| சிமி-டெஹல்கா அறிக்கை - பகுதி 6 |
|
|
| தொடர்கள் - ஆய்வுக் கட்டுரைகள் | |||
| திங்கள், 24 நவம்பர் 2008 15:04 | |||
|
ஷாஹித் பத்ர் ஃபலாஹி உத்தரபிரதேசம் அஸங்கடில் அவரது வீட்டில் வைத்து 27 செப்டம்பர் 2001இல் கைது செய்யப் பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம்: சமுதாய நல்லிணக்கத்தைத் தகர்க்கத் தூண்டும் வகையில் பேசியது. ஆதாரம்: ஒரு மேடைப் பேச்சின் ஒளிகோப்பு, ஒரு துப்பாக்கிப் படம் போட்ட குறுந்தகடு மற்றும் சில கேசட்கள். 27 செப்டம்பர் 2001 அன்று சிமியின் முன்னாள் தலைவர் ஷாஹித் பத்ர் ஃபலாஹியும் உடனிருந்த மூவரும் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் நுழையும் பொழுது உடனிருந்தவர்கள் கேட்ட, "நமக்கு எப்பொழுது சுதந்திரம் கிடைக்கும்?" கேள்வியை அவர் இப்பொழுதும் நினைவு படுத்துகின்றார். இந்தியாவைத் தகர்க்க நினைக்கும் பாகிஸ்தானிலுள்ள ஜிஹாதி அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு செயல்படுவதன் மாஸ்டர் பிரைனாக, அரசு ஃபலாஹியைக் கருதுகின்றது. ஆனால், அரசின் இந்தப் பிரச்சாரம் அனைத்தும் பொய் என நிறுவக் கூடியவையாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட அரசின் வழக்குகளே அமைந்துள்ளன. கைது செய்யப்படுவதற்கும் 11 தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்திலுள்ள பஹ்ரயச் என்ற நகரில் முஸ்லிம்களின் ஒரு பொதுக் கூட்டத்தில் அவர் பங்கெடுத்திருந்தார். நகரின் காவல்நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் மட்டுமே தூரத்திலுள்ள பெண்கள் கல்லூரியில் நடந்த அக்கூட்டம் காவல் துறையின் அனுமதி பெற்று நடந்ததாகும். அந்நிகழ்ச்சியைக் காவல்துறை ஒளி ஆவணமாகப் படம் பிடிக்கவும் செய்திருந்தது. ஆனால் மூன்று நாட்களுக்குப் பின்னர், "அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததாகவும் சமுதாய நல்லிணக்கத்தைத் தகர்க்கும் விதம் பேசியதாகவும்" கூறி காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. "நீங்கள் நல்ல குடிமகன்களாக வளர வேன்டும். தாய்-தந்தை பெருமை கொள்ளும் விதம் நீங்கள் நல்ல பழக்க வழக்கங்கள் உடையவராக வேண்டும்" முதலான விஷயங்களை அன்று இளைஞர்களிடையே பேசியதை அவர் நினைவு படுத்துகின்றார். நூற்றுக்கணக்கானவர்கள் முன்னிலையில் அன்று அவர் அப்பேச்சைப் பேசியிருக்க, வழக்கில் சில காவல்துறையினரை மட்டுமே சாட்சிகளாகக் காவல்துறை இணைத்தது. நீதிபதி காவல்துறையினரிடம் கேட்டார்: "வழக்குப் பதிவு செய்ய நீங்கள் ஏன் மூன்று தினங்கள் எடுத்துக் கொண்டீர்கள்?. அவரது பேச்சின்போதோ அவரது பேச்சின் காரணமாக அதற்குப் பின்னரோ சமுதாயப் பிரச்சனைகள் ஏன் உருவாகவில்லை?" இருப்பினும் ஃபலாஹியும் மற்ற 11 நபர்களும் நாட்கணக்கில் இவ்வழக்குக் காரணமாக சிறையில் கழித்தனர். "அதிவேக நீதிமன்றமாக" இருந்த போதிலும் வழக்கு ஐந்து வருடங்களாக இழுத்துக் கொண்டு சென்றது. வழக்கினை அரசு வாபஸ் வாங்கிய பிறகும் அதுவே நடந்தது. வழக்கை வாபஸ் வாங்குவதை ஏற்றுக் கொள்வதிலிருந்து நீதிபதியைப் பின்வாங்க வைக்க நீதிமன்றத்தில் ஹிந்துத்துவ வழக்கறிஞர்களின் ஒரு கூட்டம் நாடகத்தையே அரங்கேற்றியது. இறுதியில் நீதிமன்றத்திலுள்ள ஒரு மூடிய அறையில் வைத்து ஃபலாஹியின் பேச்சைக் காவல்துறையினர் நீதிபதிக்குப் போட்டுக் காட்டினர். காவல்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆர், ஃபலாஹியின் பேச்சைச் சத்தியபூர்வமாகப் பிரதிபலிக்கவில்லை என்பதை நீதிபதி கண்டு கொண்டார். ஃபலாஹியின் பேச்சில் ஒட்டுமொத்தமாகப் பிரச்சனைக்குரியதாக நீதிபதி கண்டறிந்தது கூறியது, "சீக்கியர்கள் வைத்துக் கொள்ளக் கூடிய கத்தியைப் போன்றோ ஹிந்து சன்னியாசிகளின் திரிசூலம் போன்றோ ஏதாவது சிறிய வாளை வைத்துக் கொண்டு நடமாடுவதற்கான அனுமதியை முஸ்லிம்கள் பெற வேண்டிய நிலை வரும்" என்ற முன்னறிவிப்பாகும். ஆனால், "வெறும் ஒரு முன்னறிவிப்பு என்பது குற்றமாகாது" எனக்கூறி 2006 செப்டம்பரில் அரசு ஃபலாஹியின் மீது சுமத்திய வழக்கை வாபஸ் வாங்க அனுமதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஃபலாஹியின் முகத்தில் அப்பொழுதும் கவலையின் ரேகைகள் நிழலிட்டன! அவர் கைது செய்யப்பட்ட பின்னர் மேலும் மூன்று வழக்குகளை அவர் மீது இடையில் நுழைத்திருந்தனர். அவரது வலது கையில் காஷ்மீர் வரலாற்றைத் தவறாகக் காட்டுகின்ற ஒரு காலண்டர் இருந்தது என்றும் அதில் இந்து அரசர்களின் காலத்தில் காஷ்மீரில் முஸ்லிம்கள் அடக்குமுறையையும் கொடுமையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் குறிப்புகள் இருந்ததாகக் குற்றம்சாட்டி ஒரு வழக்குப் பதிவு செய்யப் பட்டிருந்தது. மற்றொன்று, ஃபலாஹி முன்பே உளவாளியாக இருந்ததாகவும் பொய்யான தகவல்களையும் வேற்றுமையையும் அரசு எதிர்ப்பையும் பரப்பக் கூடியவராக இருந்ததாகவும் ஃபலாஹியைப் பற்றி அவ்வழக்குக் குற்றம் கூறியது. அவருக்கு உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் மறுக்கப் பட்டது. விசாரணை நீதிமன்றத்தில் ஆசிரியராக மாறிய ஒரு நீதிபதி, அரசு வழக்கறிஞரிடம், "காஷ்மீர் வரலாற்றைப் படித்து விட்டு, ஒரு வாரத்திற்குப் பின் அதன் முழு விவரங்களுடன் வர வேண்டும்" என்றும் கூறினார். ஆனால், அரசு வழக்கறிஞர் அந்த வரலாற்று தேர்வில் தோற்றுப் போனார். அதுமட்டுமல்ல, ஃபலாஹியிடமிருந்து கைப்பற்றப்பட்ட காலண்டரின் விஷயத்தில் இரு சாட்சிகள், "தவறான சாட்சி கூறுவதற்குக் காவல்துறை தங்களை நிர்பந்தம் செய்தது" என்று நீதிபதியிடம் தெரிவித்தனர். மற்றைய சாட்சிகள் அனைவரும் காவல்துறையினராக இருந்தனர். 2003இல் நீதிமன்றம் 'காலண்டர் வழக்கை'த் தள்ளுபடி செய்து, ஃபலாஹியைக் குற்றவாளி அல்லர் எனத் தீர்ப்புக் கூறியது. மூன்றாவது வழக்கு அதி விசித்திரமாக இருந்தது. சிமியைச் சட்டவிரோத இயக்கமாக அறிவித்த அன்று இரவு, ஃபலாஹி ஒரு கூட்டத்தில் பேசியதாகவும் "ஹிந்துஸ்தான் முர்தாபாத்" என அகங்காரத்துடன் கத்தியதாகவும் கூறியது அவ்வழக்கு. ஒரு வாரத்திற்குப் பின் ஃபலாஹியின் அலுவலகத்திலிருந்து துப்பாக்கிப் படம் போட்ட ஒரு குறுந்தகட்டையும் சில கேசட்களையும் கைப்பற்றியதாகக் காவல்துறை கூறியது. "அவரைக் கைது செய்த அன்றிரவே இந்த ஆதாரங்களை நீங்கள் ஏன் கைப்பற்றவில்லை?" என்று நீதிபதி கேட்டார். காவல்துறை கூறியது: "எஜமானே! நாங்கள் அதை மறந்து விட்டோம்". பின்னர் அவ்வழக்கு மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்ட்ரேட்டிற்குத் திரும்ப அனுப்பப் பட்டது. நான்கு வருடங்களாக அவ்வழக்கு ஓரங்குலம்கூட நகரவில்லை. மற்றொரு விவரங்கெட்ட வழக்கில், ஃபலாஹி டில்லியிலுள்ள ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா சுவரில் சுவரொட்டி ஒட்டியதற்காகக் கைது செய்யப்பட்டிருந்தார். அது, ஹிந்தியில் "இன்ஷா அல்லாஹ் நாங்கள் நிச்சயமாக ஒருநாள் அங்கு சுஜூத் செய்வோம்" என்ற வாசகத்துடனுள்ள பாபரி மஸ்ஜிதின் சுவரொட்டியாகும். நீதிபதி அரசு வழக்கறிஞரிடம் கேட்டார்: "ஒரு தேசியக் கட்சியின் தலைவர் சாலையோரத்தில் ஒரு சுவரில் சுவரொட்டி ஒட்டியதற்காகக் கைது செய்யப் படுவது சற்று ஓவரான விளையாட்டல்லவா?". அந்த வழக்கிலும் காவல்துறை நிறுத்திய ஒரு பொது சாட்சி, "ஃபலாஹிக்கு எதிராகப் பொய் சாட்சிக் கூறுவதற்குக் காவல்துறை தன்னை நிர்பந்தம் செய்ததாக"க் கூறினார். நீதிபதி ஃபலாஹியைக் குற்றவாளி அல்லர் எனத் தீர்ப்பளித்தார். 2000த்தில் உ.பி அஸங்கடில் ஃபலாஹி பேசிய ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், பிஜேபியின் நகரத்தலைவர் கல்ராஜ் மிஷ்ராவைத் தாக்கிப் பேசியதாகக் குற்றம் சுமத்திய மற்றொரு வழக்கும் அவரது தலைக்கு மேலாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அவ்வழக்கிலும் ஃபலாஹி சிறைசாலையில் பலமாதங்கள் கிடந்துள்ளார். நான்கு வருட காலமாகியும் இதுவரை அவ்வழக்கில் காவல்துறை ஒரு குற்றப் பத்திரிகைகூட சமர்ப்பிக்கவில்லை. இறுதியில் அலஹபாத் உயர் நீதிமன்றத்திலிருந்தே ஜாமீன் கிடைத்தது. இதுபோன்ற பொய் வழக்குகளில் 30 மாத காலம் ஃபலாஹி சிறையில் கிடந்துள்ளார். சிமி தடையை ரத்து செய்த நீதிமன்றத் தீர்ப்பில் மகிழ்ச்சியுடன் இருக்கும் வேளையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. உச்சநீதிமன்றம் தங்களைச் சட்டத்திற்குட்பட்ட அமைப்பாக மீண்டும் அறிவிக்கும் என்ற அதீத நம்பிக்கையில் அவர் தற்பொழுது உள்ளார். இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (0)
![]() கருத்து எழுதுக :
|