| குதிரைகள்... விற்பனைக்கு |
|
|
| ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| செவ்வாய், 22 ஜூலை 2008 02:56 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
நம் நாட்டின் முழு மின்சக்தித் தேவையில் நம்முடைய அணு உலைகளின் மூலமாக 3% மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகின்றது. அடுத்து வரும் பதினைந்து ஆண்டுகளில் மேற்கொண்டு வெறும் 4% அணுமின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உலகநாடுகள் எதிலும் விலைபோகாத அணு உலைகளை 300000 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து, அமெரிக்க நிறுவனங்களிலிருந்து வாங்குவது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பது சுத்த மோசடி என்றும் உலகிலேயே தோரியம் அதிகம் கிடைக்கும் நம் நாட்டில் அதைப் பயன்படுத்தாமல் யுரேனியத்தை அமெரிக்காவிடமிருந்து வாங்குவது மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் செயல் மட்டுமின்றி, நமது அணு உலைகளையும் நம் நாட்டுப் பாதுகாப்பையும் அமெரிக்காவிடம் அடகு வைப்பதாகும் என்பது செங்கொடியினரின் குற்றச்சாட்டு. ஆனால் நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர், "நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாத எந்தவொரு முடிவையும் தமது அரசு எடுக்கவில்லை" என்று குதிர் விளக்கமளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி பேசும்போது, அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையைத் தமது கட்சி முழுமையாக எதிர்க்கவில்லை என்றும் இந்தியாவின் பங்குக்குறைவை மட்டுமே எதிர்ப்பதாகவும் புதுவிளக்கம் சொன்னார். "ஐ எஸ் ஐ, எல்லை தாண்டிய தீவிரவாதம்" போன்ற அவரது நிரந்தரப் பதிவுச் சொற்கள், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான அவரது நாடாளுமன்றப் பேச்சின்போது வெளிப்பட்டன. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவு/எதிர்ப்பு நிலவரம்:
இதில் முடிவை வெளியில் சொல்லாத, நேற்றுவரை விலைபடியாத குதிரைகளான மூன்று சுயேட்சைகள், பாரதீய நவசக்திக் கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் மற்றும் வாக்களிக்க முடியாத/விரும்பாத உறுப்பினர்களும் உள்ளனர். மேற்காணும் பட்டியிலில் உள்ள் ஆதரவு எதிர்ப்பாகவோ எதிர்ப்பு ஆதரவாகவோ மாற்றமடையக் கூடும்.
காலியாக உள்ள இரண்டு இடங்களும் உரிமை பறிக்கப் பட்டு ஓரிடமும் போக மீதமுள்ள 542 உறுப்பினர்களுள் 272 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே இப்போதுள்ள நடுவண் அரசு மேலும் ஓராண்டு ஆள முடியும். நேற்று மாலை நிலவரப்படி 267 உறுப்பினர்கள் ஐக்கிய முன்னணிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இதற்கிடையில், "குறைந்தது நான்கு காங்கிரஸ் உறுப்பினர்களாவது ஆளும் கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பர்" என்று எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் "பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்களுள் சிலர் எங்கள் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர்" என்று காங்கிரஸும் வெளிப்படையாகவே அறிவித்துக் குதிரை வியாபாரத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர் என்பதை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டனர். மேலும், மொய் ஓட்டுக் கணக்குப் பார்ப்பதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியுடைய வீட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கு வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தடபுடலான விருந்தளிக்கப்பட்டது. எதிர்காலப் பிரதமர் என்று முன்மொழியப் பட்டிருக்கும் மூன்றாவது அணித் தலைவி மாயாவதி, கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து கொண்டு ஆட்சியைக் கவிழ்ப்பதில் முனைப்புடன் இருக்கிறார். ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி எனப் பெயரிடப்பட்ட மாயாவதி தலைமையிலான மூன்றாவது அணியில் அ.தி.மு.க., சமாஜ் வாடி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் உள்பட 8 கட்சிகள் முன்னர் அங்கம் வகித்தன. முதலில் இந்த அணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது. அண்மையில் குதிரை வியாபாரத்தில் சிக்கி, சமாஜ்வாடி கட்சி `பல்டி' அடித்து காங்கிரஸ் பக்கம் போய் விட்டது. தற்போது 3-வது அணியில் பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத், இந்திய தேசிய லோக் தளம், ஜார்க்கண்ட் விகாஸ் கட்சி, ராஷ்டீரிய லோக் தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கான, ராஷ்டீரிய சமிதி உள்பட 10க் கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. மேற்காணும் பட்டியலில் ஒரு சிக்கல் உள்ளது. கொலைக்குற்றம் சாட்டப் பட்டுச் சிறைவாசம் அனுபவிக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சிபு சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.கவோடு சேர்ந்து கொண்டு அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக உறுதிப் படுத்தாத செய்திகள் கசிந்தன. அதையடுத்து, "ஜா.மு.மோ. உறுப்பினர்கள் ஐவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால், சிபு சோரனுக்கு நடுவண் அரசில் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப் படும்; அமைச்சர் பதவிக்கு அவர் முற்றிலும் தகுதியானவர்" என்று கொலைக் குற்றம் சாட்டப் பட்டுள்ள சிபு சோரனைப் புனிதப் படுத்தி, நாடாளுமன்ற விவகார அமைச்சர் வயலார் ரவி அறிக்கை விட்டிருக்கிறார். பா.ஜ.க. மட்டும் சளைத்ததா? "எங்களோடு சேர்ந்து கொண்டு காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு வாக்களித்தால் நடுவண் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பிழைத்து விட்டாலும்கூட சிபு சோரனை நாங்கள் ஜார்கண்டின் முதலமைச்சர் பதவியில் அமர்த்துவோம்" என்று பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. இதிலிருந்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மக்களுக்கு ஒரே செய்தியைத் தெளிவாகச் சொல்லுகின்றனர். அதாவது "கொலைக் குற்றவாளியே ஆனாலும் தங்களோடு சேர்ந்து விட்டால், கோப்புகள் மூடப் படுவதோடு பதவியும் வழங்கப் படும்" என்பதுதான் அந்தத் தெளிவான ஞானஸ்நானச் செய்தி. மேலும், "ஆளும் கூட்டணிக்கு ஆதரவு வாக்களிப்பதற்காக 250 மில்லியன் ரூபாய்வரை எனது ஒரு வாக்குக்கு விலை பேசப் பட்டது" என்று முலாயம் சிங்குடைய சமாஜ்வாடிக் கட்சியின் அதிருப்தியாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனவ்வர் ஹஸன் வெளிப்படையாகக் கூறுகிறார். நமது நோக்கம், நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்ற ஜோஸியம் சொல்வதன்று. வியாபாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவது மட்டுமே. இந்தத் தலையங்கம் வெளியாகும்போது, பேரங்கள் பேசப்பட்டுக் குதிரை வியாபாரம் நடந்து முடிந்திருக்கும். சத்தியமேவ ஜெயதே!
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (10)
![]()
ஆட்சியையும் பிரதமர் பதவியையும் காங்கிரஸ் கட்சியையும்கூட பணயம் வைக்கும் அளவுக்கு மன்மோகன் சிங் பிடிவாதம் பிடிக்கும் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் எதற்காக? மின்சாரத்துக்கா? அணுகுண்டுக்கா?`மின்சாரத்துக்காகத்தான். இது இல்லாவிட்டால் இந்தியாவே இருண்டுவிடும்' என்று மன்மோகன் அரசாங்கம் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரங்கள் வெளியிட்டு மக்கள் ஆதரவைத் திரட்ட களத்தில் இறங்கியிருக்கிறது.
உண்மையில் இந்த ஒப்பந்தம் மின்சாரத்துக்கானது இல்லை என்ற சந்தேகம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே உண்டு. நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது.
மின்சாரத்துக்கான ஒப்பந்தம் என்றால், இதைப் பற்றிய விளக்கங்களை மக்களிடமோ அரசியல் கட்சிகளிடமோ தெரிவிக்க வேண்டியவர்கள் யார் யார்? பிரதமரே நேரடியாகத் தெரிவிக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரை அச்சாகும்வரை அவர் இதர அரசியல் கட்சித் தலைவர்களிடம் நேருக்கு நேர் பேசவில்லை; டி.வி. பேட்டிகளும் தரவில்லை. அடுத்தபடியாக மத்திய மின்சார அமைச்சர் பேசியிருக்கலாம். அவரும் இதுவரை பேசவில்லை.
மின்சக்தித் துறை செயலாளர் போன்ற அதிகாரிகளும் பேசவில்லை.
ஒரே ஒரு அதிகாரிதான் தொடர்ந்து பத்திரிகை, டி.வி. சிறப்பு பேட்டிகளில் பேசிவருகிறார்.
இங்கேதான் என் முதல் சந்தேகம். நம்மிடம் உள்ள யுரேனியம் போதவில்லை என்பதே உண்மைதானா? மின்சார உலைகளுக்கு அமெரிக்கா, இதர நாடுகளிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்துவிட்டு, நம் வசம் உள்ள யுரேனியத்தை முழுக்கவும் அணு ஆயுத தயாரிப்புக்குத் திருப்பி விடுவதுதான் அசல் நோக்கமா?
1
July 22, 2008 08:53
பாராளுமன்ற அவையில் குதிரை பேரத்தின் பணக்கட்டு குவியலைக் கண்டுக் கொண்டு இருக்கின்றீர்களா?. இந்தியப் பாராளுமன்றம் உலக அரங்கில் நாறுகிறது. ஜனநாயகம் தந்தப் பரிசு.
2
July 22, 2008 12:05
3 கோடிக்கான 1000 ரூபாய் நோட்டு கட்டுகள்.
காங்கிரஸ் கொடுத்ததாக பாஜக புகார்.
1. கொடுத்தது உண்மையானால் இந்த அரசை உடனே இறக்க ஜனாதிபதி முன்வர வேண்டும்.
2. பொய் எனில், உலக அரங்கில் இந்தியாவை கேவலப்படுத்திய பாஜக மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்(தேசப்பற்று ரீதியில் நடவடிக்கை எனில், கட்சிக்கான அங்கீகாரத்தை இரத்து செய்தல்)
3
July 22, 2008 12:20
தேசிய மாநாட்டுக் கட்சியின் திடீர் ஆதரவால் மத்திய அரசின் தலை தப்பும் என்றே கனிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மணிகளில் தெரிந்துவிடும்!
அமெரிக்க வாட்ச், அமெரிக்க சம்பாத்தியம், அமெரிக்க படிப்பு வேண்டும்! அமெரிக்க அணுசக்தி மட்டும் வேண்டாமா? என்று லாலுவும் சோடை போயுள்ளார். அமெரிக்காவிற்குச் சென்று கொள்ளையடிப்பதற்கும் ? அமெரிக்காவை இந்தியாவுக்கு வந்து கொள்ளையடிக்கச் சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் உளரிக் கொட்டியுள்ளார்.
இதற்கிடையே எம்பிக்களுக்கு 25-30 கோடி ரூபாய் விலை பேசப்பட்டதாகச் சொல்லப்பட்டச் செய்திகளில் உண்மையில்லை என்றே தெரிகிறது! 3-9 கோடி ரூபாய்கள் வரை மட்டுமே பேரம் பேசப்பட்டதாகவும் முன்பணமாகக் கொடுக்கப்பட்ட ஒரு கோடியை மக்களவையில் காட்சிக்கு வைத்துள்ளனர். லஞ்சப் பணம் கொடுப்பதை தனியார் தொலைக்காட்சி படமும் பிடித்து உள்ளதாம்!
வாழ்க பணநாயக மக்களாட்சி!
4
July 22, 2008 13:06
நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய அரசு வெற்றி
இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கோரிய நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 275 வாக்குகளும் எதிராக 256 வாக்குகளும் பதிவாகின.
அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சில உறுப்பினர்களுக்கு கையூட்டு வழங்கப்பட்டது என்று எழுந்த குற்றச்சாட்டு காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதம் சிறிது நேரம் தடைப்பட்டது.
இறுதியில் 19 வாக்குகள் கூடுதலாக பெற்று அரசு வெற்றி பெற்றது.
பல வாரங்களாக நடைபெற்ற அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் இரண்டு நாட்கள் நடைபெற்ற கடுமையான நாடாளுமன்ற விவாதத்துக்கு பிறகு இந்த முடிவு வந்துள்ளது.
நாடாளுமன்றத்தில்
சிறிய கட்சிகள் மற்றும் சில சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆளும் கட்சி இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டதையடுத்து இந்த நம்பிக்கை வாக்கை பிரதமர் மன்மோகன் சிங் கோரினார்.
அரசியல் கட்சிகளின் கருத்துக்கள்
மணிசங்கர் ஐயர், மத்திய அமைச்சர், காங்கிரஸ் கட்சி :.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு பெற்றிருக்கும் வெற்றி தாமே எதிர்பார்க்காத பெரிய வெற்றி என்று இந்திய நடுவணரசின் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மணிசங்கர் ஐயர் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இடதுசாரிகளின் ஆதரவில்லாத போதும் கூட தமது அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ள நிலையில், அடுத்த தேர்தலில் தமது கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று நம்பிக்கை தமக்கு தற்போது ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும் தரப்பிலிருந்து பணம் கொடுக்கப்பட்டதாக நாடாளுமன்றத்திற்குள்ளேயே பணக்கட்டுக்கள் கொண்டு வந்து காட்டப்பட்ட சம்பவம் குறித்து கேட்டபோது, இது வெறும் குற்றச்சாட்டு என்கிற நிலையிலேயே இருப்பதாகவும் இது தொடர்பான விசாரணைகள் நடந்து உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் இது குறித்து கருத்து கூறமுடியும் என்றும் அவர் கூறனார்.
இல. கணேசன், தலைவர், தமிழக பா ஜ க :
கையூட்டு கொடுத்ததாக குற்றச்சாட்டு
''அரசின் இன்றைய வெற்றி வாங்கப்பட்ட வெற்றி'' என்றும் இதனால் பாரதீய ஜனதா கட்சிக்கு பின்னடைவு ஏதும் கிடையாது என்றும் கூறினார் இல கணேசன்.
எதிர்கட்சிகள் இனிமேல் மக்களை சந்தித்து அவர்களிடம் பிரச்சனைகளை முன்வைக்கப் போவதாகவும் தெரிவித்த கணேசன், அணு சக்தி ஒப்பந்தத்தை பாரதீய ஐனதா கட்சி எதிர்க்கவில்லை என்றும் அமெரிக்காவின் ஹைட் சட்டத்தைத்தான் பா ஜ க எதிர்கிறது என்றும் அவர் கூறினார்.
உ.ரா.வரதராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் :
நடுவணரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி என்பது அரசியல் மோசடி என்று வர்ணித்த உ.ரா.வரதராஜன், இது இடதுசாரிகளுக்கு அரசியல் பின்னடைவல்ல என்று கூறினார்.
இந்த வாக்கெடுப்பில் நடுவணரசு வெற்றி பெற்றிருந்தாலும், அடுத்தடுத்து அரசு மேலும் பல சவால்களை எதிர் கொள்ளவேண்டியிருப்பதாகவும், அதில் அரசு சிக்கல்களை சந்திக்கும் என்றும் அவர் கூறினார்.
சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பதவியில் தொடர்வது குறித்து கட்சியின் உயர்மட்டக் குழு விரைவில் கூடி நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
5
July 23, 2008 07:52
I do not know tamil, however managed to get this article transulated from my friend.
I would like to stress that the present administration in Delhi has miserably failed to address the issues affecting the ordinary Indian.
Prime Minister Manmohan Singh is a bureaucrat and lacks political acumen. He is a dummy prime minister and the real power wielders are acting from behind ever since he had assumed the post.
The nuclear deal with the United States is the brainchild of Sonia Gandhi and the coterie surrounding her. She does not bother whether India prospers or withers. The nuclear deal, as it is drafted by the US, will curtail India’s freedom as a non-aligned nation.
the deal has highlighted America’s supremacy and India is made a pawn in the international arena. America wants to curb India becoming a world leader.
If the Bharatiya Janata Party (BJP) becomes a moderate force, denouncing extremism of all kinds and upholds religious freedom, I think they should be given a chance again. A B Vajpayee, of BJP, was an able prime minister. India achieved many milestones during his term.
Congress is not the only party that can deliver goods to India and its people. Indeed, the Congress Party and its leaders are responsible for the predicament India finds itself after nearly 61 years of independence.
It is highly unlikely that the Singh government will survive the confidence vote and if somehow it manages, Singh will be a lame duck prime minister. The people of India do not want the nuclear deal with the US to go ahead in its present form and since Singh and his mentors want the deal to go ahead to achieve their hidden agenda, they deserve an exit.
K.K
6
July 23, 2008 22:08
நாடாளுமன்றத்தில்
சிறிய கட்சிகள் மற்றும் சில சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆளும் கட்சி இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
7
July 24, 2008 12:59
இந்த வாக்கெடுப்பில் நடுவணரசு வெற்றி பெற்றிருந்தாலும், அடுத்தடுத்து அரசு மேலும் பல சவால்களை எதிர் கொள்ளவேண்டியிருப்பதாகவும், அதில் அரசு சிக்கல்களை சந்திக்கும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு பெற்றிருக்கும் வெற்றி தாமே எதிர்பார்க்காத பெரிய வெற்றி என்று இந்திய நடுவணரசின் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மணிசங்கர் ஐயர் அவர்கள் கூறினார்.
8
July 24, 2008 13:03
நாடாளுமன்றத்தில்
சிறிய கட்சிகள் மற்றும் சில சுயேச்சை உறுப்பினர்களின் 'கோடி மற்றும் பதவிகளின் மீதான' ஆதரவுடன் ஆளும் கட்சி இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது என இருக்க வேண்டும்.
இத்தனை வெளிப்படையாகக் கோடிகளின் மூலமும் சிபுசோரன் போன்றக் கிரிமினல்களுக்குப் பதவி உறுதிமொழி மூலமும் ஓட்டுகளை விலைக்கு வாங்கிக் காங்கிரஸ் அரசு வெற்றி பெற்ற போதும் அதனைக் குறித்து எந்தவித வெட்கமும் இன்றி மீடியாக்களின் முன் தோன்றும் காங்கிரஸ் தலைவர்களின் முகத்தில் காறி உமிழ வேண்டும் போன்று உள்ளது. இதுதான் ஜனநாயகமாம். அடத்தூ.
9
July 24, 2008 21:45
நோட்டுக்கு ஓட்டு-வீடியோ வெளியிட்டது ஐபின்!
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 12, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
டெல்லி: நோட்டுக்கு ஓட்டு விவகாரத்தில் தனது குழுவினர் படம் பிடித்த வீடியோ ஆதாரத்தை சிஎன்என் ஐபிஎன் டிவி முதல் முறையாக ஒளிபரப்பியுள்ளது.
ஜூலை 22ம் தேதி லோக்சபாவில் நம்பிக்ைக வாக்கெடுப்பு நடந்தது. அப்போது 3 பாஜக எம்.பிக்கள் லோக்சபாவில் கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு வந்து கொட்டி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் தங்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார்கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதை படம் பிடித்துள்ளதாக சிஎன்என் டிவியும் அறிவித்தது. இருப்பினும் அதை ஒளிபரப்பப் போவதில்லை என்றும் அந்த ஆதாரத்தை லோக்சபா சபாநாயகரிடம் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தது.
அதேபோல சபாநாயகர் அலுவலகத்தில் இதுதொடர்பான வீடியோ டேப்புகளையும் ஒப்படைத்தது. இந்தநிலையில் சிஎன்என்-ஐபிஎன் லஞ்சம் கொடுத்த விவகாரம்த தொடர்பான வீடியோ ஆதாரத்தை ஒளிபரப்ப வேண்டும் என பாஜக நெருக்குதல் கொடுத்தது. ஒளிபரப்பும் வரை சிஎன்என் டிவியை பாஜக புறக்கணிப்பதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில் இது நாள் வரை அமைதி காத்து வந்த சிஎன்என் நேற்று இரவு வீடியோ ஆதாரத்தை ஒளிபரப்பியது.
எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.பி. ரியோத்தி ராமன் சிங் முக்கிய பங்கு வகித்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்தான் பாஜக எம்.பிக்கள் மகாவீர் சிங் பகாரியா, பகன் சிங் குலஸ்தே, அசோக் அர்கல் ஆகியோருக்கு பணம் கொடுத்து அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கூறியதும் தெளிவாகியுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 2 நாட்களுக்கு முன்பு ரியோத்தி ரமன் சிங், 3 பாஜக எம்.பிக்களுடனும் பேச்சு நடத்தியுள்ளார். இதுதொடர்பான பேச்சுவார்த்தையின்போது மேலும் இரண்டு பேரும் உடன் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் அமர்சிங்கின் உதவியாளரான சஞ்சீவ்.
முதல் நாள் நடந்த பேச்சுவார்த்தை எந்த வீட்டில் நடந்தது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. 2வது நாள் பேச்சுவார்த்தை எம்.பி. அர்கலின் வீட்டில் நடந்துள்ளது. அங்கு வைத்துத்தான் அவரிடம் சஞ்சீவ் ரூ. 1 கோடி பணத்தை கட்டுக்கட்டாக கொண்டு வந்து கொடுக்கிறார். மேலும் பணத்தைக் கொடுப்பதற்கு முன்பு டெலிபோனில் யாருடனோ அவர் பேசுகிறார். (அவர் அமர்சிங் என்பது பாஜகவின் குற்றச்சாட்டு).
முதலில் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ரியோத்தி ரமன் சிங் கூப்பிடும்போது 3 பாஜக எம்.பிக்களும் தயக்கம் காட்டுகின்றனர். பணத்தைப் பெறுவது குறித்தும், அவர் கூறும் நிபந்தனைகளுக்கும் அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
சஞ்சீவ் பெரிய பாலிதீன் பைகளில் பணத்தைக் கட்டுக் கட்டாக அடுக்கி எடுத்து வருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. அதை அர்கல் வீட்டில், அவருக்கு முன்பு உள்ள டேபிளில் கொட்டுகிறார் சஞ்சீவ்.
இந்த வீடியோவில், இந்த லஞ்ச விவகாரத்திற்குப் பின்னணியில் இருப்பது யார், யார் பணத்தை அனுப்பியது என்ற விவரங்கள் தெளிவாக இல்லை.
ராஜ்தீப் சர்தேசாய் நேரில் வாக்குமூலம்:
இதற்கிடையே, சிஎன்என் -ஐபிஎன் டிவியின் தலைவர் ராஜ் தீப் சர்தேசதாய் தலைமையிலான 6 பேர் குழு, கிஷோர் சந்திர தியோ தலைமையிலான நாடாளுமன்றக் கமிட்டி முன்பு ஆஜராகி எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்தனர்.
சிஎன்என் குழுவிடம், நாடாளுமன்றக் குழு பல்வேறு கேள்விகளைக் கேட்டது. எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதை படம் எடுக்குமாறு பாஜக தரப்பிலிருந்து முன் கூட்டியே கோரப்பட்டதா, அதன் பேரில் இந்த வீடியோ படமாக்கல் நடந்ததா என்பது குறித்தும் நாடாளுமன்றக் குழுவினர், சிஎன்என் குழுவினரிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் தியோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆகஸ்ட் 18ம் தேதி சமாஜ்வாடி கட்சி எம்.பி. ரியோத்தி ரமன் சிங், எல்.கே.அத்வானியின் அரசியல் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி (சிஎன்என் படம் பிடித்தபோது சம்பவ இடத்தில் இருந்தவர்), சஞ்சீவ் சக்சேனா (அர்கல் வீட்டுக்குப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டியவர்), சோஹைல் ஹிந்துஸ்தானி (3 பாஜக எம்.பிக்களுடன் அமர்சிங் வீட்டுக்குப் போனதாக கூறப்படுபவர்) ஆகியோரை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளோம்.
அர்கல் மற்றும் பகன் சிங் குலஸ்தேவிடம் நடத்திய குறுக்கு விசாரணையின்போது இந்த பெயர்கள் எங்களுக்குக் கிடைத்தன என்றார்.
இவர்ள் தவிர அறுவைச் சிகிச்சை செய்து ஓய்வில் இருந்து வரும் 3வது எம்.பியான மகாவீர் போக்ராவையும் விசாரணைக்கு வருமாறு நாடாளுமன்றக் கமிட்டி அழைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மேலும் இரு வீடியோ டேப்புகளை சிஎன்என் குழு நாடாளுமன்றக் கமிட்டியிடம் வழங்கியுள்ளது.
இந்த டேப்புகள் ஸ்டிங் ஆபரேஷனின்போது எடுக்கப்பட்டவை அல்ல என்றும், அது நடந்து முடிந்த பின்னர் 3 பாஜக எம்.பிக்களையும் பேட்டி கண்டது தொடர்பான வீடியோடேப்புகள் என்றும் சிஎன்என் விளக்கியுள்ளது.
இதற்கிடையே, தாங்கள் படமாக்கிய வீடியோவை அப்படியே ஒளிபரப்புவதற்கு தங்களுக்கு உரிமை உள்ளதாக தியோவிடம், ராஜ்தீப் சர்தேசாய் தெரிவித்துள்ளார். அதற்கு தியோ மறுப்பேதும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
10
August 12, 2008 08:10
கருத்து எழுதுக :
|