நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது… எப்படி இதைச் சாதித்தார்கள் என்று!

Share this:

ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகம் மற்ற மூன்று தூண்களான நீதித்துறை, நிர்வாகத்துறை, ஆட்சித் துறையால் சாதிக்க முடியாததைச் சாதித்துள்ளது. 

தெஹல்கா என்ற ஆங்கில வார இதழின் ஆஷிஷ் கேதான் தலைமையிலான நிருபர்கள் குழு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விஷ்வஹிந்த் பரிஷத் முக்கியஸ்தர்கள், அரசு வழக்கறிஞர்கள், சாட்சிகள் போன்றோரிடம் தங்களை இந்துத்துவாவின் பெருமைகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதப் போவதாக அறிமுகப்படுத்திக்கொண்டு நட்பை வலுப்படுத்தி, நம்பிக்கையைப் பெற்று, குஜராத் கலவரத்தை எப்படி நிகழ்த்தினார்கள் என்பதை அவர்கள் வாயாலேயே பேச வைத்து ரகசியமாக பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளது. இதயத்துடிப்பையே ஸ்தம்பிக்க வைக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகள் இதில் வெளிவந்துள்ளன.


முதலாவதாக, கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து எரிந்ததற்கு முஸ்லிம்கள் காரணமா? இல்லையா? என்பதை தெஹல்காவின் புலனாய்வு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ரயில் பெட்டியை இஸ்லாமியர்கள்தான் எரித்தார்கள் என்பதை நிலைநாட்ட குஜராத் அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அதிர வைப்பவையாகும்.

பெட்ரோல் பங்க் ஊழியர் ரஞ்சித்சிங்கிற்கு ‘முஸ்லிம்கள் 140 லிட்டர் பெட்ரோல் வாங்கிச் சென்றார்கள்’ என்று கூறுவதற்காக தரப்பட்ட ரூ.50,000, டீ விற்கும் சிறுவன் அஜய்பாரியாவிடம், ‘நான்தான் பெட்ரோல் கேன்களை ரிக்ஷாவில் எடுத்து வைத்தேன்’ என்று பணம் தந்து நிர்ப்பந்தப்படுத்தி பெற்ற வாக்குமூலம், குறிப்பிட்ட தினத்தன்று வெளிநாட்டில் இருந்த ‘மவலபியாகூப்’ என்பவரை ‘தீ வைத்தார்’ என்று கைது செய்து நிரூபிக்க முடியாமல் திணறிய போலீஸ், சம்பவத்தின்போது அங்கே இல்லாத ‘பதக்’ என்பவரை ‘முஸ்லிம்கள் எரித்ததைப் பார்த்தேன்’ என்று சொல்ல வைத்தது.

நாதுராம் கோட்சே, கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக்கொன்றதுதான் நினைவிற்கு வருகிறது. ஆனால் அவசரப்பட்டு அவனை முஸ்லிம் என அறிவித்துவிடாமல், நிதானமாக விசாரித்தறிந்து காந்தியை கொன்றது இந்துதான்’ என்று ரேடியோவில் அறிவிக்கச் செய்தார் அன்றையப் பிரதமர் ஜவஹர்லால்நேரு.

ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சம்பவ இடத்திற்கு விசிட் செய்த அந்த நிமிடத்திலேயே, ‘இது ஒரு சமுதாயத்தின் பயங்கரவாதச் செயல்’ என்றார். இந்துத்துவ அமைப்புகளின் துவேஷத் தீ கனன்று எரிய அவரே எண்ணெய் வார்த்தார்.


ஒன்றா, இரண்டா… சுமார் 2,000 மனித உயிர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலேயே வேட்டையாடப்பட்டன. சொந்த மண்ணிலேயே லட்சக்கணக்கானவர்கள் அகதிகளான அவலமும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலேயே தான் நிகழ்ந்துள்ளது.

ஒரு நாடு அல்லது ஒரு இனம் இவற்றின் மீதான துவேஷத்தை திட்டமிட்டு கட்டமைத்தே இது போன்ற இனப் படுகொலைகள், பேரழிவுகள் வரலாற்றில் சாத்தியமாகியுள்ளது. போர்களின் போது எதிரிகளை வீழ்த்த, பெரும் தீமைகளை அரங்கேற்ற ஒரு ‘பரிசுத்தமான உயர்ந்த நோக்கம்!’ மக்கள் மனதில் விதைக்கப்படுவது வரலாறு நெடுகிலும் நடந்துள்ளது. குஜராத்தில் ‘ஜெய்ராம்’ என்ற கோஷத்துடன் ஒன்றுபட்டு இஸ்லாமியர்களைக் கொல்வது என்பது புனிதச் செயலாக இந்துக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது.

சிலுவைப்போர்களின் போது குழந்தைகளின் சிலுவைப்படை பலகொடிய அழிவுகளுக்குப் பயன்பட்டு, பலியிடப்பட்டனர். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் ஜெர்மானிய சமூகத்தினரை கொலை வெறியர்களாக மாற்ற முடிந்திருக்கிறது.

ஆனால் இவ்வளவு நாகரிகம் வளர்ந்த 21_ஆம் நூற்றாண்டிலும் அந்த வரலாறு திரும்ப வேண்டுமா?

இஸ்லாமியர்களுக்கு எதிரான துவேஷ மனப்பான்மைக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்துக்களுக்கு சில விஷயங்களில் தெளிவை உண்டாக்க வேண்டும். எல்லாவற்றையும் வாளும், நெருப்புமே சாதிக்குமென்பது பைத்தியக்காரத்தனத்தின் உச்சகட்டம்!

இப்படிப் பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்திற்கு மக்களை கொண்டு சென்றதால்தான் நரேந்திரமோடி போன்றவர்களும், அவர் சார்ந்த இந்து இயக்கங்களும் குஜராத்தில் இவ்வளவு வன்முறைகளை நிகழ்த்த முடிந்தது.

இதே இந்தியாவின் மற்ற பகுதிகளில் சகிப்புத்தன்மையின் சாட்சியமாக இந்து மதத்தை நம்பும் கோடிக்கணக்கான இந்துக்களும் வாழ்கின்றனர்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.