| IPL பரிதாபம் |
|
|
| வாசகர் பகுதி - வாசகர் மடல் | |||
| வெள்ளி, 23 ஏப்ரல் 2010 19:23 | |||
|
பன்னிரண்டாவது படித்துக்கொண்டிருந்த சீனியர்களிடம் வேகமாக ஒரு வியாதி பரவிக்கொண்டிருந்தது. தீப்பெட்டியைவிடச் சற்றுப் பெரிய சைசில், ஒரு நீள் சதுரப் பெட்டியைக் காதில் வைத்துக் கொண்டு, வகுப்பு வராந்தாவில் சதா சுற்றிக் கொண்டிருப்பர்கள். திடீரென்று, தனது பின்புறத்தில் யாரோ தீக்கொள்ளி எடுத்துச் சுட்டுவிட்டது போல, ஒரு கையை வானத்திற்க்கு உயர்த்தி, எம்பிக் குதித்து 'ஹோ' என்று கோரஸாகக் கத்துவார்கள். பக்கத்தில் அப்பவியாக யாராவது சென்று கொண்டிருந்தால் அடுத்தநாள் அவருக்கு வேப்பிலை அடிக்க வேண்டும். அந்த அப்பாவிகள் அப்படி பயந்து விடுவார்கள். என்ன என்று கொஞ்சம் விஷயஞானியிடம் கேட்டால் "காவஸ்கர் சிக்ஸர் அடிச்சிருக்கான்..." என்று பதில் வரும். அப்படித்தான் கிரிக்கெட் நமது பக்கத்தில் பரிச்சயமானது. பரவலாக டிவி இல்லாததாலும், இருந்த ஒன்றிரண்டு டிவிக்களுக்குப் போதுமான சேனல்கள் இல்லாததாலும், ஒரு National Panasonic Two-in-One (Cassette Player with Radio Reciever) க்கு முன்னால் வட்டமாகச் சுற்றியிருந்து பயபக்தியோடு கேட்டுக் கொண்டிருப்பார்கள். நடுநடுவில் குய்யோ குய்யோ என்று சத்தமெல்லம் கேட்கும். இங்கிலாந்திலோ, தென்னாப்பிரிக்காவிலோ 5 நாட்கள் டெஸ்ட் மாட்ச் நடக்கும்போது, இங்கு நடுஇரவு விழித்திருந்து முறைவைத்து, ஒருவர் தூங்கும்போது மற்றவர் எழுந்து கேட்பாராம். கண்டினியூட்டி விட்டுப்போகக் கூடாதல்லவா... கிரிக்கெட்டால், ஒரு கூட்டத்தை இப்படி வசியம் செய்ய முடியும் என்று, 13ம் நூற்றாண்டில் முதலில் கிரிக்கெட் விளையாடிய ஆடு மேய்க்கும் சிறுவர்கள் நினைத்திருப்பர்களா என்ன?. டி.வி வந்தபிறகு கேட்கவா வேண்டும்? பெரும்பாலானவர்களுக்கு கிரிக்கெட்டே வழ்க்கையாகிப்போனது. கட்டிலிலேயே ஊண், உணவு, மற்றும் 'சகலமும்' முடித்து விட்டு அங்கேயே படுத்துத் தூங்கும் 90 வயது பெரிசுகள் மாதிரி, டி,விக்கு முன்னலேயே ஒரு கூட்டம் நாள்முழுதும் தவம் கிடந்தது. கிரிகெட் அல்லது அது சார்ந்த புள்ளிவிவரங்களை விரல் நுனியென்ன, தலைமயிர் நுனியிலெயே முடிந்து வைத்திருந்தார்கள். இந்தக்கால விக்கிபீடியா இவர்களிடம் பிச்சையெடுக்க வேண்டும். அப்படி கன கச்சிதமான விவரங்கள். ஸ்கொயர் கட், லோகட், மிட்டன், எல்பிடபுளூ, பிட்ச், விக்கட் இப்படி இன்றைக்குக்கூட புரியாத வார்த்தைகள் ஒன்னாப்பு படிக்கும் குழந்தையின் வாயில் சர்வ சாதரணமாக வந்து சென்றது. வாயில் நுழையாத ஆங்கில வீரர்கள் பெயெர்களையெல்லாம் உச்சரித்துக் கிளுகிளுப்படைந்தார்கள். சில தாய்மார்கள், "என் பிள்ளை இரவும் பகலும் கிரிக்கெட் பார்ர்கிறானாக்கும்" என்று பெருமையாக பக்கத்து வீட்டுப் பெண்களை வெறுப்பேற்றினார்கள். பெரிசுகள், "என்னடே, எவண்டே ஜெய்க்கான் இப்போ" என்று போகிற போக்கில் கேட்டுவிட்டு வேகமாக நடந்தார்கள். சில இடங்களில் கிரிக்கெட் மாட்ச் பார்ப்பதற்குப் பள்ளிகளுக்கு லீவுகூட விட்டர்கள். கபடி, குட்டிக்கம்பு, செவெண்டீன், கிளியந்தட்டு, ஒளிச்சு விளையாடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் கிரிக்கெட்டின் முன்னால் வெட்கப்பட்டு அன்று மலையேறிப் போனதுதான். இனி எக்காலமும் திரும்பி வரப்போவதில்லை. கிரிக்கெட் வீரர்கள் நடக்கும் திசையை நோக்கிக் கும்பிடாத இந்திய வாலிபன், அமெரிக்கக் கனவு காணாத சாப்ட்வேர் இன்சினியர் எண்ணிக்கயில்தான் இருப்பான். கிரிக்கெட் தெரியாத அல்லது ஆர்வமில்லாத மனுசப்பயல்களை, "அடப் பதரே..." என்கிறமாதிரி பார்த்தார்கள். மலையாள எழுத்தாளர், பால் சக்கரிய்யா ஒரு பேட்டியில், "கிரிக்கெட்டின் வெற்றி/தோல்வியில்தான் ஒரு இந்தியனின் நாட்டுப்பற்றைத் தேடவேண்டி இருக்கிறது" என்று நக்கலாகச் சொன்னார். இப்படிப்பட்ட "யோக்கியவான்களின் விளையாட்டு(Gentlemen's game)"க்குப் பின்னால் நடக்கும் அயோக்கியத்தனங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும்போது, பாவம், ஒரு காலத்தில் தன் உடல் பொருள் ஆவி அனைத்திலும் ஒரு கணிசமான வீதத்தை கிரிகெட்டிற்குக் கொடுத்துக் கொண்டிருந்த அப்பாவிகளை நினைத்தால்தான் சிரிப்பாக இருக்கிறது. தன்அணி ஜெயித்து விட்டால் தரையில் உருண்டு, புரண்டு, கைகொட்டி, கண்களில் கண்ணீர்வர வெற்றிக்களியாட்டம் போட்டவரின் நிலைமை, அந்த வெற்றி சில மாஃபியாக்களால், ஏற்கனவே match fixing மூலம் தீர்மானிக்கப்பட்ட வெற்றி என்று தெரியவந்த பிறகு சிரிப்பாணி வராதா என்ன?.... "கிரிகெட் என்பது 22 மடையர்கள் விளையாட 22,000 மடையர்கள் ரசிக்கும் ஒரு விளையாட்டு ( Cricket is a game played by 22 fools and followed by 22,000 fools)" என்றார் பெர்னார்ட் ஷா. அவரைப் பேரறிஞர் பெர்னார்ட் ஷா என்றும் எல்லாரும் சொல்கிறார்கள் ... மாஃபியாக்களால் தாங்கள் மாங்கா ம(ண்)டையர்களாக ஆக்கப்பட்டுக் கொண்டிருப்பதை சீஸனுக்கு சீஸன் அதிகரித்துக் கொண்டிருக்கும் கிரிகெட் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் நம்பிவிடப் போகிறார்களா என்ன? - ஆக்கம் சகோ. அபூபிலால் [ எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் ]
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (5)
![]()
பேரறிஞர் பெர்னார்ட் ஷா சொல்கிறார்கள் ...
கிரிகெட் என்பது 22 மடையர்கள் விளையாட 22,000 மடையர்கள் ரசிக்கும் ஒரு விளையாட்டு ( Cricket is a game played by 22 fools and followed by 22,000 fools)" this is true Thank's Ali Akbar 1
April 24, 2010 09:22
அன்புச் சகோதரர் அபூபிலால்,
நானும் இந்த மேட்டுக்குடி கிரிக்கெட்டு மேன்மக்களைப் பற்றி ஏதாவது எழுதலாம் என்று ரொம்ப நாளா யோசித்துக் கொண்டிருந்தேன். வேற்று கிரகத்திலிருந்து வந்த ஒரு ஜந்து மாதிரி பார்க்கப் படுவோமேன்னு சும்மா இருந்துட்டேன். உங்க துணிச்சலுக்கும் அதை வெளிப்படுத்திய இந்தத் தளத்திர்னருக்கும் பாராட்டுகள்! 2
April 24, 2010 13:02
//மாஃபியாக்களால் தாங்கள் மாங்கா ம(ண்)டையர்களாக ஆக்கப்பட்டுக் கொண்டிருப்பதை சீஸனுக்கு சீஸன் அதிகரித்துக் கொண்டிருக்கும் கிரிகெட் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் நம்பிவிடப் போகிறார்களா என்ன?//
நச்! சகோதரர் அபூ பிலால், அழகான எழுத்து நடை; சொல்லும் விதம் அருமை! தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். - அல் அமீன் 3
April 26, 2010 00:38
ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலும் சரி பாகிஸ்தானிலும் சரி. கிரிக்கெட் போட்டி என்ற பெயரால் மக்களை முட்டாளுக்கும் திருவிழா நடந்து வருகிறது. 11 முட்டாள்கள் விளையாடும் விளையாட்டை 11000 முட்டாள்கள் ரசிக்கிறார்கள் என்று பெர்னாட்ஷா சொன்னார்.
கிரிக்கெட்டின் பெயரால் இந்திய மக்களின் உழைக்கும் நேரமும் கோடிக்கணக்கான ரூபாய் பணமும்தான் வீணடிக்கப் படுகிறது. இதை விட கேவலம் கிரிக்கெட்டின் மீதான அபிமானத்தை வைத்து தேசபக்தி அளவிடப் பட்ட காலமும் உண்டு. பண்டைய ரோம மன்னர்கள் இளைஞர்களால் மகுடத்திற்கு பாதகம் வந்து விடக் கூடாது என்ற சூழ்ச்சியில் ஒலிம்பிக் விளையாட்டிற்க்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் இளைஞர்களை கவனம் செலுத்த வைத்தார்கள். அதேமாதிரி? சூழ்ச்சிதான் கிரிக்கெட் மீதான பைத்தியமாக்கும் போட்டிகளும் என்பதை அறிந்தவர்கள் எத்தனை பேர்? கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை நினைவில் வைத்திருக்கும் பைத்தியங்களிடம் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயர் வேண்டாம், தற்போது நடந்த கார்கில் யுத்த தியாகிகள் சிலர் பெயராவது கேட்டால், டக் அவுட் ஆன கங்குளி முழி முழிப்பார்கள். சாதாரண குளிர்பானம் கூட நல்லது என்று சொல்ல டெண்டுல்கர் தேவை படுகிறார். அவர் ஸ்பான்சர் அல்லாத மற்ற குளிர்பாணத்தை அவ்வாறு சொல்லி விடுவாரா? அதற்காக அவருக்கு ஸ்பான்சர் கொடுக்கும் தொகையை நுகர்வோர் தலையில் கட்டுவதை அறியாமலா இருக்கிறோம்? சாதாரண பொருளை பிரபலமானவர்களால் விளம்பரப் படுத்துவதன் மூலம் அதற்க்கு கிரிக்கெட் ரசிகனல்லாத சாமானியனும் அதிக விலை கொடுக்க நிர்ப்பந்திக்கப் படுகிறான். இத்தகைய கிரிக்கெட் விளையாட்டால் என்ன பயன்? கேட்டால் நாடுகளுக்கிடையே நட்புறவு வளரும் என்று ஒன்றுக்கும் உதவாத சப்பை கட்டு கட்டுவார்கள். அப்படி என்றால் இந்தியாவும் பாகிஸ்தானும் நல்ல நட்பு நாடுகளாக அல்லவா இருக்க வேண்டும்? ஆறு மாதத்திற்கு இந்தியா, பாகிஸ்தான் எல்லை தாண்டும் தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லி படைகளை எல்லையில் குவிக்கும். அடுத்த ஆறு மாததிற்க்கு பிறகு அவற்றை குறைத்துக் கொண்டு இரு நாட்டிற்க்குமிடையே பஸ் விடுகிறோம் ரயில் விடுகிறோம் மற்றும் ஒண்டே மேட்ச் வைக்கிறோம் என்று முட்டாளாக்குவார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 10 லட்சம் கிரிக்கெட் பைத்தியங்கள் இருக்கும். அவர்களுக்கு கொஞ்சம் உற்சாகப் படுத்த இந்த முறை சென்னையில் நடக்க இருந்த ஒருநாள் போட்டியை "ஜக்மோகன் டால்மியா" ரத்து செய்துவிட்டு வேறு மாநிலத்திற்கு அந்த வாய்ப்பை கொடுத்து விட்டாராம். காரணம் அவர்மீது தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கு. என்ன விளையாடுறீங்களா? Posted by அதிரைக்காரன் Saturday, April 09, 2005 at 2:57 AM http://vettippechu.blogspot.com/2005/04/blog-post_09.html 4
April 26, 2010 10:36
"தமிழ்நாட்டில் மட்டும் 10 லட்சம் கிரிக்கெட் பைத்தியங்கள் இருக்கும்.:.
மிகவும் சரி. சில இஸ்லாமிய சகோதரர்கள் கூட இதை வைத்து பெட் கட்டுகிறார்கள் என்பது மிகவும் வருத்த்திற்க்குரிய விஷயம். கடலை மிட்டாயில் ஆரம்பித்து, ஆயிரம், பத்தாயிரம் என்று பெட் கட்டி, கடைசியில் அதை வைத்து நாங்கள் சுற்றுலா செல்வோம், ட்ரீட் வைப்போம் என்று சொல்லி சமாளிக்கிறார்கள். இது நம்மில் பலருக்கு சூது போல் தெரியவில்லை. 10 வருடங்களுக்கு முன்பு என்னுடைய பேமிலி நண்பர் ஒருவர் கூறினார், அவருடைய மகன் ஒரு தனியார் கம்பெனியில் Sales Representative வேளை செய்கிறார். அவர் மிகவும் கடுமையாக உழைக்கக்கூடியவர்.அதன் காரணமாக அவரால் கிரிக்கெட் பார்க்க முடிவதில்லை. ஆதலால் அவர் கிரிக்கெட் Highlights ஒளிபரப்பும் நேரத்தை அறிந்து (பெரும்பாலும் நள்ளிரவில்) அதற்க்காக அலாரம் வைத்து, பார்த்து ரசித்து இருக்கிறார். அதன் பிறகு வெகு விரைவிலே எல்லாம் match fixing என்று தெரிந்தவுடன் மிகவும் நொந்துவிட்டார். இதனால் (match fixing) இவர்கள் கிரிக்கெட் பார்க்கும் எல்லோரையும் வடிகட்டிய முட்டாள்களாக்குகிறார்கள். சாதாரணமாக ஒருவனை ஏமாற்றி விட்டால் அவனுக்கு திட்ட வேண்டும் என்றாவது குறந்தபட்சம் அவனது வீரம் சொல்லும், ஏமாற்றியவனை நாம் பார்க்கக் கூடாது. அவனுடன் பேசக் கூடாது என்று நினைக்கும். அந்த வீரம், ரோசம் கூட மக்க்ளிடம் இல்லாது போனது கிரிக்கெட்டின் உச்ச்க்கட்ட வெற்றி. மனிதனின் உச்சக்கெட்ட தோல்வி. 5
May 01, 2010 12:55
கருத்து எழுதுக :
|