சத்தியமார்க்கம்.காம் – ஓர் தன்னிலை விளக்கம்

அன்பார்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கடந்த சில நாட்களாக சத்தியமார்க்கம்.காம் தளத்தின் பின்னூட்டங்களில் விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெறுவதால் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகம் ஓர் தன்னிலை விளக்கத்தை முன் வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.

சத்தியமார்க்கம்.காம் நிர்வாகம், “சமூகத்திற்கு தம்மால் இயன்ற நன்மையை செய்தல், எதுவும் செய்ய இயலாத சூழலில் மவுனமாக இருந்து விடல்” என்ற தனது நோக்கத்தில் மிக உறுதியுடன் உள்ளது. மேலும் இதுவரை இத்தள நிர்வாகம் எந்த ஒரு தனி நபரையோ தனி அமைப்பையோ சாராமல் தூய இஸ்லாம் காட்டும் சத்தியப் பாதையிலேயே நிலையாக நடைபோட்டு செல்கிறது என்பதில் முழு நம்பிக்கையைக் கொண்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களிலும் அதில் எத்தகைய சமரசத்தையும் செய்வதான எண்ணமும் இத்தள நிர்வாகத்திற்குக் கிடையாது என்பதையும் இங்கே தெளிவுபடுத்துகிறது.

சத்தியமார்க்கமாம் இஸ்லாம் ஓர் திறந்த புத்தகம் போன்றதாகும். அந்த வகையிலேயே சத்தியமார்க்கம்.காம் தளமும் விசாலமான மனதுடன் ஓர் திறந்த புத்தகமாகவே சமூகத்தின் முன்னிலையில் இருக்க விரும்புகிறது.

இத்தளத்தில் பிரசுரிக்கப்படும் எந்த ஒரு ஆக்கத்திலும் தவறான தகவல்களோ, பொய்களோ இடம்பெற்று விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக தள நிர்வாகம் செயல்படுகின்றது. பிரசுரிக்கப்படும் தகவல்கள் ஒருதலை பட்சமாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே வாசிக்கும் வாசகர்கள் மனதில் எழும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவிக்கவும், தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும் இத்தளம் நான்கு வகைகளில் வாசகர்களுக்கு வழி வகை செய்துள்ளது அனைவரும் அறிந்ததே!

வாசகர்கள் தங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை,

1. admin@satyamargam.com எனும் மின்மடல் மூலம் நேரடியாக தளநிர்வாகிக்கு தெரியப்படுத்தலாம்.

2. தளத்தில் உள்ள தொடர்பு கொள்ள எனும் பக்கம் மூலம் தளநிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.


3. சம்பந்தப்பட்ட ஆக்கங்களின் பின்னூட்டங்களில் அவ்வாக்கங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் பரிமாறிக் கொள்ளலாம்.


4. விவாத அரங்கத்தில் பொதுவான அனைத்து விஷயங்களின் மீதும் பரஸ்பரம் தங்கள் கருத்துக்களை அழகிய முறையில் பரிமாறிக் கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் ஆக்கங்களின் பின்னூட்டங்கள் பகுதியானது வாசகர்களின் ஆர்வம் மற்றும் எழுத்துத் திறமையை வளர்க்கவும், சிந்தனைக்கு ஊக்கம் அளிக்கும்படியாக ஆக்கம் தொடர்பான தங்கள் எண்ணங்களைத் தயக்கமின்றி மனம் திறந்து வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காகவே அங்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்காத சுதந்திரமான ஓர் சூழ்நிலைக்கு நிர்வாகம் வழிவகை செய்துள்ளது. ஆக்கங்கள் தொடர்பான கருத்துக்கள், விமர்சனங்கள் தவிர வேறு எவ்வகையிலான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் ஆக்கங்களின் பின்னூட்டத்தில் அனுமதியில்லை. அவ்வகையில் பரிமாறப்படும் ஆக்கங்களுக்குத் தொடர்பில்லாத கருத்துக்கள், அவை பயனளிக்கத்தக்கவைகளாக இருப்பினும் கூட எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மட்டுறுத்தினரால் அழிக்கப்படும்.

இதை வாசித்தீர்களா? :   தோழர்கள் நூல் ஆன்லைனில் பெறும் வசதி

 

இத்தளத்தின் விவாத அரங்கம் பகுதி சமூகம் அன்றாடம் சந்திக்கும் அனைத்து பிரச்னைகள், சமூகத்திற்கு உபயோகமான தகவல்கள் குறித்த ஓர் ஆரோக்கியமான கலந்துரையாடலை மனம் திறந்து விவாதிக்கத் தூண்டும் அதே வேளையில் அங்கு எவ்வித தனிமனித தாக்குதலோ, வேண்டாத தகவல்களோ நுழைந்துவிடக் கூடாது என்ற நன்நோக்கில் கருத்துக்கள் நிர்வாகத்தின் மேற்பார்வையில் மட்டுறுத்தல் செய்யப்பட்டு பதியும்படியாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுவான விஷயங்களைக் குறித்து சகோதரர்கள்  தங்கள் கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் பரிமாறிக் கொள்ள விரும்பினால் விவாத அரங்கில் தங்களை உறுப்பினர்களாக பதிந்து கொண்டு தொடரலாம்.

இங்கும் சமூகத்திற்கு கேடு விளைவிக்கும்படியான, தரம் தாழ்ந்து தன்னோடு கருத்துப் பரிமாறுபவரையோ அல்லது ஓர் தனி மனிதரையோ, எவ்வித ஆதாரமும் இன்றி அமைப்பு/இயக்கம்/கட்சிகளையோ விமர்சிக்கும் வகையிலான கருத்துப் பரிமாற்றங்களுக்கு சத்தியமார்க்கம்.காம் எவ்வகையிலும் அனுமதி வழங்காது.

மேற்கண்ட இவை அனைத்தும் சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு மட்டுமே சத்தியமார்க்கம்.காம் செய்கின்றது. எதிர்காலத்தில் ஓர் சிறந்த, நடுநிலையான, சிந்தித்துச் செயலாற்றக் கூடியதொரு சமூகத்தைக் கட்டமைக்கும் உயரிய நோக்கில் செயல்பட எண்ணும் சத்தியமார்க்கம்.காம் தளத்தின் பணிகள் சிறக்கவும், இலட்சியத்தை அடையவும் வாசகர்களாகிய உங்கள் அனைவருடைய ஆதரவும் அவசியம் தேவை.

அதற்காக சத்தியமார்க்கம்.காம் குழு, இயக்கம்/அமைப்பு/தனிமனித ஆராதனை/தனிமனிதத் தாக்குதல் போன்ற சார்பு மனப்பான்மையை விட்டொழித்து சத்தியமார்க்கமாம் இஸ்லாம் என்ற ஒரே முழக்கத்தை ஒருமித்த குரலில் எழுப்பி ஒன்றிணைந்து முன்செல்ல சகோதரர்களை அன்போடு அழைக்கின்றது.

ஒன்றுபடுவோம்! ஒருங்கிணைந்து முன்செல்வோம்! வெற்றிபெறுவோம்! – இன்ஷாஅல்லாஹ்!

– நிர்வாகம்(சத்தியமார்க்கம்.காம்)