தபாலில் வந்த கொலை வாக்குமூலம்!

Share this:

புகைந்து கொண்டிருக்கும் வீடுகள், எரிந்து சாம்பலாகிக் கிடக்கும் தொழுகைத் தலங்கள், காடுகளுக்குள் பதுங்கித் திரியும் கிறிஸ்துவ தலித்கள், கத்தி முனையில் நிறைவேற்றப்படும் மதமாற்றங்கள், முன்கூட்டியே தகவல் சொல்லித் தாக்கும் மதவெறிக் கும்பல்கள்… இப்படித்தான் இருக்கிறது ஒரிஸ்ஸா. இப்படிப்பட்ட மாநிலத்தின் பிரச்னைக்குரிய ‘கந்தமால்’ மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றித்திரியும் வாய்ப்பு, சென்ற வாரத்தில் எனக்குக் கிடைத்தது.

 

ஆந்திராவைச் சேர்ந்த டாக்டர் பாலகோபால், கர்நாடகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பாபையா ஆகியோர் ஏற்பாடு செய்த பதினாறு பேரடங்கிய உண்மை அறியும் குழுவில், தமிழகத்திலிருந்து நான் உட்பட இருவர் சென்றிருந்தோம். இன்னொருவர் மதுரை வழக்கறிஞர் கேசவன்.


எங்கள் குழு செப்டம்பர் 20, சனிக்கிழமை காலை பெர் ஹாம்பூரை அடைந்தது.

ஏற்கெனவே சுவாமி அக்னிவேஷ், நீதிபதி சுரேஷ் ஹோஸ்பெட், ஷபனா ஆஸ்மி, மகேஷ்பட் ஆகியோர் அடங்கிய குழு கந்தமாலுக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பப்பட்டதை அறிந்திருந்தோம் (எங்கள் வருகை குறித்தும் அனுமதி கோரியும் ஒரிஸ்ஸா அரசுக்கு அளித்திருந்த கடிதத்துக்கு இன்றுவரை பதிலில்லை!).


பெர்ஹாம்பூரிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவிலிருந்த தாரிங்கபாடி கிராமத்துக்குள் நுழைந்தோம். பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாகிய ஒரிஸ்ஸாவிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டம் கந்தமால். மலையும் காடுகளும் அடர்ந்த அந்தப் பகுதியில், மூன்றில் இருபகுதி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள்.


ஒரிஸ்ஸாவிலுள்ள மொத்த மக்களில் 95 சதவிகிதம் பேர் இந்துக்கள். இந்தியாவிலேயே அதிக இந்துக்கள் நிறைந்த மாநிலம் அது. இருந்தும்கூட மதமாற்றத்தின் மூலம் இந்துக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிடும் என்கிற அச்சம், கடந்த 50 ஆண்டுகளாக அங்கே விதைக்கப் படுகிறது. இந்த அடிப்படையில் ‘கோந்த்’கள் எனப்படும் ஆதிவாசிகளுக்கும் ‘பாணோ’க்கள் எனப்படும் கிறிஸ்துவ தலித்களுக்குமிடையே பகை மூட்டப்படுகிறது.


சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துவம் இந்தப் பகுதியில் காலெடுத்து வைத்தபோது, பாணோக்களில் பெரும்பாலோர் அதைத் தழுவினர். அதன்மூலம் சாதி இழிவுகளை அவர்கள் போக்கிக் கொண்டதோடு ஓரளவு கல்வி, மருத்துவ வசதிகளையும் பெற்றுக் கொண்டனர். இதன்மூலம் கோந்த்களைக் காட்டிலும் சற்று முன்னேற்றத்தையும் கண்டனர்.


பழங்குடியினர் கிறிஸ்துவர்களாக மாறினால் அவர்களுக்கு இடஒதுக்கீடு முதலிய உரிமைகள் உண்டு. ஆனால், தலித்கள் மாறும்போது அவர்கள் இந்தச் சலுகையை இழக்க நேரிடுகிறது. எனவே, பாணோக்கள் தாங்களும் கோந்த்களைப் போலவே ‘குய்’ மொழி பேசுகிறவர்கள் என்கிற அடிப்படையில் பழங்குடிகளுக்கான ஒதுக்கீட்டைக் கோரினர். ஒரிஸ்ஸா உயர் நீதிமன்றமும் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியது.


இதையட்டி கிறிஸ்துவர்களுக்கு எதிராக ஆதிவாசிகள் திரட்டப்பட்டனர். கடந்த கிறிஸ்துமஸ் அன்று பந்த் அறிவிக்கப்பட்டது. கிறிஸ்துவர்கள் அமைத்திருந்த வளைவும் பந்தலும் வீழ்த்தி எரியூட்டப்பட்டன. இந்த நிலையில், விசுவ இந்து பரிஷத்தின் முக்கிய தலைவரும், ஜாலேஸ்பேட், சக்கபாடா ஆகிய பகுதிகளில் ஆசிரமங்கள் அமைத்து, கிறிஸ்துவ எதிர்ப்பு பிரசாரமும் இந்து மதமாற்றமும் செய்து வந்தவருமான சுவாமி நிச்சலானந்த சரஸ்வதியின் கார்மீது கற்கள் வீசப்பட்டன. இதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் நாளன்று பெரும் கலவரம் வெடித்தது. மாதா கோயில்கள், கான்வென்ட்கள் தாக்கி எரியூட்டப்பட்டன. இதனால் பிராமினிகேயோன், பரக்காமா பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. பிராமினிகேயோனில் கிறிஸ்துவர்களும் திருப்பித் தாக்கினர். இந்நிலையில் சென்ற ஆகஸ்ட் 23 இரவில், புனித ஜன்மாஷ்டமி தினத்தன்று ஜீப்பில் வந்து இறங்கிய முகமூடி தரித்த சுமார் 20 நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் நிச்சலானந்த சரஸ்வதி. ஆசிரமத்திலிருந்த மேலும் நால்வரும் கொல்லப்பட்டனர். ஏ.கே&47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சகிதம் நடந்த இத்தாக்குதலுக்கு மாவோயிஸ்ட்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனாலும், விசுவ இந்து பரிஷத்தும், பஜ்ரங்தள்ளும் ‘இதை மாவோயிஸ்ட்கள் செய்யவில்லை. கிறிஸ்துவர்கள்தான் செய்தனர்’ என அடித்துக் கூறுகின்றனர்.


இறந்துபோன சுவாமிகளின் உடலை ஜாலேஸ் பேட்டிலேயே அடக்கம் செய்யாமல் 150 கி.மீ. தொலைவிலுள்ள சக்கேபேடாவுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அதுவும் நேர்பாதையில் செல்லாமல் கிறிஸ்துவ கிராமங்கள் வழியாக சுமார் 250 கி.மீ. ஊர்வலம் நடத்தப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் கிறிஸ்துவ கிராமங்கள் சூறையாடப்பட்டன. இதற்கு பயந்தோடிய கிறிஸ்துவர்கள் காடுகளில் தஞ்சமடைந்தனர். காடுகளுக்குள்ளும் சென்று அகப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.


ஒரு வாரத்தில், அரசு கணக்கீட்டின்படி 27,000 கிறிஸ்துவ தலித்கள் அகதிகளாயினர். ஆங்காங்கு முகாம்கள் அமைக்கப்பட்டன. தாரிங்கபாடியில் சிறிய பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட முகாமில் சுமார் 500 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். ஒரிஸ்ஸாவில் இப்போது மழைக்காலம். எந்நேரத்திலும் தொற்றுநோய் அபாயம் காத்திருப்பது தெரிந்தது. வெற்றுத் தரையில் ‘டென்ட்’ அடித்து அங்கே மக்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் அங்கே 5 பிரசவங்கள் நடந்ததாகவும் அறிந்தோம்.


அகதிகள் மறுவாழ்வு ஆணையர் சத்யபிரதா சாஹுவிடம் தொடர்பு கொண்டு முகாம் நிலைமையைப் பற்றிச் சொன்னபோது, அவரளித்த பதில் அதிர்ச்சியை அளித்தது. உறுதியான கட்டடங்களில் தங்கவைப்பதை ‘மற்றவர்கள்’ அதாவது பஜ்ரங்தள், பரிஷத் அமைப்பினர் எதிர்க்கின்றனராம். நாங்கள் செல்லுமிடமெல்லாம் ஜீப்களில் வந்து சிலர் அவ்வப்போது நோட்டமிட்டுச் சென்றனர். ஆளும்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சருகா பிரதான் எங்களிடம், ”29 பேர் மட்டுமே கொல்லப் பட்டுள்ளதாக அரசு சொல்வது பொய். மொத்தம் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்” என்றார்.


அடுத்தநாள் ராய்கியாவை நோக்கிச் சென்றபோது, எங்கள் வேன்களை நிறுத்திய சிலர், ‘இந்தப் பக்கமாகச் செல்வது ஆபத்து, கலவரம் நடந்து கொண்டிருக்கிறது’ என எச்சரித்தனர். டிரைவர்களும் வண்டியைச் செலுத்த மறுத்ததால், நேரடியாகக் காட்டுப் பாதையில் ஜி.உதயகிரியை அடைந்தோம். வழியில் கிராமம் கிராமமாக சர்ச்சுகள், வீடுகள் அழிக்கப்பட்டிருந்தன. லக்கேபாடி என்னும் கிராமம் முற்றிலும் அழிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் கிறிஸ்துவர்களும் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.


லக்கேபாடியைத் தாண்டிச் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று தலித் இளைஞர்கள் எங்களை மறித்து, கிறிஸ்துவ பாஸ்டர்கள் என அறிமுகப் படுத்திக்கொண்டு காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். ‘உடனடியாக இந்து மதத்துக்கு மாற வேண்டும், இல்லையேல் சாகத் தயாராகுங்கள் என மிரட்டுகிறார்கள். ஜிடிங்ஷை, லோதேட், அலங்டுப்பா போன்ற கிராமங்களில் பல குடும்பங்களைக் கட்டாயப்படுத்தி இந்து மதத்துக்கு மாற்றம் செய்திருக்கிறார்கள்” என்றனர்.


சொல்லிக் கொண்டிருந்தபோதே பதன்பாடி கிராமம் தாக்கப்படுவதாகவும் சுகுடபாடி, குந்தாமி, காமாண்டி கிராமங்கள் தாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் செய்தி வந்தது.


இதனையடுத்து ஜி.உதயகிரியில் இருந்து பெஹ்ராம் பூருக்கு விரைந்தோம். பெஹ்ராம்பூரில் தங்கியிருந்த முனிசிபல் விடுதிக்கு நாங்கள் திரும்பியபோது, யாரோ கொடுத்ததாக கவர் ஒன்று எங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது. மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒரிஸ்ஸா பொறுப்பாளர் சுனில் என்பவர் கையெழுத்திட்டிருந்த அந்த ஆங்கிலக் கடிதத்தில், ‘லட்சுமணானந்த சரஸ்வதியையும் நால்வரையும் கொன்றது நாங்கள்தான். மதவெறியைப் பரப்பி மக்களைப் பிரிப்போரைத் தொடர்ந்து இப்படித் தண்டிப்போம்’ எனவும் இருந்தது.


இந்துக்கள் தரப்பில் சிதிர் பிரதான் என்ற பத்திரிகையாளரைச் சந்தித்துப் பேசியபோது, அவர் ஒரிஸ்ஸா மாநிலத்தின் நிலவரத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.


ஒரிஸ்ஸா மாநிலத்தைப் பொறுத்த வரையில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் சமீப காலமாக அதிகமாகி இருக்கிறது. ‘மதவாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தலையை எடுப்போம்’ என்பதுதான் மாவோயிஸ்ட்களின் பகிரங்க பிரகடனம். இது தெரிந்தும் நடந்த சம்பவங்கள் அனைத்துக்கும் காரணம் கிறிஸ்துவர்கள்தான் என வம்படியாக இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துவர்களை நோக்கி ஓயாத தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதுதான் வேதனை!

நன்றி : அ. மார்க்ஸ்

 

தொடர்புடைய சுட்டி:

 

ஒரிஸ்ஸா – மற்றொரு ஹிந்துத்துவ சோதனைக்கூடம்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.