| நீதிபதிகளுக்கு ஜீரணம் ஆகிவிட்டது! |
|
|
| ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம் | |||||
| சனி, 27 மார்ச் 2010 11:36 | |||||
|
இது நடிகை குஷ்புவுக்கான வெட்டி விளம்பரமல்ல. இருமாதங்களுக்கு முன்னர் எந்த நீதிபதிகளால் "ஜீரணிக்க முடியாதவை" என்று உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்டதோ அதே நீதிபதிகளுக்குக் குஷ்புவின் கருத்துகள் இப்போது ஜீரணம் ஆகிவிட்ட விந்தையின் வேரைத் தேடிப் பார்க்கும் முயற்சி மட்டுமே! -o- இந்தியா டுடே இதழ் 28.09.2005 தமிழ்ப் பதிப்பின் 23ஆம் பக்கத்தில், 'எயிட்ஸ் விழிப்புணர்வு' பற்றி அதன் நிருபர் பீர் முஹம்மது என்பவரிடம் நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துகள் தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பின. அவற்றுள்,
ஆகிய இரு கருத்துகளும் தலையாயன. அவையிரண்டும்போக, "நம் பிள்ளைகளுக்குப் பாலியல் கல்வியைப் பள்ளியில் கற்றுக் கொடுக்க வேண்டும். பள்ளிகள் பயிற்றுவிக்கத் தவறினால் பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும்" என்றும் சொல்லி வைத்தார். அத்துடன் தற்போதைய கணவரோடு திருமணத்துக்கு முன்னரே சேர்ந்து வாழ்ந்ததாகக் கூற மறக்காதவர், அவரின் இரு பிள்ளைகளுக்கும் பாலியல் கல்வி பயிற்றுவிக்கப் பட்ட விபரம் எதையும் பேட்டியின்போது கூறவில்லை. நோயையே 'மருந்து' எனக்கூறி விளம்பரம் செய்து வயிறு வளர்ப்பவர்கள், எயிட்ஸ் விழிப்புணர்வு பற்றிக் கருத்துக் கேட்க குஷ்புவைத் தேர்ந்தெடுத்தது வியப்புக்குரியதன்று. தன்னைப் போலவே தமிழகப் பெண்கள் அனைவரும் 'முன்னேற' வேண்டும் என்று குஷ்பு விடுத்த அறிவுரையால் அவர் ஆப்பசைத்த குரங்கானார். பிழைக்க வந்த இடத்தில் குஷ்பு கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். இந்தியா டுடே இதழில் வெளியான குஷ்புவின் கருத்தைக் குறித்துத் தினத்தந்தி நிருபர் கேள்வி கேட்க, "திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடாத பெண்கள் எத்தனைபேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று காட்டுங்கள் பார்க்கலாம்" என்று திமிர்த்தனமாக அறைகூவியது கூடுதல் அனர்த்தமானது. ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண்களின் கற்பைக் கேள்விக்குள்ளாக்கியதால் தமிழின அமைப்புகள் பலவும் போராட்டத்தில் இறங்கின. அக்டோபர் 2005இல் பாட்டாளி மக்கள் கட்சி, குஷ்புவுக்கு எதிராக இந்தியக் குற்றவியல் சட்டம் 500, 504, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்குகள் தொடர்ந்தது. குஷ்புவுக்கு எதிராகத் தொடரப்பட்ட 22 வழக்குகளுள் சேலம் மாவட்டம் மேட்டூர் நடுவர் நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கும் ஒன்று. ஆணை பிறப்பித்தும் 11.11.2005இல் விசாரணைக்குக் குஷ்பு வராததால் பிணையில் வெளிவர இயலாப் பிடியாணை பிறப்பித்தது மேட்டூர் நடுவர் நீதிமன்றம். அடுத்த அமர்வுக்கு அரக்கப் பறக்க ஓடிவந்து, ரூபாய் 5,000 காப்புத்தொகை கட்டி, "இனிமேல் அவ்வாறெல்லாம் பேசமாட்டேன்" என்று வாக்குறுதி கொடுத்து, பிணையில் வெளிவந்தார் குஷ்பு. இது நடந்தது 11.11.2005இல். இதற்கிடையில் 16.10.2005 நாளிட்டு வெளிவந்த குமுதம் இதழில், "நீங்கள் என்னிடம் கோபப்பட்டதாகக் கூறப்பட்ட எந்தக் கருத்துகளும் என்னால் சொல்லப்பட்டவை அல்ல. நினைவு தெரிந்து நான் ஒருத்தருக்கும் கெடுதல் பண்ணியது கிடையாது. என் நெஞ்சின் அடியாழத்திலிருந்து சொல்கிறேன். தமிழ் மக்களுக்கு கரம் கூப்பிச் சொல்கிறேன். உங்களைப் புண்படுத்துகிற எந்த வார்த்தைகளையும் எனக்குப் பேசத் தெரியாது. இதுதான் நிஜம். இதுதான் சத்தியம்" என்று தமிழ் மக்களிடம் கொஞ்சம்போல் நல்லபெண்ணாகக் காட்டிக் கொள்ள முயன்றார். இந்நிலையில் அரியலூர், திருவண்ணாமலை நீதிமன்றங்களில் குஷ்புவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க 4 வார இடைக்கால தடைவிதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், "விசாரணைக்கு குஷ்பு நேரில் வரவேண்டும்" என நடுவர் நீதிமன்றங்கள் விதித்த உத்தரவுக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி பானுமதி இடைக்காலத் தடைவிதித்தார். தெம்படைந்தார் குஷ்பு. முழுதாக ஒருமாதம் முடியவில்லை. அதற்குள், செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் நடத்திய சர்வதேசப் படவிழாவின் தொடக்க நிகழ்ச்சி குறுக்கிட்டது. சென்னை ஃபிலிம் சேம்பர் தியேட்டரில் நடைபெற்ற அந்த விழாவில் பங்குகொண்ட குஷ்பு, "நான் முன்பு சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக நான் வெட்கப்படவும் இல்லை" என்று கூறித் தன் திமிரைப் புதுப்பித்தார். தனக்கு எதிரான எல்லா வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் குஷ்பு. ஆனால் வழக்குகளை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் பல நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த எல்லா வழக்குகளையும் சென்னை எழும்பூர் நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்காணும் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் குஷ்பு வழக்குத் தொடுத்தார். அதில், தனது பேச்சுரிமையை உயர் நீதிமன்ற உத்தரவு பறிப்பதாகக் குறிப்பிட்டு, தனக்கு எதிராகத் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரியிருந்தார். -o-
கடந்த 19.01.2010இல் குஷ்புவின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, "பெண்கள் குறித்த குஷ்புவின் கருத்துக்கள் ஏற்க முடியாதவையாக உள்ளன. அவரது கருத்துகள் ஜீரணிக்க முடியாதவை" என்று கூறியதோடு இது குறித்து இரு வாரங்களில் விளக்கமளிக்குமாறு குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். இதில் நாம் ஆழ்ந்து நோக்கத் தக்கது யாதெனில், குஷ்புவின் கருத்துகள் வெளியான இந்தியா டுடே இதழ்ப் பகுதிகளை குஷ்புவின் வழக்கறிஞர் பிரியங்கா ஆனந்த் ஆங்கிலத்தில் படித்துக் காட்டிய பிறகுதான், "குஷ்புவின் கருத்துகள் ஜீரணிக்க முடியாதவை" என்று நீதிபதி கூறினார். இதற்குப் பிறகு நீதிபதிகளின் ஜீரணத்துக்கு என்ன வழிவகை செய்யப் பட்டது என்பது தெரியவில்லை. கடந்த 23.03.2010 அன்று குஷ்புவின் வழக்கை மீள்விசாரணை செய்யும்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் வெளியிட்ட கருத்து, நாம் இந்திய மண்ணில்தான் இருக்கிறோமா அன்றிக் கலாச்சாரச் சீரழிவில் சிக்கித் தவிக்கும் மேற்கு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து விட்டோமா என்ற ஐயத்தைத் தோற்றுவித்துள்ளது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா, நீதிபதி சவுகான் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குஷ்புவுக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர், "நடிகை குஷ்புவின் கருத்தால், இளைய சமுதாயம் கெட்டுப்போய் விடும்; நாட்டின் பண்பாடும், கலாசாரமும் வீழ்ச்சி அடைந்து விடும்" என்று தம் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார். வந்ததே கடுஞ்சினம் நீதிபதிகளுக்கு! "திருமணத்துக்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவதோ திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதோ குற்றம் அல்ல. அவற்றைத் தடை செய்யும் வகையில் எந்தச் சட்டமும் இல்லை. இவை சட்டத்தின் எந்த விதிப்படி குற்றம் என்று நீங்கள் சொல்லத்தயாரா?" என்று வழக்கறிஞரைக் கேள்வியால் மடக்கினர். மேலும், "வயது வந்த இருவர் சேர்ந்து வாழ விரும்பினால், அதில் என்ன தவறு? அது குற்றமா? சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல. புராணங்கள் சொல்வதன்படி, பகவான் கிருஷ்ணரும் ராதையும் கூட சேர்ந்து வாழ்ந்துள்ளனர்" என்று புராணமும் பாடினர். "திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது என்பது வாழும் உரிமை. வாழும் உரிமையையும் சுதந்திரத்தையும் அடிப்படை உரிமை என்று அரசியல் சட்டத்தின் 21ஆவது பிரிவு கூறுகிறது" என்று உரிமைக்குக் குரல் கொடுத்தனர். "நடிகை குஷ்பு கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து. அது உங்களை எப்படிப் பாதித்தது? எப்படி உங்களுக்கு கவலை ஏற்படுத்தியது? தனிப்பட்ட முறையில் தெரிவித்த அந்தக் கருத்து, எப்படிக் குற்றம் ஆகும்? எந்தச் சட்டவிதியின்படி குற்றம்?" என்று கேள்விக் கணைகளை அடுத்தடுத்துத் தொடுத்தனர். "குஷ்புவின் அந்தப் பேட்டிக்குப் பிறகு, எத்தனை இளம்பெண்கள் வீட்டை விட்டு ஓடினார்கள் என்று ஆதாரம் காண்பிக்க தயாரா? எத்தனை வீடுகள் பாதிக்கப்பட்டன என்று சொல்லத் தயாரா?" என்றும் அறிவுப்பூர்வமான வினாக்களை விடுத்தனர். அத்தோடு விடாமல், "புகார்தாரருக்கு மகள்கள் இருக்கிறார்களா?" என்று கேட்டார் ஒரு நீதிபதி. அதற்கு "இல்லை" என்று பதில் வந்தது. அதைக்கேட்ட நீதிபதிகள், "பிறகு எப்படி நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள்?" என்று கேட்டு, சட்ட நுணுக்கத்தைப் பிட்டுப் போட்டனர். மேற்காணும் அத்தனை கேள்விகளும் 19.01.2010 அன்று நடந்த முதல் விசாரணையில் மூன்று நீதிபதிகளில் ஒருவருக்குக்கூட நினைவுக்கு வராமல் போய் இரண்டு மாதங்கழித்து நினைவுக்கு வந்திருப்பது பலவித ஐயங்களை ஏற்படுத்துகிறது. தமிழகமெங்கும் பல அமைப்புகள் குஷ்புவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தின. காரணம், தமிழக மக்களால் அவரது கருத்துகளை ஜீரணிக்க முடியவில்லை. தமிழக நகரங்கள் பலவற்றிலும் குஷ்புவுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. காரணம், இங்கு எவராலும் அவரது கருத்துகளை ஜீரணிக்க முடியவில்லை. சென்னையின் உயர் நீதிமன்றம் குஷ்புவின் கோரிக்கைகளைத் தொடர்ந்து மறுதலித்தது. காரணம், உயர் நீதிமன்றத்தால் அவரது கருத்துகளை ஜீரணிக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றமும் தனது முதல் விசாரணையில் குஷ்புவுக்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. காரணம் தெளிவானது. அன்றைய 19.01.2010 தேதிவரை உச்ச நீதிமன்றத்தால் அவரது கருத்துகள் படிக்கக் கேட்டபிறகு அவற்றை ஜீரணிக்க முடியவில்லை. இடைப்பட்ட இருமாதங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதே கருத்துகள் ஜீரணம் ஆகிவிட்டதோடு நில்லாமல் புராணப் பசியும் ஏற்பட்டிருக்கிறது. வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, சட்டம் பேசிக் கொண்டிருக்கும்போது கிருஷ்ணனும் ராதையும் வாழ்ந்த வாழ்க்கையைக் கொண்டு வந்து திணிக்கும் நீதிபதிகள் மதச்சார்பற்ற தங்கள் பதவிகளுக்குத் தகுதியானவர்கள்தாமா? என்பதையும் இங்குச் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. "கிருஷ்ணனும் ராதையும் வாழ்ந்த வாழ்க்கை இந்துமத தர்மப்படி முற்றிலும் தவறானது" என்பதாக பாஜகவின் வெங்கையா நாயுடு தெளிவாக்கியுள்ளார். எப்படியோ நீதிபதிகளுக்கு ஜீரணம் ஆகிவிட்டது. ஆனால், அவர்களது ஜீரணத்தால் நமது சட்டங்கள் தொடர்பாக நமக்குப் பலவித ஐயங்கள் ஏற்பட்டு விட்டன:
தெரிந்தவர்கள் சொல்லுங்கள், கூடவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அஜீரணத்தைத் தீர்த்து வைத்த மாயமருந்து எதுவென்றும்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (6)
![]()
//"குஷ்புவின் அந்தப் பேட்டிக்குப் பிறகு, எத்தனை இளம்பெண்கள் வீட்டை விட்டு ஓடினார்கள் என்று ஆதாரம் காண்பிக்க தயாரா? எத்தனை வீடுகள் பாதிக்கப்பட்டன என்று சொல்லத் தயாரா?" என்றும் அறிவுப்பூர்வமான வினாக்களை விடுத்தனர்.//
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, செப்டம்பர் 2005 முதல் மார்ச் 2010வரை வீட்டை விட்டு ஓடிப்போன பெண்களின் எண்ணிக்கைத் தகவலை அறிந்து கொள்ள முடியும். அதை உச்சநீதிமன்றத்தின் முன்வைத்தால் குஷ்புவுக்கு எதிராகத் தீர்ப்பு இருக்குமா? //அத்தோடு விடாமல், "புகார்தாரருக்கு மகள்கள் இருக்கிறார்களா?" என்று கேட்டார் ஒரு நீதிபதி. அதற்கு "இல்லை" என்று பதில் வந்தது. அதைக்கேட்ட நீதிபதிகள், "பிறகு எப்படி நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள்?" என்று கேட்டு, சட்ட நுணுக்கத்தைப் பிட்டுப் போட்டனர்.// ச்சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு? 1
March 27, 2010 19:25
இன்றைய தேதிக்குத் தேவையான, தரமான தலையங்கம்.
இதே நடிகைக்கு ஒரு காலத்தில் கோயில் கட்டிய மக்கள், பின்னாளில் செருப்படி கொடுத்தனர். எத்தனை ....னந்தாக்கள் கம்பி எண்ணினாலும் மாறாத சாமியார் மோகம் போன்று சினிமா மீதான மோகமும் மக்களுக்கு இன்னும் ஏனோ குறையவில்லை. பொய்யையும், மக்களின் அறியாமையையும் முதலீடாகக் கொண்டு பணம் கொழிக்கும் விபச்சார சினிமாக்கள் மற்றும் (ஆ)சாமிகள் சாயம் வெளுத்தாலும், மக்களாக இதனை உணர்ந்து திருந்தினால் தான் விமோசனம் கிட்டும். 2
March 27, 2010 20:08
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே சமுதாயத்தில் இது போன்ற சாக்கடைகள் ஏராளம் அதை சத்தியமார்க்கம் போன்ற ஒரு தளத்தில், இவ்வாரு அசிங்கமான படங்களுடனும் தேவையற்ற குப்பைகளான சுட்டிகளூம் தந்து பதிவேற்றியுள்ளது எனக்கு சிறிதும் ஜீரணமாகவில்லை. தலையங்கம் மூலம் விமர்சிப்பது என்பது வேறு விஷயம் அதே நேரம் இது போன்ற சுட்டிகள் படங்கள் தங்கள் தலையங்க நோக்கத்தையும் தள நோக்கத்தையும் கேலிக்குரியதாகவும் கேள்விக் குறியாகவும் ஆக்கிவிடுகிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக. 3
March 28, 2010 07:25
அன்புச் சகோதரர் மு.முஹம்மத்,
வ அலைக்குமுஸ்ஸலாம். "செகஸ் & இளம்பெண்கள்" என்ற தலைப்புஅட்டைப் படத்தோடு இந்தியா டுடேயின் 28.09.2005 இதழ் வெளியானது. அந்த ஒரு படம்தான் இங்குப் பதிக்கப் பட்டது, அதுவும் உங்கள் சுட்டிக் காட்டலுக்குப் பிறகு நீக்கப் பட்டுள்ளது. உங்கள் பின்னூட்டத்தில் "அசிங்கமான படங்களுடனும் தேவையற்ற குப்பைகளான சுட்டிகளுடனும்" என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. இங்கு இணைக்கப் பட்டுள்ள புறச்சுட்டிகளுள் குப்பை ஏதும் இல்லை. இந்தத் தலையங்கம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் கருத்தை விமரிசிப்பதாகும். அதற்காகப் பழைய பதிவுகளின் தேடலும் துணையும் தேவையாகிறது. இது சட்டச் சிக்கல் சார்ந்தது. மாறாக நடிகைக்கான வெட்டி விளம்பரமல்ல. புரிதலுக்கு நன்றி! 4
March 29, 2010 01:04
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பிற்குரிய சத்தியமார்க்கம் சகோதரர்களே இந்தியா டுடே வின் அசிங்கமான அட்டைப்படம் நீக்கப்பட்டதற்கு நன்றிகள். விமர்சனத்தை நான் குறைகாணவில்லை அதில் கையாளப்பட்ட சுட்டிகள் தேவையற்றது என்பதே என் கருத்து. ஏனெனில் சுட்டிகள் அந்த சினிமா நடிகையின் கவர்ச்சியான படங்களுடன், ஏதோ பெரிய சாதனையை நிறைவேற்றிய விதமாக போஸ் கொடுக்கும் குப்பை படங்கள் மற்றும் இதர தளங்களின் பிற சம்பந்தமில்லாத ஆக்கங்களையும் அணுகிட வழிவகுக்கும் விதமாக அமைகிறது. மேலும் சத்தியமார்க்கம்.காம் என்பது இஸ்லாம் எனும் இறைவன் வழங்கிய சத்தியத்தை தாங்கி அதனடிப்படையில் இயங்கும் ஒரு தளம், என்பதால் இதில் ஒழுக்கக்கேடுகளுக்கு வழி வகுக்கும் கருத்துக்களை பரப்பும் இது போன்றவர்களுடைய செயல்களை கண்டிப்பது என்பது வேறு, ஆனால் அவர்களுடைய தொடர்பான பல படங்களுடன், பதிவான இது போன்ற சுட்டிகள் தர வேண்டியது அவசியமற்றது (சட்ட சிக்கல் என்பது சட்ட ரீதியாக மறுத்து ஆதாரம் கேட்டு புகார் செய்பவர்களுக்கு தேவைப்படும் போது தனிபட்ட முறையில் வழங்கப்படலாம் ) என்பதே இஸ்லாமிய அடிப்படையிலான எனது கருத்து, எனது புறிதல். அல்லாஹ் மிக அறிந்தவன் ,அல்லாஹ் போதுமானவன். 5
March 29, 2010 11:06
என் பக்கத்து இந்து வீட்டுப் பெண்மணி என் வீட்டுக்கு அவருடைய கலாச்சார உடையணிந்து வருகிறார். அவருடைய உடலின் மறைக்கப்பட வேண்டிய பாகங்களையும் வெளிப்படுத்திக் கொண்டு சகஜமாக என் வீட்டுக்கு வரும் அவரைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டு விடுகிறது. "முதல் பார்வை தவறு இல்லை" என்பதால், இரண்டாவது பார்வையை மட்டும் நான் தவிர்த்துக் கொள்ளவா? அல்லது என் வீட்டில் கல்லூரி செல்லும் மகனும் மகளும் இருப்பதால் அவரை அவ்வாறான உடையில் என் வீட்டுக்கு வராதே என்று கூறி விடவா?
6
March 29, 2010 13:47
கருத்து எழுதுக :
|