காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை – அருந்ததி ராய் – பகுதி 1

Share this:

‘விடுதலை’

 

காஷ்மீர் மக்களின் தற்போதைய தலையாய விருப்பம் இது ஒன்று மட்டுமே. 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது மனதில் கனன்று கொண்டிருந்த அந்தச் சுடர் இன்று கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி இருக்கிறது. இந்திய அரசு இனிமேலும் விடுதலையை மறுப்பது நயவஞ்சகம்.


உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் 5,00,000 ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் தங்களைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கணமும் ‘வாழ்வா?, குண்டடிப்பட்டு சாவா?’ என்று கழியும் பயங்கரமான வாழ்க்கையை உதறித் தள்ளக் காஷ்மீரிகள் ஆக்ரோஷமாகக் கைகளை உயர்த்தத் தொடங்கியுள்ளனர். இந்தியாவுடன் இணைக்கப்பட்டக் காலத்தில்,”காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறியக் கருத்துக் கணிப்பு நடத்தப்படும்” என்று ஐ.நா.வில் நேரு அளித்து, நிறைவேற்றப்படாத வாக்குறுதி இரண்டு தலைமுறைகளாக அந்த மக்களின் நெஞ்சில் ஊசிகளைப் போல குத்திக் கொண்டிருந்தது.

கடந்த 18 ஆண்டுகளாகக் காஷ்மீரில் வலுக்கட்டாயமாக ராணுவ ஆக்ரமிப்பை மேற்கொண்ட இந்திய அரசின் துர்கனவு தற்போது நனவுக்கு வந்துவிட்டது. தீவிரவாத இயக்கங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன என்று வெற்றிப் பெருமிதத்துடன் அறிவித்துவிட்ட சூழ்நிலையில், இந்திய அரசுக்கு எதிராக சாத்வீகமான மக்கள் போராட்டம் தற்போது எழுச்சி பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தைச் சமாளிக்க முடியாமல் இந்திய அரசு விழி பிதுங்கி வருகிறது.

ஆண்டாண்டுக் காலமாக பத்தாயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் படுகொலை, சித்திரவதை செய்யப்பட்டு, ‘காணாமல் போக’ செய்யப்பட்டு,நூற்றுக்கணக்கானோர் சித்திரவதை செய்யப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவமதிக்கப்பட்ட வலிகள் ஏற்படுத்திய நெருக்கடியால் இந்த எழுச்சி உருப் பெற்றுள்ளது. காஷ்மீரிகளின் மனதில் கனன்று கொண்டிருந்த அந்தக் கொந்தளிப்பு வெளிப்படுத்தப் பட்டுவிட்ட சூழ்நிலையில் இனிமேல் எளிதில் அடக்க முடியாததாகவும் மாற்ற முடியாததாகவும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியாததாக இருக்கிறது. கடந்து சென்ற ஆண்டுகள் முழுவதும் காஷ்மீர் மக்களின் குரலை சூழ்ச்சியால் அழிக்கவும் நசுக்கவும் பிரதிநிதித்துவப் படுத்தவும் தவறாக பிரதிநிதித்துவப் படுத்தவும் அவநம்பிக்கைக்கு உள்ளாகவும் இடையீடு செய்யவும் அச்சுறுத்தவும் விலைக்கு வாங்கவும் எளிமையாக அடக்கவும் இந்திய அரசு முயன்று வந்துள்ளது. இந்திய அரசு எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒரு அரசாகவும் இருக்கிறது. மிக அதிக அளவு பணம், மிக அதிக அளவு வன்முறை, தவறான தகவல் தருதல், பிரச்சாரம், சித்திரவதை, உடந்தையாளர்கள் மற்றும் உளவாளிகளின் விரிவான வலைப்பின்னல், பீதியை கிளப்புதல், சிறையிலடைத்தல், அச்சுறுத்திப் பணிய வைத்தல், தேர்தல் சூழ்ச்சி போன்றவற்றின் மூலம் ‘மக்களின் எண்ணத்தை’ தோற்கடிக்க முயல்கிறது என்று இந்திய அரசை ஜனநாயகவாதிகள் குறிப்பிடுவார்கள். வெற்றி உருவாக்கிய ஆதிக்க உணர்வால், துப்பாக்கிக் கூட்டத்துக்கு நடுவே இயல்பு நிலையை உருவாக்கி விட்டதாகவும் மக்கள் மௌனம் காப்பது சம்மதத்துக்கு அறிகுறி என்றும் இந்திய அரசு தவறாக நம்பிவிட்டது.

‘வன்முறையால் காஷ்மீரிகள் அயர்ச்சி அடைந்துவிட்டார்கள். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள்’ என்று மக்களின் சார்பாக பேசிய ‘அமைதியை உருவாக்கும் தொழிற்சாலை’ கூறிக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் எந்தவிதமான அமைதியை விரும்புகிறார்கள் என்பது பற்றி எப்பொழுதும் விளக்கப்படவேயில்லை, பாலிவுட்டில் உருவாக்கப்பட்ட காஷ்மீர்/முஸ்லீம் தீவிரவாதிப் படங்கள் ‘காஷ்மீரின் அனைத்துத் துயரங்களும் பாவங்களின் வாசலில் கிடக்கின்றன. மக்கள் தீவிரவாதிகளை வெறுக்கிறார்கள்’ என்று இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் நம்பும் வகையில் மூளைச்சலவை செய்துவிட்டன. மிகவும் இருண்ட காலங்களில்கூட காஷ்மீர் மக்களின் மனதில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுதான் இருந்தது. அந்த மக்கள் அமைதியை விரும்ப வில்லை; விடுதலை தான் வேண்டும் என்று விரும்பினார்கள் என்பது சற்று நிதானமாக காது கொடுத்து கேட்டவர்களுக்குத் தெரியும். கடந்த இரண்டு மாதங்களாக வெறுக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுக்கு (இந்தியா, காஷ்மீர்) இடையில் சிக்கிக் கொண்ட அப்பாவி மக்கள், அவற்றை நரகத்தை நோக்கித் துரத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவிதியில் ஏற்பட்ட திடீர் மாற்றமாக, 100 ஏக்கர் காட்டுப் பகுதியை அமர்நாத் கோயில் வாரியத்துக்கு அளித்த விவகாரம், பெட்ரோல் கிடங்குக்குள் தீக்குச்சியை கொளுத்திப் போட்டது போலாகிவிட்டது. 1989ம் ஆண்டு வரை, அமர்நாத் யாத்திரை வெறும் 20,000 பேரை மட்டுமே ஈர்ப்பதாக இருந்தது. இரண்டு வார பயணம் செய்து யாத்ரிகர்கள் அமர்நாத் குகைக் கோயிலை அடைந்து கொண்டிருந்தனர். 1990ம் ஆண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் முஸ்லிம் தீவிரவாதிகள் எழுச்சி உருவான காலத்தில், இந்தியச் சமவெளியில் நச்சு இந்துத்துவ சக்திகள் பரவ ஆரம்பித்திருந்தன. இந்தச் சூழ்நிலை காரணமாக அமர்நாத் செல்லும் யாத்ரிகர்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது.

2008ம் ஆண்டு, அமர்நாத் குகைக்கு 5,00,000 யாத்ரிகர்கள் வந்து சென்றனர். இதற்கு ஆகும் செலவை பெரும்பாலும் இந்திய வணிக நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டிருந்தன. யாத்ரிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது இந்து மத அடிப்படைவாதத்தின் சார்பாக மாறி வந்த இந்திய அரசின் அரசியல் வெளிப்பாடு என்று காஷ்மீர் மக்கள் கருதத் தொடங்கினர். சாதகமாகவோ, பாதகமாகவோ நிலம் வழங்கும் நடவடிக்கை மாற்றத்துக்கான ஒரு புள்ளியாக மாறிவிட்டது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட குடியேற்றங்களைப் போல, இங்கும் இந்துக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான விரிவான திட்டத்தின் தொடக்கப்புள்ளி இது என்றும், பள்ளத்தாக்கின் வரைபடத்தையே இது முற்றிலும் மாற்றிவிடும் என்ற அச்சத்தையும் அரசின் இந்த நடவடிக்கை தூண்டிவிட்டது.

இதையடுத்து, தொடர்ச்சியாக பல நாட்களுக்கு நடைபெற்ற பெரும்மக்கள் போராட்டத்தின் விளைவாகப் பள்ளத்தாக்கில் அனைத்து வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டன. ஒரு சில மணி நேரங்களில், நகரங்களில் இருந்து கிராமங்களுக்குப் போராட்டங்கள் பரவின. கல்லெறியும் இளைஞர்கள் தெருக்களில் இறங்கி, ஆயுதமேந்திய காவல்துறையினரை நேருக்கு நேர் எதிர்கொண்டனர். காவல்துறையினர் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். இந்த நிகழ்வுகள் 90களின் தொடக்கத்தில் உருவான எழுச்சியின் நினைவலைகளை ஒரே நேரத்தில் மக்களிடையேயும்அரசிடமும் தோற்றுவித்தது. தொடர்ந்து பல வாரங்களுக்குப் போராட்டம், கடையடைப்பு, காவல்துறை துப்பாக்கிச்சூடு எல்லாம் நீடித்த வேளையில், மற்றொரு பக்கம் காஷ்மீரிகள் மத அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று இந்துத்துவப் பிரசார பீரங்கிகள் முழங்கி கொண்டிருந்தன. இதற்கிடையில் 5,00,000 அமர்நாத் யாத்ரிகர்கள் சின்ன காயம் கூடப்படாமல் யாத்திரையை முடித்தனர். மாறாக, உள்ளூர் மக்களின் விருந்தோம்பலை அவர்கள் பெற்றனர்.

ஆச்சரியமளிக்கும் வகையில் காஷ்மீர் மக்களின் மூர்க்கமான எதிர்ப்பைச் சந்தித்த அரசு, நிலம் வழங்குதலை ரத்து செய்தது. மூத்த பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா ஜீலானி “நிலம் வழங்குதல் ஒரு பிரச்னையே அல்ல”என்று கூறியதற்குப் பிறகும், மேற்கண்ட எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.

நிலம் வழங்குதல் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக ஜம்முவில் போராட்டங்கள் வெடித்தன. அங்கும்கூட, இந்தப் பிரச்னை எதிர்பாராத வகையில் பெரிதாக மாறியது. இந்திய அரசு தங்களைப் புறக்கணிப்பதாகவும், ஒடுக்குவதாகவும் இந்துக்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலைப் போக்குவரத்தைப் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரே சாலைத் தொடர்பு இது. ராணுவம் அழைக்கப்பட்டது. ஜம்மு ஸ்ரீநகர் இடையே சாலைப் போக்குவரத்து பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டது. ஆனால் காஷ்மீரி லாரி ஓட்டுநர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடந்ததாகப் பஞ்சாப் பகுதிகளில் இருந்து தகவல்கள் வந்தன. இதன் விளைவாக, லாரி ஓட்டுநர்கள் உயிருக்கு பயந்து, நெடுஞ்சாலையில் லாரி ஓட்ட மறுத்தனர். எளிதில் அழுகிவிடக் கூடிய பழங்கள் மற்றும் பள்ளத்தாக்கு உற்பத்திப் பொருட்கள் லாரிகளிலேயே அழுக ஆரம்பித்தன. சாலையைத் தடை செய்த இந்துத்துவவாதிகளின் நடவடிக்கை சூழ்நிலையைக் கட்டுமீறிப் போகச் செய்தது. ஆனால் உண்மைக்கு மாற்றமாக,”சாலை தடை அகற்றப்பட்டுவிட்டது, லாரிகள் சென்று வருகின்றன”என்று அரசு அறிவித்தது. இந்திய ஊடகங்களில் ஒரு பிரிவு, உறுதியான உளவுத் துறை தகவல்களை ஆதாரமாகச் சுட்டிக்காட்டி, இந்த சாலைத் தடை ரொம்பச் சிறியது என்றும், அப்படி ஒன்று இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறி வந்தன. ஆனால் இது போன்று விளையாடிக் கொண்டிருக்க இனியும் நேரமில்லை. ஏற்கனவே தேவையான அளவு சேதம் உருவாக்கப்பட்டுவிட்டது. காஷ்மீர் மக்கள் ஏற்கனவே வாழ்வதற்கு மிக மோசமாக அவதிப்பட்டுவிட்டனர். ராணுவ முற்றுகை, பசி, அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்டுகள் தட்டுப்பாடு போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த அவர்கள், பேசாமல் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது கடினம். உண்மையான தடைக்கற்கள் சாலையில் ஏற்பட்டதல்ல.இங்கே கூறியது போல உளவியல் ரீதியில் ஏற்படுத்தப்பட்ட ஒன்றுதான். ஏனென்றால் இந்தியா காஷ்மீர் இடையிலான கடைசி மெல்லிய தொடர்பு இழையும் துண்டிக்கப்பட்டிருந்தது.

லட்சக்கணக்கான ஆயுதமற்ற மக்கள், தங்கள் நகரங்கள், தெருக்கள், மொகல்லாக்களை மீட்டெடுக்க தெருவில் இறங்கிவிட்டனர். பயங்கர ஆயுதங்களை உடைய இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராகக் காஷ்மீர் மக்கள் பெரும் எண்ணிக்கையிலும், நெஞ்சுரத்துடனும் கூடினர். காஷ்மீரில் எழுந்த காதை அடைக்கும் பெரும் கர்ஜனையை அமைதிப்படுத்த இந்திய அரசு மிகக் கடினமாக முயன்றது.

ராணுவ முகாம்கள், சோதனைச் சாவடிகள், பதுங்குக் குழிகளின் தேசமாகவும், சித்திரவதைக் கூடங்களில் இருந்து ஓலங்கள் ஒலிக்கும் நேரத்திலும் மக்கள் போராட்டத்தின் உண்மையான சக்தியை இளம் தலைமுறை திடீரென்று கண்டெடுத்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக கௌரவமாகத் தங்கள் தோள்களை நிமிர்த்தி, தங்களுக்காகவும்தங்கள் மக்களுக்காகவும் போராட அவர்கள் முன்வந்துள்ளனர். அவர்களைப் பொருத்தவரை இந்தத் தருணம் கடவுள் தங்கள் முன் தோன்றி வரம் தரத் தயாராக இருக்கும் தருணம் போன்றது. அவர்கள் முழுவீச்சுடன் இருக்கின்றனர். மரணம்கூட அவர்களது முன்னேற்றத்குக்கு முற்றுப்புள்ளி வைக்காது. மரண பயம் போய்விட்ட பிறகு, உலகிலேயே மிகப் பெரிய அல்லது இரண்டாவது மிகப் பெரிய ராணுவத்தை முன்னிறுத்தி என்ன பிரயோஜனம்? இதில் என்ன பயணம் வேண்டிக் கிடக்கிறது? காஷ்மீர் மக்கள் இன்று கையாளும் சாத்வீகப் போராட்ட முறையைக் கையாண்டுதான் தாங்களும் சுதந்திரத்தைப் பெற்றோம் என்பதை இந்திய மக்களைத் தவிர வேறு யார் சிறப்பாக உணர்ந்து கொள்ள முடியும்?

காஷ்மீரில் தற்போது உருவாகியுள்ள மக்கள் எழுச்சி, பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யின் சதி என்றோ அல்லது தீவிரவாதிகளின் வற்புறுத்தலால் மக்கள் இப்படிச் செயல்படுகிறார்கள் என்றோ புளித்துப்போன பழைய வாதத்தை முன்வைக்க முடியாமல் முடக்கியது. 30கள் தொடங்கி ‘காஷ்மீரி உணர்வை’ யார் சரியாக வெளிப்படுத்தினார்கள் என்ற கேள்வி சர்ச்சைக்குரியதாக இருந்து வந்துள்ளது. அப்படி வெளிப்படுத்தியது ஷேக் அப்துல்லாவா? இஸ்லாமிய மாநாட்டு கட்சியா? இன்று யார் அதை வெளிப்படுத்துகிறார்கள்? முன்னணி அரசியல் கட்சிகளா? ஹுர்ரியத்தா? தீவிரவாதிகளா? கேள்விகள் நீள்கின்றன.

இதற்கு முன்பாகவும் பெரும் பேரணிகள் நடந்துள்ளன என்றாலும், இந்த முறை மக்கள் முழுச் சக்தியை வெளிப்படுத்தி போராடியதை உணர முடிந்தது. சமீபகாலத்தில் இவ்வளவு நீண்ட காலத்துக்கும், பரவலாகவும் மக்கள் போராட்டம் நடக்கவில்லை. இந்திய அரசு மற்றும் இந்திய ஊடகங்களால் மிகவும் பாராட்டப்பட்ட காஷ்மீரின் இரண்டு முன்னணி அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் வீதிகளில் இறங்கிப் போராடுவதற்கான துணிச்சலை பெற்றிருக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்களிப்பவர்கள் விகிதம் தொடர்ந்து குறைந்து வந்த நேரத்தில், புதுதில்லியில் உள்ள தொலைக்காட்சி அரங்குகளில் நடந்த விவாதங்களில் கடமைக்குப் பங்கேற்பதே அந்த இரண்டு கட்சிகளுக்கும் முக்கியமானதாக இருந்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாக நிலவிவந்த கடுமையான அடக்குமுறைக்கு இடையே விடுதலை வேள்வியை தீவிரவாதிகள் முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்த நிலையில், இன்று அவர்கள் பின்தங்கி விட்டனர். ஒரு மாற்றத்துக்காக இப்போது மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.

பேரணிகளில் பேசிய பிரிவினைவாதத் தலைவர்கள், தலைவர்களாக இருந்தது மட்டுமின்றி, காஷ்மீரின் தெருக்களில் கொதித்தெழுந்த சீற்றம் மிகுந்த மக்களின் மாபெரும் சக்தியால் வழிநடத்தப்பட்டு, அதைப் பின்பற்றி நடக்கும் தொண்டர்களாகவும் இருந்தனர். முழுமையான புரட்சியை ஏற்று நடத்தும் தலைவர்களாக அவர்கள் இருந்தனர். இதில் உள்ள ஒரே கட்டுப்பாடு, மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக் கேட்டு நடக்க வேண்டும் என்பதுதான். மக்கள் விரும்பாதவற்றை பொது இடத்தில் கூற நேரிட்டால், பின்னர் கௌரவமாக வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு, தங்கள் பாதையை மாற்றிக் கொண்டனர். ‘தற்போது உருவாகியுள்ள மக்கள் இயக்கத்தின் ஒரே தலைவர் நான்தான்’ என்று சமீபத்தில் ஒரு பேரணியில் அறிவித்துக் கொண்ட சையது அலி ஷா ஜீலானி உட்பட அனைவருக்கும் இது பொருந்தும். எளிதாக உடைந்துவிடக்கூடிய பல்வேறு சக்திகள் போராட்டத்தில் ஒருங்கிணைந்த நிலையில், அவரது கருத்து மிகப்பெரிய அரசியல் பிழை. ஒரு சில மணி நேரத்தில் தனது கருத்தை அவர் மறுதலித்தார். விரும்புகிறோமா இல்லையோ, இதுதான் ஜனநாயகம். எந்த ஜனநாயகவாதியும் போலியாக நடித்துத் தப்பிக்க முடியாது.

ஒவ்வொரு நாளுக்குப் பிறகும், பயங்கரமான நினைவுகள் நிழலாட ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களை மொய்க்கத் தொடங்கினர். பதுங்குக் குழிகளைத் தகர்த்தனர். தடைகளை உடைத்தனர். ராணுவ வீரர்களின் இயந்திரத் துப்பாக்கிகளை நேருக்குநேர் சந்தித்து, இந்தியாவில் சிலர் மட்டும் விரும்பும் விஷயத்தைக் கூறினர். “எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்”என்றும், அதே அளவு எண்ணிக்கையிலும், அதே அளவு உக்கிரத்துடனும், “பாகிஸ்தான் நீடூழி வாழ்க”என்றும் அவர்கள் கோஷமிட்டனர். தகரக் கூரையில் படபடவென்று வீழ்ந்து தெறிக்கும் மழையின் ஒலியைப் போலவும், பள்ளத்தாக்கில் இந்த கோஷங்கள் அதிர்ந்து ஒலித்தன. காஷ்மீர் மக்களிடம் நடத்தப்படாத ஒரு வாக்கெடுப்பின், நிரந்தரமாக ஒத்திவைக்கப்பட்டக் கருத்துக்கணிப்பின் முடிவு இந்த கோஷங்கள்.

ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினத்தன்று, அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. பக்ஷி மைதானத்தின் காலி இருக்கைகளில் ஆங்காங்கு ஒட்டிக் கொண்டிருந்த ஒரு சில அதிகாரிகள் முன்னிலையில் ஆளுநர் என்.என்.வோரா கொடியேற்றினார். ஒரு சில மணி நேரத்துக்குப் பின்னால், நகரத்தின் முக்கிய பகுதியான லால் சௌக்கில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றினர். ‘தாமதமான சுதந்திர தின வாழ்த்துகளை’ (ஏனென்றால் பாகிஸ்தானின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 14), ‘அடிமைகள் தின வாழ்த்துக்களை’யும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் பல்வேறு சித்திரவதைக் கூடங்களிலும், ‘காஷ்மீரின் அபு கிரெய்ப்’ வதை கூடங்களிலும், இப்படி நகைச்சுவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 16ம் தேதி பாம்போர் என்ற கிராமத்துக்கு 3,00,000 மக்கள் பேரணியாகச் சென்றனர். ஐந்து நாட்களுக்கு முன் மோசமான வகையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹுர்ரியத் தலைவர் ஷேக் அப்துல் அஜீசின் சொந்த கிராமம் அது. ஜம்முவுக்குச் சரக்குகளை எடுத்துச் செல்லும் ஒரே பாதை இந்துத்துவவாதிகளால் தடுக்கப்பட்ட நிலையில், ஸ்ரீநகர்-முசாஃபராபாத் நெடுஞ்சாலையைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை நோக்கி நடந்த பெரும் பேரணியில் அவர் கொல்லப்பட்டார். காஷ்மீர் பிரிக்கப்படுவதற்கு முன் அந்தச் சாலை சரக்கு, மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். ஆகஸ்ட் 18ம் தேதி, அதே எண்ணிக்கையில் திரண்ட மக்கள் ஸ்ரீநகரில் உள்ள டி.ஆர்.சி. மைதானத்தில் கூடி (அந்த அமைப்பு உண்மை மற்றும் அமைதி குழுவாகச் செயல்படவில்லை, சுற்றுலா வரவேற்பு மையம் போலவே செயல்பட்டது) இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஜ.நா.ராணுவக் கண்காணிப்புக் குழுவிடம் மூன்று கோரிக்கைகள் அடங்கிய தீர்மானத்தைக் கொடுத்தனர். அதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:

  • காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

  • ஐ.நா.அமைதிப் படையை முன்னிறுத்த வேண்டும்.

  • கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய ராணுவமும் காவல்துறையும் மேற்கொண்ட போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

(அடுத்த பகுதியில் தொடரும்)

தமிழில் : ஆதி வள்ளியப்பன் (நன்றி ‘அவுட்லுக்’ இதழ்)

நன்றி : சமூக விழிப்புணர்வு இதழ்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.