சர்வதேச மகளிர் தினம்-மறைக்கப்படும் உண்மைகள் – டாக்டர்.ஜெ.முஹைதீன்

மார்ச் 8 ஐ சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எப்படிக் கொண்டாடப்படுகிறது???

தொலைக்காட்சிகளில் பல பல நிகழ்ச்சிகளைக் காணலாம்.

சினிமா நடிகைகளின் பேட்டிகள்

புத்தம் புதிய திரைப்படங்கள்

அழகி(?)ப் போட்டிகள்

ஊர்வலங்கள்

ஆர்ப்பாட்டங்கள்

கருத்தரங்குகள்

மகளிர் அமைப்புகள் இணைந்து இடஒதுக்கீடு குறித்து காரசாரமாக விவாதிக்கலாம்

ஒவ்வொரு ஆண்டும் இதே போன்ற நிலையைத் தான் உலகம் கண்டு வருகிறது. முகங்கள் மாறுகின்றது, ஆனால் பெண்களின் நிலை மட்டும் மாறவில்லை.

காரணம்..?

இன்றைய பெண்களின் உண்மை நிலையை மறைத்து போலியான ஒரு முன்மாதிரியை நம் பெண்கள் முன் எடுத்துக்காட்டப்பட்டு வருகிறது.

ஆண்களைப் போல முடி அலங்காரம், கால் மூட்டு வரை ஆடை, உதடுகளில் சாயம், முகங்களின் மீது கலர் பவுடர்.. இது தான் இன்று பெண்களுக்கு முன்மாதிரி? 

ஆனால் இந்த நிலைக்கு மேற்கத்தியப் பெண்கள் வருவதற்கு அவர்கள் அனுபவித்த துன்பங்கள் பலப் பல.

பெண்களுக்கு ஆன்மா உண்டா இல்லையா? என்ற விவாதங்கள் நடந்த காலமும் உண்டு. பெண்களுக்குரிய உரிமைகள் குறித்த அறிவே சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் மேற்குலகில் தோன்ற ஆரம்பித்தது. 

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் ‘பெண்கள் தினம்’ என்ற ஒருநாள் கடைபிடிக்கப்பட்டது.

1909 ஆம் ஆண்டு முதல் தேசிய பெண்கள்தினம் அமெரிக்காவில் கடைபிடிக்கப்பட்டது. நியூயார்க்கில் 28-02-1908 ஆம் ஆண்டு நடைபெற்ற நூற்பாலைப் போராட்டத்தை நினைவு கூர்ந்து தான் இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 

1911 ஆம் ஆண்டு ‘சர்வதேசிய பெண்கள் தினம்’ மார்ச் 19 ஆம் நாள் அனுசரிக்கப்பட்டது. வேலை செய்யும் உரிமை, மற்றும் பெண்களுக்கான ஓட்டுரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன. 

1917 ஆம் ஆண்டு ரஷ்யப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ‘மார்ச் 8 ஆம் நாள்’ பெண்களுக்கான வாழ்வுரிமையை வேண்டி போராட்டம் நடைபெற்றது. இறுதியில் ‘ஸார் அரசு’ பெண்களுக்கு ஓட்டுரிமையை வழங்கியது. 

இந்த போராட்டப் பாதையின் இறுதியில் 1975 ஆம் ஆண்டு ‘ஐநா சபை’ மார்ச் 8 ம் நாளை சர்வதேசியப் பெண்கள் தினமாக அறிவித்தது.

மேலே குறிப்பிட்டது பெண்களின் அடிப்படை உரிமைகைளைப் பெற நடந்த போரட்டத்தின் சில தகவல்களே..!

இவ்வாண்டு பெண்கள் தினத்திற்கான தலைப்பாக (Theme) ஐநா சபை அறிவித்திருப்பது ‘Ending Impunity For Violence Against Women And Girls’ பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துவது’ என்பதாகும். 

இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் ‘கோஷங்களை’ ஐநா சபை எழுப்பிக் கொண்டு தான் வருகிறது. ஆனால் நடந்து கொண்டிருப்பதோ கொடுமையிலும் கொடுமை! உதாரணத்திற்கு சில புள்ளிவிபரங்கள்.. 

வறுமையில் உழலும் பெண்களும் குழந்தைகளும் :

5 முதல் 14 வரை வயது உள்ள குழந்தைகளில் 250 மில்லியன் பேர் தொழிலாளர்களாக வாழ்கின்றனர். அதில் 120 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். இதில் பாதிக்கு மேல் சிறுமிகள் ஆவர். (Human Rights Watch 2001)

வளர்ந்த நாடு என்று கூறப்படும் கனடாவில் 16.4 சதவீதம் குழந்தைகள் (அதில் பாதி சிறுமிகள்) வறுமையில் உள்ளனர். (Campaign 2000’s Report)

இதை வாசித்தீர்களா? :   அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! அருந்ததி ராய்!!

பாலியல் ரீதியான வன்முறைகள் :

பெண் கைதிகளில் 80 சதவீதம் பேர், தங்களின் குழந்தைப் பருவத்தில் பாலியல் ரீதியாக தொல்லைக்கு ஆளானவர்கள். (Conference on Child Victimization Child Offending 2000) 

18 வயதிற்குக் கீழே உள்ள பழங்குடி சிறுமிகளில் 75 சதவீதம் பேர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. (Alliance of Five Research Centres on Violence 1999)

உலக சுகாதார நிறுவனம் (WHO) வின் அறிக்கை இன்னும் அதிர்ச்சியளிக்கின்றது. 

உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 மில்லியன் குழந்தைகள் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர் என்று கூறுகிறது. (WHO 2001)

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மில்லியன் குழந்தைகள் உலகமெங்கும் ‘பாலியல் தொழிலில்’ தள்ளப்படுகின்றனர் என்று மற்றொரு ஆய்வு கூறுகின்றது. (Casa Alianza 2001)

இணையத்தளத்தில் பாலியல் கொடூரம் :

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6.5 மில்லியன் குழந்தைகள் இணையத்தளத்தில் தேவையற்ற பாலியல் நிகழ்வுகளைக் கண்டு பாதிப்பிற்குள்ளாகின்றனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. (Estes & Weiner 2001)

போரினால் ஏற்படும் விளைவுகள்:

போர் மற்றும் அதன் விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான்.

உலக குழந்தைகள் நிறுவனமாக இன் ஆய்வுப்படி சென்ற 10 ஆண்டுகளில் உலகமெங்கும் நடைபெற்ற ஆயுத போராட்டங்களில் 2 மில்லியன் குழந்தைகள் (பாதிக்கு மேல் குழந்தைகள்) கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 6 மில்லியன் குழந்தைகள் காயப்படுத்தப்பட்டுள்ளனர். (Human Rights Watch 2001)

புள்ளிவிபரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

பெண் குழந்தைகளின் நிலைமை தான் இப்படியென்றால் ‘பெண்களின்’ நிலையோ மிக மிகக் கொடூரம்.

பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது வீட்டில் தான் என்று ஆய்வுகள் தெளிவாக்கியுள்ளது.

ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற வளர்ந்த(?) நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி,

கொலை செய்யப்பட்ட பெண்களில் 40-70 சதவீதம் பேர் தங்களின் கணவன் (அல்லது ஜோடி) களால் தான் கொலை செய்யப்பட்டுள்ளனர். (Human Rights Watch Group)

அதே அறிக்கை இன்னும் பல அதிர்ச்சித் தகவல்களைத் தருகிறது.

1. ஆசியாவில் மட்டும் 60 மில்லியன் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர் 

2. விபச்சாரத்திற்காக கடத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் (1,00,000 பேர் லத்தீன் அமெரிக்காவிலிருந்தும், 50,000 பேர் ஆப்ரிக்காவிலிருந்தும்) என்று மனித உரிமை அறிக்கை கூறுகிறது. 

இவை நம்முடைய பத்திரிக்கைகளும், ஊடகங்களும் வெளிக்கொணராதவை. (இப்புள்ளி விபரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல). ஆனால் நம்முடைய பெண்களுக்கு இந்நிகழ்வுகள் ஏதும் பாதிக்காவண்ணம் நம்மூர் தொலைக்காட்சிகள் மெகா தொடர்களைத் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. 

ஆனாலும், இந்த மெகா தொடர்களின் போதையையும் தாண்டி நம்மூர் பெண்களைப் பாதித்த நிகழ்வு ஒன்று உண்டு.

அது தான் நொய்டா சிறுமிகளின் படுகொலைச் சம்பவங்கள். ஆனால்…, மேலே கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்களைக் காணும் போது இந்த ‘நொய்டா’ படுகொலைக்ள மிகமிகச் சிறியது தான் என்று எண்ணத் தோன்றும். ‘நொய்டா’ வைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலும் இது போன்ற கொலைகள் நடந்ததாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. 

இதை வாசித்தீர்களா? :   ஓர் உண்மைச் செய்தியும் ஒரு பெண் கருவின் இறுதி மூச்சும்

இக்கட்டுரையின் நோக்கம் – புள்ளி விபரங்களையும் வரலாற்றையும் தருவது மட்டுமல்ல. மாறாக இதற்கான காரணத்தையும் தீர்வுகளையும் தருவது தான்.

இக்கொடுமைகள் ஏன் பெண்களுக்கெதிராக நடைபெறுகிறது..?

இதற்கான அடிப்படைக் காரணங்கள் :

பெண்களும் குழந்தைகளும் உடல்ரீதியாக ஆண்களை விட வலிமை குன்றியவர்கள் (சில பெண்கள் விதிவிலக்காகலாம்).

பெண்களின் உரிமைகள் என்ற போர்வையில் பெண்களைக் ‘கற்கால’ நாகரீகத்திற்கு இந்த ‘மேற்குலகம்’ கொண்டு சென்று விட்டது. ஆரம்பத்தில் கூறியது போல் பெண்களின் ‘மாதிரி’ (Model) என்பது ஆடையிலும், வெள்ளை நிற அழகிலும் மட்டும் தான் என்ற நிலை உருவானது. எனவே பெண்களின் அழகு வணிகப் பொருளானது. இறுதியில் ‘பாலியல் கொடுமைகள்’ சிறுமிகளிடமிருந்து தொடங்கியுள்ளது. 

குடும்ப உறவுகள் துண்டிக்கபட்டதால் வீட்டிலேயே பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். (Domestic Violence) இது தவிர மற்ற காரணங்களும் உள்ளன. (வரதட்சணை, பெண்சிசுக் கொலை)

தீர்வுகள் ..

1975 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பெண்களின் உரிமைக்காக ஐநா சபை நிறைவேற்றிய தீர்மானங்கள் ஏராளம். பெண் உரிமை அமைப்புகளும், பெண்ணியவாதிகளும் எழுப்பிய குரல்களும், போராட்டங்களும் பெண்களின் நிலையை மாற்றினவா என்றால் – இல்லை – என்றே சொல்ல வேண்டும் (மேலே குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் தான் சான்று) 

இஸ்லாமியத் தீர்வு

பெண்களுக்கு முழு பாதுகாப்பையும், உரிமையையும் இஸ்லாம் வழங்குகிறது. ஆனால் இப்படி ஏதேனும் ஒரு ஆண் இன்று கூறினால் ‘ஆணாதிக்கம்’ என்று நகைக்கப்படுகின்றனர். இவ்வாறு இஸ்லாமியக் கருத்தோட்டம் சில பெண்ணியவாதிகளால் நகைப்புக்குள்ளாக்கப்படுவதே ‘பெண்களுக்கு இஸ்லாம் பாதுகாப்பு வழங்குகிறது’ என்ற கூற்று உண்மை என்பதை விளக்குகிறது என்றே கூற வேண்டும். 

உலகமெங்கும் பெண்கள் சொத்துரிமைக்காகப் போராடுவதற்கு சுமார் 12 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் சொத்துரிமையைப் பெண்களுக்கும் உண்டு என்று கூறியது. (பார்க்க திருக்குர்ஆன் 4:7-12) 

மஹ்ர் என்ற சொத்தினை திருமணத்தின் போதே கணவனிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் (குர்ஆன் 4:4) என்று சட்டமியற்றியது இஸ்லாம்.

திருமணம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்றால் மஹர் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். திருமணத்திற்கும் பொருளாதார உரிமைக்கும் தொடர்பை ஏற்படுத்திய மார்க்கம் எவ்வாறு பெண்களைக் கொடுமைப்படுத்தும். 

போரிலே பெண்கள், குழந்தைகளைக் கொல்லுவது தடைசெய்யப்பட்டது.

பாலியல் ரீதியான கொடுமைகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.

பெண்களின் கற்பிற்கு களங்கப்படுத்தும் செயல் தண்டனைக்குரியது என்று இஸ்லாம் கூறுகிறது (24:4)

மொத்தத்தில் இஸ்லாம் வழங்கிய பெண் உரிமைகள் என்பது ‘ஆண்களால்’ வழங்கப்பட்டதல்ல, மாறாக இறைவனால் வழங்கப்பட்டவை.

இறுதியாக..

இன்று நடைபெறும் கொடுமைகளும் அதற்கெதிரான போராட்டங்களும் நமக்கு ஓர் படிப்பினையைத் தருகிறது. ‘கற்கால நாகரீகத்தை’ ஜாஹிலியத்தை (அறியாமையை) அகற்றி அமைதியை ஏற்படுத்த இஸ்லாமிய பெண்கள் முன்வர வேண்டும். இல்லையெனில் ‘நொய்டா’ சம்பவங்களும் இதுபோன்ற வன்கொடுமைகளும் நம்மைச் சுற்றி நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்பது திண்ணம். 

நன்றி: தமிழ்இஸ்லாம்.காம்