| திரை விலகும் ஜாமிஆ நகர் என்கவுண்ட்டர் நாடகம் |
|
|
| செய்திகள் - இந்தியச் செய்திகள் | |||
| புதன், 24 செப்டம்பர் 2008 21:11 | |||
நாட்டை உலுக்கிய அஹ்மதாபாத், பெங்களூர், டில்லி தொடர் குண்டு வெடிப்புகளால், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குத் தாக்குப் பிடிக்க இயலாமல், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் தலையை ஆளாளுக்கு உருட்டிக் கொண்டிருந்தனர். கடந்த வெள்ளி, செப்டம்பர் 19 அன்று காலை, ஏறத்தாழ முழுதும் நடுத்தர முஸ்லிம்கள் வாழும் டில்லி ஜாமிஆ நகரில் பரபரப்பான காட்சிகள் சில அரங்கேறின. "என்கவுண்ட்டர்" என்று காவல்துறையினரால் வர்ணிக்கப்படும் அந்நிகழ்வில், அண்மையில் அஹ்மதாபாத், பெங்களூர், டில்லி ஆகிய நகரங்களில் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளுக்கான மூலகர்த்தா என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆதிஃப் என்பவரும் அவருடைய தோழர் ஃபக்ருத்தீன் (எ) சாஜித் என்பவரும் கொல்லப் பட்டனர். தீவிரவாதி என்று 'கருதப்படும்' மூன்றாமவர் சம்பவ இடத்திலும் தப்பியோடிய இருவரில் ஒருவர் அன்று மாலையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் தலைமறைவாகி விட்டார். இதில், டில்லி காவல்துறை சிறப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய 'என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' மோகன் சந்த் சர்மா காயமடைந்து, மருத்துவ மனையில் உயிரிழந்தார்.
பல்வேறு தேசிய ஊடகங்களிலிருந்து, சாதாரண மக்கள் வரை அனைவராலும் போலியானது எனக் கருதப்படும் இந்த என்கவுண்ட்டர் நிகழ்வைக் குறித்துக் காவல்துறை வெளியிட்டுள்ளத் தகவல்களிலிருந்து: செப்டம்பர் 19 வெள்ளி காலை 10 மணி: * அஹமதாபாத் குண்டுவெடிப்புத் தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட அபூ பாஷிர் கொடுத்தத் தகவலின்படி தொடர் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான தீவிரவாதிகள் தங்கியிருந்த டில்லி ஜாமிஆ நகரின் செய்லிங் க்ளப் சாலையிலுள்ள பட்லா ஹவுஸ் அடுக்கு மாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியிலுள்ள எல்-18 ப்ளாட்டை, டில்லி துணை கமிஷனர் சஞ்சீவ் யாதவின் தலைமையில் 20 காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். செப்டம்பர் 19 வெள்ளி காலை 11 - 11.45 மணி: * 80க்கும் மேற்பட்ட என்கவுண்ட்டர் கொலைகள் நடத்திய அனுபவம் கொண்ட இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மா, குண்டு துளைக்காத ஆடை எதுவும் அணியாமல் பைஜாமா மற்றும் குர்தா ஆடையில் தனியார் நிறுவன விற்பனையாளர் போன்று வேடமிட்டு, எல்-18 ப்ளாட் கதவைத் தட்டுகிறார். * கதவைத் திறந்த வீட்டினுள் இருந்தத் தீவிரவாதிகள், கண்ணிமைக்கும் நேரத்தில் சர்மாவை .3 எம்.எம் கைத்துப்பாக்கியால் சுட்டனர். மூன்று குண்டுகள் உடலில் பாய்ந்ததில் இரு குண்டுகள் உடலைத் துளைத்து வெளியேறின. இதில் தலைமை கான்ஸ்டபிள் பல்வான் சிங்கிற்கும் காயம் ஏற்பட்டது. * சர்மா உடனடியாகப் பக்கத்திலிருந்த 'ஹோலி குடும்ப மருத்துவமனை'க்கு எடுத்துச் செல்லப்பட்டு, வயிற்றில் துளைத்திருந்த குண்டை அகற்றுவதற்காக மருத்துவர்களால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். * ஸ்பெஷல் செல் துணை கமிஷனர்கள் கர்னால் சிங் மற்றும் அலோக் குமார் ஆகியோர் உடனடியாக ஜாமிஆ நகர் வந்தனர். * ஸ்பெஷல் செல்லிலுள்ள பல்வேறு குழுவினர் உடனடியாக ஜாமிஆ நகருக்கு வரவழைக்கப்பட்டனர். * 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஜாமிஆ நகரைச் சூழ்ந்து வளையம் அமைத்தனர். * பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்ட அதிரடிப்படையினர் மீண்டும் எல்-18 ப்ளாட்டைச் சுற்றி வளைத்தனர். * இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதன் காரணமாகப் பொது மக்களை வீட்டிலிருந்து வெளியே வரக் காவல்துறை அனுமதிக்கவில்லை. * காவல்துறை 22 முறை துப்பாக்கிசூடு நடத்தியது. தீவிரவாதிகள் 8 முறை சுட்டனர். * இதில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இருவர் தப்பியோடினர். ஒருவர் கைது செய்யப்பட்டார். * இறந்த தீவிரவாதிகளின் உடல்களைக் காவல்துறை அப்புறப்படுத்தி விட்டு, பிடிக்கப்பட்ட தீவிரவாதியை விசாரிப்பதற்காக இரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றனர். செப்டம்பர் 19 வெள்ளி காலை 11.45 மணி: * "என்கவுண்ட்டர் முடிவுக்கு வந்தது" என காவல்துறை அறிவித்தது. * ஜாமிஆ நகர்வாசிகள் வீட்டை விட்டு வெளியே வந்து, காவல்துறையினருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். அங்கிருந்து கொண்டு, "பக்கத்தில் உள்ள பள்ளிவாசலில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக"ப் புரளி கிளப்பி விட்ட ஊடகங்களுக்கு எதிராகவும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். செப்டம்பர் 19 வெள்ளி மாலை 4.00 மணி: டில்லி கமிஷனர் ஒய். எஸ். டாட்வால், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, "கொல்லப்பட்டவரில் ஒருவர், குண்டுவெடிப்புகளுக்கு மூலகர்த்தாவாகச் செயல்பட்ட இந்தியன் முஜாஹிதீன் தலைவர் ஆதிஃப்" என்று அறிவித்தார். மேலும், இத்தீவிரவாதிகளைக் குறித்து முன்னர் கைது செய்யப்பட்ட அபூ பாஷிர் எந்தத் தகவலும் தரவில்லை எனவும் டில்லி காவல்துறையினரின் தனிப்பட்ட புலன்விசாரணையில்தான் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டவர்களுமான தீவிரவாதிகளைக் குறித்துத் தகவல் கிடைத்தது எனவும் கூறினார். செப்டம்பர் 19 வெள்ளி மாலை 7.00 மணி: என்கவுண்ட்டரில் தீவிரவாதிகளால் சுடப் பட்ட என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் சர்மா சிகிச்சை பலனின்றி இறந்தார். *** பதில் கூறமுடியாத பல சந்தேகங்கள் நிறைந்த, காவல்துறை நடத்தியதாகக் கூறப்படும் இந்த என்கவுண்ட்டரைக் குறித்து நாட்டில் பல தரப்பினரிடையே "நீதி விசாரணை வேண்டும்" என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பிரபல தேசிய ஊடகங்களிலிருந்து மனித உரிமைக் கழகத்தினர்வரை முன்வைக்கும் பல்வேறு கேள்விகள் இன்னும் காவல்துறையினால் பதில் அளிக்கப்படாமல் அப்படியே அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ளன. இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக சம்பவம் நடந்த அன்றே பிரபல பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை கழகத்தினர் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட குழு சம்பவ இடத்தை ஆய்ந்துத் தங்களின் சந்தேகங்களை ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளனர். மனித உரிமைக்குழு வெளியிட்ட ஆய்வறிக்கைக் குறித்துப் பெட்டிச் செய்தியில் காண்க.
நாட்டில் நடந்தப் பலவேறு என்கவுண்ட்டர்களைப் போலல்லாமல், சம்பவம் நடந்த அன்றே பல்வேறு எதிர்ப்புகளையும் சந்தேகங்களையும் எதிர்கொண்டுள்ள இந்த என்கவுண்ட்டரைக் குறித்துக் காவல்துறை கூறுவதை அப்படியே ஏற்று முடிவுக்கு வராமல் பல முனைகளிலிருந்தும் ஆய்வு செய்ய வேண்டியது நடுநிலையான அரசின் கடமையாகும். நாட்டை உலுக்கிய அஹ்மதாபாத், பெங்களூர் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னணியில் சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் செயல்பட்டுள்ளார்கள் எனக் குற்றம் சுமத்தி, விசாரணை அதே வழியில் சென்று கொண்டிருக்கும் வேளையில்தான் மற்றொரு தொடர் குண்டு வெடிப்பு டில்லியை உலுக்கியது. ஏற்கெனவே தீவிரவாதிகளை ஒடுக்க பொடா போன்ற கடின சட்டங்கள் தேவை எனவும் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மத்திய அரசு செயல் இழந்து விட்டது எனவும் எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நடந்த டெல்லித் தொடர்குண்டுவெடிப்பு மத்திய காங்கிரஸ் அரசுக்குக் கடுமையான நெருக்கடியைக் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, என்கவுண்ட்டர் நடந்ததாகக் கூறப்படும் செப்டம்பர் 19 க்கு முந்தைய மூன்று தினங்களில், தலை நகர் டில்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடுமையான நெருக்கடியைத் தரும் பல்வேறு சம்பவங்களும் குண்டுவெடிப்புகள் நடந்த நிமிடத்திலேயே சம்பவத்துக்கு காரணம் முஸ்லிம்களே என்ற முன்முடிவோடு செயல்படுபவர்களுக்குத் தோல்வியைத் தரும்படியான சில சம்பவங்களும் நடந்தேறின. அவற்றில் சில முக்கிய நிகழ்வுகள்: 1. டில்லி குண்டு வெடிப்பு நடந்த அடுத்தடுத்த நாட்களில், "உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்ய வேண்டும்" என்றக் கோரிக்கை வலுவடைந்தது. இந்நிலையில் துறைக்கு நேரடித் தொடர்புடைய உள்துறை அமைச்சருக்கு அழைப்பு அனுப்பாமல், கட்சித் தலைவி சோனியாவின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 2. தீவிரவாதத்தை ஒடுக்க பொடா சட்டம் கொண்டு வர வேண்டும் என நெருக்கிய பாஜகவிற்கு, பின்னர் நடந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டம், "பொடா தேவையில்லை" என்ற பதிலை முடிவாக அறிவித்தது. 3. நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு, உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பில் உள்ள காவல்துறை மற்றும் உளவுத்துறை சரியாகச் செயல்படாததே காரணம் எனவும் நாட்டைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய உளவுத்துறை செயல் இழந்து விட்டது எனவும் பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படையாக அறிவித்தார். 4. என்கவுண்ட்டர் நடந்ததாகக் கூறப்படும் செப்டம்பர் 19 வெள்ளிக்கு இரு தினங்கள் முன்னர், அதாவது கடந்த புதன் செப்டம்பர் 17 அன்று இரவு கூடிய மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் "குண்டு வெடிப்புகள் தொடர்பாக முன்விதியுடன் ஒரே ஒரு சமுதாயத்தை நோக்கியே விசாரணை கொண்டு செல்லப்படுவதற்கு எதிராக" வெளிப்படையாக பெரும்பாலான அமைச்சர்கள் ஆவேசத்துடன் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கையினைத் தாக்கல் செய்த பாதுகாப்புத் துறை செயலர் நாராயணனுக்கு எதிராக மத்திய அமைச்சர் திரு. அந்துலே வெளிப்படையாகக் குற்றம் சுமத்தினார். 5. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் செப்டம்பர் 19 வெள்ளி அன்று காலை, பாதுகாப்பு விஷயமாக ஆலோசனை நடத்தக் காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அழைப்பு விடுத்திருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில்தான் டில்லி ஜாமிஆ நகரில் காவல்துறை சிறப்புப் பிரிவு துணைக் கமிஷனர் தலைமையில் என்கவுண்ட்டர் நடத்தப் பட்டது. என்கவுண்ட்டரின் பின்னணியில் மறைந்து கிடக்கும் உண்மைகள்!
தீவிரவாதிகள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் மூன்றாவது மாடியில் உள்ள பிளாட்டிலிருந்துத் தப்பியோட முனைந்த பொழுது ஸீஷான் பிடிக்கப் பட்டார் எனவும் மற்று இருவர் தப்பியோடி விட்டனர் எனவும் டில்லி காவல்துறை கூறியவை அனைத்தும் பொய்க்கதைகள் என அப்பொழுதே பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருந்தது. தீவிரவாதிகள் மூன்றாவது மாடியில் தங்கியிருந்த நிலையில் பிளாட்டைச் சுற்றி காவல்துறை வளைந்திருந்த நிலையில் எவ்வாறு இருவர் தப்பியிருக்க முடியும்? என்ற சாதாரண கேள்வி அப்பொழுதே எழுந்திருந்தது. இவை அனைத்திற்குமான விடையாக ஷிஸான் விவகாரம் பதிலளிக்கின்றது. காவல்துறையின் இத்தகைய தகிடுதத்தங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில், முஸ்லிம்களுக்கு எதிராக அரசும் ஊடகங்களும் இணைந்து நடத்தும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஜமா அத்தே இஸ்லாமி தலைமையில் பல இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கிய "இந்தியன் முஸ்லிம் கோ-ஆர்டினேசன்" என்ற கமிட்டி உடனடியாகச் சம்பவத்தை ஆய்வதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இக்கமிட்டியில் ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரா, ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த், ஜமாஅத் அஹ்லே ஹதீஸ், ஷியா அரசியல் அமைப்பு, முஸ்லிம் அரசியல் கவுன்சில், மஜ்லிஸே உலமாயே ஹிந்த் முதலான முஸ்லிம் அமைப்புகள் அங்கத்தினர்களாவர்.
சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைவருமே உயர்கல்வி கற்ற இளைஞர்களாவர். "காவல்துறை முஸ்லிம்களில் உயர்கல்வி கற்ற இளைஞர்களைக் குறி வைத்து வேட்டையாடுகின்றது. என் மகன் உண்மையில் தவறிழைத்திருந்தால், என் முன்னிலையில் வைத்தே காவல்துறை அவனைச் சுட்டுக் கொல்லட்டும். ஆனால், அது தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்" ஸெய்ஃபின் தந்தை ஆவேசப்படுகிறார். அண்டர்வேல்ட் தலைவன் அபூ ஸலீம், ஜாமிஆ நகரைச் சேர்ந்தவன் என்பதால் காவல்துறை இந்நகரை எப்பொழுதுமே ஏதாவது விஷயத்தில் சிக்க வைக்கச் சுற்றி வருவதாகவும் தற்பொழுது நடந்த சம்பவம் காவல்துறையினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தீவிரவாதி வேட்டை, காவல்துறையின் கட்டுக்கதையா? "தலைநகரில் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டவர்களைக் கைது செய்து விட்டோம்" என்றும் "இரண்டு தீவிரவாதிகளை என்கவுண்ட்டரில் கொன்று விட்டோம்" என்றும் கூறும் டில்லி காவல்துறையின் அறிவிப்பில் சந்தேகத்திற்கிடமான விஷயங்கள் நிறைந்து காணப்படுகின்றன. தினந்தோறும் காவல்துறை புதுப்புதுப் பெயர்களையும் கதைகளையும் வெளியிட்ட வண்ணம் உள்ளது. "தவ்கீப் என்ற முஹம்மது குரேஷிதான் டில்லி குண்டு வெடிப்புகளுக்குத் தலைமை தாங்கி நடத்தியவர்" எனக் காவல்துறை அடித்துக் கூறிக் கொண்டிருந்தது. ஆனால், என்கவுண்ட்டர் நாடகத்துக்குப் பின்னர், "துப்பாக்கிச் சூட்டுக்கு இரையான ஆதிஃப்தான் தலைமை ஏற்று நடத்தியவர்" என மாற்றிக் கூறுகிறது. குரேஷி என்பவரை ஆண்டுகணக்கில் கண்டவர் யாருமே இல்லை.
அஹமதாபாத் குண்டுவெடிப்புத் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டுள்ள அபூ பாஷிர்தான் ஜாமிஆ நகரில் தீவிரவாதிகள் தலைமறைவாக இருக்கும் துப்புக் கொடுத்ததாகக் காவல்துறை முதலில் கூறியிருந்தது. ஆனால், பின்னர் அதனை அவர்களே மறுத்தனர். "தங்களின் தீவிரமான விசாரணையின் பலனாகவே தீவிரவாதிகளைப் பிடிக்க முடிந்ததாகவும் முன்னர் கைது செய்யப்பட்ட அபூ பாஷிருக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை" எனவும் டில்லி காவல்துறை கமிஷனர் பத்திரிக்கையாளரிடம் கூறினார். காவல்துறை கதைகளைக் கேள்விக்குட்படுத்தும் மேலும் அதிக ஆதாரங்கள். ஸீஷான் தீவிரவாதி எனில், காவல்துறையினரின் என்கவுண்ட்டரிலிருந்து தொலைகாட்சியின் ஸ்டுடியோவிற்கா தப்பி ஓடி இருப்பார்?. கமர்சியல் லாவில் 87 சதவீதம், ஆர்கனைஸேசனல் பிகேவியரில் 92 சதவீதம் மதிப்பெண்கள் ஸீஷான் பெற்றுள்ளார். முதல் இரு செமஸ்டர்களில் 64 சதவீத மதிப்பெண்ணும் மூன்றாம் செமஸ்டரில் 60 சதவீத ஓவரால் மதிப்பெண்ணும் இவர் பெற்றிருந்தார் என அரிந்தாம் சௌத்ரி கூறுகின்றார். இது, ஸீஷான் படிப்பதற்காகவே டில்லியில் வீடு எடுத்து வசித்திருந்தார் என்பதைத் தெளிவாக்குகின்றது.. நடந்த குண்டு வெடிப்புகளைச் சிமியின் மீது பகீரத பிரயத்தனப்பட்டு கட்டிவைக்க முயலும் பொழுது, இவை அனைத்தினூடாக எளிதில் அனைவரும் ஒரு விஷயத்தை மறந்து விடுகின்றனர். 2001இல் தடை செய்யப்பட்ட சிமியின் மீதான குற்றச்சாட்டுகளுக்கோ, அது சட்டவிரோதமாகவோ, தேசவிரோதமாகவோ செயல்படுவதற்கான ஒரு சிறு ஆதாரம் கூட கடந்த 7 ஆண்டு காலமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாத மத்திய அரசைக் கடுமையாகச் சாடி, சிமியின் மீதான தடையை நீக்கிய டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி கீதா மித்தலின் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் அடுத்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வரையே நீட்டித்து வைத்துள்ளது. நாட்டைச் சுடுகாடாக்கும் தீவிரவாத குண்டு வெடிப்புகளை வெறும் 12 முஸ்லிம்களின் மீது சுமத்தி விட்டுத் தப்ப முயலும் காங்கிரஸ் அரசு, இதன் மூலம் உண்மையான தீவிரவாதிகள் தப்புவதற்கு உதவுவதோடு நாட்டை மேலும் இக்கட்டான நிலைக்குத் தள்ள முயல்கின்றது. குண்டு வெடிப்புகளால் நெருக்கடியில் இருக்கும் பாட்டீலையும் 7 ஆண்டு காலமாகத் தடை செய்யப்படுள்ள சிமியின் சட்டவிரோதச் செயல்பாடுகள் என்று சொல்லப் படுவதற்கு ஆதாரமாக உறுதியான ஒற்றைச் சான்றைக் கூடச் சமர்ப்பிக்க இயலாத மத்திய அரசையும் நெருக்கடியிலிருந்து மீட்டு, எதிர்கட்சிகளிலிருந்து நாட்டு மக்கள் வரை அனைவராலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையிலிருந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி விடுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, கொல்லப்பட்டு விட்டவர்களின் தலைமீது நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் கட்டி வைத்துத் தப்பித்துக் கொள்ளலாம் என்ற கீழ்த்தரமான அணுகுமுறையை மத்திய காங்கிரஸ் அரசு கடைபிடிக்க முடிவெடுத்திருந்தால் அது காங்கிரஸின் எதிர்காலத்தைக் குழி தோண்டிப் புதைப்பது மட்டுமல்லாது, இப்பொழுதும் நாட்டில் சுதந்திரமாக உலா வரும் குண்டுவெடிப்பின் உண்மையான மூலகர்த்தாக்களால் ஆபத்துத் தொடரும் என்பதையும் அதனால் உலக நாடுகளிடையே பன்மைத்துவத்திலும் ஜனநாயகத்திலும் முன்மாதிரியாக நிற்கும் இந்திய பூகண்டத்தையும் சிதறடிக்கும் என்பதையும் அரசுக்கு ஓர் முன்னெச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம். *** தொடர்புடைய செய்திகள் : புதுடெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள், சிமி மீதான தடை நீக்கம் - டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு அஹமதாபாத் குண்டுவெடிப்பு: சிபிஐ விசாரணை கோரி ஏ.ஐ.எம்.எம்.எம்!, குண்டு வெடிப்புகள் கூறும் இரண்டு செய்திகள்!
கருத்துக்கள் (6)
![]() எழுதியவர்: HAQ , September 25, 2008 07:28 //நமக்குத் தேவை உண்மையான தீவிரவாதிகள் கண்டு பிடிக்கப் படவேண்டும். அவர்களை மக்கள் மத்தியில் கண்டந்துண்டமாக வெட்டிக் கொல்ல வேண்டும். அல்லாமல் அப்பாவி முஸ்லிம்களைத் தொடர்ந்து பலிகடாவாக்கிக் கொண்டிருந்தால், தப்பியிருக்கும் உண்மையான தீவிரவாதிகளால் நாட்டுக்கு மென்மேலும் ஆபத்துதான்// ALLAHU AKBAR. எழுதியவர்: IndianMuslim , September 25, 2008 18:48 Rabbana la tajAAalna fitnatan lillatheena kafaroo waighfir lana rabbana innaka anta alAAazeezu alhakeemu Al-Quran(60:5) 'எங்கள் இறைவா! காபிர்களுக்கு, எங்களை சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடதே! எங்கள் இறைவா! எஙகளுக்கு மன்னிப்பும் அருள்வாயக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்' Al-Quran(60:5) எழுதியவர்: IndianMuslim , September 26, 2008 22:49 The same news on other media. But after satyamargam. Check the links http://www.hindu.com/2008/09/27/stories/2008092760111200.htm எழுதியவர்: மஹ்மூத் அல் ஹஸன் , September 29, 2008 22:44 அன்புள்ள தள நிர்வாகிகளுக்கு, அல்லாஹ் உங்கள் அனைவர்க்கும் நற்கூலி வழங்குவானாக! அரசும் அரசு சார்ந்த ஃபாஸிஸ்டுகளும் ஊடகங்களும் முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிட்ட பொய் நாடகத்தத் தோலுரித்துக் காட்டும் கடின ஆய்வுப் பணியில் வெற்றி பெற்றுள்ளீர்கள். உங்கள் ஆக்கத்தை மக்கள் அனைவரும் படிக்கும் அச்சு ஊடகத்திலும் இடம் பெறச் செய்ய வேண்டும். இந்த என்கவுண்டர் செய்தியை வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக அறிந்தவுடன் எனக்கு டெல்ஹியின் அன்ஸால்பிளாஸா என்கவுண்டர்தான் நினைவுக்கு வந்தது. அது போன்றே போலி என்கவுண்டர் மூலம் அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றுள்ளனர் என உடனே கூறினேன். என் கருத்துக்கு வலிமை தரும் வண்ணம் உங்கள் ஆய்வு அமைந்துள்ளது. இன்னும் எத்தனை காலம்தான் இச்சோதனை யா அல்லாஹ்? எழுதியவர்: புதுச்சுவடி , September 30, 2008 06:50 உங்கள் ஆக்கத்தினை வெகுஜன ஊடகங்கள் வெளியிடா! சமுதாய இயக்கங்கள் இந்த ஆக்கத்தை அச்சிட்டு மடக்கோலையாகவோ கையேடாகவோ நாடெங்கும் பரப்பலாம். வெள்ளி மேடைகளில் விளக்கம் அளிக்கலாம். உண்மை உறங்கலாகாது. எழுதியவர்: ameer , October 01, 2008 03:29 Firstly, I'm appraising for ur report about this fake encounter drama. The truth must be found out and the real criminals even if it is the police officials, thy must severly punished as much as death sentence.B'coz for them life of the muslim human beings have become a silly game. கருத்து எழுதுக :
|