கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை

Share this:

குஜராத் மாநிலம் கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில் பிப்.27, 2002 அன்று சபர்மதி விரைவு வண்டியின் S6 பெட்டி எரிந்து போனதையும்; அத்தீவிபத்தில் 58 பேர் இறந்து போனதையும், “உள்ளூர் முசுலீம் மதவெறியர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்”; “ராம பக்தர்களைக் கொல்ல பாக். உதவியுடன் நடத்தப்பட்ட சதி” என இந்து மதவெறிக் கும்பல் ஊதிப் பெருக்கியது.

ஆனால், இச்சம்பவம் குறித்து நடந்து வரும் விசாரணையில், குஜராத் முசுலீம்கள் மீது இனவெறிப் படுகொலையை ஏவிவிடக் காத்திருந்த இந்து மதவெறிக் கும்பல், அதற்கொரு வாய்ப்பாகவே கோத்ரா சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டது என்ற உண்மை சட்டபூர்வமாகவே அம்பலமாகி வருகிறது.


“கோத்ராவைச் சேர்ந்த முசுலீம் தீவிரவாதிகள், 60 லிட்டர் பெட்ரோலை வெளியே இருந்து S6 பெட்டிக்குள் ஊற்றி, அதற்குத் தீ வைத்தனர்” என்பதுதான் இச்சம்பவம் பற்றி இந்து மதவெறிக் கும்பல் குஜராத் போலீசு கூட்டணியின் முதல் புலனாய்வுக் கண்டுபிடிப்பு.


இக்கண்டுபிடிப்பை குஜராத் மாநிலத் தடய அறிவியல் துறை கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி அளித்த இரண்டு அறிக்கைகளுள் முதலாவது அறிக்கை, “தீப்பற்றிய விதம், அது பரவிய முறை, எரிந்த தன்மை இவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது, உள்ளுக்குள் இருந்துதான் தீயைப் பற்ற வைத்திருக்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளது.


இரண்டாவது அறிக்கை, “ரயில் வண்டியின் ஜன்னல் தரைமட்டத்தில் இருந்து சுமார் 7 அடி உயரம் உள்ளது. எனவே, வெளியில் இருந்து எரிபொருளை ரயிலுக்குள் ஊற்ற முடியாது. எரிபொருள் திரவம் வெளியில் இருந்து ஊற்றப்பட்டிருந்தால், பெட்டியின் வெளியில் இருக்கும் அடிப்பாகமும் எரிந்திருக்கும். ஆனால், அடிப்பாகம் எரியாததால், எரிபொருள் வெளியே இருந்து ஊற்றப்படவில்லை என்பது உறுதி” எனக் குறிப்பிட்டது.


இதுவொருபுறமிருக்க, “முசுலீம் தீவிரவாதிகள்” பெட்ரோல் வாங்கியதாகச் சொல்லப்பட்ட பெட்ரோல் நிலையத்தைச் சேர்ந்த பிரபாத் சிங் மற்றும் ரஞ்சித் சிங் என்ற இரு ஊழியர்கள், “தங்களிடமிருந்து பெட்ரோல் வாங்கப்படவில்லை” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


இந்து மதவெறிக் கும்பலின் முதல் “கண்டுபிடிப்பு” புஸ்வானமாகிப் போனபிறகு, “S6 மற்றும் S7 பெட்டிகளை இணைக்கும் இணைப்பை கிழித்துவிட்டு, S6 பெட்டிக்குள் நுழைந்த தீவிரவாதிகள், திரவ எரிபொருளை கீழே கொட்டிவிட்டு, அதன்பின் வெளியே இறங்கிப் போய் தீ வைத்ததாக” இரண்டாவது கண்டுபிடிப்பை வெளியிட்டனர். இதற்கு ஏற்றாற்போல, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய முதல் தகவல் அறிக்கையும் திருத்தப்பட்டது.
கோத்ரா சம்பவம் பற்றி விசாரணை நடத்திவரும் கே.ஜி.ஷா நானாவதி கமிசன் முன்பு சாட்சியம் அளித்துள்ள பூபத் பாய் என்ற பயணி, “வெளியில் இருந்த கும்பலில் இருந்து எவரும் ரயில் பெட்டிக்குள் ஏறியதை நான் பார்க்கவில்லை” எனக் கூறியுள்ளார்.


துவாரகா பாய் என்ற பயணி, “நான் தப்பித்து வெளியேறும்வரை… எத்தகைய திரவப் பொருளும் உள்ளே வீசப்பட்டதை நான் பார்க்கவில்லை. யாரும் எந்த நபரும் எத்தகைய திரவத்தையும் தெளிப்பதையோ அல்லது பெட்டியைக் கொளுத்துவதையோ நான் பார்க்கவில்லை” எனச் சாட்சியம் அளித்துள்ளார். டி.என். திவிவேதி என்ற பயணி, பெட்டியின் இடதுபுற மேல்பாகத்தில் இருந்துதான் கரும்புகை எழுந்து தீப்பிடித்ததாகக் கூறியிருக்கிறார்.


S6 பெட்டி தீக்கிரையானதைப் பற்றி விசாரிக்க ரயில்வே அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட பானர்ஜி கமிசன், தனது இடைக்கால அறிக்கையில், “அரி பிரசாத் ஜோஷி என்ற பயணி பெட்டியின் பின்பக்கம் வழியாக இருக்கை எண் 72 அருகில் இருந்து வெளியே இறங்கியிருக்கிறார். இருக்கை எண் 72 அருகே உள்ள ரயிலின் தரை தளத்தில் பெட்ரோல் வீசப்பட்டு அதன் காரணமாகத் தீ பற்றியிருந்தால், அந்தப் பகுதியில் இருந்து ஜோஷி உயிர் தப்பியிருக்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளது.


பானர்ஜி கமிசன் விசாரணைக்கு உதவி புரிந்த துனுராய், பேரா. தினேஷ் மோகன் என்ற இரு தொழில்நுட்ப வல்லுனர்கள், “S6 மற்றும் S7க்கு இடையே உள்ள இணைப்பு இரும்புச் சுவரால் ஆனது மட்டுமன்று; இது, “நியோபிரீன் ரப்பர்” என்ற பொருளால் நிரப்பப்பட்டது. எனவே, இதனை உடைப்பதோ வெட்டி வழி ஏற்படுத்துவதோ சற்றும் இயலாத காரியமாகும்” எனச் சான்று அளித்துள்ளனர்.


இந்து மதவெறியர்கள் கூறுகிறபடி முசுலீம்கள் பெட்டிக்கு வெளியில் இருந்தோ, அல்லது பெட்டிக்குள் நுழைந்தோ பெட்ரோல் போன்ற திரவ எரிபொருளைக் கொட்டியிருந்தால் உடனடியாக தீப்பற்றியிருக்கும். ஆனால், நானாவதி ஷா கமிசனிலும், பானர்ஜி கமிசனிலும், சாட்சியம் அளித்துள்ள பயணிகள், “முதலில் மூச்சு முட்டும் அளவிற்குக் கரும்புகை வந்தது; அதன்பின் சில நிமிடங்கள் கழித்துதான் நெருப்பு எரிந்ததாக”ச் சாட்சியம் அளித்துள்ளனர்.


சம்பவம் நடந்த அன்று S6 பெட்டியில் பயணம் செய்தவர்களுள் பெரும்பாலானோர் குஜராத் மாநில விசுவ இந்து பரிசத்தின் ஆதரவாளர்கள்தான். இது, பயணிகள் முதன்பதிவு பட்டியலின் மூலமும், முன்பதிவு செய்து S6 பெட்டியில் பயணம் செய்த 52 பயணிகளில் 41 பேர் உயிர் பிழைத்திருப்பதை வைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


S6 பெட்டியில் பயணம் செய்த விசுவ இந்து பரிசத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் கையில் திரிசூலத்தை வைத்துக் கொண்டு இருந்துள்ளனர். எனவே, இப்படிப்பட்ட நிலையில், “எவ்வித எதிர்ப்பும் இன்றி சிலர் பெட்டிக்குள் புகுந்து திரவ எரிபொருளைக் கொட்டியோ அல்லது திரவ எரிபொருளை ரயில் பெட்டிக்கு வெளியில் இருந்து விசிறி அடித்தோ தீ வைத்திருப்பார்கள் என்பது நம்ப முடியாததும், அபத்தமானதும் ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ள பானர்ஜி கமிசன், S6 பெட்டி தீக்கிரையானதை, “ஒரு தற்செயலான தீ விபத்துதான்” என முடிவு செய்து, இடைக்கால அறிக்கையை அளித்திருக்கிறது.


இச்சம்பவம் நடந்த சமயத்தில் குஜராத் மாநில போலீசுத் துறையின் உளவுப் பிரிவில் கூடுதல் போலீசு இயக்குநராகப் பணி புரிந்து வந்த சிறீகுமார், நானாவதி ஷா கமிசனிடம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “எந்தவிதமான ஆதாரங்கள் இல்லாதபொழுதும், கோத்ரா தீ விபத்திற்கு பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பின்புலம்தான் காரணமாக இருக்கும் என்பதை ‘நிரூபிக்கும்’ வகையிலேயே புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என மத்தியமாநில அரசுகளிடமிருந்தும், மோடிக்கு நெருக்கமான அதிகாரிகளிடமிருந்தும் நெருக்குதல் வந்ததாக”க் குறிப்பிட்டுள்ளார்.


குஜராத் மாநில விசுவ இந்து பரிசத், நானாவதி கமிசனில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், S6 பெட்டியை எரிக்க எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டது பற்றி ஒரு வார்த்தைக் கூட குறிப்பிடவில்லை.
குஜராத் மாநில செய்தித் தொடர்பாளர் நளின் பட், “எளிதில் பற்றக்கூடிய பொருள் எதுவும் S6 பெட்டிக்குள் வெளியில் இருந்து வீசப்பட்டதற்கான தகவல் எதுவும் தங்களின் சாட்சிகளிடம் இல்லை” எனக் கூறியுள்ளார்.


கோத்ரா சம்பவம் தொடர்பாக உள்ளூரில் இருந்து பாகிஸ்தானுக்குத் தொடர்பு கொண்டதாகச் சொல்லி, 6 தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டிருந்தது, விசுவ இந்து பரிசத். இது தொடர்பாக நானாவதி கமிசனில் நடந்த குறுக்கு விசாரணையில், ஒரு தொலைபேசி எண் சூரத்தைச் சேர்ந்த கணேஷ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு உரிமையானது; மற்ற ஐந்து தொலைபேசி எண்ணும் உபயோகத்தில் இல்லாதவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறாக, கோத்ரா சம்பவம் “பாக். உதவியோடு உள்ளூர் முசுலீம்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்” என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லாதபொழுதும், S6 ரயில் பெட்டி தீக்கிரையான வழக்கு, காலாவதியாகிப் போன “பொடா” சட்டத்தின் கீழ் நடந்து வருகிறது. நீதியை நிலை நாட்டுவது என்பதைவிட, சிறுபான்மையினரான முசுலீம் மக்களை நிரந்தரப் பீதியில் வைத்திருப்பதுதான் இந்த வழக்கின் நோக்கம் என்பதை விசாரணையின் போக்கே அம்பலமாக்கி வருகிறது.


கோத்ரா வழக்கில் 54ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள இஷாக் முகம்மது பார்வையற்றவர். “இஷாக் முகம்மது 100 சதவீதம் பார்வையற்றவர்” என 1997ஆம் ஆண்டே குஜராத் அரசு மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர். எனினும், இவ்வழக்கில் இவரைக் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, கோத்ரா சம்பவம் நடந்த பிறகு, “இஷாக் முகம்மது பார்வையற்றவர் என்ற பொழுதும், ஒரு மீட்டர் தொலைவிற்கு இவரால் பார்க்க முடியும்” எனச் சான்றிதழ் பெறப்பட்டு இஷாக் முகம்மது சிறையில் தள்ளப்பட்டார். “S6 பெட்டிக்கு வெளியே கூடி நின்ற கும்பலில் இஷாக் முகம்மதுவும் இருந்தார்” என்பதுதான் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. அதாவது ‘வேடிக்கை பார்க்க’ நின்ற குற்றத்திற்காக இவர் மீது “பொடா” பாய்ந்திருப்பதோடு, கடந்த ஐந்து ஆண்டுகளாக பிணையும் மறுக்கப்பட்டு வருகிறது.


சலீம் அப்துல் கலாம் பதாம் உள்ளிட்டு ஐந்து குற்றவாளிகள் கோத்ராவைச் சேர்ந்த திலீப் உஜ்ஜம்பாய் தசரியா என்ற பள்ளி ஆசிரியர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறி வருகிறது. ஆனால், அந்தப் பள்ளி ஆசிரியரோ, தான் அப்படிப்பட்ட எந்த சாட்சியமும் அளிக்கவில்லை என்றும், சம்பவம் நடந்த அன்று, கோத்ராவில் இருந்து 25 கி.மீ. தள்ளியுள்ள ஊரில் தனது பள்ளியில் இருந்ததாகப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதோடு, அதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்திடம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அந்த ஐந்து ‘குற்றவாளிகள்’ மீதான வழக்கைத் திரும்பப் பெற, மோடி அரசு மறுத்து வருகிறது.


முகம்மது அன்சார் குத்புதீன் அன்சாரி, பைதுல்லா காதர் தெலீ, ஃபெரோஸ்கான் குல்சார்கான் பத்தான், இஷாக் யூசூப் லுஹர் உள்ளிட்ட 20 பேர் மீது, கோத்ரா சம்பவம் தொடர்பாக எந்தப் புகாரும் இல்லாமலேயே, அவர்கள் அனைவரும் சம்பவம் நடந்த பிப். 27, 2002 அன்று காலை 9.30 மணிக்குக் கைது செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்துதான் அவர்கள் மீதான புகார் பதிவு செய்யப்பட்டது.


கோத்ரா சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுள் 36 பேர், S6 பெட்டி தீக்கிரையான அன்றுதான், மற்றொரு வழக்கில் இருந்த நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டனர். “நீலம் தங்கும் விடுதி வழக்கு” என்ற அந்த வழக்கில், இந்த 36 பேருக்கு எதிராக போலீசாரால் சாட்சிகளாக நிறுத்தப்பட்டவர்கள்தான், கோத்ரா வழக்கிலும் இவர்களுக்கு எதிராக புகாரும், சாட்சியமும் அளித்துள்ளனர். குஜராத் போலீசின் காவித்தனமான பழி தீர்த்துக் கொள்ளும் வெறிக்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?


கோத்ராவைச் சேர்ந்த முசுலீம் மதகுருதான், சம்பவம் நடப்பதற்கு முன்பாக, மசூதியின் மேலேறி நின்று, மதவெறியைக் கக்கும் விதமாக உரை நிகழ்த்தி, ராம பக்தர்களைத் தாக்கும்படி உள்ளூர் முசுலீம்களைத் தூண்டிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த மதகுரு சம்பவம் நடந்த அன்று மகாராஷ்டிராவில் இருந்தார் என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும், அவர் மீதான சதி வழக்குத் திரும்பப் பெறப்படாததால், அவர் இன்றுவரை தலைமறைவாக இருந்து வருகிறார்.


கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு, RSS கும்பல் தலைமை தாங்கி நடத்திய இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உதவி செய்வதில் முன்னணியில் நின்ற மௌலானா உமர்ஜி, ஹரூண் அபித், ஹருண் ரஷீத் ஆகிய முசுலீம் மதத் தன்னார்வ தொண்டர்களும், ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டு, “பொடா”வின் கீழ் சிறையில் தள்ளப்பட்டனர். இதன் மூலம் அநாதரவான முசுலீம்கள் தங்களுக்குள்ளேயே உதவி செய்து கொள்வதைக் கூட வக்கிரமாகத் தடுக்க முனைந்தது, மோடி அரசு.


கோத்ரா சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 135 பேரில், 22 பேர் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 100 பேரில் 16 பேருக்கு மட்டும் பிப்.14, 2003 அன்று குஜராத் மாநில உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. மீதி பேருக்கு பிணை கிடைத்துவிடக் கூடாது எனக் கங்கணம் கட்டிக் கொண்ட மோடி அரசு, பிணை தீர்ப்பு வெளிவந்த ஐந்தாவது நாளே, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடந்துவந்த கோத்ரா வழக்கை, சட்டவிரோதமான முறையில் “பொடா” வழக்காக மாற்றியது.


மைய அரசின் கீழ் அமைக்கப்பட்ட பொடா மறுஆய்வு கமிட்டி, கோத்ரா வழக்கை பொடா சட்டத்தின்கீழ் விசாரிக்கத் தேவையில்லை என மே 16, 2005 அன்றே கூறிவிட்டாலும், குஜராத் அரசும், “பொடா” சிறப்பு நீதிமன்றமும் இவ்வழக்கை இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டு வர மறுத்து வருகின்றன. பொடா மறு ஆய்வு கமிட்டியின் முடிவை அம்பலப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு கூட, கடந்த இரண்டாண்டுகளாக விசாரணையின்றி தூசி படிந்து கிடக்கிறது.


குஜராத்தில், நடத்தப்பட்ட இனப்படுகொலைகளுக்குப் பிறகு, அகதி முகாம்களில் வசித்துவரும் முசுலீம்களுக்கு அடிப்படையான வசதிகளைச் செய்து தர வேண்டும் எனக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், குஜராத் உயர்நீதி மன்றம் அரசுக்கு எந்த உத்தரவும் இட மறுத்துவிட்டது. மாறாக, அகதி முகாம்களில் வசித்துவரும் ஒவ்வொரு முசுலீமுக்கும் கொடுக்கப்படும் தினப்படியை ஆறு ரூபாயில் இருந்து எட்டு ரூபாயாக உயர்த்திக் கொடுப்போம் என்ற வாக்குறுதியை அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்திடம் அளித்தால் போதும் எனக் கூறி, தனது ‘கடமையை’ முடித்துக் கொண்டது.


இப்படிப்பட்ட நீதிமன்றத்திடமிருந்து “பொடா” வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களுக்கு, இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ள முசுலீம்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று நம்ப முடியுமா? நரேந்திர மோடி, அவரது அமைச்சர்கள், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட 63 மேல்தட்டு குற்றவாளிகளும்; பிற RSS பயங்கரவாதிகளும் தண்டிக்கப்பட்டு விடுவார்கள் என நாம் கையைக் கட்டிக் கொண்டு மௌனமாக இருந்துவிட முடியுமா?

 

-செல்வம்


நன்றி: தமிழரங்கம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.