| சிமி-டெஹல்கா அறிக்கை - பாகம் 8 (இறுதி) |
|
|
| தொடர்கள் - ஆய்வுக் கட்டுரைகள் | |||
| செவ்வாய், 20 ஜனவரி 2009 05:04 | |||
|
இருப்பினும் விசாரணை தொடர்கிறது!
2001 செப்டம்பர் 27 அன்று முதன் முதலாக சிமி தடை செய்யப் பட்டது முதல், இம்மாய உலகத்தை இந்திய அரசு வழிநடத்திக் கொண்டிருந்தது. அரசிடம் சிமியைக் குறித்து இருப்பதாகக் கூறும் விவரங்கள் அனைத்தும் காவல்துறையும் உளவுதுறை அமைப்புகளும் நாட்டின் பலப் பாகங்களிலிருந்து சேகரித்துக் கொடுத்தவையாகும். இவ்வியக்கத்தைக் குறித்துக் கதை கதையாக விவரிக்கும் விசாரணை இணையதளங்கள் பல உண்டு. இத்தளங்களினூடாக ஒருமுறை கடந்துச் சென்றால், அவை அனைத்துமே இந்திய உளவுத்துறை அமைப்புகள் உருவாக்கிய படைப்புகள் என்பதை முதல் பார்வையிலேயே புரிந்துக் கொள்ள இயலும்.
பரிதாபத்திற்குரிய செய்தி ஒன்று கூறட்டுமா?, சிமியின் அடையாளமும் அதன் செயல்பாடுகளும் தடை செய்யப்படுவதற்கு முன்பு எவ்வாறு இருந்தது என்பதை இனிமேல் துல்லியமாக அறிந்துக் கொள்ள முடியும் எனத் தோன்றவில்லை. சிமி கூறுவதும் அரசு பரப்புவதுமான முகங்கள் நேர் எதிரானவையாகும். பொய்ப் பிரச்சாரங்களும் ஆய்வுக்கு உட்படுத்த முடியாத புனைவுகளுமே அரசின் வாதங்களாகும். சிமிக்கு எதிராக ஆதாரங்களைச் சேகரிக்க அரசுக்கு ஏழு ஆண்டுகள் கால அவகாசம் கிடைத்தது. ஆனால், ஆதாரச் சேகரிப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கின்றது. சந்தேகத்திற்கிடமான, நாடகரீதியிலான புதுக் கண்டுபிடிப்புகளுடன் எந்த நேரத்திலும் அரசு வரக் கூடும்.
சிமியின் பக்கமுள்ள சொந்தக் கருத்துகளைத் தெளிவிக்கும் ஆதாரங்கள் வெளிவரப் போவதில்லை. ஏனெனில், சிமி தடை செய்யப்பட்ட வேளையில் அவர்களது அலுவலகங்களை அடைத்து சீல் வைப்பதற்கு முன்னர், விசாரணை அதிகாரிகள் அங்கிருந்த அனைத்துப் பொருட்களையும் ஆதாரங்களையும் கைப்பற்றி விட்டதால் இனி அவை கிடைப்பதற்கான வழியேதுமில்லை. அதனால், சிமியைக் குறித்துக் கூறப்படும் சிமியின் கருத்தும் அரசின் கதைகளையும் இணைத்து வைத்து ஆய்வு செய்வது மட்டுமே ஒரே வழியாகும். சிமியைத் தடை செய்து பெப்ருவரியில் அரசு வெளியிட்ட அறிக்கையின் முன்னுரையின் முதல் பக்கத்தில் கீழ்கண்டவாறு கூறப்படுகிறது:
"இவ்வியக்கத்தின்(சிமி) கொள்கைகள்: a. குர் ஆனின் அடிப்படையில் மனித வாழ்க்கையைச் சீர்செய்தல். b. இஸ்லாமியப் பிரச்சாரம். c. இஸ்லாமிய இலட்சியத்திற்காக ஜிஹாத் செய்தல். d. தேசியம் தகர்த்து, இஸ்லாமிய ஆட்சியை அதாவது, கிலாஃபத் ஏற்படுத்துதல்."
முன்னுரை தொடர்கிறது: "அனைத்து வயதுடைய முஸ்லிம்களையும் உள்ளடக்கிய, இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும், சந்தேகத்திற்கிடமான வகைகளில் செயல்பட்ட இயக்கம் தான் சிமி. சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களுடன் அதற்குத் தொடர்புண்டு; ஆயுதப் பயிற்சி நடத்துகின்றது; உள்நாட்டிலும் வளைகுடா நாடுகளிலிருந்தும் பணம் சேகரித்து, சதியாலோசனைகள் நடத்தி குண்டுவெடிப்புகளை அரங்கேற்றுகின்றது. மதசார்பற்ற தன்மை, தேசியச் சிந்தனை, இந்திய சட்ட-திட்டம் போன்றவற்ரை அது ஏற்றுக் கொள்ளவில்லை. சிலை வணக்கத்தைப் பாவமாகவும் அதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியை தெய்வீக இலட்சியமாகவும் கருதுகிறது. இந்திய தேசியத்திற்குப் பதிலாக சர்வதேச இஸ்லாமிய அமைப்பிற்காக சிமி முயல்கிறது. சிமியின் அபிப்பிராயத்தில், மனித வாழ்க்கையைச் சீர்செய்ய வேண்டியது குர்ஆனாகும். இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதே அதன் குறிக்கோள்".
அதேநேரம், சிமியின் முன்னாள் தலைவர்கள் தங்களைத் தீவிரவாதிகள் என்று கூறும் அரசின் வாதத்தை உறுதியுடன் நிராகரிக்கின்றனர். முக்கியமாக, நாட்டின் ஒற்றுமையைத் தகர்க்க முயல்வதாகக் கூறும் குற்றச்சாட்டைக் கடுமையாக நிராகரிக்கின்றனர். முஸ்லிம் மாணவர்களுக்கிடையில் இஸ்லாமிய அடிப்படை விஷயங்களை ஆரம்பத்திலிருந்தே கற்பித்து வளர்த்தும் ஒரு முன்னுதாரணமான இயக்கம்தான் தங்களுடையது என்பதே அவர்களின் வாதம். பொறியியல், மருத்துவம், கணிதம் போன்ற உலகக் கல்வியையும் பரிசுத்த இஸ்லாமிய அடிப்படைகளையும் ஒன்றிணைத்துள்ள சிந்தனையைக் கொடுக்கும் ஒரு அமைப்பே சிமியாகும்.
முஸ்லிம்கள், "நிராசைப்படுவதிலிருந்தும் இரைகளாவதிலிருந்தும் மீள்வதற்கு, குர் ஆனை அடிப்படையாகக் கொண்டு, உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கவேண்டும்" என சிமி முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தது.
திறமையுள்ள, தேவையுடைய மாணவர்களுக்கு சிமி உதவித்தொகைகள் வழங்கியது. மதசார்பற்ற பாடசாலைகளில் படிக்கும் நடுத்தரவர்க்க முஸ்லிம் மானவர்களுக்காக சிமி கோடைகால வகுப்புகள் நடத்தியது. எல்லா நாட்களிலும் திருக்குர் ஆனிலிருந்து ஒரு புதிய விஷயத்தை ஆய்வுக்காக எடுத்து விவாதம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. 12 நாட்கள் நீண்டு நிற்கும் இந்த வொர்க்ஷாப்பில் தெய்வ வசனங்கள் குறித்த க்விஸ் போட்டிகள் போன்றவையும் உட்பட்டிருந்தது. நிவாரண உதவிகளுக்கான கேம்ப்களையும் சிமி நடத்தியிருந்தது. 2001 ஜனவரி 26 அன்று குஜராத் மாநிலம் கச்சில் ஏற்பட்ட பூகம்பத்தில் நிவாரண உதவி செயல்பாடுகளில் அன்று சிமி முன்னணியில் நின்றிருந்தது. அதிகமான கல்லூரி மாணவர்கள் சிமியின் உறுப்பினர்களாக இருந்தனர். பல பத்திரிக்கை வெளியீடுகளும் சிமிக்கு இருந்தன. தடை செய்யப்படுவதற்கு முன்பு, ஹிந்தி, உர்து, ஆங்கிலம், மலையாளம், தமிழ் முதலான மொழிகளில் சிமியின் சேவைகள் இந்தியா முழுக்க பிரசுரிக்கப் பட்டிருந்தன. பெரிய மாநாடுகள் நடத்துவது என்பது சிமியின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக இருந்தது. குறைந்தபட்சம் 1992 வரை அனைத்தும் மற்ற மதங்களில் உள்ளவர்களும் இணைந்து பங்கெடுக்கும் நிகழ்ச்சிகளாக அவை இருந்தன.
(முடிந்தது)
குறிப்பு : இந்தத் ஆய்வுத் தொடரை டெஹல்கா இதழில் எழுதிய அஜித் ஸாஹியின் செவ்வி அடுத்து இடம் பெறவிருக்கிறது, இன்ஷா அல்லாஹ்.
முந்தைய பகுதிகள்: பாகம்-1 வாழ்க்கைகளைக் கசக்கி எறியும் வழக்குகள்! பாகம்-3 உஸாமா பின் லாடன், அல்காயிதா, ஹமாஸ்! பாகம்-4 குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் (செல்லாத) ஒப்புதல் வாக்குமூலங்கள்! பாகம்-5 ஆதாரங்கள் உள்ளன; ஆனால் தரமாட்டோம்! பாகம்-6 காவல்துறையும் அரசாங்கமும் ஷாஹித் பத்ர் ஃபலாஹிக்கு எதிராக... பாகம்-7 ஓர் உச்சநீதிமன்ற நீதிபதி பொய்த்திரை கிழித்த வேளையில்...
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (0)
![]() கருத்து எழுதுக :
|