ஈராக் போரின் பின்னணி எண்ணெயா? சியோனிசமா?

Share this:

அமெரிக்கா ஈராக்கின் மீது போர் தொடுத்து பல வருடங்கள் ஒடிவிட்டது. ஈராக்கைத் தன் கையில் கொண்டு வர அமெரிக்கா பல வகைகளில் முயற்சி செய்தும் அவைகள் ஈடேறாவண்ணம் நாட்கள் கழிந்து வருகின்றன. அமெரிக்கா அனுப்பிய 133000 படைகள் போதாமல் பல சமயங்களில் அவைகள் அதிகரிக்கப் பட்டு தற்போது 165000 என உள்ளது. இவ்வாறு இருப்பினும், ஈராக், அமெரிக்கப் படைகளை சவப்பெட்டியில் வைத்து அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்துவரும் ஒரு தொழிற்சாலையாக செயல் பட்டுவருகிறது.

 

ஈராக் போர் ஒரு பொய்யினை மூலதனமாகக் கொண்டு தொடங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. அதாவது, “சதாம் உசேன் ஆட்சி அணுஆயுதம் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களைக் (WMDs) கொண்டுள்ளது” என கூறி இந்தப் போர் தொடங்கப்பட்டது. போர் தொடங்குவதற்கு முன், ஐக்கிய-நாட்டுசபையின் ஆய்வாளர் குழு ஈராக் சென்று, ஆய்ந்து, “அங்கு பேரழிவு ஆயுதங்கள் இல்லை” என ரிப்போர்ட் வெளியிட்டும் மேற் சொன்ன பொய்-காரணத்தை மேற்கோள் காட்டி அமெரிக்கா தலைமையில் சில நாடுகள் அணிவகுத்தன. ஆனால் உண்மையில் அதில் அமெரிக்கா மட்டுமே சிங்கத்தின் பங்கினைக் கொண்டதாகும். மற்ற பங்கெடுத்த நாடுகள் அமெரிக்காவின் தயவில் உள்ளவைகளாகும். அல்லது அவைகளின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தனிப்பட்ட நட்பிற்கு கட்டுண்டவர்களாவர் (உதாரணம்: பிரிட்டனின் டோனி பிளேர் (Tony Blair)). இதனால் அந்தந்த நாடுகள் ஏதோ இறையாண்மையற்ற நாடுகளைப் போல தனக்கென்று எந்த வெளியுறவுக் கொள்கையுமின்றி அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை ஏற்று போருக்காக அணிவகுத்தன.

போர் தொடங்கியது. சதாமிற்காக அவரது படைகள் போரிடாமல் அவரைக் கைவிட்டது. (அதற்கான காரணங்களை நான் ஆராய வில்லை). ஏதோ ஒரு காரணத்திற்காக பிடிபட்ட சதாம் வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக கொல்லப்பட்டார். அவர் மீது வீசப்பட்ட உண்மையான குற்றச்சாட்டு, “பேரழிவு ஆயுதங்களை வைத்திருத்தல்”. இது பொய்யென ஆனதும், அவர் மீது, “மனித உரிமை மீறல், இனப் படுகொலை” குற்றச்சாட்டுகள் வீசப்பட்டன. இதற்காக ஒரு கட்டை பஞ்சாயத்து போன்ற ஒரு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு, வழக்கு நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே சதாமின் இரு வழக்குரைஞர்கள் கொல்லப்பட்டிருக்க , கடைசி நேரத்தில் நீதிபதியையும் மாற்றி வேறொருவரை நீதிபதியாக நியமித்து அவருக்கு மரண தண்டனையை விதித்து, மரண தண்டனையின் போது கூட சதாமைக் கீழ் தரமாக ஏசி அவரை ஒரு வழியாக தூக்கிலிட்டுக் கொன்றனர்.

“ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள்” என்பது பொய்; சரி, ஆனால் ஏன் இந்த பொய் கூறப்பட்டது ? விடை மிக எளிமையானது: போர் புரிய ஒரு காரணம். அவ்வளவே. சரி, ஏன் போர் புரிய வேண்டும் ?! இதற்கு விடை அவ்வளவு எளிமையானதல்ல, ஒரு மேலோட்டமான பார்வையில்.

1. “ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள்” என்பது பொய்யென ஆகிவிட்டது. இந்த காரனத்தை தூக்கி வீசுங்கள்.

2. எண்ணெய். இது, போரிற்குப் பிறகு நிகழும் சில காரியங்களுக்கு காரணமாக வேண்டுமானால் இருக்கலாம். போரிற்குப் பிறகு எண்ணெயை எப்படி கையாளுவது என்பதை முனமையான காரணமாகக் கொண்டு, “ஈராக் ஆய்வு குழு” அல்லது “ஹாமில்டன் -பேக்கர் குழு” என்று ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் உறுப்பினர்கள் யார் யார் தெரியுமா ? அவர்கள் ஒன்றும் மனித-உரிமைக்காக குரல் கொடுப்பவர்களோ அல்லது அமைதிக்காக பாடுபடுபவர்களோ இல்லை. மேலும் இவர்கள் பொருளாதார வல்லுனர்களோ அல்லது அரசு மேலாண்மை வல்லுனர்களோ இல்லை. மாறாக, இவர்கள் ஒவ்வொருவரும் எண்ணெய் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் தங்களைச் சம்மந்தப் படுத்தியிருப்பவர்கள். இந்த குழுவின் முக்கிய பரிந்துரை, ஈராக் எண்ணெய் உற்பத்தியை தனியார் மயமாக்க வேண்டும் என்றும் அதன் தனியார் மயமாக்கத்தில் அமெரிக்கா தலையிட்டு “உதவி” செய்ய வேண்டும் என்றும் கூறியதாகும். இப்பரிந்துரை அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் மற்ற தொழில் நிறுவனக்களுக்கு ஒத்து ஊதுவதற்காக ஏற்படுத்தப் பட்டது [1]. மேலும் அமெரிக்க துணை அதிபர் டிக்-செனய் (Dick Cheney)-க்கு எண்ணெய் கம்பெனிகளுடன் தொடர்பு உண்டு. ஆனால் இதுதான் இராக் போருக்கு காரணம். என்று கூறுவதைவிட, இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்றே எண்ணலாம். இவ்வாறு கூறுவதற்குக் காரணம் இக்கட்டுரையின் போக்கில் விளங்கும்.

3. புஷ்ஷின் தந்தைக்கும் சதாமுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிணக்கு. இது பற்றி நாம் உறுதியாக கூறுவதற்கில்லை. ஏனெனில் தேர்ந்த ஆய்வாளர்கள் இந்த கோணத்தில் ஆய்ந்து அளித்த அறிக்கைகள் எதையும் நாம் கண்டதில்லை. இந்த கோணத்தில் கிசுகிசுக்கப் படுகிறதே தவிர நம்மிடம் வேறொன்றும் இல்லை.

4. வேறொரு நாட்டின் நலனுக்காக அமெரிக்காவில் இயங்கிவரும், மற்றும் அதன் வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்கும் அளவிற்கு திறன் படைத்த கள்ளப் பரிந்துரைக் குழுக்கள். அந்த அளவிற்கு சக்திவாய்ந்த குழு ஒன்று அமெரிக்காவில் இருக்கிறதென்றால் அது இஸ்ரேலின் குழுக்கள் தான். இத்தகைய லாபி காரணமாக இருக்கக் கூடுமா என்று சற்று விரிவாக காண்போம்.

மத்திய-கிழக்கு நாடுகளில் புது வகையான ஒரு ஒருங்கு-முறை (order) ஏற்பட அமெரிக்காவின் தற்கால-பழமைவாதிகள் (neoconservatives) வகுத்த திட்டத்தின் ஒரு கட்ட செயலேற்றமே இந்த ஈராக் போர். இது அமெரிக்காவின் நலனைக் கருத்தில் கொண்டு தொடுக்கப்பட்டதொன்றல்ல. அதாவது அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு ஏவப்பட்டதல்ல இப்போர். மாறாக அத்தற்கால-பழமைவாதிகள் நாடிய, அப் புதுவகையில் ஒருங்கமைக்கப்பட வேண்டிய மத்திய கிழக்கு நாடுகளானது (new mid-east), அனைத்து வழிகளிலும் இஸ்ரேலின் நலனுக்காக உள்ளதாக அமைய வேண்டும்[2]. இஸ்ரேலிய லாபியால் நியமிக்கப்பட்ட – அமெரிக்க வெளியுறவு கொள்கையை தீர்மானிக்கும் – இந்த தற்கால-பழமைவாதிகள் திட்டமிட்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளானது பின்வரும் முறைகளின் மூலம் சியோனிச-இஸ்ரேலுக்கு ஏதுவானதாக அமைக்கலாம்.

(அ) சியோனிச கொள்கையில் அமைந்த இஸ்ரேலுக்கு எதிரான ஆட்சிகளை அகற்றுதல்.

(ஆ) ஈராக்கில் (அ)-வினை அமல் படுத்துவதோடல்லாமல், அந்த நாட்டினை அங்கு இருக்கும் பல்வேறு பிரிவு மக்களினிடையே காணப்படும் ஒற்றுமையின்மையைக் காரணம் காட்டி, அதனை உடைத்து பல நாடுகளை உருவாக்குதல். இதன் தேவையாகிறது எவ்வாறு ஏற்படுகிறது எனில் “சியோனிச தேசமானது நைல் நதியிலிருந்து தொடங்கி யூஃப்ரடீஸ் நதி வரை பரந்து விரிந்து இருக்கவேண்டும் [3]” எனும் அவாவினாலேயே. தற்போதுள்ள சியோனிச தேசத்தின் எதிரி நாடுகள் சிறு துண்டுகளாக உடைந்துவிட்டால், சியோனிச தேசத்தின் போரினைத்-துவக்கி-நாடுகளைக்-கைப்பற்றும் வரலாற்றினை எளிதில் தொடர்ந்து விடலாம்.

(இ) ஈராக்கைக் கைப்பற்றி அங்கு உள்ள ஷியா- பிரிவு மக்களை ஆட்சியில் அமர்த்தினால் அந்த ஆட்சியாளர்கள் அமெரிக்காவிற்கு விசுவாசமாக நடந்து கொள்வார்கள். இதனால் அமெரிக்காவிற்கு எதிரான ஈரானிய ஷியா மக்களுக்கும், அமெரிக்க ஆதரவு – ஈராக்கிய ஷியா மக்களுக்கும் இடையே கருத்து வேற்றுமையினை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தி, ஒரு தலைமைக்குக்-கீழ்-கட்டுப்படும் அவர்களது தன்மையினை செயலிழக்கச் செய்யலாம். அதாவது மக்களிடம் ஏற்படும் குழப்பமானது, அவர்களை அமெரிக்க-எதிர்-இமாம்களுக்கு கட்டுறாமல் செய்ய ஏதுவாகும். (ஆனால் போரின் போக்கில், அமெரிக்க-பழமைவாதிகளின் இந்த எண்ணம் ஈடேற வில்லை. சதாம் ஆட்சியில் பட்ட இன்னலிலிருந்து விடுபட ஷியா பிரிவினரின் ஆட்சியை ஷியா மக்கள் விரும்பினாலும், அவர்கள் நிச்சயமாக அமெரிக்காவினால் நிறுவபட்ட ஷியா பிரிவினரின் ஆட்சியை ஏற்பவர்களாக இல்லை. [4] )

(ஈ) ஈராக்கில் (இ) செயலேற்றம் பெற்று அதனால் ஈரானில் மக்கள் தங்கள் தலைமைக்கு அடங்காமல் குழப்பமான நிலையை அடைந்தவுடன், அங்கு “வெல்வெட்-புரட்சி”யினை செய்து ஆட்சிமாற்றத்தினைக் கொண்டுவரலாம். “வெல்வெட் புரட்சி” (velvet revolution) என்பது யாதெனில் அங்கு மக்களுக்கு அல்லது மாணவர்களுக்கு மேற்கத்திய சித்தாந்தங்களைப் புகுத்தி அவர்களைப் போராட்டத்தில் ஈடுபடச் செய்து, அதன் மூலம் அரசினை செயலிழக்கச் செய்தல். அல்லது அந்தப் போராட்டத்தினை அடக்க ஈரான் அரசு மேற்கொள்ளும் அடக்கு முறைகளினால், மக்களிடம் ஏற்படும் நம்பகமின்மையினை சாதகமாகப் பயன்படுத்தி மாபெரும் புரட்சியினை வெடிக்கச் செய்தல். இது போன்ற புரட்சியினைக் கொண்டு செக்கோஸ்லோவாக்கியா-வில் சோஷலிசம் (socialism) தோற்கடிக்கப் பட்டது கருத்தில் கொள்ளப் படவேண்டியது. இதற்காக, ஈரானின் அதிகாரமையங்களைப் பற்றி நன்கு அறிந்த, சமூக-அறிவியலில் சிறந்தோங்கும் கலைஞர்களை அமெரிக்கா தன் திட்டக்-கழகங்களில் (think tanks) வேலைக்கு அமர்த்தி இருப்பது சமீப காலங்களில் வெளிவந்தச் செய்தியாக உள்ளது. வுட்ரோ-வில்சன் மையம் (Woodrow Wilson Centre), அமெரிக்கன் எண்டெர்ப்ரைஸ் கழகம் (American Enterprise Institute) ஆகியவை இது போன்ற திட்டக் கழகங்களுக்கு உதாரணங்கள்.

(உ) லெபனானில் வாழ்ந்து வரும் பல்வேறு மக்கட் பிரிவுகளிக்கிடையே கலகத்தினை மூட்டி மீண்டும் உள்நாட்டுப் போரினை ஏற்படுத்தல். அதனால், சியோனிஸத்தை-ஏற்காமல்-இருக்கும் சிரியாவின் மீது உலக நாடுகளின் சினத்தினைத் திருப்புதல். [5]

(ஊ) ஈரான் மற்றும் சிரியாவின் உதவியுடன் இயங்கும் ஹெஸ்பொல்லா குழுவினரை லெபனானின் இறையாண்மையை மிதித்து அந்த நாட்டின் மீது படையெடுத்து அவர்களை அழித்தல். இது சிரியா மற்றும் ஈரான் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக மனோவியல்-போர் முறையில் ஈடுபட ஏதுவாகும். அத்தோடு சியோனிசத்தின் எதிரி ஒன்றும் அழிந்ததும் ஆகும். (இங்கு தான் ஒரு புதிய வரலாறு நிகழ்ந்து உள்ளது. “உலகிலேயே மிகத் திறமையான இராணுவம்” என்றும் “தோல்வியே காணாத போர் இயந்திரம்” என்றும் பெயர் பெற்ற இஸ்ரேலிய இராணுவம் 1000 லெபானினிய சதாரண குடிமக்களைக் கொன்று தோல்வியைத் தழுவினர். இதில் ‘கானா’ எனும் இடத்தில் ஒரே குண்டில் கொள்ளப்பட்ட 60 சிறுவர்களும் அடங்குவர். ஹெஸ்பொல்லாவினரோ 150 இஸ்ரேலிய இராணுவ வீரர்களைக் கொன்று வெற்றி பெற்றனர். இஸ்ரேல் பின்வாங்கியது. 150 என்று இஸ்ரேல் கூறிகொள்கிறது. உண்மை எண்ணை அவர்களே அறிவர்.)

(எ) ஈராக்கைக் கைப்பற்றி அதன் எண்ணெயை அபரிமிதமாகச் சந்தையில் விற்று, அதன் விளைவாக எண்ணெய் விலையினைக் குறைத்து ஏனைய அரபு நாடுகளின் பொருளாதாரத்தினை நிலைகுலையச் செய்தல். அரபு நாடுகளின் மன்னர்கள் மற்றும் (தேர்தலில் சதிச் செய்து ஆட்சிக்கு வந்த) அதிபர்கள், தங்கள் நலன் கருதி, தங்கள் ஆட்சியின் இறையாண்மைக்கான அங்கீகாரத்தினை வேண்டி அவர்கள் அமெரிக்காவின் சொல் கேட்பவர்களாக உள்ளனர். இவ்வாறு இருக்க அவர்களின் பொருளாதாரத்தினை சீர்குலைத்து அதனால் அவர்களின் ஆட்சிக்கு எதிரான உணர்வுகளை அவர்கள் நாட்டு மக்களிடம் தூண்டினால் அவர்களின் அமெரிக்க ஆதரவு அற்றுப் போக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இஸ்ரேலிய-லாபியின் செல்வாக்கு நிறைந்த அமெரிக்க-பழமைவாதிகளுக்கு அது பற்றி கவலை கிடையாது. அவர்கள் அமெரிக்காவின் நலனுக்காக இல்லை. இவ்வாறு அவர்கள் அமெரிக்க-அரபு உறவில் ஆப்படித்து விட்டால், சியோனிச தேசத்தைப் பற்றி அமெரிக்கா காட்டிக் கொள்ளும் நிலைப்பாடான “இஸ்ரேல் அமெரிக்காவின் பாதுகாப்புக்கான ஒரு சொத்து” என்பதினை அதிக அழுத்தத்துடன் அமெரிக்க மக்களிடம் கூற இயலும். [6]

இவ்வாறு அமெரிக்க சியோனிச பழமைவாதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் அமைய வேண்டுமென விரும்பும் “புதிய ஒருங்கமைவு”(New middle east)-க்கு பல கோணங்களில் ஈராக்கினைக்-கைப்பற்றல் சாதகமான காரணியாக திகழ்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலைப் பற்றி பற்-பத்தாண்டுகளாக எழுதும் ராபர்ட்-ஃபிஸ்க் அவர்கள் கீழ்கண்டவாறு இப்போரின் நோக்கத்தினைப் பற்றிக் கூறுகிறார்: அமெரிக்க அதிபருக்கு உதவியாக ஈராக் போருக்கான திட்டங்களை வகுத்து செயலாற்றி வருபவர்களில் பெரும்பாலோர், இஸ்ரேலுக்காக பணியாற்றிய அல்லது இன்னும் பணியாற்றிவரும் லாபியாளர்கள். அரபு நாடுகளிலேயே மிகச் சக்திவாய்ந்ததாக திகழ்ந்து வந்த ஈராக்கினை அழிப்பதில் பல வருடங்களாக அவர்கள் முன்முனைப்புடன் இருந்தனர். அமெரிக்க அதிபர் புஷ்- ன் செல்வாக்கு மிகுந்த அறிவுரையாளர் ரிச்சர்ட்-பெர்லே உட்பட, டக்ளஸ்-ஃபெய்த், பால்-வொல்ஃபோவிட்ஸ், ஜான் – பால்டன், டொனால்ட்-ரம்ஸ்ஃபீல்ட் போன்றோர் பல வருடங்களாக ஜார்ஜ்-புஷ் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே ஈராக்கினை அழிக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். அவர்கள் இதனை அமெரிக்க நலனுக்காகச் செய்யவில்லை. 1996-ம் ஆண்டு இஸ்ரேலைப் பற்றி வெளியான “A Clean Break: A New Strategy for Securing the Realm ” ( மேலோங்கலை அடைய புதிய யுத்தி) எனும் அறிக்கை ஈராக் போரினை வலியுறுத்துகிறது. இந்த அறிக்கை அமெரிக்காவுக்காக எழுதப்பட்டதல்ல. மாறாக, இஸ்ரேலின் லிக்குட் (எனும் பழமைவாத) கட்சியிலிருந்து இஸ்ரேலிய பிரதம-மந்திரியாக தேர்ந்தெடுக்கப் படவிருக்கும் பின்யாமின் -நேதன்யாகுவின் நலனுக்காக எழுதப்பட்டது. அந்த அறிக்கையைத் தயாரித்த குழுவின் தலைவர் யார் தெரியுமா ? அவர் தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் தேந்தெடுக்கப் பட்டவுடன் அவருடைய செல்வாக்கு மிகுந்த ஆலோசகராக இருக்கும் ரிச்சர்ட்-பெர்லே. நிச்சயமாக ஈராக்கினை அழிப்பது, மத்திய-கிழக்கில் அணு-ஆயுதங்களின் மீது இஸ்ரேல் கொண்டுள்ள மேலாதிக்கத்தினையும், பாலஸ்தீனர்களை ஒழித்து அங்கு யூத குடியிருப்புகளை ஏற்படுத்திவரும் இஸ்ரேலின் செயல்களுக்கும் பாதுகாப்பினை அளிக்கும். அமெரிக்க அதிபர் புஷ்-ம் பிரிட்டனின் அப்போதைய பிரதமர் பிளேரும் இதைப் பற்றி விவாதிக்க தயாராகாத நிலையில் அமெரிக்க-யூத தலைவர்கள் போரின் ‘பயன்’களைப் பற்றி பேசுகின்றனர். ஆனால் அமெரிக்க யூதர்களில் சிலர் முதன் முதலில் இஸ்ரேலிய தொடர்பினை அம்பலப்படுத்தினர். அவர்கள் “ஈராக்கின் போருக்கு காரணம் எண்ணெயல்ல; மாறாக டைக்ரிஸ் ஆற்றின் நீர். அது இஸ்ரேலின் வறண்ட பகுதிகளுக்கு நீர் பாய்ச்ச உதவும்” என்று போட்டு உடைத்தனர். உடனே ஜான் -ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக (John Hopkins) பேராசிரியர் இலியட்-கோஹன் (Eliot Cohen) போன்றோர் இது பற்றிய விவாதத்தினை தடைசெய்ய வேண்டும் என்று இஸ்ரேலின் ஆதரவில் எழுதுகின்றனர். இஸ்ரேலையும் இராக் போரினையும் இணைப்பது கோஹன்-ன் பார்வையில் அது ஒரு “யூத-வெறுப்பு” (Anti-semitism) ஆகுமாம் !!!. [7]

ஜேம்ஸ்-பெட்ராஸ் (James Petras)-ன் “The Power of Israel in the United States” (அமெரிக்காவில் இஸ்ரேலின் செல்வாக்கு) எனும் புத்தகம், ஈராக் போருக்கு இஸ்ரேலிய லாபிதான் காரணம் என்றும், எண்ணெய் காரணமாக இருக்க ஒரு ஆதாரமும் இல்லை என்றும் கூறுகிறது [8]. போருக்கு முந்தைய காலங்களில் எண்ணெய் கம்பெனிகளின் செய்தி-வெளியீடுகளும் ஆவணங்களில் வெளியான கட்டுரைகளிலும் (journal articles) இதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் இப் புத்தகத்தின் ஆசிரியரால் காண இயலவில்லை. மாறாக அப்போது சதாம்-உசேனின் ஈராக்கிற்கு விதிக்கப் பட்டிருந்த பொருளாதார தடையை நீக்க தான் கோரி வந்துள்ளனவாம். மேலும் அவர் கூறுவது போல் இஸ்ரேலுக்காக தன்னை அர்ப்பனித்தவர்களான பால்-வொல்ஃபோவிட்ஸும் சரி, ரிச்சர்ட்-பெர்லேயும் சரி, இவர்களுக்கும் எண்ணெய்-கம்பெனிகளுக்கும் தொடர்பில்லை. இவர்கள் ஈராக் போருக்கு முக்கிய காரண-கர்த்தாக்கள். மேலும் “யூத-சுத்திகரிப்பு”(Jewish Purity), “இஸ்ரேலிய-விரிவாக்கம்”(Jewish Expansion) மற்றும் “யூத-குடியிருப்புகள்” (jewish settlements) முதலிய இனவெறி கொள்கைகளின் ஆதரவாளர்களாகிய, ஈராக் போரில் பங்கு எடுத்துக் கொண்ட, இலியட்-ஆப்ராம் (Eliot abram), டக்ளஸ்-ஃபெய்த் போன்றோரும் எண்ணெய் கம்பெனிகளுடன் தொடர்பு உடையவர்கள் அல்லர்.

இராக்கில் “மனித குலத்தின் பேரழிவுக்கான ஆயுதங்கள் (WMDs) உள்ளன !!” என அமெரிக்க உளவு துறை அளித்த தகவலை அடிப்படையாகக் கொண்டுதான் இப்போர் துவக்கப் பட்டதென்பது அனைவரும் அறிந்ததே. அது ஒரு பொய்யென்பதும் அனைவரும் அறிந்ததே. பெட்ராஸ் தன் புத்தகத்தில், அமெரிக்க-யூதர்களால் நிரம்பிய இஸ்ரேலிய-லாபியாளர்கள் எவ்வாறு இத்தகைய பொய்யை “உளவு” எனும் பேரில் நுழைத்தனர் என்பதை விளக்குகிறார். லாபியாளர்கள் தங்கள் ஆட்களை உளவுத்துறை, துணை-அதிபர் அலுவலகம் போன்றவைகளில் நிறுத்தி தங்களுக்கு சாதகமானமுறையில் ஆவணங்களைத் தயாரித்து அவைகளை செயலேற்றம் செய்தனர்களாம். பால்-வொல்ஃபோவிட்ஸும் டக்ளஸ்-ஃபெய்த்தும் சேர்ந்து உருவாக்கிய “Office of Special Plans” (தனித் திட்ட அலுவலகம்) எனும் அமைப்புதான் ஈராக் போருக்குக் காரணமான ‘உளவு” செய்தியினைத் தயாரித்ததாம். அந்த அலுவலகத்தின் தலைவர்கள் அமெரிக்க யூதரான ஆப்ராம்-ஷுல்ஸ்கி மற்றும் பழமைவாதி வில்லியம்-லுட்டி. இவர்களது பொய்-உளவுகள் அமெரிக்க-துணை-அதிபரின் அலுவலகத்திற்கு அவரது செயலாளரும் சியோனிச சிந்தனையாளருமான இர்விங்-லிப்பி (Irving “Scooter” Libby) என்பவரால் வழங்கப்பட்டதாம். பழமைவாதி ஜான் பால்டன் துணை-அதிபர் அலுவலகத்திற்கும் பென்டகனுக்கும் (pentagon) இடையே நடைபெறவேண்டியவைகளைப் பார்த்துக் கொண்டார். பாதுகாப்புக் கொள்கைக் குழு (Defense Policy Board)-ன் தலைவர் ரிச்சர்ட்-பெர்லே மற்றும் அதில் உறுப்பினர்களாக இருந்த சியோனிசர்களும் பழமைவாதிகளுமான கெனெத்-அடல்மன் (Kenneth Adelman), இலியட்-கோஹன்,ஜேம்ஸ்-வுல்சீ (James Woolsey) போன்றோர் அவைகளுக்கு வலுச்சேர்த்தனர்.

எனவே சியோனிசத்தின் வெளிப்பாடுதான் இந்த ஈராக் போர். ஈராக் போரினையும் இஸ்ரேலினையும் இணைப்பது யூத-வெறுப்பு என்போருக்கு: இஸ்ரேலுக்கு இராக் போரில் விருப்புகள் உண்டு என்பது இஸ்ரேலின் பிரதமர் எஹூத்-ஒல்மர்ட்-ன் பேச்சு வெளிப்படுத்துகிறது [9]. எண்ணெயைக் காரணமாகக் கொண்டு வேண்டுமானால் டிக்-செனய் சியோனிச சிந்தனையாளர்களின் டிசைனை அதிகம் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த போர் 655000 க்கும் மேற்பட்ட ஈராக்கியர்களைக் காவு வாங்கியுள்ளது என்பது ஜான் ஹாப்கின்ஸ பல்கலைகழகத்தின் ஒரு சர்வே அறிக்கை [10].

சுட்டிகளும் அடிக்குறிப்புகளும்:

[1] Troops Out, Oil Companies In: The Baker Agenda ? By Tom Hayden
http://www.huffingtonpost.com/tom-hayden/troops-out-oil-companies_b_35816.html

[2] http://www.zmag.org/content/showarticle.cfm?ItemID=10605

[3] http://en.wikipedia.org/wiki/Greater_Israel

[4] ஆனால் இந்த சதித்திட்டம் ஈடேறவில்லை. ஈராக்கின் ஷியா மக்கள், ஷியா-அரசாங்கத்தை விட ஷியா-இமாம்களையே அதிகம் விசுவாசிப்பவர்கள். மேலும் ஈரானின் ஷியா இமாம்களைப் போலில்லாமல் ஈராக்கின் ஷியா இமாம் அல்-ஸிஸ்தானி அவர்கள் அரசாங்கமும் மதமும் தனித்தனியே இருக்கவேண்டும் என நம்பிக்கையுடையவர் ஆவார் [11]. எனவே அவர் அமெரிக்கா நிறுவிய ஷியா-அரசாங்கத்துடன் தன்னை இணைத்துக் கொள்ள மறுத்துவிட்டார். மற்றொரு ஷியா இமாமான அல்-ஸதிர் அமெரிக்காவின் விரோதியாவார். இவர் சிஸ்தானியைப் போல பாரசீகர் இல்லை. இவர் ஒரு அராபியர் ஆவார். இதனால் இவருக்கும் ஈரானுக்கும் அவ்வளவு நெருக்கமான தொடர்பு இல்லையெனினும், இவர் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவிற்கு எதிராக இயங்குபவர். ஆரம்ப காலத்தில் ஷியா ஆட்சிக்கு இவர் ஷியா-மேலாண்மையைக் கருத்தில் கொண்டு ஆதரவு அளித்தாலும் பின்பு அதனை அவர் விலக்கிக் கொண்டார். தற்போதைய ஷியா-ஆட்சியாளர்கள் எந்த பிரிவு மக்களின் ஆதரவும் இன்றி இருக்கின்றனர்.

[5] சமீப காலங்களில் சிரியாவிற்கு எதிரான வைதீக-பிரிவு (sunni) மற்றும் மரோனைட்-கிறிஸ்தவப் பிரிவின் (maronites) தலைவர்கள் கொலை செய்யப்பட்டதை நினைவு கூறலாம். இந்த கொலைகளில் சிரியாவின் பங்கு கூட இருக்கக் கூடும் எனினும் ‘இஸ்ரேலின் பங்கு இருக்காது’ என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை. பொதுவாக இஸ்ரேல் லெபனானின் உள்நாட்டு விவகாரங்களில் ஈடுபடுவது தெளிவு. 1989-ல் நிகழ்ந்த சப்ரா-ஷட்டிலா படுகொலையை நினைவு கூறலாம் [12].

[6] http://www.zmag.org/content/print_article.cfm?itemID=10185&sectionID=1

[7] http://www.counterpunch.org/fisk02152003.html

[8] http://fanonite.org/2007/01/15/the-power-of-israel-in-the-united-states/

[9] http://www.haaretz.com/hasen/spages/836374.html

[10] http://web.mit.edu/cis/human-cost-war-101106.pdf

[11] http://www.csmonitor.com/2004/0220/p01s02-woiq.html

[12] http://english.aljazeera.net/NR/exeres/708DECA5-113B-4546-829D-500DA986DEA3.htm

 

நன்றி: மு.மாலிக்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.