சத்தியமார்க்கம்.காம்

இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை! print Email
கட்டுரைப் போட்டிகள் - வருடம் 2007
வெள்ளி, 29 பிப்ரவரி 2008 11:53
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியருக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. - சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்" (சங்கைமிகு அல்குர்ஆன் 49:13)

இந்த இறை வசனத்தை அறியாதவர்கள் நம்மில் இருக்க முடியாது. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், உலக மக்கள் அனைவரும் ஒரு தொப்புள் கொடியின் வழியே வந்த வழித்தோன்றல்கள்தான். நம்மில் ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் அனைத்தும் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத்தானே தவிர பிரிவினை பாராட்டி, பிரிந்து போவதற்கன்று என இவ்விறை வசனம் வலியுறுத்துகிறது.

ஆனால் நாம் இன்று எப்படி வாழ்கின்றோம்?


ஒற்றுமை என்ற வார்த்தை நம்மிடம் உப்பிற்காவது இருக்கிறதா?


வீட்டுக்கு வீடு சண்டையில் தொடங்கி, நாட்டுக்கு நாடு இரத்தம் ஓட்டுவது வரை, ஒற்றுமை என்ற சொல்லே முஸ்லிம்களிடம் கேலிப் பொருளாகிப் போனது. ஐந்து அறிவு படைத்த மிருகங்கள் கூட உணவிற்காவே அன்றி கொலை செய்வதில்லை; சண்டை போடுவது இல்லை. அவை தன் இனத்தைக் கொல்வதில்லை. ஆனால் ஆறாம் அறிவு என்ற பகுத்தறிவு ஆற்றலைப் பெற்ற, ஆகாயத்தைத் தொடும் அளவு உயர்ந்த நம் மனித சமுதாயம் மட்டும் தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் தீராத வேட்கை கொண்டு திரிகிறது.

நாட்டுக்கு நாடு போர் தொடுப்பதால் அழிவுகளும் அதிகம்; உயிரிழப்புகளும் அதிகம். உள் நாட்டுக்குள் கலவரம் நடக்கும் போதும் பறிபோவது அப்பாவிகளின் உயிர்தான். இதற்கெல்லாம் காரணம் நம்மில் ஒற்றுமை இல்லை; நாமெல்லாம் சகோதரர்கள் என்ற எண்ணமில்லை. அடிப்பவனும், அடிக்கப்படுபவனும் ஒரு  தாய்-தந்தை வழித் தோன்றல் என்ற எண்ணமில்லை. மாறாக மத வெறி, நிற வெறி, பதவி வெறி, இன வெறி ஆகியவற்றால் மனிதநேயம் மரணித்து எதிரி மனப்பான்மை எங்கெங்கும் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது.

முடிவிற்கு வராமல் மனித உயிர்களைக் கொன்று குவிக்கும் பிரச்சனைகள் உலகில் எவ்வளவு இருக்கின்றன?


அமெரிக்கா-ஈராக், இஸ்ரேல்-பாலஸ்தீன், இந்தியா-பாகிஸ்தான் இவை அல்லாமல் எத்தனையொ நாடுகள் நல்லுறவு இல்லாமல் உதட்டில் சிரிப்பும் உள்ளத்தில் வஞ்சமும் வைத்துத் திரிக்கின்றன. இவற்றின் விளைவு மனித உயிர்கள், பெண்களின் கற்பு, பாடுபட்டுச் சேர்த்த சொத்துகள், வீடுகள், உடமைகள் அனைத்தும் பறிபோகின்றன. குழந்தைகளின் வயிற்று பசியின் அழுகைச் சத்தம் விண்ணை முட்டுகிறது.

ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் நிறவெறிச் சாயம் பூசப்பட்டு, கறுப்பர்களை அருவெருக்கத்தக்க அஃறிணைப் பொருளைப் போன்று கடத்தி வந்து வியாபார சந்தையில் விற்றனர் வெள்ளைநிற வெறியர்கள். அன்று ஆரம்பம் ஆன நிறவெறி இன்றும் முடிவுக்கு வரவில்லை.

மதவெறி பிடித்த மிருகங்களுக்கு, குஜராத் முஸ்லிம் சமுதாயம் இரையானது. பக்கத்து வீட்டுக்காரனே பரிதாபம் இன்றி படுபாதகச் செயல்களைச் செய்தான்.

பாலஸ்தீனுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை பச்சிளங்குழந்தைகளை நாளுக்குநாள் கொன்று குவித்து வருகிறது. பதவி வெறி பிடித்த பேய்களுக்குப் பலியாகும் பாலஸ்தீனிலும் ஈராக்கிலும் பிணக்குவியல்கள்தான் நாள்தோறும் பெருகி வருகின்றன.

இப்படிப்பட்ட கேவலமான, வெறி பிடித்த செயல்களுக்குக் காரணம் மனிதாபிமானம் மாண்டு விட்டது. மீண்டும் மனிதாபிமானத்தை எழுப்ப வேண்டுமானால், இஸ்லாம் என்ற உயிர் நீர் தெளிக்கப்பட வேண்டும்.

"தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறை நம்பிக்கையாளராக இருப்பதில்லை" என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : மிஷ்காத்).

இப்படிப்பட்ட நபிமொழி வழிநடந்தால் பட்டினி சாவிற்குப் பூட்டுப் போடலாம் அல்லவா?

"அல்லாஹ்வின் தூதரே! எவன் இறை நம்பிக்கையில்லாதவன்?" என வினவப்பட்டபோது, "எவனுடைய அண்டை வீட்டார் அவரின் துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்" என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) - ஆதாரம் - புகாரி, முஸ்லிம்).

இப்படிப்பட்ட நபி மொழியின் வழிநடந்து பாதுகாப்பையும் பாசத்தையும் ஏற்படுத்தலாம் அல்லவா?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இருண்ட காலம் என்ற அழைக்கப்படும் அறியாமைக் காலத்தில் தோன்றிய ஒளி மயமான இஸ்லாம் மனிதர்களுக்குள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறங்கிக் கிடந்த மனித நேயத்தையும் தட்டி எழுப்பியதே!

அன்று உயர் குலத்தைச் சார்ந்த அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) ஹப்பாப் (ரலி) போன்றோருக்கு - தன் நாட்டை, வீட்டை, மனைவி, மக்களைத் துறந்து சென்ற முஹாஜிர்களுக்கு - அனைத்திலும் சரி பாதி தருகிறோம் என்று சொன்ன அன்ஸாரிகள் அனைவரும் மனித நேயத்தின் ஊற்றுகள்.

இப்படிப்பட்ட உயர்ந்து பரந்த தியாக மனப்பான்மை அந்த அறியாமைக்காலத்து மக்களிடம் வரக் காரணம் இஸ்லாம். இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல். தன்னுள் புகும் ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்பாட்டுக்குள் நுழைத்துக் காத்து வந்தது இஸ்லாம். கட்டுப்பாடு என்றால் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்யும் கட்டுப்பாடன்று. மாறாக, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்யும் கட்டுப்பாடு. வார்த்தை பேசுதல் முதல் வழக்காடுவது வரை, உண்ணுதல் முதல் உறங்குதல் வரை கற்றுத் தந்து மனிதப் பிறவியைக் கண்ணியப்படுத்துகிறது இஸ்லாம்.

ஓரிறைக் கொள்கை முதல் ஒழுக்க வரைமுறைகள் வரை அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாம், இம்மனித சமுதாயத்தைச் சீர்படுத்தி, சீர்திருத்தி நன்னெறிப்படுத்தி ஒற்றுமையாக வாழ வைக்க வந்த வாழ்க்கை நெறியாகும்.

இறைவனால் இறக்கியருளப் பெற்ற திருக்குர்ஆன் என்னும் உலகப் பொதுமறை பறை சாற்ற நினைப்பது சமூக ஒற்றுமையைத்தான்.

நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறி சமூகப் பிளவுக்கு முடிவு தந்து விட்டு சென்றார்கள். அது, "கறுப்பர்களை விட வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் இல்லை; அரபியர்களை விட அரபி அல்லாதவர்கள் தாழ்ந்தவரும் இல்லை" என்னும் உலகளாவிய சமநிலைச் சமுதாயப் பிரகடனமாகும்.

இவ்வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு.


நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது. அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத் திருக்குர்ஆனும், நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை.

கண்ணியத்தைப் பேணி,
கற்பொழுக்கத்தை நிலை நாட்டி,
காட்டு மிராண்டித் தனத்தை ஒழித்து,
கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து,
ஒற்றுமை என்னும் கயிற்றைப்
பற்றி பிடித்து வாழ்வோமாக..!

நாம் அனைவரும் ஒருசமூக மக்கள்; ஒரு தாய் மக்கள். நாம் அனைவரும் இறைவனின் அடிமைகளே..! வாழ்வும் வாழ்வாதாரங்களும் வல்லோன் வழங்குபவை. பிரிவை அழித்து, உறவை வளர்த்து, சமூக ஒற்றுமை காண்போம், இஸ்லாம் கூறும் வழியில்.


ஆக்கம்: சகோதரி. ஃபரீதா


அரபு அமீரக ஒன்றியத்திலிருக்கும் ஃபுஜைராவில் தம் கணவருடன் வசித்து வரும் சகோதரி ஃபரீதா அவர்கள் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அரபிப்பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இப்பாடப்பிரிவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ள இச்சகோதரி, இதுதான்இஸ்லாம்.காம் தளத்திலும் ஷார்ஜா சீமான் அமைப்பினரின் ஆண்டுமலரிலும் பல இஸ்லாம் தொடர்பான கட்டுரைகளை எழுதியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2007-ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பெண்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற சகோதரி ஃபரீதா அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! - சத்தியமார்க்கம்.காம்

2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.

Trackback(0)
கருத்துக்கள் (3)add comment
0
abdul azeez:
அஸ்ஸலாமு அலைக்கும் எந்த அடிப்படையில் பிரீதா அவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கினீர்கள். முதல் ஒன்று இரண்டு மூன்று என்ற தரத்தில் சேராது ஏன். சற்று விளக்கவும். அப்துல் அசீஸ்
1

March 01, 2008 01:41
0
நடுவர் குழு - சத்தியமார்க்கம்:
அன்புச் சகோதரர் அப்துல் அஸீஸ், வ அலைக்குமுஸ்ஸலாம். கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப் பட்ட விதமும் விதிகளும் குறித்து அறிந்து கொள்ள: http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=701&Itemid=84 நன்றி!
2

March 01, 2008 08:46
0
ibn shaah:
எப்போட்டியாக இருந்தாலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.அதுதான் நடை முறையும் கூட.அந்த அடிப்படையில்,வாசகர்களாகிய நம்முடைய கணிப்பு வேறு விதமாக இருந்தாலும்(அது சரியாக கூட இருக்கலாம்)போட்டியை நடத்திய குழுவினரின் தீர்ப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்வதுதான் நியாயமாகும். இப்போட்டியைப் பொறுத்தவரை, ஒருவர் இருவர் அல்ல, ஐவர் அடங்கிய ஒரு குழுவால் நடத்தப்பட்டதாகும். பல ஆலோசனைகள், பல கலந்துரையாடல்கள், பல அமர்வுகள், என்று பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை சகோதரர் அப்துல் அஸீஸ் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
3

March 03, 2008 11:07

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:195 அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். இன்னும், நன்மை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு கட்டுரைப்போட்டி ஆண்டு 2007 இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!
Twitter
RSS
YouTube
English