்துவர்களின் உடைகள் இஸ்லாம் வலியுறுத்திய அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்பதும் இங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

சிரியா நாட்டில் பணிபுரிந்து தற்போது இந்த மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர். கதிர் மஹ்மூது (Kadir Makhmud) அவர்கள் ரஷ்யாவில் உள்ள பல மருத்துவமனைகளில் பணிபுரிந்து இருக்கிறார். இருப்பினும் இந்த மருத்துவமனையில் பணிபுரியும் போது கிடைக்கும் ஒரு மனநிம்மதி அங்கு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். இந்த மருத்துவமனையில் மத நல்லிணக்கம் கடைப்பிடிக்கப்படுவதால் அனைத்து வெளிநாட்டு மக்களும் தற்போது சிகிச்சைக்காக இங்கு வர ஆரம்பித்து உள்ளனர் என்றும் அவர் கூறினார். 

பல வருடங்களுக்கு முன்னால், வளைகுடா நகரங்களில் ஒன்றான துபையில் சத்வா – ஜுமைரா (Satwa – Jumeirah Area) என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஈரான் நாட்டைச் சார்ந்தவர்கள் பணிபுரியும் ஈரான் மருத்துவமனையும் (Iran Hospital) இஸ்லாமிய அடிப்படையில் அமைந்ததாகும். இங்குப் பல வெளிநாட்டு மக்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். வெளிநாட்டுப் பெண்கள் இங்கு வரும் போது இஸ்லாம் வலியுறுத்திய ஆடையினை உடுத்தி வருகிறார்கள். இல்லையென்றால் கையையும் முகத்தையும் தவிர உடம்பினை மறைக்கக்கூடிய ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்து வருகிறார்கள். அப்படி இல்லையென்றால், முன் வரவேற்பு அறையில் இருக்கும் மருத்துவக் காவலாளிகள் அவர்களை மருத்துவமனைக்குள் நுழைவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். 

ஈரானிய மருத்துவமனையானது லாப நோக்கத்தில் செயல்படாமல் சேவை நோக்கத்தினை மட்டுமே கருத்தாக கொண்டுச் செயல்பட்டு வருகிறது. செம்பிறை இயக்கம் (Red Crescent Society) மற்றும் துபாய் சேவை இயக்கம் (Dubai Charitable Society) போன்றவை இம்மருத்துவமனைக்குப் பல உதவிளை செய்து வருகின்றன. துபையில் பணிபுரியும் பல அடிப்படைத் தொழிலாளர்களைக் கருத்தில் கொண்டு குறைந்த கட்டணமே இங்கு வசூலிக்கப்படுகிறது. இங்குள்ள மருத்துவர் எழுதித் தரும் மருந்துகளை இங்குள்ள மருந்தகத்தில் (Pharmacy) இலவசமாகப் பெற்று கொள்ளலாம். இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்கு ஈரான் நாட்டின் அரசும் மற்றும் துபை அமீரக அரசும் பல நிதியுதவிகளைச் செய்து வருகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இறை நம்பிக்கையாளரின் நிலை வியப்பானது, திண்ணமாக அவனுடைய பணிகள் அனைத்தும் நன்மையாகவே உள்ளன. அத்தகையதொரு நற்பேறு இறை நம்பிக்கையாளனை அன்றி வேறு யாருக்கும் இல்லை. அவனுக்குத் துன்பம் எற்பட்டால் பொறுமையை மேற்கொள்கின்றான், அது அவனுக்கு நன்மையாகிவிடுகின்றனது. அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் நன்றி செலுத்துகின்றான். அதுவும் அவனுக்கு நல்லதாகி விடுகின்றது. (அதாவது எந்தவொரு நிலையிலும் அவன் நன்மையைத் திரட்டிக்கொள்கிறான்). அறிவிப்பாளர்: ஸுஹைப் (ரலி) ஆதாரம் : முஸ்லிம், மிஷ்காத் 

செய்தி ஆதாரம் : கலீஜ் டைம்ஸ் டிசம்பர் 8, 2007, பக்கம் 14

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின், ஃபுஜைரா, அரபு அமீரக ஒன்றியம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.