| பழகு மொழி (பகுதி-15) |
|
|
| தொடர்கள் - மொழியியல் | |||
| செவ்வாய், 23 மார்ச் 2010 10:54 | |||
|
(2) 3.1.(1) பொருட்பெயர்ப் பகுபதம் ஒரு பொருளை அடிச்சொல்லாகக் கொண்டு அமைந்த பெயர்ப் பகுபதம், பொருட்பெயர்ப் பகுபதம் எனப்படும். காட்டுகள் : முத்து, மணி, பொன், அமுது ஆகியன பொருள்களின் பெயர்களாகும். பகுதிகளான இவற்றோடு விகுதிகள் சேர்ந்து வரும்போது, முத்து+அன் = முத்தன் என்றும் மணி+அன் = மணியன் என்றும் பொன்+அன் = பொன்னன் / பொன்+னி = பொன்னி என்றும் அமுது+அன் = அமுதன் என்றும் பொருட்பெயர்களாக மாற்றம் பெறுகின்றன. இவை பகுத்தக்கனவாக இருப்பதால் பொருட்பெயர்ப் பகுபதங்களாகும். (2) 3.1.(2) இடப்பெயர்ப் பகுபதம் இடத்தைப் பகுதியாகக் கொண்டவை இடப்பெயர்ப் பகுபதம் ஆகும். காட்டுகள் : கருவூர்+ஆர் = கருவூரார்; உறையூர்+ஆன் = உறையூரான்; நாஞ்சில்+அன்= நாஞ்சிலன்; பட்டினம்+ஆர் = பட்டினத்தார்; உலகு+ஓர் = உலகோர் (2) 3.1.(3) காலப்பெயர்ப் பகுபதம் நாள், திங்கள், ஆண்டு ஆகிய காலப்பெயர்களோடு விகுதி இணைந்திருப்பின் அவை காலப்பெயர்ப் பகுபதங்கள் ஆகும். காலப்பெயர்ப் பதங்கள் அரிதாகவே வழக்கிலிருக்கின்றன. காட்டுகள் : கார்த்திகை+அன் = கார்த்திகையன் (கார்த்திகேயன்); ஆதிரை+ஆள் = ஆதிரையாள் (திருவாதிரையில் பிறந்தவள்). (2) 3.1.(4) சினைப்பெயர்ப் பகுபதம் உறுப்புகளின் பெயரோடு வருபவை சினை(உறுப்பு)ப்பெயர்ப் பகுபதங்களாகும். இவையும் அரிதானவையே. காட்டுகள் : கண்+அன் = கண்ணன்; குழல்+இ = குழலி (குழல் என்பது இங்குக் கூந்தலைக் குறிக்கும்). (2) 3.1.(5) குணப்பெயர்ப் பகுபதம் ஒரு பண்பைப் பகுதியாகக் கொண்டு, அத்துடன் விகுதி இணைந்து வருவது குண(பண்பு)ப்பெயர்ப் பகுபதம் எனப்படும். காட்டுகள் : முருகு+அன் = முருகன் / அழகு+அன் = அழகன்; கருப்பு+அன் = கருப்பன்; வெள்ளை+அன் = வெள்ளையன் (2) 3.1.(6) தொழிற்பெயர்ப் பகுபதம் தொழிற்பெயரோடு விகுதி சேர்ந்து வருபவை தொழிற்பெயர்ப் பகுபதங்கள் எனப்படும். காட்டுகள் : கொத்து+அன் = கொத்தன்; தச்சு+அன் = தச்சன்; உழவு+அன் = உழவன். - தொடரும், இன்ஷா அல்லாஹ்.
<முன்னுரை | பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3 | பகுதி-4 | பகுதி-5 | பகுதி-6 | பகுதி-7 | பகுதி-8 | பகுதி-9 | பகுதி-10 | பகுதி-11 | பகுதி-12 | பகுதி-13 | பகுதி-14 >
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (0)
![]() கருத்து எழுதுக :
|