சத்தியமார்க்கம்.காம்

இஸ்லாமியக் குடும்பச்சூழல் print Email
கட்டுரைப் போட்டிகள் - வருடம் 2007
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 05:46
சத்தியமார்க்கம்.காம் 2007ஆம் ஆண்டுக்கான நடத்திய உலகளாவியக் கட்டுரைப் போட்டியில் பெண்களுக்கான முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுக் கட்டுரைகள் போக, ஐந்து ஆறுதல் பரிசுக் கட்டுரைகளுக்கு வேறுபட்ட நான்கு சகோதரிகளின் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுப் பதிக்கப் பட்டன.

போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியோடு சகோதரியருக்கான ஐந்தாவது கட்டுரை ஏதும் அமையவில்லை என்பதால், 'ஒருவருக்கு ஒரு பரிசு' என்ற விதி தளர்த்தப் பட்டு, சிறப்புப் பரிசுக்குரிய கட்டுரையான "ஒற்றுமையும் தமிழக முஸ்லிம் இயக்கங்களும்" என்ற கட்டுரையை வடித்தளித்தச் சகோதரி ஜியா சித்தாரா (உம்மு ஹிபா) அவர்கள் எழுதிய இன்னொரு கட்டுரையான 'இஸ்லாமியக் குடும்பச்சூழல்' என்ற கட்டுரை ஆறுதல் பரிசுக்குரிய ஐந்தாவது கட்டுரையாக இங்குப் பதிக்கப் படுகிறது.- சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

முன்னுரை: இன்றைய உலகில் இஸ்லாமியக் குடும்பச்சூழல் மிகவும் இன்றியமையாதது. அன்பும் பண்பும் இரக்கமும் பணிவும் வீரமும் பொறுமையும் கொண்ட உம்மத்துக்களை உருவாக்க வேண்டியப் பெரும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தைச் சார்ந்ததாகும். ஒரு குடும்பம் இஸ்லாமின் அடித்தளத்தைக் கொண்டு கட்டப்பட்டால் அதிலுள்ள முஃமீன் செங்கல்கள் மிக வலுவானதாக, உறுதிமிக்கதாக இருக்கும். ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர் அடங்கியதாகும். குடும்ப வாழ்க்கையில் பிரதான பாத்திரங்கள் வகிப்பது கணவன் மற்றும் மனைவியே. குடும்ப வாழ்க்கை என்பது அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்த ஒரு கொடையாகும். அதைத் தம்பதியினர் முழுமையாக இம்மைக்கும் மறுமைக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய ஒழுங்குகளின் காலடிச் சுவட்டில் நடந்தார்களேயானால், இம்மை மற்றும் மறுமை வாழ்வு அமைதி தரக்கூடியதாய் இருக்கும். "ஒரு குடும்பத் தலைவன், தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். குடும்பத் தலைவி தன் வீட்டிற்குப் பொறுப்பாளி ஆவாள்" (அபூஹுரைரா(ரலி) -இப்ன்அஸ்ஸன்னீ).

சுயம்வரம்: கணவன் மனைவிக்கிடையில் புரிதலும் அன்பும் கருணையும் சகிப்புத்தன்மையும் மிக முக்கியம். "உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்தது நற்குணமுள்ள மனைவி" (அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) -முஸ்லிம்). கணவனின் வாரிசைச் சுமக்கப் போகும் பெண் சிறந்த ஈமானிய உணர்வுள்ள பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். பயிர் செழித்து வளர முதல் தகுதி விதையிடப்படும் நிலம் நல்லதாக இருத்தல் மிக அவசியம். நற்குணம் என்பது மறுமையில் நியாயத்தராசுத் தட்டில் மிகவும் கனமானது. அழகுக்கும் பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நற்குணமுள்ள பெண்ணைத் திருமணம் செய்யவே ஆண்கள் முன்வர வேண்டும். அப்படிப்பட்ட பெண்ணே கணவனிடம் அன்பும் பரிவும் காட்டுவாள். விட்டுக்கொடுத்து வாழ்க்கையை ஒளிமயமாக்குவாள். அதையேதான் மணமகனைத் தேர்வு செய்வதற்குப் பெண்ணும் அளவுகோலாகக் கொள்ள வேண்டும்.

மாமியாராகப் போகும் பெரும்பாலான தாய்மார்கள் தனக்கு வரும் மணமகளிடம் பணமும் அழகும் இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள். பெண் பார்ப்பதை ஒரு சடங்காக்கி வைத்திருக்கிறார்கள். தன் மகனின் வாரிசைச் சுமந்து, பெற்று, வளர்க்கப் போகும் பெண்ணிடம் நற்குணமும் பொறுமையும் ஈமானும் இருக்கிறதா என்று தேடாமல், அழகும் அந்தஸ்தும் உடைய பெண்ணைத் தேடி அலைகிறார்கள். சில ஆண்கள் குணவதியைத் தேடினாலும், பல தாய்-தந்தையர் அதற்குத் துணை போவதில்லை. தன் மகனை வளர்க்கவும் படிக்க வைக்கவும் செலவழித்த பணத்தை மீட்டிக் கொள்ள, பணம் காய்ச்சி மரங்களை விரும்புகின்றனர். உமர்(ரலி) கலீஃபாவாக இருந்த சமயத்தில் பால் கறந்து விற்றுப் பிழைப்பை நடத்தும் ஒரு பெண், "பாலோடு தண்ணீரைக் கலப்படம் செய்து" விற்குமாறு கூறிய தன் தாய் பேச்சைக் கேட்காமல், வறுமையிலும் அல்லாஹ்வின் உவப்பையே ஆசை வைத்தாள். அதனை அறிந்த கலீஃபா உமர்(ரலி) அவர்கள் தங்கள் மகனின் சம்மதத்தைப் பெற்று, அந்தச் சாதாரண நிலையில் மேலான ஈமானிய உணர்வுள்ள பெண்ணைத் தம் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். அந்தப் பெண்ணுடைய ஈமானிய இரத்தத்தில் (வம்சத்தில்) வந்தவரே ஐந்தாவது கலீபா என்று புகழாரம் சூட்டப்படும் உமர் பின் அப்துல் அஜீஸ். ஆனால் இக்காலத்தில் சிலர் ஆலிமாப் பெண்களை மணக்க முடிவு செய்து, மணம் முடிக்கின்றனர். அப்படி திருமணம் முடித்த ஆலிமாக்களில் சிலர் தங்கள் படிப்பை ஏட்டுச்சுரைக்காயாக ஆக்கி விடுகின்றனர். இன்னும் சிலரைக் கணவன்மாரே வீட்டுக்குள் பூட்டி வைக்கின்றனர். ஆக இஸ்லாமைத் தொலைத்த திருமணங்களும் இஸ்லாத்தைத் தேடாத திருமணங்களுமே பெருமளவில் நடைமுறையில் உள்ளன. சில பகுதிகளில் திருமணத்திற்குப் பிறகு கணவன் தன் மனைவியைச் சார்ந்து அவள் வீட்டுக்கே நிரந்தரமாகக் குடிபெயர்ந்து வாழ்க்கை நடத்துகிறார். இதுபோன்ற தவறுகளைக் களைந்து இஸ்லாத்தை நிலைநிறுத்துகின்ற திருமணமே சிறந்த குடும்பச் சூழலை ஏற்படுத்தும்.

திருமணம்: "உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காக, நீங்கள் அமைதி பெறுவதற்காகப் படைத்து, உங்களிடையே அன்பையும் கனிவையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்தித்துச் செயற்படும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் பல உள்ளன" (அல்குர்ஆன் 30:21). மனஅமைதி பெறுவதே திருமணத்தின் உயரிய நோக்கமாகும். ஒருவர் மற்றவருக்கு விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். மனைவி கணவனுக்கு மனஅமைதியும் மகிழ்ச்சியும் இன்பமும் தருபவளாக விளங்க வேண்டும். கணவனும் தன் மனைவிக்குப் பாதுகாப்பும் நிம்மதியும் தருபவனாக இருக்க வேண்டும். நல்ல இல்லறத்திற்கு ஒருவர் மற்றவருக்கு எல்லா விஷயங்களிலும் துணை நிற்க வேண்டும்.

நேர்வழி: தம்பதியர் ஒருவர் மற்றவரை நேர்வழியின்பால் துணைக்கு அழைப்பவராக இருக்க வேண்டும். நன்மையை நோக்கி அழைப்பவராக இருக்க வேண்டும். தன் பொறுப்பு குறித்து ஒவ்வொருவருக்கும் விசாரணை உள்ளது. "ஒரு நேர்மையான மனைவியானவள் இந்த உலக வாழ்க்கையிலும் ஆன்மீகத் துறையிலும் (தன் கணவனுக்கு) உதவக்கூடியவளாக இருப்பாள். அத்தகையவளே ஒருவன் பெற்றுக் கொண்ட அருட்கொடையில் மிகப்பெரும் அருட்கொடையாகும்" (பைஹகி, சஹீஹ் அல் ஜாமிஃ). ஒவ்வொரு கணவனும் மனைவியும் இதையே தன் மனதிற் கொள்ள வேண்டும். உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம் அபூதல்ஹா(ரலி) அவர்கள் தன்னை மணந்து கொள்ளுமாறு கேட்டபோது, உம்மு சுலைம்(ரலி) அவர்கள் சொன்னார்கள்: "நீர் நல்ல மனிதராக இருக்கிறீர். ஆனால் சிலைகளை வணங்கும் மூடராக இருக்கிறீர். அதை விடுத்து ஏக இறைவனை ஏற்றால் உம்மை மணம் செய்துக் கொள்வேன்" என்றார்கள். அபுதல்ஹா(ரலி) இஸ்லாத்திற்கு மாறியதையே மஹராக ஏற்று உம்முசுலைம்(ரலி) அவரை மணம் செய்து கொண்டார்கள். "ஒருவருக்கு நேர்வழி காட்டுவது அல்லாஹ்வின் கையில் உள்ளது" என்று கூறி, அதற்காக எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது ஒரு முஃமீனுக்கு அழகல்ல. ஒருவர் மற்றவருக்கு இபாதத்துக்களின் கதவுகளை திறக்க ஆசை காட்ட வேண்டும். எத்தனை வீடுகளில் மனைவி தொழும்போது அல்லது குர்ஆன் ஓதும்போது தொந்தரவு செய்கின்ற பிள்ளைகளைக் கணவன்மார்கள் 'நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றோ, தொழுகை நேரம் வந்து விட்டால், 'தொழுதுவிட்டு வா, அதுவரை நான் அடுப்பைக் கவனிக்கிறேன்' என்றோ கூறுகிறார்கள்?. நேர்வழியில் நடப்பதற்கு ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும். பயான்கள் நடைபெறும் கூட்டத்திற்குத் தன்னுடன் குடும்பத்தாரை அழைத்துப் போகவேண்டும். குழந்தைகள் பயான் கேட்கும்போது படுத்தினால், முறை மாற்றி இருவரும் குழந்தைகளைக் கவனித்தும் பயான் கேட்டும் வரவேண்டும். அதில் நன்மைகள் ஏராளம். ஒருவர் மற்றவருக்கு, தான் கேட்டதை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வேண்டும்; கலந்துரையாடல்கள் செய்ய வேண்டும்.

அன்பும் பரிவும் நம்பிக்கையும்: மாநபி(ஸல்) அவர்களுக்கு முதன்முறை வஹீ வந்தபோது அவர்கள் மிகவும் பயந்து போனார்கள். அவர்கள் "என்னைப் போர்த்துங்கள்", "என்னைப் போர்த்துங்கள்" என்றபடி வீட்டுக்கு வந்தார்கள். தனக்கு ஏதும் ஆகிவிடுமோ எனப் பயந்துபோயிருந்த நபியவர்களிடம் கதீஜா(ரலி) அவர்கள் அழகாக ஆறுதல் கூறினார்கள்: "நீங்கள் உறவினருடன் இணங்கி வாழ்கிறீர்கள். சிரமப்படுவோருக்கு இரங்குகிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். சோதனைக்கு உட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள். உங்களுக்கு அல்லாஹ் நன்மையையே கொடுப்பான்" என்று தேற்றினார்கள். நபி அவர்கள் அத்தனை பண்புகளுக்கும் சொந்தக்காரராக, பண்பாளராக இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு தன் கணவரை ஒரு கிறிஸ்துவ வேதகரிடம் அழைத்து சென்று இது நபித்துவம் எனப் புரிந்து கொள்கிறார்கள். ஒரு பேயோட்டியிடமோ, மந்திரவாதியிடமோ தன் கணவரை கதீஜா(ரலி) அவர்கள் அழைத்துப் போகவில்லை. அந்தக் காலத்தில் அப்படிபட்ட அறியாமை எண்ணங்களே சமூகம் முழுக்க வியாபித்து இருந்தது. ஆனால், கதீஜா(ரலி) அவர்கள் பண்பின் உறைவிடமாகத் திகழ்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கதீஜா(ரலி) பற்றி சிலாகித்து சொன்னார்கள்: "என்னை மக்கள் பொய்ப்படுத்தியபோது அவர் மெய்பித்தார். புறக்கணித்தபோது அவர் என்னை நம்பினார். மக்கள் விரட்டியபோது என்னை அரவணைத்தார். அவர் மூலம் மட்டுமே அல்லாஹ் எனக்குப் பிள்ளைகளைக் கொடுத்தான்" (ஆயிஷா(ரலி) -அஹ்மது). என்று மனம் நெகிழ தம் அன்பு மனைவியை அடிக்கடி நினைவு கூர்ந்திருக்கிறார்கள். எத்தகைய நம்பிக்கை அந்த மனைவிக்குத் தன் கணவனிடம் இருந்திருக்கிறது? இப்போதுள்ள இல்லறங்களில் நம்பிக்கையற்ற நிலையைப் பார்க்கிறோம். சண்டை சச்சரவுகளை அதிகம் கேள்விப்படுகிறோம். "உங்களில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவர்தான்" (அபூஹுரைரா(ரலி) -திர்மிதி). அப்படிபட்ட சகிப்புத்தன்மையும் பொறுமையும் தம்பதியினருக்குத் தேவை.

ஆடை: "அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை" (திருக்குர்ஆன் 2:187). ஆடை ஒருவரின் மானத்தைக் காக்கிறது; கண்ணியத்தைக் கொடுக்கிறது; வெளியிலுள்ள மாசுகளிலிருந்து காக்கிறது. அதேபோல் ஒரு கணவன், தன் மனைவியைப் பாதுகாக்கும் அரணாகவும் கண்ணியத்தையும் அவளுடைய உரிமைகளையும் கொடுப்பவராக இருத்தல் அவசியம். ஒரு மனைவி, தன் கணவனின் மானத்தையும் கண்ணியத்தையும் உடமைகளையும் காப்பவளாக இருத்தல் அவசியம். ஒருவருக்கொருவர் இரகசியங்களைப் பாதுகாப்பவர்களாகத் தம்பதிகள் திகழ வேண்டும்

மனைவி மீது கணவனுக்குள்ள உரிமைகள்: "ஐவேளை தொழுது, நோன்பு நோற்று, தன் கற்பைப் பாதுகாத்து, தன் கணவனுக்குக் கட்டுபட்டு நடக்கும் ஒரு பெண், அவள் விரும்பிய வாசல் வழியாகச் சுவனம் புகுவாள்" (அபூஹுரைரா(ரலி) -இப்ன் ஹிப்பான்). கணவனின் திருப்தியைப் பெறுபவளாக மனைவி இருத்தல் வேண்டும். கணவனுக்குக் கட்டுப்படுதல் என்றால் ஒரு கணவன், தன் மனைவியைப் பார்த்தாலே அவனுள் மகிழ்ச்சி பொங்க வேண்டும். அவனுக்காகவே தன் அலங்காரங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். வேலையிலிருந்து வீடு திரும்பும் கணவனை எத்தனை மனைவியர் மலர்ந்த முகத்துடன் வரவேற்கிறார்கள்? கணவனுடைய களைப்பை நீக்க முயற்சி செய்கிறார்கள்? அவன் மனசு குளிர விருப்பமானதை சமைத்து வைக்கிறார்கள்? அவனுடைய உறவுகளைப் பேணி நல்லவிதமாக நடக்கிறார்கள்? ஒரு பெண் சுவனவாதியா? நரகவாதியா? என்பதை, அவள் தன் கணவனிடம் நடந்து கொள்ளும் முறையை வைத்து முடிவு செய்து விடலாம். கணவன் வெறுக்கும் விஷயங்களைத் தன் இல்லத்தை விட்டும் விலக்கி விடுவது நன்மையானதாகும். கணவனுடைய அமானத்தை, பொருளாதாரத்தை விரயம் செய்யாமல், கஞ்சத்தனம் செய்யாமல் ஒரு நல்ல மனைவி, நடுநிலையாகச் செலவு செய்ய வேண்டும். "தம் கணவரின் உடமைகளைப் பேணிக்காப்பதில் குறைஷிப் பெண்களே சிறந்தவர்கள்" (அபுஹுரைரா(ரலி) -புகாரி) என்று நபி(ஸல்) அவர்கள் சிறந்த பெண்ணுக்கு உரைகல் கூறுகிறார்கள். கணவனின் செல்வத்திலிருந்து மனைவி தர்மம் செய்தால், அவளுக்கும் அதே அளவு நன்மை எழுதப்படுகிறது.

கணவன் மீது மனைவிக்குள்ள உரிமைகள்: "பெண்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்" (அபூஹுரைரா(ரலி) -புகாரீ, முஸ்லிம்). என்றும் "நீ உண்ணும்போது அவளுக்கு உணவு கொடு. நீ (உடை) உடுக்கும்போது அவளுக்கும் உடை கொடு. அவர்களை முகத்தில் அடிக்காதே. இழிவாகப் பேசாதே. வீட்டிலே தவிர (பொது இடத்தில்) அவளைக் கண்டிக்காதே" என்றும் நபி(ஸல்) அவர்கள் கணவன்மார்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். (முஆவியா இப்ன் ஹய்தா(ரலி) -அபூதாவூது). பெண்கள் ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்கள். பலவீனமான அவர்கள் விஷயத்தைக் குறித்து நபி(ஸல்) அவர்கள் அதிகம் எச்சரித்துள்ளார்கள். ஆண்தான் பெண்ணை நிர்வகிக்கும் கடமையைப் பெற்றிருப்பவன். குடும்பத்திற்குச் செலவிட வேண்டியது ஆணுக்குத்தான் கட்டாயம். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியதும் அவனே. ஒரு கணவன் தன் மனைவிக்குரிய கண்ணியத்தைக் கொடுக்க வேண்டும். பெண்கள் மென்மையானவர்கள். அவர்களிடம் விட்டுக் கொடுத்து, தன்மையாக நடக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் எப்படி தங்கள் குடும்பத்தாருடன் வாழ்ந்தார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "நபி(ஸல்) அவர்கள் தங்கள் காலணிகளையும் தங்கள் ஆடைகளையும் தாங்களே தைத்துக் கொள்வார்கள். தங்கள் ஆடையை, தாமே சுத்தம் செய்வார்கள். ஆட்டில் பால் கறப்பார்கள். வீட்டு வேலைகளும் செய்வார்கள்" (ஆயிஷா(ரலி) -அஹ்மது). இப்படிப்பட்ட அழகிய முன்மாதிரி ஒவ்வொரு முஸ்லிம் கணவரும் பின்பற்றுவதற்குத் தக்கதாய் இருக்கிறது.

இஸ்லாமினால் ஒளிர்வது: ஒவ்வொரு தம்பதியினரும் இஸ்லாமைக் கொண்டு துலங்கும்போதுதான் தங்கள் வாழ்வில் அமைதியை நிலை நாட்டி, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய கடமையைச் செய்து, நீதமாக நடுநிலையோடு இஸ்லாமியக் குடும்பமாக செயலாற்ற முடியும். அப்போதுதான் நம் குழந்தைகளும் நம்மைப் பார்த்து இஸ்லாமிய வார்ப்பில் உருவாகும்.

உறவுகள்: "உறவுகளைச் சேர்த்துக் கொள்பவனை நானும் சேர்ப்பேன். துண்டிப்பவனுடன் நானும் துண்டித்துக் கொள்கிறேன் என்று அல்லாஹ் கூறுகிறான்" (அபூஹுரைரா(ரலி) -புகாரி, முஸ்லிம்). உறவுகளைப் பேண வேண்டும். இன்று உள்ளூரில் வசிக்கும் பிள்ளைகளுக்கே பெரும்பாலும் தங்கள் உறவுகளைத் தெரிவதில்லை. உறவுகளை அறிமுகம் செய்ய வேண்டும். அவர்களுடன் சந்திப்புகளை ஏற்படுத்தி அன்பளிப்புகளின் மூலம் அன்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

நாளைய இஸ்லாமிய உம்மத்: ஒவ்வொருவரும் தன் வீட்டினருக்கு ஸலாம் கூற வேண்டும். சாந்தியும் சமாதானமும் மிக அவசியமான இடம் நம் இல்லங்கள். அது அல்லாஹ்வின் அருளாகும். பிள்ளைகளுக்கு உணவும் உடையும் தருவது ஒரு தந்தையின் கடமையாகும். "தான் உணவளிக்க வேண்டியவர்களைப் பசியில் வாட விடுவது ஒரு குடுப்பத் தலைவனுக்குப் பாவத்தால் போதுமானதாகும்" (அப்துல்லா இப்ன் அம்ர்(ரலி) -அபூதாவூத்). பிள்ளைகளுக்கு உணவு பரிமாறும்போது ஆண்பிள்ளைக்கு என்று அதிகம் ஒதுக்கி வைப்பது மிக மோசமான செயல். நம் கண்களில் ஒன்றுக்கு மட்டும் அலங்காரமா? பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். அதைத் தவிர்த்து, ஆண்-பெண் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாப் பிள்ளைகளையும் சமமாக நடத்த வேண்டும். உண்ணும்போது முடிந்தவரை கூட்டாக, குடும்ப அங்கத்தினர்கள் அமர்ந்து உண்ண வேண்டும்.

நேசத்தை வெளிக்காட்டுவது: "நம் சிறியவர்களிடம் அன்பைச் செலுத்தாதவர் நம்மை சார்ந்தவர் அல்லர்" (அஹமத்). குழந்தைகளிடம் நம் பாசத்தை வெளிப்படுத்த வேண்டும். "நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளை அணிவகுக்க செய்து "முந்தி என்னிடம் ஓடிவருபவருக்கு இன்னின்ன கொடுப்பேன்" என்று கூறுவார்கள். பிள்ளைகள் ஓடிவந்து அவர்களின் மடியிலும், நெஞ்சிலும் விழுவார்கள்" (அஹமத்). நம் நேசத்தை வெளிப்படுத்துவதன் மூலம், பிறரிடம் நேசம் செலுத்த நம் பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

கல்வி: ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் "ஒரு பிள்ளைக்குத் தன் தந்தை மீதான கடமை என்ன?" என்று கேட்டபோது, உமர்(ரலி) சொன்ன மூன்று கடமைகளில் ஒன்று "கல்வியளிக்க வேண்டும்" என்பதாகும். பள்ளிக் கல்வி மட்டுமின்றி, தீனுடைய கல்வியும் பிள்ளைகளுக்குக் கொடுக்கப் பட்டால்தான் நம் பிள்ளைகள் நல்ல முஃமீனாக இந்த உலகில் இஸ்லாமை நிலை நிறுத்தக் கூடியவர்களாக உருவாகி வருவார்கள். "அல்லாஹ், தான் நாடியோருக்குக் கல்வி ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகளை வழங்கப்பட்டுவிட்டனர். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை" (அல்குர்ஆன் 2:269). கல்வி புகட்டுவதில் பிள்ளைகளுக்கிடையில் பாரபட்சம் காட்டக் கூடாது. இருபாலருக்கும் கல்வி மிக அவசியம். அதுவும் பெண் குழந்தைகளுக்குப் புகட்டப்படும் கல்வி, அவள் பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. இஸ்லாமிய அறிவைத் திரட்டிக் கொள்வது தலையாயது ஆகும். இன்று ஏடுகளில் மட்டும் இஸ்லாம் இருப்பதற்கான மூலகாரணி, நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கல்வியை நாம் ஊட்டி வளர்க்காததுதான். ஓர் இல்லம் இஸ்லாமிய இல்லமாகத் துலங்கக் கல்விதான் அடித்தளம். நன்றாகப் படிக்கின்ற ஆண்பிள்ளைகளைக்கூட சில தாய்மார்கள் "இவ்வளவு செலவு செஞ்சு படிக்க வேண்டுமா? உன் வயசு பசங்க சம்பாதிக்கிறார்கள்" என்று சொல்லி முடக்க பார்க்கிறார்கள். அறியாமை இருளைப் போக்கிட கல்வியின் ஒளி கட்டாயம் தேவை.

சமத்துவம்: பிள்ளைகள் இருபாலரையும் சமமாக நடத்த வேண்டும். குழந்தைகளிடையே அன்பளிப்புச் செய்யும்போது கூட நபி (ஸல்) அவர்கள் சமமாக அன்பளிப்புக் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தியுள்ளார்கள் (நுஃமான் இப்ன் பஷீர்(ரலி) -புகாரி). ஆண்பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்று பல தீமைகள் இன்று நம் பெண்களிடம் காணப்படுகிறது. அதைவிடுத்து நபிவழிப்படி எல்லாக் குழந்தைகளையும் ஆண்பிள்ளை/பெண்பிள்ளை என்ற பாகுபாடு காட்டாது பார்க்க வேண்டும். இருபாலருக்கும் சிறு,சிறு வீட்டுப் பணிகளைச் செய்யப் பழக்க வேண்டும்.

நற்பண்புகள் மலரவிட வேண்டும்: "உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரக நெருப்பிலிருந்து காத்திக் கொள்ளுங்கள்" (அல்குர்ஆன் 66:6). நற்பண்புகள் வளர, நன்மை அதிகரித்துத் தீமை விலக, தொழுகை அவசியம். அது மானக்கேடானவற்றையும் தீயதையும் தடுக்கும். "பிள்ளைகளுக்கு ஏழு வயதாகிவிட்டால் தொழகைக்கு ஏவுங்கள். 10 வயது ஆகியும் தொழாவிட்டால் அடியுங்கள். படுக்கையைப் 10 வயதில் பிரித்து விடுங்கள்" (அம்ர் இப்ன் ஷுஐப்(ரலி) -அபூதாவூத்). வயிற்றுப் பசிக்கு உணவு தேவைப் படுவதுபோல் ஆன்மாவுக்கு உரமும் உணவும் சத்தும் மிக அவசியம். குர்ஆன் ஓதக் குழந்தைகளைப் பழக்க வேண்டும். நிறையப் பெற்றோர் இவ்விஷயத்தில் பாராமுகமாக உள்ளனர். குர்ஆனுடைய மக்களாகக் குழந்தைகளை வளர்த்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் குடும்பங்களில் தீன் பரிணமிக்கும். அது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடமையாகும். பிள்ளைகளின் சிநேகிதங்களை நன்மை பயக்க கூடியதாக இருக்கிறதா? என்று கண்காணித்தல் அவசியம். சகோதரத்துவம், மன்னித்தல், பொறுமை, உயர்குணம், நன்மையை ஏவித் தீமையை தடுத்தல், விட்டு கொடுத்தல் ஆகியவற்றைப் போதிக்க வேண்டும். பல் துலக்குவதிலிருந்து, உடற்பயிற்சி வரை அவர்களுக்கு அவசியமானவற்றை உணர்த்த வேண்டும்.

செலவிடல்: "மனிதன் செலவிடும் தீனாரில் மிக்கச் சிறந்தது, அவன் தன் குடும்பத்திற்குச் செலவிடும் தீனாரே" (ஸவ்ஃபான் பின் புஜ்துத்(ரலி) -முஸ்லிம்). நமது பிள்ளைகளின் உள்ளத்தின் தாகத்திற்கு இஸ்லாமியப் புத்தகங்களும் அறிவு வளர்க்கும் புத்தகங்களும் மன மகிழ்ச்சிக்கு விளையாட்டுப் பொருட்களும் வாங்கிக் கொடுக்க வேண்டும். சில பெற்றோர் தங்களுக்கு சென்ட்டும் நகையும் பட்டும் வாங்குவதில் பணம் செலவழிக்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் விஷயத்தில் கணக்குப் பார்க்கிறார்கள். பிறருக்கு தர்மம் செய்யும்போது நல்லதையே மனமுவந்து தரவேண்டும்; அதை நம் பிள்ளைகளுக்கும் பழக்க வேண்டும்.

இளமைப் பருவம்: பெற்றோர் பிள்ளைகளுடன் கலந்து பேச வேண்டும். அவர்களுக்கு நீதத்தையும் நன்மையையும் இளமையில் இபாதத்துகளுக்கு அர்ஷின் நிழல் இருப்பதையும் பற்றிய விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். பிள்ளைகள் வாலிபப் பருவத்தில் பெரும்பாலும் தடுமாற்றத்திற்கு உள்ளாவார்கள். திருமணக் கனவுகள் கலர்கலராகக் காணுவது நிஜமாகாது; நிதர்சன வாழ்க்கை வேறு என்பதை சஹாபியாக்களின் வாழ்க்கை வரலாற்றின் மூலமாகப் புரிய வைக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் இல்லாமல் வாழ்க்கைப்பட்டு போகும் பெண், குடும்ப பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும்போது திணறிப் போவாள். சரியான இஸ்லாமிய வழிகாட்டல் இல்லாமை அவளுடைய வாழ்க்கையை, அவள் குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதிக்கும். அவ்வாறு நடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்கள் கண்டிப்புடன் நடக்க வேண்டிய நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பிள்ளைகளுடன் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும். "தாய்தான் தோழமைக்கு முதன்மையானவள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பெற்றவர்கள்: இப்ன் உமர்(ரலி) ஹஜ்ஜுடைய தவாஃப் செய்து கொண்டிருக்கும்போது, ஒரு மனிதர் தன் தாயைச் சுமந்தவராக கஃபாவை வலம் வந்து கொண்டிருந்தார். அவர் இப்ன் உமரிடம் "நான் யமனிலிருந்து மக்காவுக்கு என் தாயைச் சுமந்தவனாக ஹஜ் செய்ய வந்துள்ளேன். நான் என் தாய்க்கு நன்றிக் கடன் செலுத்திவிட்டேனா?" என்று கேட்டார். அதற்கு இப்ன் உமர்(ரலி) "அவர் வயிற்றில் உன்னைச் சுமந்து இருக்கும்போது விட்ட மூச்சுக்குக் கூட நீ ஈடு செய்யவில்லை." என்றார்கள் (அபூ புஸ்தா(ரலி) -அதபுல் முஃப்ரத்). பெற்றோருக்கு என்னதான் செய்தாலும் அவர்கள் செய்ததற்கு ஒருவர் ஈடுசெய்ய முடியாது. பெற்றோருக்கு நன்மை செய்யாமல் இருப்பது பாவமாகும். அவர்களை நோவினை செய்வது பெரும் பாவமாகும். அல்லாஹ்வின் உவப்புக்காக வயதான பெற்றோரிடம் அன்பும் அரவணைப்பும் காட்ட வேண்டும், அவர்களின் சொத்துக்காக அல்ல. "பெற்றோரை நோவினை செய்வதையும் தம் கடமையை நிறைவேற்றாமல் இருப்பதையும் அல்லாஹ் வெறுக்கிறான்" (அபூமூஸா(ரலி) -புகாரி, முஸ்லிம்). இதிலிருந்து, பெற்றோரை நோவினை செய்பவன் சுவனம் புகமாட்டான் என்பது புரிகிறது. வயதான பிறகு அவர்களிடம் பரிவும் அக்கறையும் அன்பும் இன்சொல்லும் அரவணைப்பும் காட்ட வேண்டும். பெற்றோருக்குச் செய்ய வேண்டிய துஆ அழகான பொருள்பட உள்ளது. "யா அல்லாஹ்! சிறுவயதில் என் பெற்றோர் என்னைக் கனிவுடன் பராமரித்தது போல், அவர்களை நீ பராமரிப்பாயாக" என்று இறைமறை கற்றுத் தந்தவாறு அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும்.

இல்லம்: ஒரு முஃமீனின் இல்லம் அவன் உள்ளத்தை பிரதிபலிக்கக் கூடியதாக உள்ளது. தகடு-தாயத்து என்று அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் சமாச்சாரங்கள் அற்றதாக, மூடநம்பிக்கைகளை ஒழித்ததாக, வீண் ஆடம்பரம் இல்லாததாக வீடு இருத்தல் அவசியம். இஸ்லாம் தடை செய்துள்ள சீரியல், சினிமாப் பாட்டுகள், ஜோசியம், வாஸ்து போன்றவை விலக்கப்பட வேண்டும். ஃபாத்திஹா, மௌலூது, ஹல்கா போன்ற இஸ்லாத்தில் இல்லாத, அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகின்ற விஷயங்கள் வீட்டு எல்லைக்குள் நுழைந்திடாமல் பாதுகாக்க வேண்டும். இல்லம் என்பது ஒருவருக்கு மன அமைதி தருகின்ற இடமாகும். அது இஸ்லாமிய மணம் கமழ இருத்தல் தக்வாவுக்கு உரமூட்டக் கூடியதாகும். நாயும் உருவப் படங்களும் அருள் கொண்டு வரும் மலக்குகளின் வருகையைத் தடுத்துவிடும். "அல்லாஹ்வை நினைவுகூரப்படும் இல்லமும் நினைவுகூரப்படாத இல்லமும், உயிருள்ளவன் மற்றும் இறந்தவன் நிலைக்கு ஒப்பானதாகும்" (முஸ்லிம்).

திருமறை இல்லாத வீடாக ஒரு முஸ்லிமுடைய வீடு இருக்கக் கூடாது. தர்ஜுமா குர்ஆன்கூட இல்லாது பல வீடுகள் இன்னும் இருப்பது வேதனை அளிக்கிறது! ஒரு முஃமீனானவனின் உள்ளம் திருமறையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். "சூரா அல்பகறா ஓதப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் வெருண்டோடுகிறான்" (அபூஹுரைரா(ரலி) -முஸ்லிம்). குர்ஆன் என்பது அலமாரிகளில் பூட்டி வைப்பதற்கு அருளப் பட்டதல்ல. அதை ஓதிச் சிந்திப்பதற்கே இறைவன் அருளினான். ஷைத்தானிய சக்திகளை விரட்டக்கூடியதாக வீடு இருத்தல் அவசியம். வீட்டிற்குள் நுழையும்போது, வெளியே செல்லும்போது, கழிவறையைப் பயன்படுத்தும்போது, தூக்கத்தின் முன்னும் பின்னும், சாப்பிடும்போது ஓத வேண்டிய துஆக்கள் ஓதப்பட வேண்டும். நஃபிலான தொழுகைகளை வீட்டில் தொழவேண்டும். "வீடுகளிலும் உங்கள் தொழுகைகளை வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள்" (இப்ன் உமர்(ரலி) -புகாரி). பர்ளான, சுன்னத்தான அமல்களைக் கொண்டு வீட்டை உயிர்ப்பிக்க வேண்டும். ஒரு முஸ்லிமுடைய இல்லம் இஸ்லாமியப் புத்தகங்களைக் கொண்டிருக்க வேண்டும். நம் வீட்டுச் சமையலறையில் உப்பு இல்லாவிட்டால் உடனே வாங்குகிறோம். அதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட நம் மார்க்கத்தின் மூலாதாரமான குர்ஆனுக்கும் நபிமொழி தொகுப்புகளுக்கும் பல இல்லங்களில் கொடுக்கப் படுவதில்லை. நபி அவர்களை நேசிக்கிறோம் என்கிறோம். ஆனால், நபிகளாரது வாழ்க்கையை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் 'ரஹீக்' என்ற நபிவரலாறு எத்தனை வீடுகளில் இருக்கிறது? திருமணம், வீடு புகுதல், பிள்ளை பிறப்பது, மரணவீடு போன்ற நேரங்களில் பித்அத்தை ஒழித்து இஸ்லாமிய வழிகளைக் கையாள வேண்டும். வீட்டைச் சுத்தமாக, நறுமணத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். இஸ்லாத்தை முறையாக எடுத்துச் செயல்படுபவர்களின் சிநேகிதமும் அவர்களுடன் கலந்துரையாடுவது மூலம் இஸ்லாமிய அறிவை வளர்ப்பதும் ஆன்மீக பலத்தை ஏற்படுத்த வல்லவை. அண்டை வீட்டாருக்கு நன்மை புரிய கூடியவர்களாக நாம் வாழ வேண்டும்.

முடிவுரை: ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் தம் உடையில், பேச்சில், உணவில், உறவில், உள்ளத்தில், எண்ணத்தில், இஸ்லாமைக் கொண்டிருக்க வேண்டும். தம் குடும்பத்தை இஸ்லாமிய வார்ப்பில் வார்த்திட வேண்டிய கடமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உள்ளது. குடும்பச்சூழல் முதலில் மனிதர்களைச் சார்ந்ததே. அவர்களது நடத்தைகள்தாம் இஸ்லாமை வீட்டினுள் அழைத்து வரும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் மற்றவர் நலத்தைக் கருத்தில் கொண்டவராகவும் துஆச் செய்பவராகவும் நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பவராகவும் அன்பைப் பரிமாறிக் கொள்பவராகவும் இருக்க வேண்டும். "மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், அவனை வணங்குபவர்கள், புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையைவிட்டு விலக்குபவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் ஆகிய முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!" (அல்குர்ஆன் 9:112).

ஆக்கம்: சகோதரி. ஜியா ஸித்தாரா (உம்மு ஹிபா)


 

2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.

 

Trackback(0)
கருத்துக்கள் (4)add comment
0
மஸ்தூக்கா:
மாஷா அல்லாஹ், சகோதரி உம்முஹிபாவின் எழுத்தாற்றலைக் கண்டு வியந்தேன். நல்ல வேளை! பரிசுப்போட்டியின் 'ஒருவருக்கு ஒரு பரிசு' என்னும் விதியை தளாத்தினீர்கள். இல்லாவிட்டால் 'சத்தியமார்கக்கம்' வாசகர்களுக்கு இந்த அருமையான கட்டுரை கிடைக்காமலே போயிருக்கும். ஃஇஸ்லாமினால் ஒளிர்வது: ஒவ்வொரு தம்பதியினரும் இஸ்லாமைக் கொண்டு துலங்கும்போதுதான் தங்கள் வாழ்வில் அமைதியை நிலை நாட்டி, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய கடமையைச் செய்து, நீதமாக நடுநிலையோடு இஸ்லாமியக் குடும்பமாக செயலாற்ற முடியும். அப்போதுதான் நம் குழந்தைகளும் நம்மைப் பார்த்து இஸ்லாமிய வார்ப்பில் உருவாகும்.ஃ என்னும் வரிகள் ஒவ்வொரு முஸ்லிமும் உணரவேண்டிய வரிகள்.
1

April 11, 2008 22:39
0
M.G.ஃபக்ருத்தீன்:
இன்றைய தினங்களில் முஸ்லிம் குடும்பங்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. குடும்பவியலில் இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிகளை காண்பதென்பது கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் கட்டுரையாளரின் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் வரவேற்கத்தக்கது. இன்றைய இளம் தம்பதியினர்தான் நாளைய பெற்றோர்கள். இனி சென்றுவிட்ட சமுதாயத்ததை/ குடும்பங்களை கருத்தில் கொள்ளாமல் இந்த இளம் தம்பதியினர் தங்கள் குடும்பமுறையை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அணுகி தங்கள் வாழ்வினையும் சந்ததியினரையும் சரிவர அமைத்துக் கொண்டால் இன்ஷாஅல்லாஹ் இதற்கு தீர்வு கிடைக்கும்.
2

April 12, 2008 08:05
0
முத்துப்பேட்டை. அபூஆஃப்ரின்:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) சகோதரி.உம்மு ஹிபா அவர்களின் ஆக்கம் நன்றாக இருக்கிறது. ஒரு இஸ்லாமிய குடும்ப எத்தகைய சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்பதினை பற்றி சிந்தித்து திறம் பட தன்னுடைய கருத்துகளை எழுதி இருக்கிறார். இதனை படிக்கும் அன்பு உள்ளங்கள் அதனை பிரதி எடுத்து மார்க்க பிரச்சாரங்கள் மற்றும் இஸ்லாமிய சொற்பொழிவு நடக்கும் இடங்களிலும் மற்றும் தாயகத்தில் இருக்கும் நம்முடைய குடும்பத்தினருக்கும் கடிதங்கள் மூலமாக அனுப்பி வைத்தால் மிக நன்றாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்.. எழுத்துத் துறையில் ஆர்வமுள்ள சகோதர மற்றும் சகோதரிகளுக்கும் சத்திய மார்க்கம் இன்னும் ஒரு கட்டுரைப்போட்டியினை தொடர்ந்து நடத்த வேண்டும். இன்னும் பல நல் உள்ளங்கள் மேன்மேலும் உருவாக வாய்ப்பு அமையும்..
3

April 14, 2008 11:03
0
மு முஹம்மத்:
அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் இஸ்லாம் எனும் இறை கோட்பாடு பள்ளிவாசல்களோடும், பயான்கள் எனும் சொற்பொழிவுகளோடும், ஏட்டிலும், இன்று கேஸட்டுகள், சீ.டீக்கள் என்றும் சுருங்கி விடாமல், அன்றாட (குடும்ப) வாழ்வில் மக்கள் செயல் வடிவம் தந்து நடை முறைப்படுத்த வேண்டும் என்பதையும் அதற்கான வழிமுறைகளையும், மிகவும் அழகாக தெளிவாக சகோதரி அவர்கள் விளக்கியுள்ளார்கள்.... //இஸ்லாமினால் ஒளிர்வது: ஒவ்வொரு தம்பதியினரும் இஸ்லாமைக் கொண்டு துலங்கும்போதுதான் தங்கள் வாழ்வில் அமைதியை நிலை நாட்டி, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய கடமையைச் செய்து, நீதமாக நடுநிலையோடு இஸ்லாமியக் குடும்பமாக செயலாற்ற முடியும். அப்போதுதான் நம் குழந்தைகளும் நம்மைப் பார்த்து இஸ்லாமிய வார்ப்பில் உருவாகும்// அல்லாஹ், அனைவருக்கும் இதை உணர்ந்து முறையாக கடைபிடித்து ஈடேற்றம் பெறவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இலகுவாக்கிட உதவியும் அருளும் புரிவானாக...
4

April 14, 2008 14:50

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:190 உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு கட்டுரைப்போட்டி ஆண்டு 2007 இஸ்லாமியக் குடும்பச்சூழல்
Twitter
RSS
YouTube
English