மோடி அரசும் அச்சத்தில் இந்தியர்களும் (பகுதி-2)

Share this:

நாளொரு அறிக்கையும் பொழுதொரு சர்ச்சையுமாக மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இயங்கி வருவதைப் பார்த்து வருகிறோம்.  கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்ததைவிட இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வாரம் மேலும் சரிந்து அதல பாதாளத்தை நோக்கிச் சென்றுள்ளது; வளர்ச்சி பலூனை நம்பி ஓட்டுப் போட்டவர்களைக் கடந்த கால மன்மோகன் சிங் ஆட்சியை நினைத்துக் கண் கலங்க அழைத்துச் சென்றுள்ளது. 

கடந்த 3 வருடங்களில் இல்லாத அளவிற்கு, தொழில்துறை உற்பத்தி வெளியீடு 4.2% குறைந்துள்ளது. கறுப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் 15 -20 லட்சங்கள் தருவோம் என்று மோடி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், “அதெல்லாம் லூலூவா… சும்மா இந்தியர்களை உசுப்பேற்ற; அதெப்படி கொடுக்க முடியும்?” என்று வெட்கமே இல்லாமல் திருவாய் மலர்ந்துள்ளார் பா.ஜ.க வின் தேசியத் தலைவர் அமித் ஷா.

சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலை குறைந்து உலகமே மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்க, பெட்ரோல் டீசல் விலையைக் குறைப்பது போல் பாவ்லா காட்டி, அவற்றிற்கான கலால் வரியை உயர்த்தியதைக் குறிப்பிட்டிருந்தோம். பெயரளவிலான இந்த விலைக்குறைப்பை பா.ஜ.க அரசின் சாதனையாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முழங்கி இந்தியர்களின் வேதனையைக் கூட்டியுள்ளார். உலகச் சந்தையில் தங்கம் விலையும் குறைந்து வருவதால் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. அதையும் கூட தங்களது சாதனைப் பட்டியலில் ராஜ்நாத் சிங் சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்தியர்கள் ஆறே மாதங்களில் பட்ட வேதனை போதாது என்று, தேசத்தந்தை அண்ணல் காந்தியைத் திட்டமிட்டுச் சுட்டுக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். கயவன் நாதுராம் கோட்சேவை “தேசபக்தியாளர்” என்று புகழ் பாடியுள்ளார் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மஹராஜ். (இது குறித்து அடுத்தடுத்த பகுதிகளில் விரிவாகப் பார்ப்போம்). கடந்த 6 மாதகால ஆட்சியில் வலுப்பெற்று வரும் காவி பயங்கரவாதம் குறித்து மட்டும் இப்பகுதியில் காண்போம்.

கேரளக் காவல்துறை மீது குண்டு வீசிய RSS ” செயல்வீரர்கள்”

சென்ற வாரம் (டிசம்பர் 6, 2014) கேரள மாநிலத்தில் இருவேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் ஒன்று காவல்துறையினர் மீது வீசப்பட்டது. இந்தப் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட 10 ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

பொதுவாக குண்டு ஒன்று வெடித்தவுடனே அதைப்பற்றி காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதியும் முன்பே, அந்தப் பழியை ஒரு குறிப்பிட்டச் சமூகத்தின் மீது சுமத்துவது இந்திய பத்திரிகைகளின் தர்மம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இச்சம்பவத்தில் காவல்துறை மீதே வெடிகுண்டு வீசியது யார் என்ற உண்மை, உலகத்தின் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதால் அச்சமூகத்தின் மீது பழி சுமத்த முடியாமல் ஊடகங்களுக்குப் பெரும் சங்கடம் ஏற்பட்டது. ஆகவேதான் “நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகள் கொண்ட இந்தியன் எக்ஸ்ப்ரஸ்” காவலர்கள் மீது குண்டு வீசிய ஆர்.எஸ்.எஸ். “செயல்வீரர்கள்” (Activists) என்று இச்செய்திக்கு தலைப்பிட்டது. பேட்டரி செல்லை பாக்கெட்டில் வைத்திருத்தவர் எல்லாம் “பயங்கர”வாதிகள் ஆனபோது, காவல்துறையினர் மீதே குண்டு வீசியவர்கள், “செயல்வீரர்கள்” ஆன அதிசயம் கண்டு தலை கிறுகிறுத்துப் போயுள்ளனர் இந்தியர்கள்.

வன்முறைகளைத் தடுத்து, மக்களைப் பாதுகாத்து, சமூகத்தில் அமைதியை நிலைநாட்டும் கடமையைச் செய்து வரவேண்டிய காவல்துறை மீதே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் வெடி குண்டு வீசியுள்ள இந்தத் தைரியத்தை RSS பயங்கரவாதிகளுக்கு வழங்கியுள்ளது நல்லாட்சி (?) தரும் மோடி அரசாங்கம்தான் என்பது மிகையில்லை.

கிறிஸ்துமஸ் தாத்தா  சாக்லேட்?… மூச்! – வி.ஹெச்.பி

http://media.indiatimes.in/media/content/2014/Nov/santa_1417002090_1417002102_725x725.jpgகிறித்துவப் பள்ளிகளில், கிறிஸ்துமஸ் விழாவின் போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட ஒருவர் குழந்தைகளுக்கு இனிப்புகள் விநியோகிப்பது வழக்கமான ஒன்று. ஃபாஸிச வெறி பிடித்த சட்டிஸ்கர் மாநில வி.ஹெச்.பி-யினர் பஸ்தர் மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்ட நிர்வாகிகளைக் கடந்த மாதம் 21-ம் தேதி சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அம்மனுவில் கிறிஸ்துமஸ் தாத்தா (Santa claus) கிறிஸ்துமஸ் விழாவின் போது குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கக் கூடாது என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர். வி.ஹெச்.பி-யின் மதவெறிக்கும் மிரட்டலுக்கும் அடிபணிந்த கத்தோலிக்க திருச்சபையும், அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது.

பள்ளிக் குழந்தைகளையும், மாணவ மாணவிகளையும், பெண்களையும் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் நடத்தும் பயிற்சிகளுக்கு அழைத்துச் சென்று துப்பாக்கிகளையும், கூர்வாள் ஆயுதங்களையும் அவர்கள் கையில் கொடுத்து, உள்ளத்தில் பிற மதத்தவர் மீது வெறுப்பையும் ஊட்டுபவர்களால், பள்ளிக் குழந்தைகளுக்கு அன்புடன் சாக்லேட் வழங்குவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? சாக்லேட் பெறுவதன் மூலம் அதனை விநியோகிப்பவர்கள் மீது குழந்தைகளுக்கு நல்லெண்ணம் வந்து விட்டால் தாங்கள் திட்டமிட்டு விதைத்து வரும் வெறுப்பு, பட்டுப்போய் விடுமே என்ற விஷ்வ ஹிந்து பரிஷத்தின் எண்ணத்தை இந்திய மக்கள் புரியத் துவங்கி விட்டனர்.

இனி ஃபாதர் இல்லை.. மா சரஸ்வதி!

மேற்குறிப்பிட்ட கோரிக்கை மனுவில் கிறித்துவப் பள்ளிகள் அனைத்திலும் சரஸ்வதி படத்தைத் தான் இனி மாட்ட வேண்டும் என்றும் பாதிரியார்களை ஃபாதர் என்று பிள்ளைகள் அழைக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேரலையில் எதிர்பாரா வெற்றி பெற்றுவிட்ட நிலையில் தலைகால் புரியாமல் இந்துத்துவ சக்திகள் தாண்டவமாடுகின்றன. இதன் மூலம் விளையும் வெளிப்பாடுகள் அனைத்தும் தெளிவான இந்துத்துவ மதவெறி என்பதை ஓட்டுப் போட்ட மக்கள் அறியத் துவங்கியுள்ளனர்.

வீட்டுக்குத் திரும்ப முடியாது வை.கோ!

பல்வேறு ஆசை வார்த்தைகளை நம்பி மக்களைப் போலவே ஏமாற்றம் அடைந்த வைகோ, பிரதமர் மோடியை, அதிருப்தி அடைந்துள்ள மக்களோடு மக்களாக நின்று விமர்சித்து விட்டார். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க வின் தேசியச் செயலாளர் ராஜா, “மோடியை விமர்சித்தால் வைகோவை பா.ஜ.க தொண்டர்கள் கவனிப்பார்கள்  / ஒழுங்காய் வீடு போய் சேர முடியாது” என சினிமாவில் வரும் அடியாள் ரேஞ்சுக்குத் தம் பேட்டியில் உலகம் பார்க்க பகிரங்கமாக மிரட்டுகிறார். தொலைக்காட்சியில் இதைப் பார்த்த மக்களுக்கு “எச்.ராஜா ஒரு கட்சியின் செயலாளரா? அல்லது ரவுடிக் கூட்டத்தின் செயலாளரா?” என்ற உலுக்கம் ஏற்பட்டுள்ளது. காமராஜர், கக்கன் போன்ற தன்னலமற்ற அரசியல் தலைவர்கள் வாழ்ந்த நாடு இது. அரசியல் காரணங்களுக்காக போலி என்கவுண்டர் செய்தல், பெண்ணை வேவு பார்க்க போலீஸ் படையை ஏவுதல் போன்ற கீழ்த்தரமான செயல்களைச் செய்தவர், நீதிமன்றத்தால் குஜராத் மாநிலத்துள்ளே நுழையக்கூடாது என தடைவிதிக்கப்பட்டவர் தேசியத் தலைவராக இருக்கும் கட்சியில் தேசியச் செயலாளர் இவ்வாறு கண்ணியமற்று நடப்பது இயல்பானது என்று இந்தியர்கள் ஆசுவாசப்படுத்தத் துவங்கியுள்ளனர்.

{youtube}jSCI8s3_qIQ{/youtube}

தாஜ்மஹால் அல்ல… சிவன்கோயில்

டிசம்பர் 6, புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள். இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்துத் தந்த சட்ட மாமேதையும் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சருமான பாபாசாகேப் அம்பேத்கரின் நீதி போராட்டங்களையும், தியாகங்களையும் நினைவுகூர வேண்டிய அந்நாளில், இந்தியாவின் மதச்சார்பின்மையைக் குழி தோண்டிப் புதைக்கும் விதமாக டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் அமைந்திருந்த 450 ஆண்டு கால வரலாறு கொண்ட பாபரி மஸ்ஜித் ஃபாஸிச கும்பலால் இடிக்கப்பட்டது. சர்வதேச சமூகத்தில் இந்தியாவிற்கு அவப்பெயரை இத்துயர நிகழ்வு பெற்றுத்தந்தது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6ஆம் தேதி வந்தால் முஸ்லிம்கள் வருத்தம் தெரிவிக்கிறார்களோ இல்லையோ ஃபாஸிச சக்திகளின் திட்டங்களினால், நாட்டில் பதற்றமும் கூடவே வருவது வாடிக்கை ஆகிவிட்டது.

இச்சூழலில் தான், இந்தியச் சுற்றுலாத்துறைக்குப் பெரும் வருவாய் ஈட்டித் தந்து கொண்டிருக்கும், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலானது, சிவன்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்று உத்தரப்பிரதேச பா.ஜ.க வின் மாநிலத் தலைவர் லக்ஷ்மி காந்த் பாஜ்பாய் என்பவர் புதியதொரு டூமீல் சர்ச்சையைக் கிளப்பி பதற்றத்தைத் தூண்டியுள்ளார். இதன் மூலம், சுமார் 360 ஆண்டுகால வரலாறு கொண்ட புராதனச் சின்னத்தைத் தகர்க்க இவர்கள் குறி வைத்துள்ளனர் என்ற சதி அம்பலமாகியுள்ளது.

{youtube}Nhi8f7QMcdc{/youtube}

தொடரும் பல அமளி துமளிகளில் ஒரு சில:

* 2014 ஜூன் முதல் வாரத்தில், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த சில வாரங்களில், முஹ்ஸின் சாதிக் ஷேக் என்ற தகவல் தொழில்நுட்ப பொறியாளர் (IT Engineer) புனேயில் சங்பரிவார கும்பலால் அடித்தே கொல்லப்பட்டார். புனே நகரில் பல மசூதிகளுக்குள் புகுந்து குர் ஆனை எரித்து, முஸ்லிம்களின் கல்லறைகளைச் சேதப்படுத்தி, இந்துக்களும் முஸ்லிம்களும் வழிபடுகின்ற ஹஸ்ரத் ஜலாலுதீன் குவாத்ரி தர்காவைச் சூறையாடி வெறியாட்டம் நடத்தியுள்ளனர். சாலைகளை மறித்து வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

* அதே தினத்தில் அதே பகுதியில் சங்பரிவார கும்பல் செய்த கலவரத்தால் அமீன் ஷேக் என்பவர் கை முறிந்தது. கலவரக்காரர்கள் அப்பகுதியில் கல் வீச்சிலும் ஈடுபட்டனர்.

* கிழக்கு டில்லியின் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் திரிலோக்புரியில் அக்டோபர் 22, 23, 24 ஆகிய தினங்களில் கலவரம், வன்முறை, கல்வீச்சு, கடைகள் எரிப்பு ஆகியவற்றில் சுமார் 70 முஸ்லிம்கள் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை.

* ஜூன் மாதம் சென்னையில் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதைக் காரணம் காட்டி, கொலையாளிகள் குறித்து போலீசு விசாரணையைத் துவக்கும் முன்பே, “முஸ்லீம்கள்தான் இந்தக் கொலையைச் செய்தார்கள்!” எனக் குற்றம் சாட்டிய இந்து முன்னணி, வன்முறை வெடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சுரேஷ்குமாரின் பிணத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்ற வழிநெடுக சிறுபான்மையினரைத் தூற்றிக் கோஷமிட்டதுடன், பொதுமக்கள் மீதும், கடைகள், பேருந்துகள், கிறித்தவ தேவாலயம் ஆகியவற்றின் மீதும் கல்வீசித் தாக்கினர். சுரேஷ்குமாரின் சொந்த ஊரான நாகர்கோயிலுக்கு அவரது பிணத்தைக் கொண்டு சென்று அங்கும் ஊர்வலம் என்கிற பெயரில் கலவரம் செய்துள்ளனர். சென்னையில் செய்ததைப் போலவே கடைகளையும், வாகனங்களையும், அரசுப் பேருந்துகளையும் உடைத்ததுடன், வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஃபைசல் என்ற அப்பாவி இஸ்லாமியர் ஒருவரைக் கொலைவெறியுடன் தாக்கினர்.

* இங்கிலாந்தில் வசிப்போர் ஆங்கிலேயர்களாகவும், ஜெர்மனியில் வசிப்போர் ஜெர்மனியர்களாகவும், அமெரிக்காவில் வசிப்போர் அமெரிக்கர்களாகவும் இருக்கும்போது, இந்தியாவில் வசிப்போர் மட்டும் ஏன் இந்துக்களாக இருக்க முடியாது? என்று புத்திசாலித்தனமாக கேட்பதாக எண்ணி, ஆர்.எஸ்.எஸ். தேசியத்தலைவர் மோகன் பகவத் கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் வசிப்போர் யாவரும் இந்தியர்களாக அல்ல; இந்துக்களாகவே இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளதை அறிந்த இந்தியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

* மே 28, 2014 அன்று மல்லிப்பட்டினம் முஸ்லிம்கள் மீது 20 க்கு மேற்பட்ட ஃபாசிச கும்பல் இரவு நேரத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த இக்கும்பல், அங்கு கூடியிருந்தவர்கள்மீது சரமாரியாக கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் அர்ஷாத் (21), அமீன் (25), மைதீன் (28), நூருல் அமீன் (21) ஆகியோருக்குக் கையிலும் கழுத்திலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

* நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற தினத்தன்று இரவு கர்நாடகாவின் வடக்குப் பகுதியிலுள்ள பிஜப்பூரில் பாஜக முன்னாள் அமைச்சர் பசவன கவுடா தலைமையில் வெற்றி ஊர்வலம் நடந்தது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காய்கறிச் சந்தை அருகே ஊர்வலம் வரும்போது ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் கலகம் விளைவித்தனர். காய்கறிச் சந்தை அடித்து நாசம் செய்யப்பட்டது. இதில் சுமார் 15 காய்கறி வியாபாரிகள் படுகாயமடைந்தனர். சம்பவத்தைப் பல தொலைக்காட்சி சானல்களும் நேரடி ஒளிபரப்பு செய்தன. காந்தி சவுக் அருகிலுள்ள காவல்துறை அலுவலகத்தின் அருகிலேயே இத்தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டக் காட்சிகளில், கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தும்போது காவல்துறையினர் கைக்கட்டி வேடிக்கை பார்த்தபடி நிற்பது தெரிந்தது.

* மோடி பிரதமராக பதவியேற்ற நிலையில், 26-05-2014 அன்று குஜராத்திலுள்ள அஹமதாபாத்தில் இந்து, முஸ்லிம்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் கடைகள் எரிக்கப்பட்டன. காவல்துறையினர் கலவரக் கும்பலைக் கலைக்க, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதில் நான்கு பேர் காயமடைந்ததனர். சொத்துகள், கடைகள், ஒரு மினி பேருந்து, சில இரு சக்கர வாகனங்கள் ஆகியவை தீ வைக்கப்பட்டன.

தேச வளர்ச்சி, முன்னேற்றம், ஊழல் ஒழிப்பு போன்ற பொய்முகங்களைக் காட்டி அரியணையைப் பிடித்த மதவெறி கும்பலுக்கு, மெஜாரிட்டி என்ற மமதையும் அமரும் நாற்காலிகளும் புதுத்தெம்பை அளித்திருப்பதை இச்சம்பவங்கள் மீண்டும் மீண்டும் உணர்த்தி வருகின்றன.

இவர்கள் ஏன் இது போன்ற சர்ச்சைகளையும் கலவரங்களையும் எப்போதுமே செய்கிறார்கள் என்பதை டிசம்பர் 5, 2014ல் வெளிவந்துள்ள ஏல் (Yale) பல்கலைக் கழக ஆய்வு தெரிவிக்கிறது. ஒவ்வொரு கலவரத்திற்குப் பின்னரும் ஓட்டு அறுவடையில் பெருவெற்றி பெற்றுள்ளதாக அவ்வறிக்கை கூறுகிறது.

– சுல்தான்

(மோடி அரசில் இந்தியர்களின் அச்சங்கள், பட்டியல் தொடரும்…)



Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.