முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முகப்பு

கடன் இருக்கும் நிலையில் கடனை அடைக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல் ஒருவர் மரணித்தால், கடன் அடைக்கப்படும்வரை அவரது ஆன்மா அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் (திர்மிதீ); உயிர்த் தியாகிகளுக்குங்கூட கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்; ஆனால் கடன் மன்னிக்கப்படுவதில்லை (முஸ்லிம்) போன்ற அறிவிப்புகளின்படி, கடன் அடைக்கப்பட வேண்டும் என்பது சரியே! இது ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வோருக்கு மட்டும் உள்ள நிபந்தனையல்ல. எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான விதியாகும்.

 

கடன் உள்ளவருக்கு ஹஜ் கடமை இல்லை என்பதையும் தாண்டி, கடனே இல்லாவிட்டாலும், ஹஜ்ஜுக்குச் சென்று வரும் பொருளாதார வசதியில்லாதவருக்கும் ஹஜ் கடமை இல்லை. அதாவது, கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை என்பதற்கான கேள்விக்கு பொருளாதார வசதியற்றவர் உள்ளாக மாட்டார். ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம் அவரிடம் இல்லை; எனவே ஹஜ் செய்யவில்லை என்றாகிவிடும்.

ஒருவரின் ஹஜ் பயணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடனும் உள்ளது. இப்போது உடனடியாகக் கடனை அடைத்து, ஹஜ் பயணத்தைத் தவிர்ப்பது சிறந்ததாகும். மரணம் எப்பவும் சம்பவிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு கடன் அடைக்கப்பட வேண்டும்.

ஆனால், கடன் உள்ளவர் இஸ்லாம் அனுமதித்துள்ள வேறு வழியில் மக்கா செல்வதற்கான வசதியைப் பெற்றிருந்தால் அவருக்குக் கடன் உள்ளது என்று வைத்துக்கொண்டாலும் அவர் இப்போது ஹஜ் செய்வது கூடுமா கூடாதா என்றால், கடன் உள்ளவர் ஹஜ் செய்யலாம் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடாக உள்ளது. கஅபா அமைந்திருக்கும் நாட்டில் இருந்தாலும், அங்குப் பணியாற்றும் நிறுவனத்தில் ஹஜ்ஜுக்கு விடுப்புக் கிடைத்தாலும், சென்றுவர பொருளாதாரம் இருந்தாலும் கடனாளி ஹஜ் செய்தல் கூடாது என்பதற்கான தெளிவானத் தடையேதும் குர்ஆன், சுன்னாவிலிருந்து நம்மால் அறிய முடியவில்லை!

பயணத்தில் உண்பதும் உடுத்துவதும் ஹலாலாக இருக்கவேண்டும் என்று பொதுவாக இஸ்லாம் கூறுவதால், இதன் அடிப்படையில் ஹஜ் பயணத்திற்கான செலவுகள் ஹலாலாக இருக்கவேண்டும். கடன் வாங்குவது ஹராம் அல்ல! அதனால் கடன் உள்ளவர் மக்கா சென்றால் அவர் ஹஜ் செய்வதற்குக் கடன் இடையூறாக இருக்கும் என்பதற்குப் போதிய தெளிவுகள் இல்லை!

ஹஜ்ஜுடைய காலத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து பேரூந்து வாகனம் மூலமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் பயணிகளுடன் வரும் பேரூந்து வாகன ஓட்டிக்குக் கடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை அவர் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவரும் குறிப்பிட்ட எல்லையை அடைந்ததும் ஹஜ் பயணிகளுடன் தாமும் இஹ்ராம் அணிந்து "லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்" என்று தல்பியா முழங்கியபடி வாகனத்தைச் செலுத்தி மக்காவிற்குள் நுழைந்து தங்க வேண்டிய இடங்களில் தங்கி, செய்ய வேண்டிய ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் இவர் உழைப்பிற்கான ஊதியத்துடன் ஹஜ்ஜை நிறைவேற்றுகிறார். 2:198வது வசனத்தின் கருத்துப்படி ஹஜ்ஜின்போது நேர்மையான முறையில் அல்லாஹ்வின் அருளைத் தேடுவதில் அல்லாஹ் தடைவிதிக்கவில்லை!

அதுபோல், மற்ற நாடுகளிலிருந்து விமானம் மூலமாக வரும் ஹஜ் பயணிகளைக் கொண்டுவந்து ஜித்தாவில் சேர்க்கும் விமான ஓட்டி, அவரும் ஹஜ்ஜை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தேதியில் வந்து விமானம் புறப்படும் நாளில் வேலையை ஏற்றுக் கொள்கிறேன் என ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் அவருக்கு ஆகுமானதே!

ஹஜ் கடமை என்பது கிரியைகளைக் கொண்டு நிறைவேற்றப்படுவதாகும். "பூமியில் பரந்து சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்" என்கிற (62:10) வசனத்தினடிப்டையில் வேலைக்கென சவூதிக்கு வந்தவர் ஹஜ்ஜின் நாட்களில் மக்கா சென்று குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட கிரியைகளை நிறைவேற்றினால் அவருடைய ஹஜ் கடமையும் நிறைவேறிவிடும்.

கடன் உள்ள நிலையில் மரணித்தவருக்குக் கடன் மன்னிக்கப்படுவதில்லை. இது எல்லாருக்கும் உள்ள பொதுவானதாகும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியவருக்கும் இது பொருந்தும்!

கடனாளியாக இருந்து, அந்தக் கடனை அடைக்காமலும் வாய்ப்புக் கிடைத்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாமலும் மரணித்த ஒருவரையும் கடனிருந்தும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிவிட்டு மரணித்த ஒருவரையும் ஒப்பு நோக்கினால் இந்த உண்மை புரியும்.

oOo

ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ் வாய்ப்பை வழங்கும்போது, ஆதாரமில்லாத பொருந்தாக் காரணங்களை நாமாகக் கற்பித்துக் கொள்ளாமல், மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜை நிறைவேறுவதற்கு முனைப்புக் கொள்ளவேண்டும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஆர்வமூட்டும் சான்றுகளைக் காண்போம்:

அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதுதான். அது, பெரும் பேறு பெற்றதாகவும் உலகத்தாருக்கான நேர்வழி மையமாகவும் திகழ்கிறது.

அதில் தெளிவான சான்றுகளும் மக்காமு இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் பாதுகாப்புப் பெற்றவர் ஆவார். மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் மறுதலித்தாலும்
(அதனால் அல்லாஹ்வுக்கு இழப்பில்லை. ஏனெனில்) அல்லாஹ் அகிலத்தாரிடம் தேவையற்றவன் ஆவான் (அல்குர்ஆன் 3:96,97).

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" அறிவிப்பவர் இப்னு உமர்(ரலி) (நூல்கள்: புகாரி 8, முஸ்லிம் 20, திர்மிதீ, நஸயீ, அஹ்மத்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே ஹஜ் செய்யுங்கள்" என்றார்கள். அப்போது ஒரு மனிதர், "ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதேர?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் "ஆம்' என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடைமயாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்" என்று கூறிவிட்டு, "நான் (எதுவும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு எதை விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்தெதல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாக(த் தேவையற்ற) கேள்விகள் கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டைளயிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(முற்றாக) விட்டுவிடுங்கள்!" என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 7288, முஸ்லிம் 2599, நஸயீ).

தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற கடமையான அமல்களை அறிவித்திடும் குர்ஆன் வசனங்களைப் போன்று, மேற்காணும் இறைவசனங்களும் நபிவழி அறிவிப்புகளும் ஹஜ் செய்வது முஸ்லிம்கள் மீது கடமையாகும் என வலியுறுத்துகின்றன.

கடமையான
மற்ற அமல்களை நாம் வாழுமிடங்களில் இருந்தே நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால், ஹஜ்ஜுக் கடமையை, மனிதர்களுக்கென முதல் முதலாக அமைக்கப்பட்ட இறை ஆலயம் என அல்லாஹ் அறிவித்திருக்கும் மக்காவில் அமையப்பெற்ற கஅபத்துல்லாஹ்வைச் சென்றடைந்து அதைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட சில இடங்களில் தங்கியிருந்து ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிட வேண்டும்.

ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்) (அல்குர்ஆன் 22:27).

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் மூலமாகவே அல்லாஹ் ஹஜ்ஜின் அறிவிப்பை ஏற்பாடு செய்துள்ளான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்குகிறோம். ஹஜ்ஜுக்கான அறிவிப்பைக் கேட்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக அருகிலிருப்போர் நடந்தும், தூரத்திலிருப்போர் வாகனங்களில் பயணித்தும் கஅபத்துல்லாஹ்வை வந்தடைவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ்ஜுச் செய்வது கடமையாகும் (அல்குர்ஆன் 3:97).

ஒரு முஸ்லிம் இன்று உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர் மக்காவுக்குச் சென்று வர சக்தி பெற்றிருந்தால் அங்குச் சென்று ஹஜ் செய்வது அவருக்குக் கடமையாகும். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள 'சக்தி' என்பது ஹஜ் கிரியைகளுக்காகத் தொலை தூரம் செல்வதால் சென்று திரும்பும் நாட்களுக்கான பொருளாதாரமும் உடல் ஆரோக்கியமும் முக்கியத் தேவைகளாகும்.

அடுத்து, தொலை தூரம் சென்று வர வாகனம் அவசியம். 'சக்தி' என்பதில் வாகன அவசியமும் உள்ளடங்கும். ஆகவே, ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி பெற்றோர் என்பதில் பொருளாதாரம், உடல் ஆரோக்கியம், மற்றும் வாகன வசதியும் வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், "நீ எங்களுடன் ஹஜ்ஜுச் செய்வதைத் தடுத்தது எது?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "எங்களிடம் நீர் இறைப்பதற்கான இரண்டு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் ஏறி ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர். மற்றோர் ஒட்டகத்தை எங்களுக்காக விட்டுச் சென்றனர். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ரமளான் மாதம் வந்துவிட்டால் அப்போது நீ உம்ராச் செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ராச் செய்வது ஹஜ்ஜுக்கு நிகரான(
பலனுடைய)தாகும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள்: புகாரி 1863, மேற்கண்ட அறிவிப்பு முஸ்லிம் 2408, 2409)

இதன் அறிவிப்பாளர் அதாவு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்: "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். ஆனால், அதை நான் மறந்துவிட்டேன்". (அப்பெண்ணின் பெயர் 'உம்மு ஸினான்' என்பதாகும்).


ஹஜ்ஜுக்குச் சென்று வர வாகனத் தேவையுள்ளது. இது அந்தந்தக் காலத்திற்கேற்ப வாகனங்கள் மாறிக்கொள்ளும். சென்று வரும் சக்தியை முன்னேற்பாடு செய்துகொள்ள வேண்டும். என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜைத் தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு, கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் நன்மை மிக்கது, தக்வா(என்னும் இறையச்சமே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள் (அல்குர்ஆன் 2:197).

ஹஜ்ஜுக்குத் தேவையான பொருள்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்பதில் உணவும், வாகன வசதியும் அடங்கிவிடும்.

யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள். மேலும், 'நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்' என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ், "(ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா (என்னும் இறையச்சமே) ஆகும்" என்ற வசனத்தை இறக்கினான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி 1523).

2:197வது வசனம் அருளப்பட்ட பின்னணி, தொலைவிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்வோர் தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டு செல்லாமல் மக்கா சென்று தமது தேவையை யாசித்துப் பெற்றுள்ளனர். இவ்வாறு செய்யாமல் உங்களுக்கான பொருட்களை முன்னேற்பாடாக சேகரித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. இதனால் யாசிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லலாமே தவிர, வயிற்றுப் பசிக்குக்கூட யாசிப்பது கூடவே கூடாது என்று தடைவிதிப்பதாக ஆகாது. "குர்பானி இறைச்சியை ஏழைகளுக்கும், யாசிக்காதோருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்" என்று 22:28, 36 ஆகிய வசனங்கள் கூறுகின்றன!.

சக்தி பெறுதலைத் தாமாக முயற்சி செய்து சக்தி பெறுதல் என்றும் எதிர்பாராமல் வேறு வகையில் மக்கா சென்று விடுவது என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். நாம் கவனிக்கத் தக்கது அவை ஹலாலான வழியில் உள்ளதா என்பதை மட்டுமே.

எனவே, ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஹலாலான வழியில் சக்தி வழங்கப்பட்டவர்கள், கடன் என்ற காரணத்துக்காக அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை.

(இறைவன் மிக்க அறிந்தவன்).

Comments   

haneefm
0 #1 haneefm 2011-12-16 22:08
யாஅல்லாஹ் நாங்கள் [ நான்]உயிருடன் இருக்கும் காலம் போது வாங்கியா கடனை அடைக்காமல் [என்னை]எங்களை மரணிக்கசெய்துவி டதே இன்னும் எங்களை ஒரு முரையாவது ஹஜ் செய்யும் பாக்கியத்தை தந்து அருள்புரிவயாக!! !!
Quote | Report to administrator
Omer
0 #2 Omer 2011-12-17 17:42
aameen . yaa rabbal aalameen.
Quote | Report to administrator
haja
0 #3 haja 2011-12-20 06:27
Ameen. assalamu alaikum

Dear Brothers,

I would like to ask you one doubt that i have housing loan and pay to bank EMI everymonth for 10years. I would like to send my monther to Haj.Can i send her to Haj or i need to wait until my loan fully settled? Pls clarify my doubt. May allah give all of us peace and good health.
Quote | Report to administrator
rahamath
0 #4 rahamath 2011-12-20 07:57
nall thagaval
Quote | Report to administrator
Sabeena
0 #5 Sabeena 2013-09-21 21:47
சிறப்பான பதிவு. ஜசாக்கல்லா கைர்.

ஷம்சுதீன் காசிமி அவர்களின் தொடர்புடைய ஒரு வீடியோவை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

www.youtube.com/.../
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh


Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்

செய்திமடல் (Newsletter)

 

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!