| இடஒதுக்கீடுச் சட்டமும் முஸ்லிம்களின் கடமையும் |
|
|
| வாசகர் பகுதி - முனைவர் முஹம்மத் அலி IPS பக்கம் | ||||
| வெள்ளி, 19 பிப்ரவரி 2010 00:47 | ||||
|
இடஒதுக்கீடு சம்பந்தமாக சமீப காலத்தில் பரபரப்பாகச் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. "முஸ்லிம்கள், தலித் மக்களைவிடக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்தங்கி உள்ளனர்" -நீதிபதி சச்சார். "முஸ்லிம்களுக்கு மாநில அரசு வழங்கிய நான்கு சதவீத ஒதுக்கீடு செல்லாது" -ஆந்திர மாநில உயர்நீதி மன்றம். "முஸ்லிம்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழக்கப்படும்" -மேற்கு வங்க முதல் அமைச்சர். முஸ்லிம்களுக்கு ஏற்கனவே கர்னாடகா மற்றும் மணிப்பூர் அரசுகளின் 4 சதவீத ஒதுக்கீடும் கேரள அரசு 10லிருந்து 12 சதவீதம பல்வேறு முறையிலும் இடம் ஒதுக்கியுள்ளன. இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் இடஒதுக்கீடு பற்றி என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்றும், அந்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் ஒதுக்கீடு பெற்று, சமூகத்திலும் பொருளாதாரத்திலும் கல்வியிலும் முன்னேற என்ன செய்யலாம் எனவும் இந்தக் கட்டுரையின் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அரசமைப்புச் சட்டம், பிரிவு 14இன்படி, சட்டத்தின்முன் எல்லோரும் சமம் என்றும், ஒத்த தகுதி நிலையில் உள்ளவர் அனைவரும் சட்டத்தால் ஒரே சீராக நடத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. சட்டப்பிரிவு 15(1) என்பது, ஒத்த தகுதி நிலை கொண்ட எவரையும் மதம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதாவது காரணத்தால் அரசு வேற்றுமை பாராட்டுவதைத் தடை செய்கிறது. ஆனால் வேறுபட்ட மக்களின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தி சட்டம் இயற்றுவது தவறாகாது என்கிறது. இதுவே இடஒதுக்கீட்டுக் கொள்கையின் சட்ட அடிப்படை. பிரிவு 15(3)இன்படி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறப்பு வகைமுறைகள் கொண்டுவர அரசுக்கு அதிகாரம் உண்டு. அதேபோல் பிரிவு 15(4)இன்படி சமூகம் மற்றும் கல்வி வழி பின்தங்கிய குடிமக்கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோருக்குச் சிறப்பு வகைமுறை செய்வதற்குத் தடையில்லை என்று சொல்கிறது. ஆகவேதான் தலித் மக்கள், பழங்குடியினர் ஹிந்து மதத்தவராக இருந்தாலும் அவர்கள் ஹிந்து சமூக அமைப்பில் நசுக்கப்பட்டு, பின்தங்கியிருந்ததால் அவர்களுக்குத் தனி ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஹிந்து மதத்தில் சில நலிந்த பிரிவினருக்கும் 'பிற்பட்ட வகுப்பினர்' என்ற தகுதி சட்டத்தில் வகுக்கப்பட்டது. சட்டப்பிரிவு 16(4)இன்படி "எந்த பிற்பட்ட சமூகமும் அரசு நிறுவனங்களில் சரியாக பணியமர்த்தப் படவில்லையென அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப் பட்டால் அவர்களுக்காகத் தனிச்சட்டம் இயற்றலாம்" என்று சொல்கிறது. பின் ஏன் ஆந்திர அரசின் 4 சதவீத இடஒதுக்கீட்டின் சட்டத்தை ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது? அதற்குக் காரணம் அந்த அரசு மொத்த முஸ்லிம்களுக்கும் "மதத்தின் பெயரால்" இடஒதுக்கீடு செய்தது. ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கி இருக்கிறார்கள் என்று அரசு ஆய்வு செய்து அதன்பின்பு இடஒதுக்கீடு வழங்கியிருந்தால் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் இடஒதுக்கீடு தள்ளுபடி ஆகியிருக்காது. ஆந்திர உயர்நீதி மன்ற உத்தரவை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு அண்மையில் வழங்கப் பட்ட மூன்றரை சதவீத ஒதுக்கீட்டிலும் பாதிப்பு எற்படுமோ என்ற ஐயப்பாடு எழுவது நியாயமே. அவ்வாறான ஐயத்தை நாம் கைவிட வேண்டும். ஏனெனில், "முஸ்லிம்கள், மற்ற பின்தங்கிய மக்களைப்போல் எவ்வாறு பின்தங்கியுள்ளார்கள்?" என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜே.ஏ. அம்பாசங்கர் தலைமையிலான 1985ஆம் ஆண்டு நியமிக்கப் பெற்ற கமிட்டி சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே தமிழக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை (பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு) இப்போது வழங்கியுள்ளார்கள். அந்த அறிக்கையில் முஸ்லிம் சிறுபான்மையினரைச் சார்ந்த 27,05,960 பேரில் பிற்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் 25,60,195 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் கிறித்துவ சிறுபான்மை 31,91,989 பேரில் 24,69,519 பேர் பிற்பட்டோர் பட்டியலிலும் 78,675 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் முஸ்லிம்களுக்கான பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் யாரையும் சேர்க்கவில்லை. இத்தனைக்கும் முஸ்லிம்கள் இந்த நாட்டில் தலித் மக்களைவிடக் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கிறார்கள் என்று அறிந்தும்கூட. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு, தமிழ்நாடு சட்டம் 45, 1994 படியும், அதன் பின்பு தமிழ்நாடு சட்டம், பிரிவு 12, 2006இன்படியும் பிற்பட்ட மக்கள் கல்வி நிலையங்களிலும் அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களில் தனி ஒதுக்கீடு பெற்று வருகின்றனர். அதன் பின்பு, கிறித்துவரும் முஸ்லிம்களும் மற்ற பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான பட்டியலிலுள்ள பிற சமூகத்தினருடன் போட்டியிட இயலவில்லை என்பதால் தங்களுக்கென்ற தனி ஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை அரசிடம் வைக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கை, பிற்பட்டோர் கமிஷனிடம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.
கமிஷனின் ஆய்வறிக்கை, "இரு சமூகத்தினரின் கோரிக்கை சரியானதுதான்" என்று அறிவித்தது. அதனை ஏற்று அரசு 2007ஆம் ஆண்டு தமிழக அரசு அவசரச் சட்டம் பிரிவு 4, 2007இன்படி கிறித்துவ மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் கல்வி நிலையங்கள் (தனியார் கல்வி நிலையம் உள்பட) அரசு நியமனங்களில் அல்லது பதவி ஒதுக்கீடுகளில் கிறித்துவர்களுக்கு 4 சதவீதமும், முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதன்பின் வருங்காலங்களில் அதிகமாகக் கல்வியறிவு பெற்ற கிருத்துவ மக்கள் தொகையினைக் கொண்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் படித்த இளைஞர்கள் அதிகமாகக் கல்வி, அரசு வேலை வாய்ப்புகள் பெற முடியவில்லையென அறிந்து அந்த நான்கு சதவீத ஒதுக்கீடு தேவையில்லை என்றும் தாங்கள் "பிற்பட்போருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி அடிப்படையில் இதைவிட அதிகம் பயன் பெற முடியும்" எனவும் அரசிடம் வலியுறுத்தி, அதனை ரத்துச் செய்ய சொல்லி விட்டார்கள். அந்தக் கிறித்துவ மக்கள் கூற்றுப்படிப் பார்த்தால் அதிகம் படிக்காதவர்கள், கல்வி, அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெற முடியாதவர்கள் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள்தாம் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறதல்லவா நண்பர்களே! இந்திய நாட்டின் மொத்த ஜனத்தொகையில் பிற்படுத்தப் பட்ட மக்கள் 41 விழுக்காடு ஆவர். ஆனால் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடுக்கு வழிவகுத்த முன்னோடி திரு. பிந்தேஷ்வரி ப்ரசாத் மண்டல் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று 1979ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, அக்குழு தனது 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாத அறிக்கையின்படி "இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் எண்ணிக்கை 52 விழுக்காடு" என்று அறிவித்தது. ஆகவேதான் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு ஒதுக்கி சட்டம் வகுத்தது மத்திய அரசு. இந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களில் 78 விழுக்காடு கிராமப் புறத்திலும் 22 விழுக்காடு நகரப் பகுதியிலும் வசிக்கிறார்கள். ஆனால் முற்பட்ட மக்கள் ஊரக, நகரப் பகுதி இரண்டிலும் 37.7 விழுக்காடு வாழ்கின்றனர். ஆகவேதான் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்தால் முற்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்பில் கூடுதலான இடங்களைப் பெற்று விடுகின்றனர். இந்தியாவிலே தமிழகத்தில்தான் 74.4 சதவீத பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். இது தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (என்.எஸ்.எஸ்.ஓ) நடத்திய ஆய்வின் கூற்றாகும். ஆகவேதான் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு 20 விழுக்காடு ஒதுக்கீடும், முஸ்லிம்களுக்கு மூன்றரை விழுக்காடு ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிறித்துவ மக்கள், "நான்கு சதவீத ஒதுக்கீடு போதாது நாங்கள் பிற்பட்டோர் ஒதுக்கீடுகளில் அதிக ஒதுக்கீடு பெற வாய்ப்புண்டு" என்று கேட்டுக் கொள்ள, அதனை அரசும் ரத்து செய்தபோது, தமிழகத்தில் ஒரேயொரு முஸ்லிம் பெரியவர் மட்டும், "முஸ்லிம் மக்கள் இடஒதுக்கீடு பெறாது முன்னேற வேண்டும்" என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் "புனித ஹஜ் செய்ய அரசின் சலுகையினைப் பெறாது செல்ல வேண்டும்" என்றும் சொன்னதாக அனைத்துப் பத்திரிகையிலும் ஒரு செய்தி வெளிவந்து, அதனைக் கண்டித்து நோட்டீசும் சில அமைப்பினரால் வெள்ளிதோறும் பள்ளிவாசல்களில் கொடுக்கப்பட்டது. அவர் யார் என்று கேட்கிறீர்களா? நம் நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் பிரிட்டிஷ் அரசின் எடுபடியாக இருந்து, வட மாவட்டங்களில் அவர்களுக்கு வரிவசூல் செய்யும் ஏஜெண்டாக ஒருவர் இருந்தார். அவர் பிரிட்டிஷ் அரசின் வரிவசூல் ஏஜெண்ட் மட்டுமில்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்தினை எதிர்த்த மதுரை மருதநாயகம் என்ற அஹமது கான், சிவகங்கை மன்னராக இருந்த சின்ன மருது, பெரிய மருது, வேலு நாச்சியார், ஊமைத்துரை போன்றவர்களை வேட்டையாட பிரிட்டிஷ் படையினருடன் தன் கூலிப்படையையும் அனுப்பியவர். அதற்குக் கூலியாக பிரிட்டிஷ் அரசு இந்திய நாட்டினை விட்டு வெளியேறியபோது அவருக்கு மட்டும் இந்தியாவில் தனிக் கொடியுடன் உள்ள அந்தஸ்து கொடுத்து, தனது சமஸ்தான சொத்தினையும் அநுபவிக்க உரிமை வழங்கியது. அவர்தான் ஆற்காடு நவாப். ஆனால் தன் மகன்கள் கொல்லப்பட்டாலும் கடைசி மூச்சு இருக்கும்வரை பிரிட்டிஷாரை எதிர்த்த டெல்லி முகலாயக் கடைசி சக்கரவர்த்திக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா? பர்மாவிற்குக் கடத்தப்பட்டு சொந்த இந்திய மண்ணில்கூட தனது கடைசி வாழ்நாளைக் கழிக்க முடியாத நாடு கடத்தல். பரிதாபமாகத் தெரியவில்லையா உங்களுக்கு? ஆங்கிலேய ஏஜெண்ட் வழிவந்த ஆற்காடு நவாப் சொல்கிறார் "அரசிடமிருந்து முஸ்லிம்கள் சிறப்புச் சலுகை பெறக்கூடாது" ஏழை, எளிய மக்கள் வாழ்வில் ஒளியேற்ற என்னதான் செய்வது? அவர்களுக்கு இனாமான கோடிக்கணக்கான சொத்தா இருக்கிறது? ஏழை முஸ்லிம்கள் அரசின் சலுகையினைத்தானே நாட வேண்டியிருக்கிறது? ஆற்காடு நவாப் போன்ற பெரியவர்கள் உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் ஏழை, எளிய முஸ்லிம்கள் சலுகை பெற வாய்ப்பாக அமையும். இந்தியாவில் இடஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்க பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே இதில் முஸ்லிம்களாகிய நமது கடமை என்ன என்பதை விளக்கலாம் எனக் கருதுகிறேன்.
மேற்கூறிய யோசனைகள் நமது சமுதாயம் முன்னேறுவதற்கான கடல் போன்ற யோசனைகளில் சிறு துளி நீர் போன்றதே. துடிப்பான இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் நமது சமூதாயத்தில் இல்லாமலில்லை. அந்த இளைஞர்கள், நிறுவனங்கள் நமது சமுதாய மக்கள் பின்தங்கிய நமது சமுதாயத்தை முன்னேறிய சமுதாயமாக மாற்ற வேண்டும். அத்துடன் நமது உரிமையான அரசுச் சலுகைகளையும் நாம் நழுவ விடக்கூடாது என வேண்டி முடிக்கிறேன்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (0)
![]() கருத்து எழுதுக :
|