முகப்பு

உன்னப்பனின் விண்ணப்பம்!

வா போவோம்
வழி நெடுகப் பேசிக்கொண்டே...

நீ பிறக்க-
நீண்ட
நெடுநாள் காத்திருந்தோம்,
நீயோ..
காத்திருப்புகளுக்கான
மொத்த அர்த்தம்,

மொத்தக் கனவுகளின்
ஒற்றைப் பலன்!

யாமும் ஏனையோரும்
நின்னைப் பார்த்திருக்க-
நீயோ...
உன்றன் முதல் விழிப்பில்- உன்
அன்னை பார்த்தாய்-பின்
என்னைப் பார்த்தாய்
புன்னகையோடு உறங்கிப்போனாய்.

பிஞ்சுப் பாதங்கள்
நெஞ்சு உதைக்க
ரெட்டை ஸ்டெத்தெஸ்கோப்
தொட்ட கனத்தில்...
சீரானது என்
சுவாசம்!

ஒற்றை நிழலோடு
ஊரில்
உலா வந்த எனக்கு...
குட்டி நிஜமாய்
நீ
கூட வந்தாய்!

கக்கத்திலும் காலரிலும்
கைப்பட்டியிலும்
அத்தர் மணக்க...
என் -
இடக் கை விரல் பிடித்து
நீயும்
வலக் கை தாங்கி
உன் தாத்தாவும் என -
பெருநாள் தொழுகைக்கு
பள்ளி சென்ற பொழுது
நினைவிருக்கா உனக்கு...?

நீ
கார் பொம்மை கேட்டாய்-
நானுனக்கு
கார்களின் காட்சியகம்
வைத்துத் தந்தேன்.
நீயோ...
ஒரே நாளில்
உடைத்துப் போட்டு
பணிமனை யாக்கினாய்!

நீ எழுதிய
முதல் எழுத்து
வெளவாலாய்த் தொங்கினாலும்-
அது என்
ஆத்ம உயிர்ப்பின் உயில்!

நீ உண்ட மிச்சம்
எனக்கெனவும்...
உன் உறக்கத்தின் நடுவே
என் ஓய்வு எனவும்...
உன்
மனம் மகிழ்விப்பதுவே
என் கொள்கை யெனவும்...
நீ
வளர்கிறாய் மகனே!

வளர்ந்தொருநாள்
வாலிபம் வந்து
இளைஞனாவாய்...

இளமை...
இனிய பருவத்தின்
இயற்கையான முறுக்கும்
இயல்பான எழிலும் என
இன்புற்றுத் திரிவாய்...

இருப்பதெல்லாம்
இஷ்டப் படுவாய்
இல்லாததற்கும்
இச்சை கொள்வாய்...

இஸ்லாத்தின்
இனிய வழியில்
இல்லத்தரசி பெறுவாய்...

இல்லாதோருக்கு ஈவாய்
இன்னல் எனில் உதவுவாய்
இங்கொன்றும் அங்கொன்றுமென
இருண்டவெளியும் கடப்பாய்...

இத்துணைச் சிறப்போடும்
இன்னபிற எழிலோடும் நீ
இருக்கும்
இந்நிலையில்...

முதுமை எய்தி...
முழங்கால் வலியோ
மூட்டு வலியோ
மூச்சிறைப்போ
மூத்திர அடைப்போவென
முடியாமல் போய்...

முதுகில் கூனுமாய்
முகம் சுருங்கி-
முன்னுச்சி முதல்
முடி முழுதும்
முல்லையென வெளுத்தும்-

மூலமோ
முடக்கு வாதமோ தாக்கி...
முற்றத்திலோ
மூலையிலோ நான்
முடங்கிப்போனால்...

முச்சந்தியில் விடாமல்
மூன்று வேளையல்ல
முடிந்தால்
முழுப் பசிக்குமாக
மூன்று கவளம் உணவு போதும்
முடிவாக -கண்
மூடி -மண்
மூடும்வரை தரவேண்டும் என் மகனே!

 

- சபீர்

Comments:

கருத்துக்கள்   

 
O J DEEN
0 #1 O J DEEN 2011-12-11 05:54
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்..

அல்லாஹ்வின் சாந்தியும்,
சமாதானமும்
நம் மீதும்
நம் குடும்பத்தார்கள
மீதும் உண்டாவதாக...

உங்களுக்கும் எங்களுக்கும்
அல்லாஹ் நேர்வழியை என்றென்றும்
காட்டி அதில் நாம் நிலைத்திருக்க
அவனிடத்தில் மட்டுமே
துஆ செய்து கொள்வோம் !!!
Quote | Report to administrator
 
 
Bilal
0 #2 Bilal 2011-12-11 06:10
Masha Allah. Very good n meaningful. Keep up ur good language skills.
Quote | Report to administrator
 
 
MOHAMED THAMEEM
0 #3 MOHAMED THAMEEM 2011-12-11 09:57
என் மகனே! என் அன்பின் அடையாளத்தை

உன்னில் காணவும், என்னை உன் பிள்ளையாய்

நினைத்து என்னில் உன்னைக் காணவும்



நினைவுகள் தடுமாறி, நிலை குலைந்து நிற்கையில்

நிதானம் தவறாது, நிந்தனை செய்யாது

நில மகளாய் பொறுத்து நல்ல மகனாய் நின்றுவிடு



நான் பெற்ற கடுங்கன் நான் ஈன்ற உனக்கும் வரும்
நான் கொண்ட நினைவெல்லாம் நீ கொள்ளும்

சமயம் வரும், நீ ஏற்ற பொறுப்பெல்லாம் உன்



மகனும் பெற்றிடுவான். வாழையடி வாழையும்

முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பதும்

கிட்டத்தட்ட ஒன்றுதானோ



என் உயிர் நின்றாலும், எனக்கான உன் இறைஞ்சுதல்

நிற்காது, இறைவா நான் பெற்ற நல வழியில்

என் மகனும் நிலைத்திடவே நல்லுதவி செய்வாயே.
Quote | Report to administrator
 
 
அபுஇபுறாஹிம்
0 #4 அபுஇபுறாஹிம் 2011-12-11 13:42
கவிக் காக்கா: உருக வைத்து விட்டீர்கள் !

விழிகளின் ஓரத்தில் அல்ல விழியே குளமக நிரம்பி வழிந்தோட வைத்த ஒவ்வொரு வரிகளுக்கும் என்னால் அணைகள் கட்டி வைத்திட முடியவில்லை !

வரிகளை வாசிக்கும் போது வந்து விழுந்த விழி நிரில் கரை ஒதுங்கி நிற்கின்றேன் விட்டுப் பிரிந்த என் வாப்பாவின் நினைவுகளோடு !

//பிஞ்சுப் பாதங்கள்
நெஞ்சு உதைக்க
ரெட்டை ஸ்டெத்தெஸ்கோப்
தொட்ட கனத்தில்...
சீரானது என்
சுவாசம்!

என் சுவாசம் முட்டுகிறது !
Quote | Report to administrator
 
 
H.சிக்கந்தர் பாஷா
0 #5 H.சிக்கந்தர் பாஷா 2011-12-12 18:51
அஸ்ஸலாமு அலைக்கும்...அல்ஹம்துலில்லாஹ்

சகோ.சபீர் அவர்களின் கவிதை உண்மையின் உரைகல்லாய் காண்கிறேன்.

கருவறை எதிர்பார்ப்பே !
எந்தன் கல்லறைக்கு
நான் செல்லும் முன்னே
நீ கட்டிவிடாதே ?
என் முதுமையில் என்னுள்
அரவனைப்பு அற்ற அறிவிலியாய் ஆகிடாதே !
இறை கோபத்திற்கு ஆளாகிடாதே !!
- H.சிக்கந்தர் பாஷா
Quote | Report to administrator
 
 
ஒ.நூருல் அமீன்
0 #6 ஒ.நூருல் அமீன் 2011-12-13 14:10
இளமை வரிகள் "இ"யிலும் முதுமை வரிகள் "மு"விலும் எழுதிய technical craftsmanship நன்றாக உள்ளது.
Quote | Report to administrator
 
 
Sabeer abuShahruk
0 #7 Sabeer abuShahruk 2011-12-13 18:50
இந்த உணர்வுகள் எல்லாத் தந்தையரும் தமக்குள் பொத்தி வைத்திருப்பதுதா ன் எனும் உண்மையை, பரவலாக இந்த விண்ணப்பத்திற்க ுக் கிடைத்த வரவேற்பிலிருந்த ு அறிய முடிந்தது.

வழி நெடுக வந்து வாசிப்பில் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு மிக்க நன்றி!
Quote | Report to administrator
 
 
sefiya
0 #8 sefiya 2012-08-09 11:28
nan en thanthaiyin manasu nogamal parthukonden, insha allah en maganum ennai kavinithukolla allah tthoufeeq nalguvan agattum,ameen ayinum eno kangalil neerthuligal vara vaitha varigal. arumaiyan padaippu.
Quote | Report to administrator
 

ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலும். வாருங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


செய்திமடல் (Newsletter)

 

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!

சமீப கருத்துக்கள்