கரு வறை தொடங்கி
கல் லறை அடங்கி
முடி வுறும் நாள்வரை...
இறைவனைத் தொழு!
எத்தனை அழகு
என்னென்ன நிகழ்வு
எல்லாம் உனக்களித்த
ஏகனைத் தொழு!
காணவும் களிக்கவும்
கண்களால் ரசிக்கவும்
பார்வையைத் தந்தவனை
நேர்மையாய்த் தொழு!
கேட்கவும் கிறங்கவும்
கேட்டதை உணரவும்
ஒலி புரியச் செவி தந்த
வலியோனைத் தொழு!
சாப்பிடவும் கூப்பிடவும்
சண்டையின்றிப் பேசிடவும்
நாவும் நல் வாயும் தந்த
நாயன் தனைத் தொழு!
சுவாசிக்கும் நாசியாகவும்
முகர்ந்தறிய மூக்காகவும்
அமைத்தொரு புலன் தந்த
ஆண்டவனைத் தொழு!
கையும் காலும்
கச்சித உடலும்
வாகாய்த் தந்த
வல்லோனைத் தொழு!
முடிந்த இரவை முழுமையாக்கி
விடியும் முன்பு தொழு...
புதிய பூவாய்ப் பூரிப்போடு
மதிய நேரம் தொழு...
மாலை மகுடம் காத்திருக்கு
மாலை வேளை தொழு...
மாலை மயங்கி இரவு தொடும்
வேளையிலும் தொழு...
இன்று நன்றாய் முற்றுப்பெற
இரவு நேரம் தொழு!
காலநேரம் கடக்குமுன்
கவனமாகத் தொழு!
கடமையுணர்ந்து தொழு!
கண்மணி நபி
கற்பித்தவாறு
கவனமுடன் தொழு!
உறுதியாகத் தொழு
உபரியையும் தொழு!
அறுதியாய்ச் சுவனம்
அடைந்திடத் தொழு
உன்
உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ...
தொழு!
- சபீர்
Comments:
கருத்துக்கள்
//உன்
உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ...
தொழு!//
கவியின் கருவே இந்த கடைசி வரிகள் இதனை ஒவ்வொருவரும் தன்நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்..
அழகுற அறிவுறுத்தப்பட கவிதை...
உங்கள் இணையத்தளம் பகிர்ந்து கொள்ளும் அனைத்து விடையங்களும் மிகவும் பயனாகவும்
சிறப்பாகவும் இருப்பதுடன் அறிவை விருத்தி செய்வதாகவும் அமையப் பெற்றுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்
உங்கள் பணி மென்மேலும் வளர அல்லாஹ் அருளல் புரிவானாக
ஆமின்
எதிர் வரும் புனித ரமலானை முன்னிட்டு உங்கள் இணையத்தளத்தில் தப்சீர் இப்னு கசீர் தமிழில் இடப்பட்டால் மிகவுமே பயனாக இருக்கும்
நன்றி சமாவின் வாசகர்களே!
அல்ஹம்துலில்லாஹ்!
இந்த கவிதை நன்றாக இருக்கின்றது ஆனால் இதில் சிறு மாற்றம் தேவை படுகிறது.
கரு வறை தொடங்கி என்பதற்கு பதிலாக 10 வயது தொடங்கி என்று இருந்தால் நன்றாக
இருக்கும்
உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்) அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு.
நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்
RSS feed for comments to this post