வெடித்த குண்டுகளும் தீவிரவாதிகளும் நாமும்!

Share this:

மாநிலத் தலைநகரங்களில், மாநகரங்களில், மக்கள் கூடுமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. குண்டுகள் எங்கு, எப்போது வெடிக்கும் என்பதை முன்னறிவிக்காது என்றாலும் வெடித்த பிறகு என்ன நடக்குமென்பதைத் தெரிவிக்கின்றன. உற்றாரைப் பலிகொடுத்த உறவினரின் சோகம் பத்திரிகைகளில் படிமங்களாக, குண்டுவெடித்த இடங்களை வழக்கமாக பார்வையிடச் செல்லும் அரசியல் தலைவர்களின் பயணமாக, வெடித்த இடத்தில் பதட்டமாக இருக்கும் வாழ்க்கை வெடிக்காத இடங்களில் சகஜமாக, அடுத்த பரபரப்புச் செய்திகள் வரும்வரை குண்டு வெடிப்பை தொலைக்காட்சிப் பெட்டிகளில் மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் அலைவரிசைகள், விளம்பர இடைவெளிகளில் மகிழ்ச்சியாக, மொத்தத்தில் நாடு வழமையாகவே இயங்குகிறது. முன்புபோல நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வலிமையினை இப்போது அடிக்கடி வெடிக்கும் குண்டுகள் இழந்துவிட்டன. பொழுதுபோக்குகளில் மையம் கொள்ளும் இன்றைய நுகர்வுக் கலாச்சார வாழ்க்கை சமூக நிகழ்வுகளை ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பதற்குத் திறமையாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. குண்டுகள் வெடிப்பதற்குப் பிந்தைய விளைவுகளின்பால் அனுதாபமோ, வெடிப்பதற்கு முந்தைய அரசியலின்பால் கவனமோ அற்றுப்போய்விட்டதனால் இப்போது குண்டுகள் மலிவாக வெடிக்கின்றன. எனினும் குண்டுகள் வெடிப்பதற்குக் காரணம்தான் என்ன?

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் அனாதைப் பிணங்களை சடங்குக்காக அறுத்து நீதிமன்றத்திற்காகப் பதிவு செய்து யாரும் கோருபவர் இல்லாமல் எரிக்கப்படுவது போல குண்டு வெடிப்பின் அலசல்கள் அரசியல் அரங்கிலும் ஊடகவெளியிலும் உயிரின்றி பேசப்படுகின்றன. அண்ணாசாலையில் தொழிலாளி ஊர்வலம் சென்றால் அதைப் போக்குவரத்திற்கு இடையூறு என்று இந்து பேப்பருக்கு வாசகர் கடிதம் எழுதும் நடுத்தரவர்க்க அறிவாளிகள் போல குண்டுவெடிப்பைத் தடுப்பதற்கு பலரும் ஆலோசனைகளை இலவசமாக வழங்குகின்றனர். போலீசின் அலட்சியம், உளவுத்துறையின் குறைபாடு, பலவீனமான மத்திய அரசு, குண்டு வைப்பவர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கை எடுக்காதது, பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் சதிகளை முறியடிக்காதது என்று நீளும் இந்தப்பட்டியல் ஆத்திச்சூடி அறஞ்செய விரும்பு போல மக்களிடம் மனப்பாடமாய் இறக்கப்பட்டிருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தையை தூக்கத்தில் எழுப்பி தீவிரவாதத்திற்கு எதிராக என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் கூட அழகாய் ஒப்புவிக்கும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் குண்டு வெடிப்பு நிகழ்கிறுது என்றாலும் இது தேசத்திற்கெதிரான போர் என்று முழங்கும் அத்வானி பொடா போன்ற கடுமையான சட்டங்களை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்கிறார். புரட்சித் தலைவியும் அதனை வழிமொழிகிறார். ஈழத்தமிழர்களை ஆயுள்தண்டனை கைதிகளாக முகாம்களில் அடைத்து கண்காணிப்பது போல வங்கதேச அகதிகளை கண்காணிக்கவேண்டும் என்று தலையங்கம் எழுதுகிறது தினமணி. நாடாளுமன்றத் தாக்குதலுக்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி அப்சல்குருவை இன்னும் தூக்கில் போடாதது தீவிரவாதிகளுக்கு குளிர் விடச்செய்திருக்கிறது என்கிறார் ஒரு தலைவர். உதட்டளவிலோ, அரசியல் ஆதாயத்திற்காகவோ, உள்ளத்தில் இருக்கும் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பினாலோ பேசப்படும் இந்த போதனைகளால் குண்டுகள் அழிந்துவிடுமா?

குண்டுகள் இந்த வெற்றுப்பேச்சினை சட்டை செய்வதில்லை. ஓரிடத்தில் குண்டுவெடிப்பது ஏதோ தீபாவளி பட்டாசு வெடிப்பது போல, ஹாலிவுட் படத்தில் நிகழ்வது போல அவ்வளவு சுலபமில்லை. அதிரடிக்காட்சிகளை நொறுக்குத்தீனியாக மனதில் பதியவைத்திருக்கும் திரைப்பட-தொலைக்காட்சி உணர்ச்சி, உண்மைக்கும் கற்பனைக்குமான வேறுபாட்டை, நிஜத்தின் வலியை உணர்த்துவதில்லை. உண்மையில் குண்டு வைப்பதற்கு இரும்பு மனம் கொண்ட நபர்கள், அதுவும் உயிரைப் பணயம் வைக்கும் துணிச்சலுடன், பிடிபட்டால் போலீசின் சித்திரவதைக்கும், நீதிமன்றத்தின் மரணதண்டனைக்கும் பயப்படாத நெஞ்சுரத்துடன் வேண்டும். இந்த மன உறுதியை வைத்து இவர்கள் வாழ்க்கை முழுவதும் கொள்கைக்காக களமிறங்குபவர்கள் என்று பொருளல்ல. இது குறிப்பிட்ட சமூகக் காரணத்தால் கணநேரத்தில் வந்துபோகும் சாகச உணர்வு. குறிப்பிட்ட நடவடிக்கையின் காலம் வரைக்கும் மனதில் இருக்கும் தற்கால உறுதியால் நினைத்ததை முடிக்கும் வல்லமையினை இவர்கள் பெறுகிறார்கள். அதே சமயம் இவற்றை தனிநபராக இருந்து மட்டும் செய்ய முடியாது. இரகசியமாய் பணம் திரட்டுவது, பொருட்களை சேகரிப்பது, தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வது, ஆயுதங்களை சோதித்தறிவது, இரகசிய இடங்களை உருவாக்குவது, எல்லாவற்றுக்கும் உதவி செய்யும் ஆதரவாளர்களை அணிசேர்ப்பது வரை பல தயாரிப்புகள் வேண்டும். இலட்சியத்தின்பால் இருக்கும் உறுதியுடன் கூடவே அப்பாவி மக்களை கொல்லுவது குறித்த இரக்கமின்மையும் கணிசமாக வேண்டும். ஆனாலும் சங்கபரிவாரங்களால் அடுத்த பிரதமராக முன்னிறுத்தப்படும் அத்வானி இரும்புக் கரம் கொண்டு குண்டுகளை அடக்கமுடியுமென வன்மையாக எடுத்துரைக்கிறார். அதன்படி குண்டுகளை அடக்க முடியுமா?

அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே பொடா சட்டமும், அதில் அப்பாவி முசுலீம்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்படுவதும், வங்கதேச ஏழை அகதிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விரட்டப்படுதும், இசுலாமிய அமைப்புகள் பல தடைசெய்யப்பட்டதும் என ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் எத்தனையோ செய்து பார்த்தும் குண்டுகள் மறையவில்லையே! சொல்லப்போனால் இந்த இரும்புக்கர நடவடிக்கைகள் குண்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. எனில் இந்த சட்டதிட்டங்களை தகர்த்தெறியும் வலிமையினை குண்டுகள் எங்கிருந்து பெற்றன?

குண்டுகள் அந்த வலிமையினை வரலாற்றின் அநீதியிலிருந்து பெற்றுக்கொண்டன. குண்டுகளினுள் பொதியப்பட்டிருக்கும் வேதிப்பொருட்களின் வீரியத்தினைவிட சமகால வரலாற்றின் வீரியம் அதிகமானது. குண்டுகள் தன்னளவில் இயல்பாக வெடித்துவிடுவதில்லை. கூர்ந்து நோக்கினால் அவை வரலாற்றின் விளைபொருட்கள்! 1992 பம்பாய் கலவரத்திற்கு பிந்தையதுதான் 1993 பம்பாய் குண்டுவெடிப்பு! 2002 குஜராத் கலவரத்திற்கு பிந்தையதுதான் 2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு! 1996 கோவை கலவரத்திற்கு பிந்தையதுதான் 1999 கோவை குண்டுவெடிப்பு! இந்த சங்கிலித் தொடர் நிகழ்வின் தீர்மானிக்கும் கண்ணியாக கலவரங்கள் இருக்கின்றது. இருதரப்பார் அடித்துக்கொள்வதுதான் கலவரம் என்பதன் இலக்கணமாக இருக்கும்போது அவற்றைக் கலவரங்கள் என அழைப்பது பொருத்தமற்றது. சரியாகச் சொல்வதானால் அவை இந்துமதவெறியர்களால் தொடுக்கப்பட்ட போர்! இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை! இவற்றின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டால் குண்டுகளின் தோற்றுவாயை அறிந்து கொள்ள இயலுமா?

நிச்சயம் முடியும். 91 ஆம் ஆண்டு குஜராத்தின் சோமநாத்தில் ஆரம்பித்த அத்வானியின் இரத யாத்திரை வட இந்தியா முழுவதும் இசுலாமிய மக்களை காவு வாங்கியபடிதான் இரத்த யாத்திரையாக சென்றது. அதன் உச்சம் பம்பாய் கலவரமாக வெடித்தது. சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே தனது சாம்னா பத்திரிகையின் மூலம் இசுலாமிய மக்களை அடித்து விரட்டுமாறு கட்சிக் குண்டர்களுக்கு ஆணையிட்டார். போலீசு உதவியுடன் இசுலாமிய குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டன. இந்த உண்மைகளை எடுத்துக்கூறி குற்றவாளிகளை அடையாளம் காட்டிய ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை இன்றைக்கு குப்பைத்தொட்டியி்ல் தூங்குகிறது. ஒரு வேளை நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களைக் கொன்ற சிவசேனா வெறியர்களை தண்டித்திருந்தால் பின்னர் பம்பாயில் குண்டுகள் வெடிக்காமலே போயிருக்கலாம். ஆனால் ஒருவேளை என்ற சொல்லை வரலாற்றை பரீசீலிப்பதற்கு பயன்படுத்தலாமே ஒழிய வரலாற்றை மாற்றிப்போட்டு கற்பனை செய்வதற்கு இடம் கிடையாது. இன்று பம்பாய் குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். அவர்களில் பல அப்பாவிகள் நிரபராதியாக பல வருடங்களாக சிறையில் கழித்தார்கள். எனினும் பம்பாய் கலவரக் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பதோடு வழக்கே நடைபெறவில்லை. கலவரங்களுக்கு சலுகை! குண்டுகளுக்கு தண்டனை! எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?

2002 குஜராத்தில் நடந்த இனக்கலவரம் நாடே அறியும். 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். நரோடா பாட்டியாவின் சவக்கிடங்கு, கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து தாயும், சேயும் கறுவறுக்கப்பட்ட காட்சி, பெஸ்ட் பேக்கரியின் 17பேரை உயிரோடு எரித்த சம்பவம், இரத்தக் கவிச்சி அடிக்கும் வெறியுடன் இந்து மதவெறியர்கள் சம்பவங்களை குதூகலத்துடன் தெகல்காவின் கேமராவில் வருணித்த ஆதாரம், முடிவில்லா குஜராத்தின் இனப்படுகொலைப் படிமங்கள் உணர்ச்சியுள்ள எவருக்கும் நெஞ்சை விட்டு அகன்றிருக்காது. ஆனால் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்காக, செய்யாத குற்றத்திற்காக பல அப்பாவி முசுலீம்கள் சிறையில் வாடும்போது இனப்படுகொலை செய்த இந்து மதவெறிக் குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். குண்டுகள் செய்யும் இரகசிய ஏற்பாடுகளெல்லாம் இந்து மதவெறியர்களுக்கு தேவையில்லை. குஜராத்தில் அவர்கள் நடத்திய நரவேட்டைக்கான துப்பாக்கிகள், குண்டுகள், ஆயுதங்கள், எல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து வண்டி வண்டியாக இறங்கின. குண்டுகளின் ஏற்பாடுகளை சதிகள் எனப்பார்க்கும் பொதுப்புத்தி இந்துமதவெறியர்களின் ஏற்பாடுகளை கலவரங்களில் நடக்கும் வழக்கமான ஒன்றாகப் பார்க்கின்றது. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?

கோவையில் காவலர் செல்வராசு கொலைசெய்யப்பட்டதை அடுத்து நடந்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்ட முசுலீம் மக்கள் கொலைசெய்யப்பட்டு பல கோடி மதிப்பிலான இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கோவை சங்கபரிவார ரவுடிகளை கைது செய்து தண்டிக்க முடியாத இந்த சமூக அமைப்பு கோவை குண்டுவெடிப்பின் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து தண்டித்திருக்கிறது. அதிலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பல வருடங்களை சிறையில் கழித்து விட்டு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். குற்றமின்றி தண்டனையை மட்டும் அனுபவித்துவிட்டு மனைவியையும், குழந்தைகளையும் நிர்க்கதியில் தவிக்கவிட்டு வாழ்வைத் தொலைத்திருக்கும் இந்த சாதரண மனிதர்களுக்கு இந்த சமூக அமைப்பின் மேல் எத்தனை பெரிய கோபம் இருக்கும்? இவர்கள் எவரும் படித்து வசதியாக வாழும் நடுத்தரவர்க்கத்தினரோ, இசுலாமிய மதத்தின் பால் ஆழ்ந்தபிடிப்போ, வெறியோ, இந்துக்களின் மீது விரோதமோ கொண்டவர்கள் அல்லர். இவர்களின் நெஞ்சில் வஞ்சினத்தை ஏற்றுவதற்கு ஐ.எஸ்.ஐ தேவையில்லை. அது உண்மையுமில்லை. இரக்கமற்று தனிமைப்படுத்தும் சமூகத்தின் காரணத்தால் இந்த இளைஞர்களின் அவலம் குண்டுகளாக பரிமாணம் கொள்கின்றன. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?

இந்து மதவெறியர்கள் இந்தியாவில் நடத்தியிருக்கும் கலவரங்களில் பதிவு செய்திருக்கும் கொலைக்கணக்கும், பொருள் இழப்பும் அளவில் குண்டுகளை விட பலநூறு மடங்கு அதிகம்தான். ஆனால் அவை பொதுவில் தீவிரவாதிகள் செய்த குற்றமென்று மதிப்பிடப்படுவதில்லை. பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு சிறு கும்பலான சங்கபரிவாரம் செய்யும் அநீதிக்கான அங்கீகாரம் பெரும்பான்மையின் மவுனத்தில் இருக்கிறது. குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் எல்லா இந்துக்களும் பங்கேற்கவில்லை என்றாலும் நேரடி மவுன சாட்சியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த மவுனம் அநீதியை மறுக்கவில்லை. அதுவே அநீதியின் அங்கமாக மாறிவிடுகிறது. இதன் விளைவால் உண்மையான தீவிரவாதிகளான இந்துமதவெறியர்கள் பொது அங்கீகாரத்துடன் எல்லாக் கட்சிகளைப்போல ஒரு கட்சியாக இயங்குகிறார்கள். சமூகநீதி, திராவிடம் பேசும் எல்லா கட்சிகளும் இந்து மதவெறியர்களுடன் தேர்தல் கூட்டணி வைப்பது முதல் அரசில் பங்கேற்பது வரை முரணின்றி செய்கின்றன. இந்தியாவின் பொதுவாழ்வில் இந்து மதவெறியர்கள் அதிகாரத்துடன் ஆணவமாக நடந்து கொள்வதற்கு இத்தனை சலுகைகள் இருக்கும்போது குண்டுகளுக்கான முயற்சிகள் எங்கோ இரகசியமாக நடந்து கொண்டுதானே இருக்கும்?

குண்டுகள் உருவாதற்கான நிலைமைகளை உருவாக்கிவிட்டு குண்டுகள் மட்டும் வேண்டாம் என்று நினைப்பதி்ல் பயனொன்றும் இல்லை. இந்திய அரசியல் அரங்கில் இந்துமதவெறிச் சக்திகள் கறுவருக்கப்படாதவரை குண்டுகளையும் கருவறுக்க முடியாது. மதசார்பாற்ற அரசியல் அதன் உண்மையான பொருளில் அமலுக்கு வராதவரை குண்டுகள் வந்து கொண்டே இருக்கும். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் போராட்டத்தில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வெல்லும்வரை குண்டுகள் தோல்வி அடையப்போவதில்லை. ஆகையால் குண்டுகளை நாம் நியாயப்படுத்துகிறோமா?

குண்டுகள் வெடிப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி. அதாவது இந்துமதவெறியர்களின் கோரப்பிடியிலிருந்து இசுலாமிய மக்களை பாதுகாப்பதில் குண்டுகள் தோல்வியடைவதோடு உண்மையில் பாதுகாப்பின்மையைத்தான் அதிகப்படுத்தியிருக்கின்றன. குண்டுகளின் முக்கியமான விளைவுகளே இந்துமதவெறியை வலுப்படுத்துவதும், இசுலாமிய மக்களை தனிமைப்படுத்துவதும்தான். தற்போதைய குண்டுவெடிப்புகளில் கூட இந்துமதவெறியர்கள் எவரும் சாகவில்லை என்பதோடு அப்பாவி உழைக்கும் மக்கள்தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். எதிர்கால குண்டுவெடிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மாநகரங்களில் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கும், கோவில்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் அரசு உழைக்கும் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை. இப்படி குண்டுகள் வெடித்தால் நிச்சயமாக கொல்லப்பட இருக்கின்ற உழைக்கும் மக்கள்தான் உண்மையில் பார்ப்பன இந்துமதவெறியால் ஏற்கனவே அடிமைகளாக நடத்தப்படுவர்களாகவும், வர்க்க ரீதியில் இந்துமதவெறியர்களை வீழ்த்துவதற்கான சக்தியாகவும் இருக்கின்றனர். குண்டுகள் இந்த மக்களைத்தான் இந்துமதவெறியர்களின் கைகளில் எளிதாக மாற்றித் தருகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் வாழ்க்கைப் போராட்டத்தால் கவலையில் உழன்று கொண்டிருக்கும் அப்பாவி மக்களை இரக்கமின்றி கொல்லும் குண்டுகளில் பாசிச மனமும் கலந்திருக்கிறது. மறுபுறம் தமது எதிர்வரிசையில் எல்லாப் பிரிவு மக்களையும் ஒன்று சேர்க்கும் வேலையையும் குண்டுகள் அடி முட்டாள்தனமாக செய்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க குண்டுகளால் இசுலாமிய மக்களுக்கு என்ன பாதிப்பு?

ஒவ்வொரு குண்டுவெடிப்பின்போதும் எண்ணிறந்த பாதிப்புகளை இசுலாமிய மக்கள்தான் எதிர்கொள்கின்றனர். குண்டுகளின் அரசியலுக்கு கடுகளவும் தொடர்பில்லாத அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் இருப்பதும், இசுலாமிய மக்கள் அனைவரையும் பொதுச்சமூகம் தீவிரவாதிகளாக பார்ப்பதும், இதன் தொடர் விளைவாக இசுலாமிய மக்களுக்கு வீடு வாடகைக்கு இல்லை, கல்வி இல்லை, வேலை இல்லை மொத்தத்தில் மதிப்பு இல்லை என்ற நிலைமை உருவாக்கப்படுகிறது. இதையே இந்துமதவெறியர்கள் பிரச்சாரத்தின் மூலம் செய்வதை குண்டுகள் தமது வெடிப்பின் மூலம் செய்கின்றன. யாரை எதிர்த்து உருவனதோ அவர்களுடன் எதிர்மறையில் ஒன்றுபடுவதுதான் குண்டுகளின் தர்க்கரீதியான முடிவு. வெடிமருந்தின் மேல் அசாத்திய நம்பிக்கை வைத்திருக்கும் குண்டுகள் வெகுஜன அரசியல் நடவடிக்களுக்காக பொறுமையுடன் ஈடுபடுவதில்லை. பொறுமையிழந்து அவசர அவசரமாக வெடிக்கும் குண்டுகள் நீண்டகால நோக்கில் இசுலாமிய மக்களைத்தான் காவு கேட்கின்றன. குண்டுகளுக்கும் இசுலாமிய மதத்திற்கும் என்ன தொடர்பு?

குண்டுகளின் தோற்றுவாயை சமூக நிலைமைகளே தோற்றுவிக்கின்றன என்ற போதிலும் குண்டுவைப்பவர்களின் மன உறுதிக்கு இசுலமிய மதப்பற்றும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குண்டுகள் தாம் இசுலாமிய மதத்தைப் பாதுகாக்கும் புனிதப்போரில் ஈடுபட்டிருப்பதாக நம்புகின்றன. இதை பல இசுலாமிய சமுதாயப் பெரியோர்களும், மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் குண்டுகள் தாம்தான் உண்மையான இசுலாமியர்கள் என்று கற்பித்துக் கொள்கின்றன. ஆனால் உலக வரலாறு நெடுகிலும் இந்தக் கற்பிதம் பொய்யென்றே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இசுலாமிய மதம் ஒரு தீர்வாக அமைய முடியாது. கூடவே உலகில் இசுலாமிய மதத்தை உண்மையாக பின்பற்றும் நாடு எதுவும் கிடையாது, அப்படி இருக்கவும் முடியாது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை. இசுலாமிய நாடாக அறிவித்துக்கொண்ட பாக்கிஸ்தானில் சன்னி, ஷியா பிரிவுகளிடையே மசூதியில் குண்டு வைத்துக் கொல்லும் அளவுக்கு பிளவு இருப்பதும், ஷரியத்தின் சட்டதிட்டங்களை கறாராக பின்பற்றும் வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் விசுவாசிகளாக இருப்பதும், ஏழை இசுலாமிய மக்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்த பணஉதவி செய்யும் அரபு ஷேக்குகள் தனிப்பட்ட வாழ்வில் களிவெறியாட்ட பொறுக்கிகளாக இருப்பதும் இந்த உண்மைகளை எடுத்தியம்பும். ஆனால் குண்டுகள் இந்த யதார்த்த்த்தை மறுப்பதுடன் கற்பனையான மத உலகை சித்தரித்துக்கொண்டு வாழ முயல்கின்றன. எனில் குண்டுகளின் எதிர்காலம் என்ன?

எதிர்காலம் இந்துமதவெறியர்களின் எதிர்காலத்தைப் பொறுத்தது. சங்க பரிவாரங்கள் இருக்கும் வரையிலும் இந்துத்வா திட்டமும், முசுலீம் மக்களின் மீதான துவேசமும், கலவரங்களும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தபடியே இருக்கும். இந்த நிகழ்ச்சிநிரலை மாற்றாதவரை, வரலாறு திருத்த்தப்படாதவரை குண்டுகளையும் இரத்து செய்ய முடியாது.

ஆகவே நம்முன் இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று அடுத்த குண்டு எங்கு எப்போது வெடிக்கும் என்று திகிலுடன் வாழ்வது. அல்லது குண்டுகளைத் தோற்றுவிக்கும் சங்கபரிவார கும்பலை வீழ்த்துவது. இதைத்தாண்டி குண்டுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை.

நன்றி: வினவு


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.