சத்தியமார்க்கம்.காம்

'வீட்டோ' என்ற பேரழிவு ஆயுதம் print Email
ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம்
வியாழன், 15 ஜனவரி 2009 16:15

குழந்தைகள்தாம் குறி

ஃபலஸ்தீனத்தில் பிறந்த பாவம் செய்ததற்காக கஸ்ஸாவாசிகளுக்கு உலகம் முழுதும் வாழும் மனிதாபிமானம் மிக்க ஆட்சித் தலைவர்கள், அமைப்புகள் செய்திருக்கும் பேருதவிகள்தாம் இந்த அறிவிப்புகள்:

"இஸ்ரேல் பொழிந்த பாஸ்ப்பரஸ் குண்டு மழையில் ஃபலஸ்தீன் தீவிரவாத(!)க் குழந்தைகள் செத்துப் போய் விட்டார்களா? இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான (பிணத்திற்கு உடுத்தும்) கஃபன் துணி முதல் அனைத்துச் செலவுகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; ஆனால், இறந்து போனவர்களைப் புதைப்பதற்கான இடம் போதவில்லை என்ற உங்களது குறையை எங்களால் தீர்த்து வைக்க முடியாது".

"படுகாயம் அடைந்துள்ள பெண்களுக்கும் முதியவர்களுக்கும் டிஞ்சர் முதல் அனைத்து வகையான மருந்துகளையும் கூடிய விரைவில் நாங்கள் அனுப்பி வைப்போம்; அனைவரையும் தங்க வைத்து மருத்துவம் செய்வதற்கு மருத்துவ மனைகளும் மருத்துவர்களும் இல்லையே என்று நீங்கள் எங்களைக் குற்றம் சொல்லக் கூடாது".

 "வசித்த வீடுகளையும் உடுத்த உடைகளையும் இழந்து விட்டவர்கள் எத்தனை ஆயிரத்துக்கு மேற்பட்டு இருந்தாலும் நாங்கள் உபயோகித்த உடைகளை மட்டுமின்றி புதிய உடைகளையும் வாங்கிப் போட்டு, அடுத்த கண்டெய்னரில் அனுப்பி வைப்போம். இஸ்ரேல் அனுமதித்தால் உங்களுக்கு அவை வந்து கிடைத்து விடும்".

"இன்ன, இன்ன ஊடகங்களில் எங்களது கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறோம்".

"நாங்கள் தெரிவித்த வருத்தங்கள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன".

"நாங்கள் நடத்திய பேரணி, வீதிப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கெடுத்துள்ளனர்".

ஆம்! ஃபலஸ்தீனத்தில் பிறந்த பாவம் செய்ததற்காக கஸ்ஸாவாசிகளுக்கு உலகம் முழுதும் வாழும் மனிதாபிமானம் மிக்க ஆட்சித் தலைவர்கள், அமைப்புகள் செய்திருக்கும் பேருதவிகள்தாம் மேற்காணும் அறிவிப்புகள்.

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser.

டிஸம்பர் 27இல் இஸ்ரேல் தொடங்கிய அக்கிரமத் தாக்குதலால் ஏறத்தாழ கஸ்ஸா நகர் முற்றிலும் அழிந்து கொண்டிருக்கிறது; மஹ்மூத் அப்பாஸுக்கும் அவர் பகுதி மக்களுக்கும் சின்னக் கீறல்கூட ஏற்படாமல் ஹமாஸை அழித்தொழிக்கிறோம் என்ற பெயரில் கஸ்ஸா மக்களை இஸ்ரேல் குறிபார்த்து அழித்தொழிக்கிறது. கஸ்ஸா குழந்தைகளும் பாடசாலைகளும்தாம் இஸ்ரேலின் பிரதானக் குறி; அக்குழந்தைகள் வருங்காலத் தீவிரவாதிகளன்றோ?

இத்தனை அநியாயங்களுக்கும் அடிப்படைக் காரணம் 'வீட்டோ' என்ற சர்வாதிகாரப் பேரழிவு ஆயுதம்! 'வீட்டோ' என்ற இலத்தீன் சொல்லுக்கு "மறுக்கிறேன்" என்பது உண்மையான பொருளாம். ஆனால், "அழிக்கப் போகிறேன்" என்பதே நடப்பிலுள்ள, நடைமுறைப் பொருளாக ஆகி விட்டது.

அமெரிக்கா, தனது வன்நடத்தைக் கூட்டாளியான இஸ்ரேலைக் காப்பதற்காகப் பயன் பாட்டில் வைத்திருக்கும் வீட்டோ என்ற ஜனநாயகக் கேலிக்கூத்துக் குறித்துச் சுருக்கமாக இங்குக் காண்போம்.

189 நாடுகள் அங்கம் வகித்தாலும் அமெரிக்காவின் கைப்பாவைதான் ஐக்கிய நாடுகள் சபை என்பது. ஐ.நா. சபையின் உள் அமைப்பான பாதுகாப்புப் பேரவை United Nations Security Council (UNSC)இல் மொத்தம் 15 நாடுகள் பொறுப்பு வகிக்கின்றன. அந்தப் 15 நாடுகளுள் 'நிரந்தர உறுப்பினர்கள்' என்ற பெயரில்:

1. அமெரிக்கா

2. ரஷ்யா

3. சீனா

4. ஃப்ரான்ஸ்

5. இங்கிலாந்து

ஆகிய ஐந்து நாடுகள் உள்ளன. இவை வல்லரசு நாடுகள் எனச் சொல்லப் படுபவை.

பாதுகாப்புப் பேரவையின் தற்காலிக உறுப்பு நாடுகளாக இப்போது ஆஸ்த்ரியா (2010), ஜப்பான் (2010), உகண்டா, புர்கினா ஃபாஸோ, லிபியா, வியட்நாம், கோஸ்டா ரிகா, மெக்ஸிகோ (2010), குரோஷியா, துருக்கி (2010) ஆகியன இடம் பெறுகின்றன. தற்காலிக உறுப்பு நாடுகள் அவ்வப்போது மாற்றத்துக்கு உரியவை.

நிரந்தர-தற்காலிக உறுப்பு நாடுகளின் சில உரிமைகள்:

நிரந்தர (5) உறுப்பு நாடுகள் மற்றவை
அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம் - Nuclear Non-Proliferation Treaty (NPT). கூடாது
புதிய அணு ஆயுதச் சோதனை செய்யலாம். கூடாது Comprehensive Test Ban Treaty (CTBT)
தீர்மானங்கள் கொண்டு வரலாம். தீர்மானத்தில் பரிந்துரைக்க மட்டுமே முடியும்.
பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டலாம். பாதுகாப்புப் பேரவையில் கலந்து கொள்ளலாம் - பேரவை அனுமதித்தால்.
உறுப்பு நாடுகளில் ஏதேனும் பிரச்சினை என்றால் அது குறித்து விசாரணை நடத்தலாம். முடியாது.
பிரச்சினைகளுக்கான தீர்வைப் பரிந்துரைக்கலாம். கருத்துச் சொல்லலாம்.
'தவிர்க்க முடியாத சூழல்' அல்லது 'பேரழிவு ஆயுதம்' போன்ற ஏதாவது பொய்க் காரணம் கூறி நேரடியாகப் போர் நடவடிக்கையில் ஈடுபடலாம். எடுக்கலாம் (வியட்நாம், வடகொரியா, இராக் போர்கள்). முடியாது.

தற்காலிக உறுப்பினர்கள் உட்பட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து, ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும் ஒரேயொரு 'நிரந்தர உறுப்பு' நாடு 'வீட்டோ' என்று சொல்லி விட்டால் எவரும் எதுவும் செய்ய முடியாது.

'வீட்டோ' என்பது, 'ஜனநாயகப் பேரரசு' என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்கா, தன் கையில் வைத்துக் கொண்டு தனது செல்லக் கள்ளக் குழந்தையான இஸ்ரேலுக்கு விளையாடக் கொடுக்கும் விளையாட்டுப் பொருளாகும்.

தமக்குள் ஒற்றுமை இல்லாத முஸ்லிம் அரசுகளை ஏமாற்றி, திட்டமிட்டு இஸ்லாமிய எதிரிகள் பலரால் உருவாக்கப் பட்டாலும் இஸ்ரேல் என்ற சர்வதேச பயங்கரவாத நாட்டிற்குக் குற்றங்கள் அனைத்திலும் உடந்தையாகத் திகழும் அமெரிக்கா, தனது நயவஞ்சகத்தின் மூலம் மத்தியக் கிழக்கின் முஸ்லிம் நாடுகளை ஒன்றோடொன்று சேரவிடாமல் பார்த்துக் கொள்வதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

இஸ்ரேலுக்கு இனஅழிப்பு வெறி தலைக்கேறும் போதெல்லாம் ஃபலஸ்தீனர்கள் மீது தன் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறது. அண்மையில் லெபனான் பக்கம் இது போலத் திரும்பினாலும் ஹிஸ்புல்லாஹ்விடம் அடிபட்டுப் பின்வாங்கி ஓடியிருக்கிறது இஸ்ரேல்.

கஸ்ஸா மீது (27.12.2008இல்) இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து மூன்றாவது வாரம் தொடங்கி விட்ட இதுகாறும் 1000க்கும் அதிகமான ஃபலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்; கொல்லப் பட்டவர்களுள் குழந்தைகளே அதிகம். ஐயாயிரம் பேருக்கு மேல் படுகாயமடைந்துள்ளனர். ஏறத்தாழப் பாதிக்கு மேல் வீடிழந்து வீதியில் நிற்கின்றனர். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறி விட்டனர்.

மனிதாபிமானத்துக்கு எதிராகச் செயல் படுவது இஸ்ரேலுக்குப் புதிய ஒன்றல்ல; இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. சபையின் அனைத்துத் தீர்மானங்களையும் படித்தே பார்க்காமல் அது குப்பைக் கூடையில் வீசியெறிந்து விடும். படிக்க வேண்டிய நிலை வந்தால் இருக்கவே இருக்கிறது அமெரிக்கா.

உலகின் மற்ற நாடுகளைக் கட்டுப்படுத்தும் ஜெனீவா ஒப்பந்த சரத்துகள் முதல், ஒப்புக்குச் சமாதானப் பேரவை என்ற பெயரில் செயல்படும் அமெரிக்காவின் கைப்பாவை ஐ.நாவின் தீர்மானங்கள் வரை எதையுமே இஸ்ரேல் கண்டு கொள்வதில்லை. உலக நாடுகளின் நெருக்குதலுக்குப் பணிந்துக் கடந்த 9.1.2009ஆம் தேதி இஸ்ரேலுக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானத்தில் கூட, ஃபலஸ்தீனுக்குள் அத்துமீறி நுழைந்து அநியாயம் இழைத்து வரும் இஸ்ரேலை உடனடியாக வெளியேற எச்சரிக்கை விடுப்பதை விடுத்து, கவனமாக "இரு தரப்பும் போரை நிறுத்த முன்வர வேண்டும்" என ஐ.நா ஒரு சிறு முனகலை வெளிப்படுத்தியது. இச்சிறு முனகலைக் கூடப் பொறுத்துக்கொள்ளாத இஸ்ரேல் அதற்காக, கஸ்ஸாவிலுள்ள ஐ.நா. அலுவலகக் கட்டடத்தின் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது.

ஐ.நா. அலுவலகத்தை இஸ்ரேல் தரைமட்டமாக்கியவுடன், "இதுகாட்டுமிராண்டித்தனமாகும்; இதற்காக இஸ்ரேல் மிகப்பெரிய விலை தர வேண்டியிருக்கும்" என தற்பொழுது மத்திய ஆசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் பேன் கி மூன் கூறியுள்ளார். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஃபலஸ்தீன் மக்களின் உயிர்களையும் உடமைகளையும் சின்னாபின்னமாக்கிய இஸ்ரேலை எதிர்த்துக் கடுமையாக ஒரு சொல் உதிர்க்க எழாத நாக்கு, அவர்களது ஒரு கட்டிடம் தரைமட்டமானவுடன் எழுந்துள்ளது. அப்பாவிகளின் உயிருக்கு உலக அமைதிப் பேரவை வைத்துள்ள மதிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது!  

முஸ்லிம் நாடுகள் என்றால் முந்திக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு எழுதப்படாத அனுமதி பெற்றுள்ள அமெரிக்காவினை அனுசரித்துப் போவதையே பெயருக்கு "நடுநிலை நாடுகள்" எனச் சொல்லிக் கொள்ளும் நாடுகளும் கடைபிடிக்கும் நிலையில், எல்லா ஆதரவையும் இழந்து தங்கள் மீது அத்துமீறி அராஜகம் புரிந்து வரும் இஸ்ரேலைக் கல்லையும் வெறும் கையையும் கொண்டு தீரத்துடன் எதிர்த்து நிற்கும் ஃபலஸ்தீனியர்களுக்காக முஸ்லிம்கள் நாடுகள் இதுவரை என்ன செய்திருக்கின்றன?

 

இரகசியமாகவும் வெளிப்படையாகவும் இஸ்ரேலோடு வணிக உறவு வைத்திருக்கும் வளைகுடா நாடுகள், இஸ்ரேலுடனான தங்கள் வணிக உறவுகளைக்கூட துண்டித்துக் கொள்ள முன்வரவில்லை என்பது வெட்கக் கேடான விஷயம்.

 

'ஃபலஸ்தீன் பிரச்சனையில் மூன்றாவது மனிதன் போன்று ஒப்புக்கு ஒரு கை கொடுக்கும் நிலைபாடு எடுக்கும் உலக முஸ்லிம்கள், மனப்பூர்வமாக இப்பிரச்சனையில் எவ்வகையில் என்ன செய்ய இயலும் என்பதைக் குறித்துச் சிந்திப்பதோடு ஃபலஸ்தீன் பிரச்சனையில் உலக முஸ்லிம்களின் தலையீடும் பங்கும் எந்த அளவிற்கு ஈடுபாட்டோடு இருக்க வேண்டும் என்பதைக் குறித்தும் ஆராய வேண்டியது அவசியம்.

 

இன்று, ஃபலஸ்தீன் பிரச்சனை என்றாலே அது, சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டு அடக்கி ஒடுக்கப்படும் ஒரு சமூகத்தின் நிலைநிற்பிற்கான போராட்டமாக நிலைப்பாடு எடுப்பதோடு நிறுத்திக் கொள்ளும் நிலை உலக நடுநிலைவாதிகளிடையேயும் ஃபலஸ்தீனர்கள் என்றால் முஸ்லிம்கள் என்ற வகையில் சகோதரர்களுக்கு எதிராக நிகழ்த்தப் படும் கொடுமைகளுக்காக மனம் வருந்தி அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளும் நிலை உலக முஸ்லிம்களிடையேயும் நிலவி வருகிறது.

 

ஃபலஸ்தீன் பிரச்சனையுடன் உலக முஸ்லிம்களுக்கான தொடர்பு என்பது வெறும் நிலம் சார்ந்த விஷயம் மட்டும்தானா?

 

இல்லை; நிச்சயமாக இல்லை.

 

முஸ்லிம்களின் முதல் கிப்லா, - மஸ்ஜிதுல் அக்ஸா - இதுவே இப்பிரச்சனையின் மூலக்கரு.

 

உலக முஸ்லிம்களின் முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸா, ஃபலஸ்தீன் மண்ணில் இருந்த ஒரே காரணத்திற்காக அல்லவா, ஃபலஸ்தீன் சமுதாயம் தன் சொந்த இருப்பிடம் இழந்து, இஸ்ரேலால் அடக்கி ஒடுக்கப்படுகிறது?.

 

பிரச்சனையின் இந்த யதார்த்த உண்மையை உலக முஸ்லிம்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

 

இதனை மனதில் நிறுத்திச் சிந்தித்தால், ஃபலஸ்தீனுக்கான போராட்டம் என்பது உலக முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் மீது கடமை என்பது தெளிவாகும்.

 

இஸ்ரேல் கொன்றொழிக்கும் அப்பாவிக் குழந்தைகளையும் பெண்களையும் கஃபன் பொதியத் தேவையான துணிகளையும் ஏதோ நம்மால் இயன்ற சிறு தொகையையும் அளித்து விட்டு, தினசரித் தொழுகையில் ஒன்றோ இரண்டோ முறை "குனூத்" ஓதிவிட்டால் தன் கடமை முடிந்தது என்பது போன்ற அணுகுமுறை அநியாயம் இழைக்கப்படும் அந்த மக்களுக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித் தந்து விடுமா?

 

கூண்டுக்குள் அடைத்து வைத்துக் கூட்டங் கூட்டமாக நரவேட்டை நடத்திக் கொண்டிருப்பது போதாதென்று, "ஃபலஸ்தீன் மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதற்காக ஒரு அமைச்சரை நியமித்துள்ளதாக" இஸ்ரேல் இன்று அறிவித்துள்ளது. இதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்றால், கஸ்ஸா மக்களைக் கொன்றொழிப்பதை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு ஃபலஸ்தீனில் இரத்த வேட்டை நடத்தி வரும் இஸ்ரேல், அந்த மக்களுக்காக உலகின் மற்ற நாடுகள் அனுப்பும் நிவாரணப் பொருட்களையும் தடுத்து, அவர்களை மொத்தமாக ஒழிப்பதற்கான நடவடிக்கையே இது என்பது இஸ்ரேலின் குள்ளநரித் தனத்தைக் கருத்தில் கொள்ளும் எவருக்கும் எளிதாகப் புரிந்து கொள்ளத் தக்க 'உட்பொருள்'தான் என்பது தெளிவாகும்.

 

ஏற்கெனவே இரான் அனுப்பியுள்ள நிவாரணபொருட்கள் அடங்கியக் கப்பலைத் தடுத்து வைத்துள்ள இஸ்ரேல், உலக நாடுகளிலிருந்து வரும் நிவாரணபொருட்களைக் கஸ்ஸாவினுள் செல்ல அனுமதிக்காமல் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில், பத்தோடு பதினொன்றாக வெறும் நிவாரணப் பொருட்களை மட்டும் அனுப்புவதால் என்ன பயன்? என்பதையும் அத்தோடு தங்களின் கடமை முடிந்து விட்டதா? என்பதையும் மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது.

 

மனிதனைப் போன்று கூட்டாகச் சிந்தித்து முடிவுகள் எடுத்து எதிரிகளிடமிருந்துத் தங்களைப் பாதுகாக்கத் தெரியாத ஐந்தறிவுள்ள மிருகங்கள்கூட, தங்களது சக்திக்கு மீறிய பலசாலி மிருகங்களின் தாக்குதலின்போது தமக்குள் கூட்டாக ஒன்றிணைந்து நின்று ஒன்றையொன்று பாதுகாத்துக் கொள்கின்றன.

 

இன்றைய ஃபலஸ்தீன் பிரச்சினை முதல், உலகின் அனைத்து முஸ்லிம்களுக்கு எதிரான எதேச்சதிகார நாடுகளின் அத்துமீறல்களுக்கும் முஸ்லிம்களின் உடமைகள் அபகரிக்கப்படுவதற்கும் முஸ்லிம்களிடையேயுள்ள ஒற்றுமையின்மையும் சக்தி வாய்ந்த ஒரு தலைமையின்மையுமே மூல காரணங்களாகும். அனைத்து நியாயங்களும் தன்னகத்தே கொண்டுள்ள ஃபலஸ்தீன் மக்களின் இன்றைய நிலைக்கு, உலக முஸ்லிம்களும் குறிப்பாக முஸ்லிம் ஆட்சியாளர்களும் ஒருவகையில் காரணமாவார்கள். 19 நாட்களைக் கடந்து தற்பொழுதும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி திமிருடன் கஸ்ஸாவினுள் அட்டூழியம் புரிந்து வரும் இஸ்ரேலின் செயல்பாட்டிற்கு எதிராக, உலகைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான எல்லாவித வளங்களையும் ஒருங்கே பெற்றுள்ள இந்த முஸ்லிம் சமுதாயம் எதுவும் செய்ய முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதை நினைத்துப் பார்த்தால், ஒரு தலைமையையும் ஒற்றுமையையும் விரும்பாத இஸ்லாமிய எதிர்ப்புச் சிந்தனை,  நமது சமுதாயத்தின் ஆட்சியாளர்கள் முதல் அடிமட்டக் குடிமக்கள்வரை ஊறிப் போனதைத்தான் வெளிப் படுத்துகிறது.

 

தொலைநோக்கு நடவடிக்கையாக மேற்கொள்ளத் தக்கவை யாவை?

 

குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள வீட்டோ அதிகாரம் முற்றிலுமாக ஒழிக்கப் படவேண்டும்.

ஐ.நாவில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

கைகள் கட்டப்படாத முழு அதிகாரம் படைத்ததாக ஐ.நா உருவாக்கப்பட வேண்டும்

இது நடக்காத பட்சத்தில், உலகின் நடுநிலை நாடுகளுடன் இணைந்து "சுய அதிகாரம் படைத்த" உலக அமைதி சபை ஒன்றை உருவாக்குவதற்கு முஸ்லிம் ஆட்சியாளர்கள் முயல வேண்டும். அதற்கான முயற்சியில் ஏற்படும் சோதனைகளை எதிர்கொண்டு, முன்னேறுவதைப் பொறுத்தே, எதிர்காலத்தில் "அநியாயம் இழைக்கப்படும் மக்களுக்கான நியாயம்" வழங்கப்படுவது உறுதிப் படுத்தப்படும்.

தங்களின் யதார்த்தக் கடமைகளை மறந்து, அக்கிரமங்களுக்கு எதிராகக் குரல்கொடுக்கவும் அசத்தியம் அழியும்வரைக் கூட்டாக இணைந்துப் போராடவும் வேண்டிய இந்தச் சமுதாயம், மறந்துபோன தனது கடமையை மீட்டெடுத்து, நியாயத்தை நிலைநாட்ட ஓரணியில் திரண்டு போராட முன்வரவேண்டும்.

இதுவே ஃபலஸ்தீன் பிரச்சனைக்கு மட்டுமின்றி அநீதிக்குள்ளாகும் எந்த நாட்டையும் பாதுகாக்கக் கூடிய - உண்மையான 'பாதுகாப்புக் கவுன்ஸிலுக்கான' ஒரே தீர்வாக இருக்கும்!

கருத்துக்கள் (6)add comment

எழுதியவர்: கனி , January 15, 2009 21:26

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் வல்ல அல்லாஹ் பாலஸ்தீனமக்களுக்கு உதவிசெய்வானாக. ஆமீன். காஸா மக்களை காப்பாற்றுவானாக. ஆமீன். ஐ.நா அமைப்பில் எல்லா நாடுகளுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக முஸ்லிம்நாடுகள் அனைத்தும் சேர்ந்து தனி சுதந்திர பாலஸ்தீனம் உருவாக உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். பாலஸ்தீனத்திக்கென்று அனைத்து முஸ்ஸிம் நாடுகளும் தங்கள் தங்கள் சார்பாக தனிப்படைகளை அமைத்து எல்லா முஸ்லிம் நாடுகளின் கூட்டுப்படையாக புதிய தரை-கப்பல் மற்றும் வான் படைகள் உருவாக்கப்பட்டு பாலஸ்தீன அனைத்துப் பகுதியிலும் நிறுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை உலக முஸ்லிம் நாடுகள் செயல்படுத்தவேண்டும். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் முஸ்லிகளுக்கு எதிராக செயல்படுகின்ற நாடுகளின் வலிமைகளைக் குறைக்க ஏக இறைவனிடத்தில் அழுது துஆச் செய்து வரவேண்டும்.



எழுதியவர்: Thaz , January 16, 2009 17:20

புறக்கணியுங்கள், அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே. இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய சார்பு நிறுவனங்களின் பொருட்களை புறக்கணியுங்கள். இந்த நிறுவனங்கள் எல்லாம் கொள்கை(Policy) ரீதியாக, நிதி(Funding) மூலமாக இஸ்ரேலுக்கு ஆதரவு தருபவை. இதில் 75% நிறுவனங்கள் சயோனிச(Zionism) கொள்கை ஆதரவுடைய பங்குதாரர்களால் நடத்தப்படுபவை. இந்த நிறுவன பொருட்கள் இல்லாமல், நிச்சயமாக ஒரு முஸ்லீம், முஸ்லீமாவால் இன்ஷாஅல்லா வாழ முடியும். அப்படியே ஒரு பொருள் அவசியம் தேவைபட்டால், இந்த புறக்கணிப்பு பட்டியலில் இல்லாத மாற்று நிறுவன(Alternate Bran) பொருட்களை பயன்படுத்தலாம். இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதன் மூலம் நமது பாலஸ்தீனிய சகோதர, சகோதரிகளின் துயர் துடைக்க எல்லாம் வல்ல அல்லா நமக்கு உதவி புரிவானாக. புறக்கணிப்பு பொருட்களின் பட்டியல்: http://www.inminds.co.uk/boycott-brands.html http://www.inminds.co.uk/boycott-israel.php#companies



எழுதியவர்: abdul azeez , January 16, 2009 21:45

சகோதரர் தாஜ் அவர்களின் யோசனை முறையும் கை ஆளப்படவேண்டும். முஸ்லிம்கள் ஒன்று திரள்வோமாக.அஸ்ஸலாமு அலைக்கும்.அனைத்து முஸ்லிம்களுக்கும். மா சலாம். அப்துல் அசீஸ்.



எழுதியவர்: Iqbal , January 17, 2009 07:50

வீட்டோ என்ற கயமைத்தனம் பற்றி எளிய தமிழில் முதன் முதலாக தெளிவாகப் புரியவைத்துள்ளீர்கள். நன்றிகள்.



எழுதியவர்: Uthayan , January 17, 2009 13:23

பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்சினையில் மேலும் புதிய தகவல்கள், புதிய கோணங்கள் தெரிய கீழுள்ள சுட்டியை அழுத்தி பார்க்கவும். http://kalaiy.blogspot.com/2009/01/blog-post_17.html



எழுதியவர்: indian , January 20, 2009 19:09

அறுபது வயதான இஸ்ரெலிடம் இன்று பலதரப்பட்ட ஆயுதஙகளும் நவீனதொழில் நுட்பமும் உள்ளன ஆனால் பாலஸ்தினர்களிடம் எந்தவிதமான நவீன ஆயுதஙளும் இல்லை உரிமைக்காக போராட மன உறுதி மட்டுமே உள்ளது அவர்களுக்கு உதவிட இறைவனே போதுமானவன் ஜனநாயகத்தை நிலைனிறுத்த மற்ற நாடுகளை வற்புறுத்தும் அமெரிக்கா ஐநா சபையை தன் பிடிக்குள் வைத்துள்ளது எந்தமுறையிலான ஜநனாயகம் என்பது தெரியவில்லை வல்லரசு நாடுகளுக்கு மட்டும் தான் எல்லாவற்றிலும் அதிகாரம் என்றால் மற்ற நாடுகள் ஏன் ஐநா சபையை அங்கீகரிக்க வேன்டும் அதனை புரக்கணிக்க வேண்டாமா? ஒரே கொள்கை உடைய நாடுகள் ஏன் ஒன்று சேர்ந்துஒரு அமைப்பை உருவாக்ககூடாது ஒரு கூட்டு ராணுவ அமைப்பை ஏர்படுத்தலாமே இன்று தனக்கு பனியாத நாடுகளை ஒவ்வொன்றாக வேட்டை ஆடும் அமெரிக்கா நாளை நம்மையும் ஏதாவது காரணம் சொல்லி வேட்டையாடாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?



கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

3: 150 அல்லாஹ்தான் உங்கள் அதிபதி. இன்னும் அவனே உதவி செய்வோரில் சிறந்தவன்.

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

mohamed : அல்லாஹ அக்பர்.......


kamal : மின் அஞ்ஜஅல் அனுபினென் திரும்ப வந்துவிட்டது.


ABDUL KALAM.M : இன்ஷாஅல்லாஹ் அவள் முழு குர்ஆனையும் இ...


NAINAR MOHAMED.M(KHALEEL) : டாக்டர் முஹம்மட்த் அலி மிக சிரப்பான கட்டுரை தந்து இருக்கின்ரார் பாரட்டுக்கல்


hussain ali : இதனை மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து...


sheik : 'தேர்ந்தெடுக்கப்படும் நூல், சென்னை ர...


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம் : முஹம்மத் அலி அவர்களின் சமுதாய அக்கறை...


Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...


Yasin.m : திருகுரானை எப்படி பதிவிறக்கம் செய்வ...


சாபிரா : அருமையான தொடர். வாழ்த்துக்கள்


Syed : மறந்த வரலாற்றை நினைவுப்படுத்துகிறீர்கள். கண்களில் கண்ணீர் வருகிறது. தொடரும்


M. Abdul Hameed. : வ அலைக்குமுஸ் ஸலாம் // .........இதுதான் சில ...



You are here  : முகப்பு தலையங்கம் 'வீட்டோ' என்ற பேரழிவு ஆயுதம்