101 வயது இளைஞர் – பாவாஜான் சாகிப்

Share this:

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பள்ளிவாசலின் முன்பு சித்திரை முதல் நாள் அன்று எக்கச்சக்கக் கூட்டம். தமிழ்ப் புத்தாண்டுக்காகச் சிறப்புத் தொழுகை நடந்தது ஒரு பக்கம் என்றால், பாவாஜான் சாகிப் தாத்தா தன்னுடைய 101-வது பிறந்த நாளைக் கொண்டாடியது இன்னொரு காரணம். ‘101 வயதா?’ என்று புருவம் உயர்த்திப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அனைவரும்.

 

”பாவாஜான் வெறுமனே கேக் மட்டும் வெட்ட மாட்டாருங்க. அவரு இன்னமும்  திடகாத்திரமா இருக்காரு. அதனால கின்னஸ் சாதனை முயற்சிக்காக ஜீப்பை இழுக்கப் போறார்!’ என்று அறிவிக்கிறது பள்ளி வாசல் ஸ்பீக்கர். ஆச்சர்யத்தோடு பைக், சைக்கிளில் போய்க்கொண்டு இருந்தவர்கள் ஸ்டாண்ட் போட்டுவிட்டு ஆர்வமாகக் திரள ஆரம்பித்தார்கள். செய்தி வேகமாகப் பரவ… வழியில் வருகிறவர்கள், போகிறவர்கள், ஆட்டோ டிரைவர்கள், பஸ் டெப்போ ஊழியர்கள், விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவர்கள் என நண்டுசிண்டில் இருந்து பெருசுகள் வரை பள்ளிவாசலைச் சுற்றிக் கூட ஆரம்பித்தார்கள்.

மதியம் தொழுகை முடிந்ததும் சாகிப் தாத்தா வெளியே வந்து அனைவரையும் பார்த்து சலாம் செய்தார். ஜீப்பைக் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்து ஏதோ முணுமுணுத்தார்.

101 வயது ஆச்சரியம்!
தினமும் எங்க வீட்டுல இருந்து மூணு மைல் நடந்து பள்ளி வாசலுக்கு வருவேன். அஞ்சு வேளை தொழுறேன்.

பின் முழுத் தெம்பையும் கூட்டி கயிற்றைத் தோள் பட்டையில் வைத்து இழுக்க, ஜீப் நகர ஆரம்பித்தது. கூடியிருந்த மக்கள் ஆரவாரத்தோடு கைதட்ட, பள்ளி மாணவர்கள் ‘கமான் தாத்தா… கமான்!’ என்று அலறினார்கள். 300 மீட்டர் தூரம் வரை அநாயாசமாக இழுத்தவர், ஐந்து நிமிடங்கள் ரெஸ்ட் எடுத்தார். குளுகோஸ் தண்ணீர் குடித்தவர், ஒரே தம்மில் 200 மீட்டர் வரை ஜீப்பை இழுத்து ஆச்சர்யப்படுத்தினார். இளைஞர்கள் சிலர் கைகொடுக்க, ஒரு சிறுவன் தாத்தாவிடம் ஆட்டோகிராஃப் வாங்கினான். பாராட்டு மழையில் நனைந்துகொண்டு இருந்த தாத்தாவை ஓரம்கட்டிப் பேசினேன்.

”எனக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம். சின்ன வயசுல இருந்தே கபடி, ஓட்டம், தாண்டுறதுனு நல்லா விளையாடுவேன். பள்ளிக்கூடம் படிக்கும்போது நான் போகாத போட்டிகளே கிடையாது. தூத்துக்குடிக்கு வந்து 15 வருஷம் ஆகுது. வயசுதான் ஆகுது. உடம்பு நல்லா இருக்கு. இப்பவும் நல்லா நடப்பேன். வாய் குழறாமப் பேசுவேன். கண்ணாடி போடாம பேப்பர் படிப்பேன். தினமும் எங்க வீட்டுல இருந்து மூணு மைல் நடந்து பள்ளி வாசலுக்கு வருவேன். அஞ்சு வேளை தொழுறேன். பயறு வகைகள், நிறைய காய்கறிகளை உணவில் சேர்த்துக்குவேன். இந்தக் காலத்துல முப்பது வயது தாண்டினாலே ஷுகர், பிரஷர்னு நிறைய வியாதிகள் வருது. எல்லாமே முறையா சாப்பிடறது இல்லை. உடற்பயிற்சி செய்றது இல்லை. சின்ன வயசுல நான் சாப்பிட்ட கம்மங்கஞ்சியும், கேப்பங்கூழும், விளையாடின விளையாட்டுகளும்தான் என் தெம்புக்குக் காரணம். ஒரு மனுஷனுக்கு 60 வயசுதான் சராசரி ஆயுள். அதுக்கு மேல வாழ்ந்தோம்னா மற்றவங்க உதவியை எதிர்பார்க்கக் கூடாது. மற்றவங்க உதவியை எதிர்பார்த்தா நமக்கும் பிரச்னை. அவங்களுக்கும் பிரச்னை. உடம்பு திடகாத்திரமா இருக்க தினமும் ஒரு மணி நேரம் யோகா, கராத்தேனு ஏதாவது பயிற்சி செஞ்சாலே போதும். இன்னும் 20 வருஷம் வரைக்கும் இதே தெம்போட என்னால வாழ முடியும். அதுக்கான உடல் திடகாத்திரத்தை அல்லா எனக்குக் கொடுப்பார்” முதுமையின் அழகு ததும்பச் சிரிக்கிறார் பாவாஜான் சாகிப் தாத்தா!

நன்றி: விகடன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.