| கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 2) |
|
|
| தொடர்கள் - ஆய்வுக் கட்டுரைகள் | ||||||||
| திங்கள், 27 ஆகஸ்டு 2007 13:38 | ||||||||
|
ஒரு நாளைக்கு 14 மணி நேரங்கள் என்ற கணக்கில் வாரத்திற்கு ஆறு நாட்கள், வெள்ளிக்கிழமையன்றும் ஓவர்டைம் கிடைக்கும் எனில் நோகும் உடலைக் கிடைக்கவிருக்கும் காசின் ஆசைகாட்டி ஒத்துழைக்க வைத்து கிளம்பிவிடுவதும, உச்சி வெயிலும் தணல் காற்றும் உள்ளும் புறமும் சுட்டெரிக்க தலைக்கு மேலும் காலுக்குக் கீழும் ஆபத்துக்கள் சூழ்ந்த புழுதி பறக்கும் சிறைச்சாலை போன்ற தொழிற்சாலைகள், கட்டிடப் பணியிடங்கள், உடலும் உள்ளமும் துவண்டு போய் காய்ந்த வியர்வையே போர்வையாக மாறியிருக்கும் மாலை நேரத்தில் துவண்டு நடக்காமல் ஓடிப்போய் அடித்துப் பிடித்து ஏறினால் தான் அழைத்து போக வரும் பேருந்தில் இடம் கிடைக்கும்.
நான்கு பேர் மட்டுமே தங்கப் போதுமான இடம் என்று சர்வதேசச் சட்டம் ஏட்டில் எழுதி வைத்துள்ள ஒரு அறையில் பதினான்கு பேருடன், ஒரு காலத்தில் சுத்த பத்தமாய் நாட்டில் சுகவாழ்வு வாழ்ந்ததை நினைவுகளில் நிறுத்தி, வீட்டு நினைவுகள் அதிர்ஷ்டவசமாக அழுத்தவில்லை என்றால் படுக்கையில் படுத்தவுடன் பத்து எண்ணுவதற்குள் கண்ணைச் சுழற்றும் கணங்களுடன், காலையில் அணிந்து செல்ல அதே அழுக்கு வியர்வைக் கரைசல் மணத்துடன் சுவற்றில் மாட்டியிருக்கும் யூனிஃபார்மும் அதற்குச் சற்றும் சளைக்காத விதத்தில் கல்லில் மாட்டிய ஈரத்துணியாய் ரணமான மனதுடன் தூங்கிப்போகின்றனர். BMW சொகுசு கார்களில் உலாவரும், கோல்ஃப் விளையாடிவிட்டு ஒரு வாய் டீயை ஒரு மணிநேரம் எடுத்துக் குடிக்க ஏழு நட்சத்திர ஹோட்டல்களைத் தேடி அலையும், வளைகுடாவின் "சூடான" மாதங்களில் அடிக்கடி மேற்கத்திய நாடுகளில் "சன்"பாத் எடுக்கச் செல்லும் நபர்கள் இந்த ஆக்கத்தின் பட்டியலில் சேர்த்தியில்லை. பொறுப்பான உயர்பதவிகளில், தலைசிறந்த நிர்வாகத்தினை நடத்தி வரும் தமிழ் அன்பர்களும் இதிலிருந்து விலக்குப் பெறுகின்றனர். வறுமைக்கோடு என்பது வளைகுடாவில் வேலை செய்பவர்களுக்கும் உண்டு என்ற புதிய இலக்கணம் படைத்து, சொல்லவொண்ணா துன்பமும் துயரமும் அடைந்து கொண்டிருக்கும் இந்திய - குறிப்பாக - தமிழக முஸ்லிம்கள் நிலை பற்றி இங்குப் பார்ப்போம். காரணம், கழுத்து வலிக்கும் உயரத்தில் கண்ணாடிக் கட்டிடங்களும், மார்பிள் பளபளக்கும் 'மால்'களுக்கும் இங்கே பஞ்சமில்லை. ஆனால் வெளியுலகில் பிரதானப் படுத்தப்படும் தரமான, ஆடம்பரமான பார்வைகளின் பின்னணியில் நசிந்து போயிருக்கும் பல நிகழ்வுகள் நம் பார்வைக்கே வருவதில்லை. அவற்றுள் சிலவற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
வியர்வைத்துளி 1 - முபாரக்!
12x7 சதுர அடி அளவிலுள்ள நான்குபேர் மட்டுமே தங்கக்கூடிய இவரது அறையில் பன்னிரண்டு பேருடன் தங்கியுள்ளார். மேல்மாடி டாய்லெட்டிலிருந்து கான்க்ரீட் கூரை வழியே சொட்டுச் சொட்டாய் கசியும் கழிவுநீருடன் தான் வாசம். ஒருவர் படுக்கையின் மீது அடுக்கடுக்காய் அமைந்துள்ள இன்னொருவர் படுக்கை. மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு ஒருபக்கம் என்றால், போல்ட் நட்டு சரியில்லாத இரும்புக் கட்டிலில் ஒருவர் திரும்பிப் படுத்தால் அவர் "அப்பார்ட்மெண்ட்"டில் உள்ள அனைவருக்கும் தூக்கம் கலையும். கம்பெனி கொடுக்கும் ஐநூறு திர்ஹத்தைக் கொண்டு இவரும் சாப்பிட்டு(?) உடுத்தி விட்டு எஞ்சியுள்ளதை வைத்து ஏழு பேர் கொண்ட தன் குடும்பத்தைக் காப்பாற்றும் வித்தையை இங்கே தான் பார்க்க முடியும். ஓட்டல்களில் சாப்பிட்டு ராஜ போக (!) வாழ்க்கை வாழ சம்பளம் இடம் கொடுக்காததால் கிடைத்த சந்தில் அடுப்பை வைத்து கிடைக்கும் நேர இடைவெளிகளில் சமைத்துக்கொள்ளவும் வேண்டிய சூழ்நிலை.
லேபர் டிபார்ட்மெண்ட் இதுபோன்ற கம்பெனிகள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் இவர் போன்றவர்கள் பிரச்னை தீர்ந்ததா என்றால் இல்லை. இரண்டு வருடத்துக்குள்ளாவது ஏஜண்ட் இடம் கொடுத்த கடனை வட்டியோடு அடைத்து விட்டு ஊர் திரும்பினால் கூட போதும் என்ற நிலையிலேயே பலர் தன்னுடன் இருப்பதாகக் கூறுகிறார்.
அல்ஜஸீராவின் டாக்குமெண்டரி!
இந்த கண்ணீர்க்கதைகளை வெட்டிக்கதை பேசிக்கொண்டிராமல் கேமராவை இருட்டான லேபர் கேம்ப்களுக்கு எடுத்துச் சென்று படம் பிடித்து உலக அரங்கில் வெளிச்சமிடத் துணிச்சலுடன் களமிறங்கியிருப்பதற்கு அல்ஜஸீராவிற்கு நன்றிகூற வேண்டும்.
"இரத்தம், வியர்வை மற்றும் கண்ணீர் - வளைகுடா தொழிலாளர்களின் வேதனைகள்!" என்ற பெயரில் டாக்குமெண்டரி அல்ஜஸீரா படம் பிடித்து உலகிற்குக் காட்டியுள்ளது. அல்ஜஸீரா சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாதவர்கள் இங்கே உள்ள வீடியோவில் அதைக் காணலாம்.
வியர்வைத்துளி 2 - இப்ராஹிம்!
ஊரில் சம்பாதிப்பதை விட நான்கு மடங்கு இங்கே கிடைக்கிறது என்பவர்களை விட "இதே நாய்ப்பொழைப்பை கேவலம் பார்க்காம ஊர்ல இருந்துகிட்டு உழைச்சேன்னா இதை விட எட்டு மடங்கு சம்பா திக்க முடியும்" என்ற முணுமுணுப்புகள் கேட்பது இங்கே சகஜம். சரி! பின்னே அதைச் செய்ய வேண்டியது தானே என்று கேட்டால் மெளனம்தான் பதிலாகக் கிடைக்கிறது!
பெரும்பாலானோரின் சம்பாத்தியங்கள் தங்களின் சின்னஞ்சிறு கனவுகளை நனவாக்குவதிலேயே செலவாகின்றன ஒழிய, தாங்கள் சம்பாதிக்கும் பருவத்திலேயே அதனை முறையாக முதலீடு செய்து அதன் மூலம் பொருளீட்ட எண்ணுவதில்லை.
ஆர்ப்பாட்டங்கள்/எதிர்க்கும் குரல்கள்
"இங்குள்ள தொழிலாளர்களுக்குப் பிரச்னைகளே இல்லை என்று நான் சொல்லவில்லை. அதைத் தீர்க்க முயன்று வருகிறோம்" என்று சொல்கிறார், துபையின் தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அலீ பின் அப்துல்லாஹ் அல் காஅபி.
வியர்வைத்துளி 3 - சாதிக் பாஷா! பொருளியல் குறிப்புகள்: இந்தியாவின் வெறும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும் வளைகுடாவிலிருந்து வந்து சேரும் அந்நியச்செலாவணி ரூ. 126.40 மில்லியன் (ரூ. 12 ஆயிரம் கோடி) என்று அதிர வைக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸின் ஒரு செய்திக்குறிப்பு. கிட்டத்தட்ட முப்பத்தியோரு இலட்சம் இந்தியர்கள் வேலை செய்யும் வளைகுடா நாடுகளில் ஒரு அறிக்கையில் 36% பேர் 500 திர்ஹம் (US$ 120) சேமிப்பதாகவும், 37%பேர் 500 முதல் 1000 திர்ஹம் வரை (US$ 120-140)சேமிப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரப் நியூஸ் பத்திரிக்கையின் அறிக்கைப்படி கடந்த வருடத்திற்கும் இவ்வருடத்திற்கும் இடையே ஏற்பட்ட பணவீக்கத்தினாலும் அமெரிக்க டாலரின் கிடுகிடு வீழ்ச்சியாலும் 30% சம்பளம் குறைந்திருக்கிறது. (கடந்த வருடம் திர்ஹம் மதிப்பு 12.70 ஆக இருந்தது இன்றைய நிலவரத்தில் 11.00 ஐ விட குறைந்து போயுள்ளது. சவூதியில் இன்னும் மோசம், அது 10.70 ஐயும் விட மோசமாக குறைந்தவண்ணம் உள்ளது.) ஒருபக்கம் பணவீக்கம் காரணமாக வயிற்றெரிச்சல் பட்டுக்கொண்டிருக்கையில் மறுபக்கம் கிடுகிடுவென ஏறும் விலைவாசிகள் தலையைச் சுற்ற வைக்கின்றன. வீட்டு வாடகை எட்ட முடியாத உயரத்தில் பன்மடங்கு எகிறுவது ரியாத், ஜெத்தா, அபூதாபி மற்றும் ஷார்ஜாவில் என்றால் துபாய் மற்றும் கத்தரில் நினைத்துப் பார்க்கவே அஞ்சும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை சவூதியின் சில பகுதிகளைத் தவிர வளைகுடாவெங்கும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து சமையல் எரிவாயு தயாரிப்புக்குப் பெயர் போன வளைகுடாவில் 50% விலை உயர்ந்துள்ளது. மருத்துவம், இன்னபிற செலவுகள் பற்றி கேட்கவே வேண்டாம். விமான சேவைகளில் இருப்பவற்றிலேயே மிகமட்டரக சேவைகளுக்குப் பெயர் போன இந்திய வளைகுடா மார்க்கத்தில் ஏகபோக உரிமை கொண்டாடும் ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் சந்தடி சாக்கில் ஏற்றிய கொள்ளை லாப விலை உயர்வினாலும் பாதிக்கப்படுவது அடிமட்டத் தொழிலாளர்களே! Pravasi Bandhu Welfare Trust (PBWT) அமைப்பின் சேர்மன் கே.வி. ஷம்சுத்தீன், இதுபற்றிக் கூறுகையில் இந்தியர்கள் வளைகுடாவில் சம்பாதிப்பதால் பயனொன்றும் இல்லை என்பதை இப்போது நன்கு உணர்ந்திருக்கிறார்கள். கடந்த வருடங்களை விட இந்தியர்கள் வளைகுடாவில் சேமிப்பது 40% குறைந்துள்ளது என்பதான் உண்மை. இதில் சிக்கித் தவிப்பவர்களில் பெரும்பாலோனோர் குறைந்த மற்றும் நடுத்தர சம்பளக்காரர்களே" என்கிறார். {mosimage}தற்போது வேலை செய்து வரும் வளைகுடா தொழிலாளர்கள் 1. செயல்திறனற்றவர் (Unskilled), 2. ஓரளவு கை தேர்ந்தவர் (Semi-skilled) மற்றும் 3. தேர்ச்சி பெற்றவர்(Skilled) என்ற மூன்று நிலைகளில் கட்டுமான, தயாரிப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பணியாற்றுகின்றனர். 500 திர்ஹமுக்குக் கீழே உள்ள சம்பளங்களில் வேலை செய்யும் பெரும்பாலான இந்திய தொழிலாளர்கள் சராசரியாக 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை இவர்கள் வேலை செய்கின்றனர். டெக்னிஷியன்கள், கம்யூட்டர் ஆபரேட்டர்கள், கனரக வாகன ஓட்டுனர்கள், எலக்ட்ரீஷியன்கள், புரஃபஷனல் ரீதியில் பார்த்தால் டாக்டர்கள், இஞ்சினியர்கள், ஆசிரியர்கள், அக்கவுண்ட்டண்ட்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் ஒளிந்திருக்கும் உண்மை என்னவெனில் படிப்புத் தகுதி அதிகரிக்க அதிகரிக்க சம்பளம் அதிகரிக்கிறது. வசதி வாய்ப்புக்களும், வழங்கப்படும் வசதிகளும் அதிகரிக்கின்றன. அதே நேரத்தில் அவர்களுக்கு உடல் உழைப்பு அதிகமில்லை. இந்தியாவில் ஒளிரும் வேலை வாய்ப்புக்கள்: இந்தியாவில் மிளிரும் தொழில்நுட்பப் புரட்சியின் மூலம் இளம் தலைமுறையினருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலையில் ஒரு நிறுவனத்தில் இளம் தலைமுறையினர் இப்போது குறைந்த சம்பளத்தில் நுழைவதில்லை. "கை நிறைய" காசு சம்பாதிக்கனும்னா கல்ஃப்க்கு போவனும்" என்கிற பழைய சித்தாந்தமெல்லாம் மாறியிருக்கிறது. ஆனால் வளைகுடாவில் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வந்தவர்களுக்கு மட்டும், அவர்கள் வருவதற்கு முன் தான் கண்ட இந்தியாவே இன்னும் கண்ணில் நின்று கொண்டிருப்பதை ஒரு வித துரதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் 2006-ஆம் வருடத்திற்குப் பிறகு வளைகுடாவில் வசந்தம் வீசும் என்று எல்லாம் எதிர்பார்த்து வேலை தேடி வருபவர்கள் கையில் வெண்ணையை வைத்து நெய்க்கு அலையும் "பாவப்பட்டவர்கள்" என்கிறது இன்னொரு அறிக்கை. இப்போது இந்தியாவில் IT கம்ப்யூட்டர் இஞ்சினியர்களுக்கு அடுத்தபடியாக கடுமையான டிமாண்ட் ஏற்பட்டிருப்பது ஆச்சரியப் படத்தக்க வகையில் சிவில் இஞ்சினியர்களுத்தான். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் வளைகுடா நாடுகளுக்குத் தேவைப்படும் சிவில் இஞ்சினியர்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்த்து வர மறுத்து விடுகின்றனர். அந்த அளவிற்கு அவர்களுக்கு இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகளும் தொழில் முனைவுகளும் அதிக சம்பளமும் தயாராக இருக்கிறது. "உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தற்போது கிடைப்பதை விட அல்லது அதே அளவிற்கு சம்பளம் இந்தியாவிலேயே கிடைப்பதால் கஃல்ப்பிற்கு டாட்டா காட்டிவிட்டு இந்தியாவில் வந்து பணியைத் தொடர்கிறார்கள்" என்கிறார் கட்டிடக்கலை தொடர்பான பெங்களூரிலிருந்து இயங்கும் Civil Aid Technoclinic Pvt. Limited நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சுனில் சன்னாட். வளைகுடாவைப் புறக்கணிக்கும் இந்தியர்கள் வளைகுடா நாட்டு நிறுவனங்கள் வேண்டி விரும்பிக் கேட்கும் உழைப்பிற்குப் பெயர் போன இந்திய தொழிலாளர்கள், இன்றைய தேதிக்குப் போதுமான அளவிற்கு வளைகுடா செல்லத் தயாரில்லை என்பதே யதார்த்த உண்மை. வளைகுடா நிறுவனங்கள் இந்திய விசா இல்லை என்று கையை விரித்த காலம் போய் விசாக்களை வைத்துக்கொண்டு, இந்திய மேன்-பவர் ஏஜண்ட்டுகளிடம் மல்லுக் கட்டுகின்றன. Pravasi Bandhu Welfare Trust, ஷம்சுத்தீன் சமர்ப்பித்துள்ள ஒரு அறிக்கையில், குறைந்த மாத வருமானத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தன் குடும்பத்தினருக்கு மாத செலவுகளுக்கு உரிய பணம் அனுப்புவதற்காக தன்னுடைய அத்தியாவசியச் செலவையும் சேமிக்கும் கொடுமையைப் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. படிப்பு, வருமானம், குடும்பத்தை வளைகுடாவில் குடியமர்த்தும் பதவிநிலை, அவர்களை நம்பியிருப்போர், நாட்டிற்கு பணம் அனுப்பும் நிகழ்வுகள், சேமிக்கும் மற்றும் செலவு செய்யும் வழிமுறைகள், ஓய்வு பெறும் சூழல்கள், முப்பது வயதிலிருந்து ஐம்பது வயது வரையிலான வளைகுடா பணியாளர்கள் பத்தாயிரத்து நூறு பேர் பங்குபெற்ற இந்த சர்வேயில் 98 சதவீதம் பதிவான சர்வே விபரங்கள் கீழே:
"வளைகுடாவில் NRI-க்கள் தங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளும் தருணம் வந்துவிட்டது" என்கிறார் ஷம்சுத்தீன். மேலும், "சேமிப்பை முறையாகத் துவங்க தங்கள் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்" என்கிறார். "தங்கள் குடும்பத்தினருக்கு வளைகுடாவின் அல்லல்களை எடுத்துரைத்து செலவீனங்களை கட்டுப்படுத்தி சேமிப்பின் மகத்துவத்தையும் புரியவைக்க வேண்டும். தவிர, ஹலாலான வழிகளில் சிரமப்பட்டு சம்பாதித்த காசை புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே தக்கவைக்கவும், பெருக்கவும் முடியும்" என்கிறார். இவ்வாக்கத்தை நாம் எழுதத் துவங்கியதன் பின்னணி யாதெனில், படிப்பறிவில்லாத தமிழ் இஸ்லாமியச் சமுதாயம், தலைமுறை தலைமுறையாக ஆட்டுமந்தையைப் போன்று செயல்பட்டு வரும் பழைய சித்தாந்தங்களைச் சிறிது நேரம் ஒதுக்கிச் சிந்திக்க வேண்டும் என்பதுதான். பதினைந்து வருடங்கள் வளைகுடாவில் குப்பை கொட்டி பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்ட ஒரு தந்தையே எப்படியும் பாஸ்போர்ட் எடுத்து தன் மகனை வளைகுடாவிற்கு அனுப்பிவிடவே எத்தனிக்கிறார். இது, வளைகுடா தொழிலாளர்கள் படும் அல்லல்களின் பின்ணனியை முற்றிலும் அறியாததாலா? இல்லை குறுகிய காலத்தில் கைநிறைய சம்பாதித்துவிட வேண்டும் என்ற அரதப்பழசான சிந்தனை தரும் உந்துதலா? எது எப்படியோ, தமிழ் இஸ்லாமியச் சமுதாயம் இத்தகைய குறுகிய சிந்தனையிலிருந்து வெளியேறி தீர்க்கமான ஒரு புதுயுகத்தினை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதே நம்முடைய ஆதங்கமும் அவாவும். தெளிவான சிந்தனையிலிருந்து புறப்படும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டால் மட்டுமே பொருளீட்ட வளைகுடா நாடி வரும் சமுதாயம், இப்போது சந்திக்கும் இழிநிலையில் இருந்து வெளியேறி புதியதொரு சரித்திரம் படைக்கும்.
கல்வியின் மகத்துவத்தையும் பொருளாதாரத்தின் தேவைகளையும் சேமிப்பின் அவசியத்தையும் இதன் மூலம் உணரும். இதனை நம்மிலிருந்து துவங்குவோம். இறைவன் நாடட்டும். நன்றி! ஆக்கம்: அபூ ஸாலிஹா
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (27)
![]()
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
சிலருக்கு வளைகுடா நாடுகளில் பணியாற்றுவது பொருளாதரத்தின் மீதுள்ள பேராசை என்று சொல்லுவதை விட என்றே சொல்லலாம்.பக்கத்துவீட்டுக்காரன் போய்விட்டான்,கூடப்படித்தவன் போய்விட்டான் என்ற குடும்பத்தினரின் நச்சரிப்பும் சிலரை வளைகுடாவின் பக்கம் தள்ளுகிறது.ஊரில் கிடைக்கும் வருமானத்தை விட்டு விட்டு அதிகம் ஆசைப்பட்டு குறைவான சம்பளத்தில் வேலைப்பார்ப்போரும் உண்டு.மொத்தத்தில் பல்வேறு சூழல்கள் பல்வேறு காரணங்கள் பல்வேறு பிரச்சனைகள்.
1
August 28, 2007 15:01
//இந்தியாவுக்கும் கல்ஃபுக்கும் இடையில ஏதாச்சிம் பெருசா தகராறு வந்து, எல்லா இந்தியர்களுக்கும் நாங்களே வேலை போட்டுத் தர்றோம். எல்லாத்தையும் திருப்பி அனுப்புன்னு இந்தியாவே கேக்கணும். எங்க நாட்டின் ஏர்போர்ட்டுகள் மூடப்படணும் அப்படியாச்சிம் எங்க குடும்பம் குட்டிகளோட சேர்ந்து நாங்க வாழ முடியுதான்னு பாக்கணும்!'//
என் குமுறல்கள் இங்கே இன்னொருவரின் வார்த்தையாக வெளிப்பட்டுள்ளன. சொல்வதற்கு வார்த்தை வரவில்லை. ஆழ்மனதில் முள்தைத்த நிலை. சிந்தனையை தூண்டும் ஆக்கம்.
2
August 28, 2007 15:28
அபூ ஸாலிஹா அவர்களே!
உணர்ச்சிகளின் தொகுப்பு, மிக அருமையான ஆக்கம். வளைகுட வாழ்க்கையை பகிர்ந்தமைக்கு நன்றி, பாராட்டுக்கள்.
3
August 28, 2007 15:50
//வளைகுடாவில் NRI-க்கள் தங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளும் தருணம் வந்துவிட்டது' என்கிறார் ஷம்சுத்தீன். மேலும், 'சேமிப்பை முறையாகத் துவங்க தங்கள் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்' என்கிறார். 'தங்கள் குடும்பத்தினருக்கு வளைகுடாவின் அல்லல்களை எடுத்துரைத்து செலவீனங்களை கட்டுப்படுத்தி சேமிப்பின் மகத்துவத்தையும் புரியவைக்க வேண்டும். தவிர, ஹலாலான வழிகளில் சிரமப்பட்டு சம்பாதித்த காசை புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே தக்கவைக்கவும், பெருக்கவும் முடியும்' என்கிறார்.\
நண்பர் சொல்லுவதும் சரிதான்
இன்னும் இந்த இளைஞர் சமுதயம் தங்கள் கல்வி தரத்தை உயர்த்திகொள்வதுடன் தங்களாக சுயவேலையும் தொடங்கினால் நமது நாட்டில் வளர்ச்சி நிச்சியம் உண்டு ஆனால் பொருளதரம் மிக பெரிய சவலாக இருக்கு வெளிநாடு மொகம் அதிகம் இருக்கு அதே சமயம் [ஒருவர் வெளிநாட்டுக்கு வேண்டி பணம் திரட்டுவது மிக சுலபம்]ஆனால் ஊரில் தொழில் தொடங்க [பணவுதவிக்கு]யாரும் முன்வருவது இல்லை இந்த முக்கிய காரணத்தால் தான் எத்னையோ இளைஞர்கள் வட்டிக்கு வாங்கியும் கடன் வாங்கியும் தங்களின் கனவுகளை நிஜமாக்க முடியால் தவிக்கின்றனர் என்று தனியும் இந்த வெளிநாட்டு மொகம்...........
ஹஃணிப்-குவைத்
4
August 28, 2007 16:03
அஸ்ஸ்லாமு அலைக்கும்இந்தக் கட்டுரைக்கு நான் சிறிது மாறுபடும் சூழ்நிலையாஇயும் இங்கு பார்க்கிறேன். என் நண்பர் ஒருவர் மிகவும் ஏழ்மையான நிலையில் பத்தாவது படித்து இந்தியாவில் பிழைக்க சிரமப்பட்ட நிலைஐயில் தான் இங்கெ வ்ந்தார். ஆரம்பத்தில் மிகவும் கஸ்டப்பட்ட அவர் டாக்ஸி டிரைவராக வேலைக்கு செர்ந்து சில வருடங்கள் பணிசெய்தார். அதில் கிடைத்த பண்ம், நேரத்தில் இங்குள்ள சில கம்யூட்டர் கோர்ஸ் படித்து, ஒரு கம்மெனியில் பார்ட்டைம் வேலை செய்து பின் அதில் மாறிவிட்டார். அதன் பின்னும் படித்துக்கொண்டு சிரமப்பட்டு அடுத்த கம்பெனியில் நல்ல சம்பளத்தில் உள்ளார். அவரது குடும்பத்தையும் இங்கெ வைத்திருக்கிறார். இப்பொது நல்ல நிலையில் அவர் சந்தோசமாக இருக்கிறார். பலபேருக்கு நல்ல வாழ்வையும் கொடுத்திருக்கிற்து க்ஃல்ப் நாடு. இதை ஒரேயடியாகவும் குறைசொல்ல்வும் முடியாது என்பது என் அபிராயம்.
5
August 29, 2007 15:26
அபூ சாலிஹா அவர்களின் ஆக்கம் ரோமத்தை சிலிர்க்கச்செய்து விட்டது.அதை படித்து உள்ளம் அழுகிறது.''Drops make Ocean''சிறு துள்ளி பெருவெள்ளம்''A penny saved is a penny gained''இளமையில் சிறுசேமிப்பு முதுமையில் பெரும்பாதுகாப்பு'' போன்ற அறிவுரைகளைக் கவனமாகக் கேட்டுப் பின்பற்றுபவர்களூம் நம்மில் ஏராளம்.அவர்கள் வருமுன் காக்கும் வள்ளல்கள். ஆகவே ஆடம்பரத்தை கைவிட்டு சிக்கனத்தை கைக்கொண்டு வாழப்பழகிக்கொண்டால் கையிலும் பையிலும் காசு மிஞ்சும்.விலைவாசி ஏறினாலும் பணவீக்கம்(Inflation)ஏறினாலும் சேமிப்பு நமக்கு சேவை புரியும்.போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து(Enough is enough)என்று மனக்கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து பொருளாதாரக் கட்டுக்கோப்புடன் உயர்ந்து சிறந்து வாழ்வாங்கு வாழ்வோமாக சேமிக்க நான் ரெடி வாசகர்கள் ரெடியா?மேலும் எனது சிறிய வேண்டுகோள்''இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்.குறிப்பாக தமிழகத்திலே வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை மாதாமாதம் வழங்கப்படுகிறது.அப்படி இருக்கும் போது GULFல் உள்ளவர்கள் இந்தியாவிலேயே செட்டில் ஆகப்போனால் என்ன வேலை இருக்கிறது?''இதற்கான தீர்வையும் கட்டுரையில் குறிப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.வஸ்ஸலாம்.
6
August 29, 2007 18:27
மிக யதார்த்த விஷயங்களைச் சொல்லும் அருமையான ஆக்கம். தெளிவான இது போன்ற சிந்தனைகளை விதைக்கும் கருத்துக்கள் தான் இன்றைய இஸ்லாமிய சமூகத்திற்கு தேவை.
இக்கட்டுரையின் சம்பங்களை மெய்ப்பிக்கும் செய்தி கீழே:
ஷார்ஜாவில் இந்தியர் தற்கொலை
----------------------------
ஷார்ஜாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த முஹம்மது அப்துல் ரஷீத் முஹம்மது கெளஸ் (வயது 41 ) செவ்வாய்கிழமை இரவு தான் தங்கியிருந்த மூன்றாவது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஐந்தாயிரம் திர்ஹம் மாதச் சம்பளம் கொடுப்பதாக வாக்களிப்பட்டு குறைவாக சம்பளம் கொடுக்கப்பட்ட காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் இதனை அவர் பணியாற்றின நிறுவனத்தினர் மறுத்துள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட முஹம்மது கெளஸிற்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இருபது வருடங்களாக சவுதி அரேபியாவில் பணிபுரிந்த அவர் கடந்த ஜுலை 29 ஆம் தேதி ஷார்ஜா வருகை புரிந்தார்.
சம்பளப் பிரச்சனை இருந்தால் அதனை தீர்த்துக் கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருந்த போதிலும் தற்கொலை செய்து கொண்டது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ( Consulate ) வெளியிட்டுள்ள புள்ளிவிபரப்படி 2002ல் 54 பேரும், 2003ல் 63 பேரும், 2004ல் 67 பேரும், 2005ல் 82 இந்தியர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்று நிகழும் தற்கொலைகளைத் தடுக்க இந்திய துணைத்தூதரகம் மனதளவில் பாதிக்கப்படுவோருக்கு ஆலோசனை வழங்க கடந்த மே மாதம் 18ம் தேதி முதல் ஆலோசகர்களை நியமித்துள்ளது. இவர்களை 050 9433111 எனும் அலைபேசி எண்ணில் வாரந்தோறும் ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் அமீரகத்திற்கு வருவதால் அந்தந்த மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளபட வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் வழியுறுத்துகின்றனர்.
http://www.godubai.com/gulftoday/article.asp?AID=31&Section=Home
Indian jumps to death in Sharjah
7
August 30, 2007 21:21
தாங்கள் கையில் எடுத்துள்ள கரு மிகௌஉம் பாரட்டதக்கது. பஹிரைனிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன். அதைப்பற்றியும் எழுதுங்காள்.
கறுப்பு பட்டியலில் 45 பஹ்ரைன் கம்பெனிகள்
ஊழியர்களை மோசமாக நடத்துவது, ஊதியம் வழங்காமை போன்ற மோசடியில் ஈடுபடும் 45 பஹ்ரைன் நிறுவனங்களை இந்திய தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
பஹ்ரைனில் உள்ள பல கட்டுமான கம்பெனிகளில் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இதில் பல நிறுவனங்கள் உள்ளூர் சட்டத்தை மதிக்காமல் தொழிலாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்காமலும், அவர்களுக்கு மோசமான நிலையில் உள்ள தங்குமிடங்களை அளித்தும் அவர்களை மோசமாக நடத்துவதாக கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்திய தூதரகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இந்நிலையில் அவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்படும் 45 பஹ்ரைன் கம்பெனிகளை இந்திய தூதரகம் அடையாளம் கண்டு அவற்றை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்த நிறுவனங்கள் தங்களது தவறுகளை சரி செய்யாதவரை, அந்நிறுவனங்கள் இந்திய பணியாளர்களை வேலையில் அமர்த்துவதற்கான அனுமதியை இந்திய தூதரகம் அளிக்காது என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பாலகிருஷ்ண ஷெட்டி தெரிவித்தார்.
மேலும் கறுப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள 45 பஹ்ரைன் நிறுவனங்களின் உரிமையாளர்களோ அல்லது அவற்றின் பிரதிநிதிகளோ இந்தியாவுக்கு வர விசா வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்
8
August 30, 2007 21:27
Really it is great labor exploitation, which is taking place in gulf. Most of the south asians are going for mere salary with the dream of improving their lifestyle and skills misled by the local recruitment agencies and others. Most of the labor are considered as third class situations in their context and their basic rights are too neglected.
10
August 31, 2007 09:17
Thanks for writing such a worthy articles ..
SARC country low wage workers in Guld thier feeling and work/residence conditions is too bad (most of them sacrifice their life for loved ones)
Resently Govt of India forming committes and taking steps to curb un wanted incident and labor movement
I hope India's economic grouth will help to stop poor labor movement (to Gulf)
11
September 02, 2007 07:57
Nothing like our country.... i worked in qatar, fujairah and saudi for 23 years. wasted my life...missed good functions in family... saved little and spent lot...finally got loan and now doing business and happy in our country.
12
September 03, 2007 03:38
பென்ஷன் ஸ்கீம் (வளகுடா ஸ்ரீரிலங்கா தொழிலாளர்களுக்காக)
Srilanka Bureau of Foreign Employment (SLBFE) எனப்படும் மஹிந்த ராஜபக்சே அரசு பிரிவு இதை வழங்க முன்வந்துள்ளது.
அதாவது வளைகுடாவில் வேலை செய்துவிட்டு, நிறைய அந்நியசெலாவணியை ஸ்ரீலங்காவிற்கு சம்பாதித்து கொடுத்து விட்டு ஓய்ந்து நாடு திரும்பும் தொழிலாளர்கள் தங்கள் 60 வயதிலிருந்து இறுதிக்காலம் வரையும் இடையில் மரணித்தால் மனைவி அல்லது பிள்ளைக்கு 80 வயதுவரையும் மாத பென்ஷன் வழங்க அரசு முன்வந்துள்ளது.
இதற்கு ஒப்புக்கொள்ளும் ஒருவர், குறைந்த பட்ச பிரிமியம் தொகையாக மாதம் 1.6 ரியால் மட்டும் செலுத்தி உறுப்பினர் ஆக வேண்டும். (அதிக பிரிமியம் = அதிக பென்ஷன் தொகை)
இதன் மூலம் 80,000 ஸ்ரீரிலங்கன் மக்கள் பயன்பெறுவர் என்று அரசு தெரிவிக்கிறது என்பதொரு முக்கிய விடயம். இது போல் எம் அண்டை நாடான இந்தியாவும் செய்ய வேண்டும்.
13
September 04, 2007 06:47
இன்றைய நிலைக்கு மிகவும் அவசியமான ஒரு ஆக்கம்.
சென்ற வாரம் துபை DSL Exhibition நடத்திய ஒரு சர்வேயில், சமபளத்தில் பத்து சதவீதத்திற்கும் குறைவான தொகையை சேமிப்பது கூட சிரமம் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. (பேஸிக் பே யில் இருந்து எடுத்து 25-50% வரை மட்டும் வீட்டு வாடகைகளுக்கு கொடுக்கின்றனர்)
கையில் கிடைக்கும் பணத்தில் பெரும்பங்கை வளைகுடாவிலெயே செலவழித்து விடுவதால் கட்டுரை ஆசிரியர் கூறியது போல் இத்தகைய நெருக்குதல்களினால் வளைகுடா நாடுகளில் சம்பாதிப்பதற்கான, வசிப்பதற்கான முகாந்திரங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.
14
September 05, 2007 06:54
விலைவாசி உயர்வு பணமதிப்பு குறைவு என்ற தாக்குதல்களோடு, உள்ளுர் சமூகவிரோதிகளின் வழிப்பறிகளும், வெறுப்புணர்வுகளும் அதிகரித்துள்ளது. வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளில் காவல்துறையினரின் பாரபட்ச நடவடிக்கைகளும் வெளிநாட்டினரின் புகார்களை அலட்சியப்படுத்துவதும் அதிகரித்துள்ளது. தொழிலாளர் நல மன்றங்களிலும் லஞ்சம் ஆக்ரமித்து நடவடிக்கைகள் இழுத்தடிக்கப்பட்டும் அலைக்கழிக்கப்ட்டும் மனரீதியாக பலவீனப்படுத்தலும் நடக்கிறது.
15
September 05, 2007 10:49
assalaamu alaikkum
Millions of expats could be kicked out of Gulf
Please read the following article related to this subject:
http://www.arabianbusiness.com/index.php?option=com_content&view=article&id=501348%3Amillions-of-expats-could-be-kicked-out-of-gulf&Itemid=1
regards,
Musthafa
16
October 03, 2007 12:18
A four dimensional perspective has been analysed in the wonderful article. Thanks for giving a chance for such worthy reading.
Please read the link below: (todays news in UAE)
A massive strike broke out in the United Arab Emirates wherein more than 40,000 workers belonging to a leading construction company abstained from work paralysing construction work at various construction sites in Dubai.
'We have a tough time living in the country because of low wages. Helpers are paid Dhs 550 per month, whereas skilled workers like painters, carpenters, mason and tradesman are paid Dhs 700 (Rs 7,000) per month,' he said.
'The money is not sufficient to meet our monthly expenses. Adding to our woes is the sliding dirham value against the Indian rupee. It has dampened the spirits of the workers who are struggling to send decent amounts of money back home,' he said.
Another Indian worker said, 'Pay should be commensurate with the cost of living. All workers should be given a hike of at least Dhs 200 (Rs 2,000) apart from better facilities in the labour camps'.
http://timesofindia.indiatimes.com/Indians_Abroad/Indian_workers_strike_for_better_deal/articleshow/2510594.cms
---
17
November 02, 2007 20:34
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஆக்கத்தை படித்த போது இக்கவிதை பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.
வெளிநாட்டு வேலை!
-------------------
வளமிக்க தேசத்தில் - விலையானது வேலை!
வாலிபன் நான் - வழியற்று நிற்கையில்
விடியலாய் ஒரு விளம்பரம்.
விலையில்லாத - விசா! இதோ!
பாலைமணலை
ஈரமாக்கியது என் வியர்வை துளிகள்.
கண்ணுக்கெட்டா தூரத்தில் என் மகன்
கஷ்டப்படுகிறான்,
இது என் பெற்றோரின் ஏக்கம்.
துபாய் போய் விட்டான், இனி பணமழைதான்.
இமையை உயர்த்தி சமுகம் இப்படி பார்க்கும்
தங்கையின் திருமணம் மகிழ்ந்தேன்;
தந்தையின் மரணம் மனம் நொந்தேன்
நேரில் பார்த்ததல்ல போனில் கேட்டு,
முண்றாண்டுக்கு ஒரு முறை முன்று மாத விடுப்பு.
இருபத்திரெண்டாய் சென்றவன்
இருபத்தி ஐந்தாய் திரும்பினேன்.
திரும்பியதும் என் திருமணம்
மாதம் முன்று கடந்து,
மறந்திருந்தது அயல் நாடு
மறுபடி நினைவில் எழுந்தது.
மகிழ்ச்சிக்கு வேலி போட்டு,
மனையாளை தனியே விட்டு,
கை அசைத்துச் சென்றேன்
காசு அனுப்பி வைக்க சென்றேன்.
பொருளாதாரத்தை தேடிச் சென்ற எனக்கு
பொருளே தூரமாகியது.
என் தாரத்திற்கு ஒவ்வொரு பொழுதும் தூரமாகியது.
இளமையை தியாகித்து
இளநரை தளிர்விட்டு தாயகம் திரும்பினேன்.
விடு வந்ததும், வாசலில் ஒரு இளம்பிஞ்சு!
அன்பின் மிகுதியால் வாரியணைக்கச் சென்றேன்
அறியாதவன் என்பதால் அச்சம் மேலிட்டு
அம்மா என்றழைத்தது.
அழுது கொண்டே ஓடியது என் ஆசை வாரிசு
பெற்ற பிள்ளைக்கே பெற்றவன் இவனென்று
அறிமுகம் செய்ய வேண்டிய அவலத்தை நினைத்து
மனம் வெதும்பினேன்.
மறுமுறை செல்லுகிற மனப்போக்கை விட்டுவிட்டு
மகிழ்ச்சியின் உச்சத்தில் மகளோடு கொஞ்சுகையில்,
என் மகளின் எதிர்கால மணக்கோலம் நினைவில்
நிழலாட பிசுபிசுத்துப்போனது உறுதிமொழி
மறுதிங்களே புறப்பட்டேன்
மிஞ்சிய இளமையையும் தியாகிக்க.
ஆக்கம்:
கீழக்கரை தாசிம் பீவி மகளீர் கல்லூரி மாணவி(பனைக்குளம்)
18
November 12, 2007 16:00
விடு வந்ததும், வாசலில் ஒரு இளம்பிஞ்சு!
அன்பின் மிகுதியால் வாரியணைக்கச் சென்றேன்
அறியாதவன் என்பதால் அச்சம் மேலிட்டு
அம்மா என்றழைத்தது.
அழுது கொண்டே ஓடியது என் ஆசை வாரிசு
பெற்ற பிள்ளைக்கே பெற்றவன் இவனென்று
அறிமுகம் செய்ய வேண்டிய அவலத்தை நினைத்து
மனம் வெதும்பினேன்.////
இப்படி சொந்த குழந்தையின் அன்பிற்க்கு ஏங்கும் இதயங்கள் கோடி,,,,
உண்மையான சம்பவத்தை மிக அழகான கவிதை வடிவத்தில் தொகுத்த அந்த மாணவிக்கு என் வாழ்த்துகள்
ஹனிஃப்-குவைத்
19
November 12, 2007 16:29
Excellent Article deeping analysing the exultant facts to Indian community. I empathize myself on reading this very late. As the author said, the situation is changing... now-a-days, big indian companies are coming to Gulf for recruitment ...
here is the one example.
-----------------------
Published 25th November 2007, Gulf News - Quantity Surveyors
We have openings in India for: Quantity Surveyors. Come home to where your heart is. Come back to India, for the global challenges and rewards of growth. Your next years belong with the boom in India's economy. With its explosive surge in world-class infrastructure and construction. With its challenges and opportunities, and rewards at
international levels. It belongs with Voltas, India's first global name in HVAC and engineering services.
And a preferred provider of electro-mechanical solutions of international scale, scope and standard. For projects in exciting growth areas such as retail, airports, IT, commercial spaces and others.
What's more, as a long-established MEP contractor in key investment locales like the Middle East and Asia-Pacific, Voltas is truly your passport to a trans-national career. Offering you an environment of freedom, challenge, and performance-based advance and rewards.
The opportunity to stretch your abilities in the most demanding projects. And participate in Voltas' accelerated thrust towards exponential growth - which could parallel your own. Isn't it time you heeded the call of home, and the exciting prospects that await you there?
Senior Management Team of Electro-mechanical & Refrigeration Business Group is visiting Abu Dhabi and Dubai on 6th and 7th December 2007 respectively to meet you. If you are a B Tech in Electrical/Mechanical Engineering with at least 5-10 years' experience in MEP project planning and execution, write to: careerem&
எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்
before 4th December 2007. VOLTAS: Integrating Systems. Incomparable Value.
20
November 26, 2007 07:45
வளைகுடாவில் உழைக்கும் வர்க்கத்தின் மனதில் உள்ள பாரத்தை உணர்ந்து எழுதப்பட்ட நல்ல கருத்துக்கள் அடங்கிய கட்டுரை... இது தொடர்பான ஒரு கவிதை இங்கே:
நாம் யார்?
----------
வளமையான
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள்!
வறுமை என்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள்!
சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்
சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள்!
நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள்!
தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள்!
கடிதத்தை பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய
எழுத்துக்கள்!
ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள்!
நலம் நலமறிய
ஆவல் என்றால்
பணம் பணமறிய
ஆவல் என கேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள்!
பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள்!
ஏ . சி . காற்றில்
இருந்துக் கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள்!
வளரும் பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள்!
தனிமையிலே
உறங்கும் முன்
தன்னையறியாமலே
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள்!
அபஷி என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள்!
உழைப்பு என்ற
உள்ளார்ந்த அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!
முடியும் வரை
உழைத்து விட்டு
முடிந்தவுடன்
ஊர் செல்லும்
நோயாளிகள்!
கொளுத்தும் வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!
பெற்ற தாய்க்கும்
வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும்
பெற்றெடுத்த குழந்தைக்கும்
உற்ற குடும்பத்திற்கும்
இடைவிடாது உழைக்கும்
தியாகிகள்!
21
January 24, 2008 11:16
Excellent article. worth reading.
I am sending here a related 'kavithai', which i feel it sense the same pain. thanks
நாம் யார் ?
-------------
வளமையான
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !
வறுமை என்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள் !
சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்
சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள் !
நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள் !
தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள் !
கடிதத்தை பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய
எழுத்துக்கள் !
ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள் !
நலம் நலமறிய
ஆவல் என்றால்
பணம் பணமறிய
ஆவல் என கேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள் !
பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !
ஏ . சி . காற்றில்
இருந்துக் கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !
வளரும் பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள் !
தனிமையிலே
உறங்கும் முன்
தன்னையறியாமலே
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் !
அபஷி என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள் !
உழைப்பு என்ற
உள்ளார்ந்த அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!
முடியும் வரை
உழைத்து விட்டு
முடிந்தவுடன்
ஊர் செல்லும்
நோயாளிகள் !
கொளுத்தும் வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள் !
பெற்ற தாய்க்கும்
வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும்
பெற்றெடுத்த குழந்தைக்கும்
உற்ற குடும்பத்திற்கும்
உண்மை நண்பர்களுக்காகவும்
இடைவிடாது உழைக்கும்
தியாகிகள்
22
August 24, 2008 08:54
மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் பணி நிமித்தமாக சுற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த விஷயத்தைப் பற்றி எழுதுகிறேன்.
இப்போது இங்கு உச்ச கட்ட வெப்ப நிலை... வெளியில் இறங்கி பத்தடி கூட நடக்க முடியாது.. சுருண்டு விழுந்து விடுவோம்... A/C இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. ஆனால் காலையில் ஏழு மணிக்கே எழுந்து வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை பரந்த அளவில் பார்க்கலாம். நீலம், சிகப்பு , மஞ்சள் கலரில் சீருடை அணிந்து கட்டிடப் பணிகளில் ஈடுபடும் இவர்களின் நிலைமையை நேரில் பார்த்தால் நமக்கே கண்கள் கலங்கும். இதில் பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம் போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். சம்பளம் மிகக் குறைவு, அதுவும் மாதா மாதம் ஒழுங்காகக் கிடைக்காது. ஏன் என்று கேள்வி கேட்கவும் முடியாது. கேட்டால் அடி உதை...சரியான உணவு கிடைக்காது... எட்டு முதல் பத்து பேர்கள் சேர்ந்து தங்கும் இருப்பிட வசதி. நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்தபடி அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருப்பார்கள். (அதிலும் பெரும்பாலானோர் இந்தக் குறைந்த ஊதியத்தையும் சேமிப்பதில்லை. முக்கியமான மூன்று வழிகளில் இவர்களது சேமிப்பு கரைந்து விடும். இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. துக்கத்தை மறக்க இதை விட்டால் இவர்களுக்கு வேறு நிவாரணம் இல்லை என்பதே உண்மை. டெலிபோன் கார்டுகள்: சிலர் கணக்கில்லாமல் மணிக்கணக்கில் சொந்த ஊருக்குப் பேசிக்கொண்டிருப்பார்கள். குடிப்பழக்கம் : வெளி நாட்டு மது வகைகள் இங்கு மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும். இதை கள்ளத்தனமாக விற்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கின்றது. கடன் வசதி உண்டு. சம்பள தினம் வந்து சரியாகப் பணத்தை வாங்கிச் செல்வார்கள். விபச்சாரம் (என்ற அபச்சாரம்) : பெண் வாணிபம் இங்கெல்லாம் வழியோரக் காட்சிகள். பல நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இலகுவாக மலிவு விலையில்...உள்ள அவலம்...) பெரும்பாலானோர் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டவர்கள்... இவர்களுக்கு நீதி கிடைக்க இங்கு எந்த சக்தியும் உதவி செய்யாது.. இங்குள்ள சிறைச் சாலைகளில் நாட் கணக்கல்ல... மாதக் கணக்கல்ல... வருடக் கணக்காக... வாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் ஏராளம். ஒவ்வொருவருக்கும் அவரவர் சோகங்கள்.. இவர்களைப் பற்றி இங்கு எந்த இந்திய அமைப்பிற்கும் கவலை கிடையாது. உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் தூதரகங்கள் இருக்கின்றன... அவை அனைத்துமே தத்தமது நாட்டின் சொந்தக் குடிமக்களுக்கு ஏதாவது பிரசனை என்றால் முன்னுரிமை கொடுத்து உதவுகின்றன.. நமது இந்தியாவிற்கும் இருக்கின்றன...உலகம் முழுவதும்.. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த உதவியும் கிடைக்காது. கோட்டும் சூட்டும் அணிந்து இவர்களை பெரும் விழாக்களில் மட்டுமே காண முடியும். உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா இவர்களை உங்களால் சாதாரணமாக அணுக முடியாது. இந்தச் சூழ்நிலையில் நாம் அலசிப் பார்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளம். வெறும் 7000 ரூபாய் சம்பளத்திற்காக ஒரு லட்சத்திற்கும் மேல் ஏஜெண்டுகளுக்கு தாரை வார்த்து இந்தக் கொடுமையை அனுபவிக்க உங்களுக்கு என்ன விதி? புறப்படுவதற்கு முன்பே விசா, நிறுவனம், சொன்ன வேலைக்கான உறுதி இவைகளைப் பற்றி நன்கு விசாரிக்காமல் விமானத்தில் ஏற உங்களுக்கு என்ன அவசரம்? வீடு, குடும்பம், மனைவி, மக்கள் அனைத்தையும் விட்டு இங்கு வந்து கோடிகளா சம்பாதிக்கப் போகிறீர்கள்? அனல் கொதிக்கும் இந்த வெப்பத்தில் வேலை செய்து உடல் நலம் சீரழிவதை விட உள்ளூரில் இந்தப் பணத்தை உங்களால் ஈட்ட முடியாதா? இன்று நம் நாட்டில் ஒரு தொழிலாளியின் தினசரி ஊதியம் குறைந்த பட்சம் 300 ரூபாய். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நமக்கு உதவ இங்கு யாரும் இல்லை. சொந்த முயற்சி... கடின உழைப்பு.. கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டம் இவை இருந்தால் ஒழிய இங்கு தாக்குப் பிடிப்பது மிகக் கடினம். தகுந்த தகுதி, கூடிய அனுபவம், தன்னம்பிக்கை இவை இருந்தால் மட்டுமே வெளி நாட்டு வேலை எனும் ஆசையைக் கனவு காணுங்கள்... தயவு செய்து! 23
July 01, 2010 12:28
நன்றி நிச்சயமாக நரகத்தை கூடுதலான அரபிகள்தான் நிரப்புவார்கள்என்பதில் சந்தேகமில்லை
24
July 05, 2010 13:22
நிச்சயமாக நரகத்தை கூடுதலான அரபிகள்தான் நிரப்புவார்கள்என்பதில் சந்தேகமில்லை
சகோதரரே, நம்மை அறியாமல் கூட இறைவனின் அதிகாரத்தினுள் தலையிடாமல் இருப்போம். "நிச்சயமாக" நாளை நடப்பதை நாமறியோம் என்று கூறுவோம். 25
July 08, 2010 16:00
இக் கவிதையை எழுதிய பரிதவிக்கும் ஆத்மா யாரோ?
தொடர்புடையதாக இருந்த காரணத்தால் இங்கே பதிந்துள்ளேன். ====================================== திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்! ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்! ٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்! ٌ சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்! ٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்! ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது... பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் ! ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் ! ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய் கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்... அழுவதும்... அணைப்பதும்... கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்... இடைகிள்ளி... நகை சொல்லி... அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி " ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு... எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா! ٌ கணவா... - எல்லாமே கனவா.......? கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...? ٌ 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்.... 4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... 2 வருடமொருமுறை கணவன் ... நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்! ٌ இது வரமா ..? சாபமா..? அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ? ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா? நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய் நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய் திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் ٌ விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து... தேவை அறிந்து... சேவை புரிந்து... உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து... தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு... வாரவிடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி... ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும் ٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்.. பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா! ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா? எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ? இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ? ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ? பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா? ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம் அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை? பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே? ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு! வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்! உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..? ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு! விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ) 26
August 16, 2010 16:15
//திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... //
இந்தக் கவிதையை எழுதியவர் நெல்லையைச் சேர்ந்த ஞானியார் என்பவர். ரசிகோவ் ஞானியார் என்பது முழுப் பெயர். ரஷ்யப் பெயர் மாதிரி இருக்கும் ரசிகோவுக்கு என்ன பொருளோ எனக்குத் தெரியாது. நிலவு நண்பன் http://nilavunanban.blogspot.com/ என்பது அவரது வலைப்பூவின் பெயர். காப்பி + பேஸ்ட் மன்னர்களிடம் ஆண்டுக்கு ஒருமுறை இந்தக் கவிதை சிக்கும். சிலர் தாமே எழுதியதாகத் தம் வலைப்பூக்களில் பதிவர். எழுதியவரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் எழுதியவர் ஞானியார்தான். அன்புடன் குழுமத்தில் இந்தத் தகவல் உள்ளது: http://groups.google.com.pr/gr...5f5e9dae8f 27
August 16, 2010 18:02
கருத்து எழுதுக :
|